Wednesday, December 9, 2009

திருமண வாழ்த்து - நிறைய புத்தகங்கள் படிக்கும் அக்னி பார்வைக்கு

சக பதிவர் 'அக்னி பார்வை' வினோத்திற்குக் கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்று ஈரோட்டுப் பதிவர்களோடு (முந்தைய இடுகையில் குறிப்பிட்டபடி) பின்மண்டைத்துவ நண்பரின் திருமணத்தில் பங்குபெற்றதால் அக்னி பார்வையின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

வரவேற்பு நிகழ்ச்சி 29-ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்றது. கோயம்பேட்டில் இருந்து 'பயணிகளின் நண்பனில்' திருவள்ளூர் சென்று சேர்ந்தபோது மணி மாலை 5:20. சரி நேரத்தைப் போக்கலாம் என்று பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த ஒரு குறுவட்டு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்தேன். பாடல்கள் படங்கள் என்று வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். திருட்டு (!) (திருட்டு என்பது சரியாகப் படவில்லை. வேறு எங்கிருந்தோ திருடிய குறுந்தகடுகள் என்ற பொருள் தருகிறதல்லவா?!) போலிக்குறுந்தகடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. முந்தாநாள் வெளியான படம்கூட அங்கு கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

சரி, தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ஒரு முடிவெடுத்திருக்கிறார்களாமே, ''சுமாரான படத்தின் குறுந்தகடு 50 நாட்களிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிற படத்தின் குறுந்தகடு 100 நாட்களிலும் வெளியிடலாம்'' என்று! இப்படி எண்ணிக்கொண்டே "திருதிரு துறு துறு ஒரிஜினல் இருக்கா?" என்றேன். தெரியாத ஏதோ ஒரு சந்திற்குள் நுழையும்போது அங்கிருப்பவர்கள் பார்க்கும் ஒரு வினோதமான பார்வைபோல என்னைப் பார்த்துவிட்டு "அங்க அடுக்கி வைச்சிருக்கிறதுதான் சார் ஒரிஜினல், பார்த்து எடுத்துக்குங்க" என்றார் கடைக்காரர். 80-களில் வெளிவந்தவையும் ஒருசில 90களும் இருந்தன.

சர்தான், நடையைக் கட்டி மண்டபத்திற்கு வந்தேன். நல்ல பெரிய மண்டபம். முன்னால்(ள்) பழைய அம்பாசிடரில் இருந்து ஹுண்டாய் i20 வரை பலவகை வாகனங்கள் மண்டப முகப்பில் அணிவகுத்து நின்றன. அத்தனை பேரும் தம்பதியரை வாழ்த்த வந்திருந்தார்கள். இரண்டு 'கேமரா'க்கள் மூலம் வரவேற்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, கூச்சத்தில் கொஞ்சநேரம் வெளியிலேயே நின்றுகொண்டேன் (அங்குதான் நிறைய வாலிப நண்பிகள் அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள், மணமகனுக்கோ மணமகளுக்கோ நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு!).

அப்புறம் ஒரு வழியா உள்ளே போகலாம் என்று முடிவெடுத்து(கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு!) நேராக மேடைக்குச் சென்று இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்து வினோத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். என்னைப் பார்த்ததும் மிகுந்த சந்தோசம் வினோத்திற்கு. பின்பு ஒரு இருக்கையில் வந்து அமர்ந்தகொண்டேன். கடைசி நபராகச் சென்று கையில் வைத்திருந்த இரண்டு புத்தகங்களைப் பரிசளித்தபோது, மணமகள் என்னைப் பார்த்து ''இங்கேயும் புத்தகமா?!'' என்று ஆச்சரியத்தில் (சற்று சந்தோசமான சலிப்புடனும்) புருவம் உயர்த்தி இயல்பாகப் பேசினார்.

''நாங்கல்லாம் ஒரு புத்தகப் பெருசாளி(புழு என்ன பாவம் பண்ணிச்சி!), புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது - கழிவறையில் கூட புத்தம் படித்துக்கொண்டிருப்போம்'' என்கிற மாதிரி சும்மா அடித்துவிட்டு விட்டு விடைபெற்றேன் தம்பதியரிடமிருந்து. :)

உங்கள் வாழ்த்துக்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் agnipaarvai@gmail.com. ஆர்வமுடன் என்னைத் தொடர்புகொள்ளும் தெரிந்த நண்பர்களுக்கு புகைப்படத் தொகுப்பு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

Monday, November 30, 2009

லவ்டேல் மேடி திருமணமும் மெக்கா விஜயமும்

பின் நவீனத்துவத்துவமோ (வால்பையன் சொல்வதுபோல்) பின்மண்டைத்துவமோ(!) அதன் ஒரு சிங்கம் திருமணக் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட வரலாறு...

காலை 6:00 மணி 01 வினாடி:
மண்டப வாசலில் நின்றுகொண்டு வால்பையனுக்கு ஃபோன்.
'நீங்க எப்போ வர்றீங்க?'.
'நீங்க எங்க இருக்கீங்க?' அவர்.
'நான் மண்டபத்திலதான் இருக்கேன்'.
'அப்படியா! நாங்க அங்க வர்றதுக்கு இன்னும் ஒருமணி நேரம் ஆகிடுமே!'.

என்ன பண்றது. கையில் கேமரா - பொழுது போகணுமே. புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன். சில பெரியவர்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதமாக அங்கங்க உலவ ஆரம்பிச்சாங்க. பழம், தேங்காய், அரிசி, அச்சுவெல்லம் இப்படி என்னெல்லாமோ திருமண மேடைக்கு வர ஆரம்பிச்சுது.

காலை 6:20 மணி:
பெரியவர் ஒருவர்(தலைப்பாகையுடன்) வந்து மணமேடையில இருந்த பொருட்களை வைச்சி என்னமோ பண்ணினாரு (குடும்பத்தில மூத்தவர்னு நினைச்சேன்). சர்தான், இனி ஐயர் வந்து மந்திரமெல்லாம் சொல்லி... மணி 8க்குத்தான் தாலிய கட்டுவாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். திடீர்னு பார்த்தா ஒரு தட்டுல அரிசிய எடுத்துட்டுப் போயி எல்லார்கிட்டேயும் ஒரு சின்னப்பொண்ணு குடுக்க ஆரம்பிச்சிது. 3 நிமிஷம்தான் இருக்கும். சட்டுன்னு தாலிய எடுத்து நம்ம 'மாதேஷ' (லவ்டேல் மேடி) கிட்ட அந்த பெரியவரு குடுத்தாரு. அவரும் உடனே கட்ட ஆரம்பிச்சிட்டாரு. நான் ஒடிப்போயி போட்டோ பிடிச்சிகிட்டேன்.

அடுத்து இன்னொரு பெரியவர் வெற்றிலைல கொஞ்சம் மஞ்சள்ல தோய்த்த அரிசியை எடுத்துக்கிட்டாரு. மாப்பிள்ளையையும் பொண்ணோட சகோதரனையும் அரிசி இருந்த ஒரு தட்டில கையை ஒண்ணா சேர்த்து வைக்கச் சொன்னாரு. நிறைய வாழ்த்தோ, வேண்டுதலோ தொடர்ந்து சொல்லிகிட்டே கொஞ்சம் கொஞ்சமா அரிசியை அவங்க கைகளில் தூவினாரு.

அப்புறம் முதல்ல வந்த அந்த பெரியவர் வந்து, பொண்ணு மாப்பிள்ளை கையில வெற்றிலையைக் கொடுத்து அவரும் வெற்றிலை, அரிசி, வெல்லம் இதெல்லாம் ஒண்ணு ஒண்ணா எடுத்து அப்படியே 'தீபாராதனை' மாதிரி சுத்தினாரு.

காலை 6:45 மணி:
இந்த சடங்கெல்லாம் வெறும் 25 நிமிஷங்கள்தான். அப்புறம் பொண்ணு மாப்பிள்ளை மேடையில நிற்க, வாழ்த்த வந்தவங்க வரிசையில நின்னு வாழ்த்தும் பரிசும் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதேநேரம், முதல்ல சொன்ன அந்த தலைப்பாகை அணிந்த பெரியவர், மேடைக்குப் பக்கத்தில சேர் போட்டு உட்கார்ந்தார். அவர சுத்தி வீட்டுப் பெரியவங்க உட்கார்ந்தாங்க. அங்கேயிருந்து இங்கேயிருந்துண்ணு பணம் பெரியவர் கையில வந்தது. அவர் கல்யாண வேலை பார்த்துட்டு இருந்த எல்லோரையும் கூப்பிட்டு அவங்க கையில கொஞ்சம் பணத்தை பிரிச்சிக் கொடுத்தாரு (இந்த பணத்துக்கு எதோ பேரு சொன்னாங்க மறந்துட்டேன் - அது கூலி இல்லையாம்).

இத எல்லாத்தையும் முன்ன நின்னு நடத்தின பெரியவரை 'அருமைக்காரர்'னு சொல்லுவாங்களாம் இல்ல அரும்புக்காரர் னு சொல்லுவாங்களாம் (திருத்திய வால்பையன் அண்ணனுக்கு நன்றி). அந்த சாதி சனத்தில நடக்கிற எல்லா திருமணத்தையும் இவர்தான் நடத்தி வைப்பாராம்.

காலை 7:05 மணி:
திரும்பவும் வால் அலைபேசிக்கு அழைப்பு
'நீங்க எப்போ வர்றீங்க?'.
'இதோ வந்துட்டே இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவோம்'.

காலை 8:35 மணி:
கிட்டத்தட்ட எல்லாரும் வாழ்த்திட்டுப் போனபோதுதான். வால் வந்து சேர்ந்தாரு. 'நம்ம மக்கள் இங்க இருக்காங்களே!' ன்னாரு. அடடா! தெரியாமப் போச்சே. தனியால்ல உட்கார்ந்திருந்தேன். அங்க போயி பார்த்தா.....
இத்தன பேரு வந்திருக்காங்க.

இவங்களைத் தவிர எழுத்தாளர் வா.மு.கோ.மு. வந்திருந்தாங்க, அப்புறம்....
முழு லிஸ்ட்டுக்கு வால்பையனின் இந்த இடுகைக்கு வாங்க.

எனக்கு வாலைத் தவிர வேற யாரையுமே தெரியாதா - அதுதான் பிரச்சினை. இவங்கள்ல ஒருசிலர் அங்க இருந்தது தெரியாம தனியா, கையில கேமராவோட... ஆனா இதுல ஒரு நல்ல விசயம் என்னான்னா, அங்க இருந்த நம்ம பதிவர்கள் அப்போதைக்கு எனக்குத் தெரியாததனால ரொம்ப ஃபரீயா சைட் அடிக்க முடிஞ்சுது :).

திருமணம் நடந்தது ஈரோட்டில்.

திருமணம் பற்றியும் பதிவர்கள் சந்திப்புப் பற்றியும் இன்னொரு இடுகை இடலாம் என இருக்கிறேன். இந்த இடுகை பிடித்திருந்தால் உங்க ஒட்டுகளைக் குத்திட்டுப் போங்க. மேடிக்கு உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிட்டுப் போங்க.

Saturday, November 28, 2009

2012(ருத்ரம்) பகுதி 2 - செய்தியாளர்கள் மற்றும் தத்துவம்

பெரிய அளவிற்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் இந்தப் படத்திலிருந்து சில காட்சிகள் - என்னைக் கவர்ந்தவை.

படத்தைப் பற்றி இங்கே படிக்கலாம்.

நியூஸ் ரிப்போர்ட்டிங்:
உலகம் அழியப் போவது பற்றி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அந்த இரகசியத் தகவலை வெளியே சொல்ல முயற்சிப்பவர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுகிறார்கள். ஏனென்றால், அரசு எடுத்துவரும் இரகசிய (தப்பிக்கும்) திட்டங்கள் வெளிப்பட்டுவிடக்கூடாது - அதற்காக.

இந்த விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்ளும் 'சார்லி' என்கிற கதாப்பாத்திரம் மக்களுக்கு அதைத் தெரிவிக்க, தானே ஒரு FM சேனலை நடத்துகிறான்(எத்தனை பேர் அதைக் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை!). உலகம் எப்படி அழியப்போகிறது என்பதை படங்கள் போட்டு விளக்கி இணையத்தில் வெளியிடுகிறான்(ஆனால் இவனை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது ஒருபுறம்). எங்கிருந்து உலக அழிவு ஆரம்பிக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அங்கு சென்று நேரடியாக ரிப்போர்ட் தர ஆரம்பிக்கிறான். அந்த இடத்தில் வெடிக்கும் ஒரு மிகப்பெரிய எரிமலைதான் எல்லாவற்றிற்கும் தொடக்கம் என்பதை மக்களுக்கு அறிவிக்கிறான். அப்படி அறிவிக்கும்போது அவன் முகத்தில் தோன்றும் ஒரு பிரகாசம்(அழகு).



படம்: யுடியூபில் ஏதோ ஒரு விடியோவில் இருந்து சுட்டது.

'இந்தச் செய்தியை உலகுக்கு முதலில் அறிவித்தது உங்கள் சார்லி' என்று அவன் சொல்லும்போது முகத்திலிருக்கும் அந்த கர்வம், எல்லா செய்தியாளர்களுக்கும் இருக்க வேண்டியது(உண்மையைச் சொல்லும் இடத்தில்). செய்தி எல்லோருக்கும் எட்டத்தான் போகிறது, ஆனால் அதை முதலில் தெரிந்துகொண்டது யார் என்பதுதான் இங்கே அறிவுஜீவிகளை உருவாக்குகிறதோ?

ஜென் தத்துவம்:
ஓஷோவின் 'வெறும் கோப்பை' என்ற புத்தகத்தில் வரும் முதல் ஜென் கதை. கற்பனையில் விரிந்ததை அப்படியே திரையில் கொண்டுவிந்திருக்கிறார்கள் படத்தில். உலகம் அழியப்போகிறதைப் பற்றி பதட்டத்தில், பயத்தில் தனது குருவிடம் வந்து சொல்கிறான் சீடன். குரு சிரித்துக்கொண்டே ஜாடியில் இருக்கும் பானத்தைக் கோப்பையில் நிரப்புகிறார்; நிரம்பிய பின்னும் வழிய வழிய ஊற்றுகிறார். சீடன் கத்துகிறான் 'குருவே கோப்பை நிரம்பிவிட்டது, உங்களுக்கு போதம் கெட்டுவிட்டதா?' என்று. குரு சொல்கிறார் 'நீ இப்படி பலவித விருப்ங்களில்(ஆப்ஷன்) நிரம்பி வழிகிறாய், உன்னிடம் எப்படி என் கருத்தைச் சொல்வது? முதலில் உன் மனதில் உள்ளவற்றைக் கொட்டிவிட்டு, பின்பு வந்து என் கருத்தைக் கேள்' என்கிறார்.

படத்தில் இது ஒரு அழகான கவிதைபோல் இடைச்செருகப்பட்டிருக்கும். நன்றாகவும் இருக்கும்.

நிஷாவும் யோகியும் - நினைவஞ்சலியும் விமர்சனமும்

'பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடந்தி நிறைய பேரை பணயக்கைதிகளாகச் சிறைபிடித்து வைத்துள்ளார்களாமே?' எல்லாம் நடந்து முடிந்தபின்னர் இப்படிக்கேட்க வைத்தது 'நிஷா' என்ற அழகுப்பெயருடைய புயல். மும்பையில் நடந்த அந்த சம்பவத்தின் வீரியம் தெரியாதவண்ணம் சென்னை தண்ணீரில் மூழ்கக் காரணமாக இருந்தது. நான்கு நாட்கள் பெய்த தொடர் மழை, கடந்த வருடம் இதேநாளில் ஓய்ந்திருந்தது. மும்பை தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தி நிறைய இடுகைகள் பார்த்தாகிவிட்டது, நம்மூர் நிஷாவிற்காக இந்த இடுகை.

நிஷாவுக்கு நினைவஞ்சலி:
கடந்த வருடம் இதேநாள் காலை - தெருவில் தண்ணீரில் குழந்தைகள் விளையாடும் சத்தத்தில்தான் எழுந்தேன். முந்தினநாள் கணுக்கால் வரையிருந்த தண்ணீர், காலையில் முக்கால் அடியைத் தாண்டிவிட்டது. அலுவலகத்திற்குச் செல்லமுடியாதவாறு வழியில் போக்குவரத்துத் துண்டிப்பு. எல்லா இடத்திலும் பரபரப்பு. தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன்செய்து விசாரிப்பு செய்ததில் சில மொபைல் நெட்வொர்க்குகள் தெவிங்கி(விழிபிதுங்கி) விட்டன. பலரை மீட்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் வரவேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக அலுவலகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தெரிந்ததும்,
கையில் கேமராவுடன் வெளியே கிளம்பிவிட்டேன். அவற்றிலிருந்து ஒன்று இங்கே.

அன்று எடுத்த புகைப்படங்களை வைத்து ஒரு பதிவிட்டேன். அது இங்கே.


யோகி:
ஏற்கெனவே பல படங்களில் பார்த்த விசயங்கள் நிறைய. ரவுடி ஹீரோ -
போதை வஸ்துக்கள்- புகை மண்டலங்கள் - திருட்டு - தற்செயலாக ஒரு
குழந்தை - ஹீரோவுக்கு பழைய நினைவுகள் - ஹீரோ மனம் மாறுதல் - ரவுடி
& போலீஸ் சண்டை(!) - பணம் - க்ளைமாக்ஸ் சண்டை - படம் நிறைவு.

யதார்த்த சினிமா எப்போதும் நெகடிவ் கிளைமாக்ஸ்லதான் இருக்கணுமா?!
'இது அப்படி இல்ல - மகிழ்ச்சியான முடிவாக இருக்கும்' என்று நினைத்து
விதவிதமான மகிழ்ச்சியான முடிவுகளைக் கற்பனை செய்து ஏமாந்தேன்.
ஆனால், இந்த முடிவு மிகவும் வித்தியாசமானதாகவும் இன்னும்
யதார்த்தமானதாகவும் இருக்கிறது.

படத்தில் நம்மை ஒன்ற வைப்பது குழந்தைக்கும் நாயகனுக்கும்
நாயகிக்குமான காட்சிகள். நன்றாக படமாக்கியிருக்கிறார்கள். இந்த
இடங்களில் ஒளிப்பதிவாளர்,இயக்குனர் எல்லோருக்கும் சபாஷ். மற்றபடி
10ஓடு 11ஆக ஓடும் என நினைக்கிறேன்(!).

யோகியும் காப்பியடித்தது என்பதை உண்மைத்தமிழன் அவர்களின்
இந்த இடுகையில் தெரிந்துகொண்டேன்.

Wednesday, November 25, 2009

நடிகர் விஜய் மீது நடத்தப்படும் மின்-வன்முறைகள்

தினமும் நான்கைந்து மின்னஞ்சல்கள், ஏழெட்டு குறுஞ்செய்திகள் - நடிகர் விஜயைக் கலாய்த்து வராவிட்டால் அன்றைய பொழுதில் ஏதேனும் பிழையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு மின் ஊடகங்களில் விஜய் பற்றி ஏகப்பட்ட கதைகள், துணுக்குகள், கிண்டல்கள்.

இவற்றை உட்கார்ந்து பொறுமையாகத் தயாரிப்பவர்கள், யோசிப்பவர்கள் ஏன எத்தனைபேர் தங்கள் பொன்னான(!) நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஏன் இவர்களுக்கு இந்த ஆர்வம்? விஜய் பற்றி கடுமையாகக் கிண்டலடித்து குறுஞ்செய்தி அனுப்புவதிலோ, அல்லது மின்னஞ்சல் அனுப்புவதிலோ இவர்களுக்கு என்ன இன்பம் கிடைக்கிறது?!


  • தமிழகத்தில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்
  • ஒருசில ப்ளாப்புகள் கொடுத்த நேரத்திலும் மற்ற நடிகர்களைப் போல் மார்க்கெட் சாயவில்லை
  • அரசியலுக்கு வரலாம் என்று தகவல் வெளியானதுமே பரபரப்பானது பத்திரிகை உலகம்
  • நன்றாக நடிக்கத் தெரியாதவர் என்று விமர்சிக்கப்படுபவர்
  • மூன்றாம் தலைமுறை நடிகர்களில் முதலில் டாகடர் பட்டம் பெற்றவர்

இப்படி எத்தனையோ முகங்கள் நடிகர் விஜய்க்கு. இவற்றில் பெரும்பாலாக கிண்டலடிக்கப்படுபவை, விஜயின் நடிப்பு, டாக்டர் பட்டம் மற்றும் அரசியல். இந்த மூன்றிலும் விஜயை விட பல படிகள் மேலே கிண்டல் அடிக்கப்படவேண்டிய பிரபலங்கள் நம் தமிழகத்திலேயே உண்டு. அவர்களை விட்டு விட்டு, விஜய் மேல் மட்டும் அதிகம் தாக்குதல் நடத்தப்படுவதற்குக் காரணம் என்ன?

விஜய் பற்றி கிண்டலடித்து வரும் மின்-செய்திகளில் வெறும் கிண்டல் மட்டும் இல்லாமல் ஒருவித கடுப்புணர்வு(காண்டு) இருப்பதை நன்றாகக் காணமுடிகிறது. அது ஏன்?

விஜய் பற்றி பகடையடித்து பரவிவரும் விசயங்களில், கடந்த ஒருமாதமாகவே சற்று அதிகமான தாக்குதல் இருப்பதையும் உணரமுடிகிறது(வேட்டைக்காரன் கூடிய விரைவில் வெளவிரவிருப்பதால் இருக்குமோ?).

விஜய் பற்றி நையாண்டி செய்யப்படும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், யூடியூப் விடியோக்கள் - இவற்றை மெனக்கெட்டுத் தயாரிப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

''சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் கிடையாது, அஜித் மாதிரி தன் திறமையால் சினிமா உலகத்திற்குள் நுழையவில்லை, விக்ரம் மாதிரி பல கெட்-அப் கிடையாது, படங்கள் கூட அப்பப்போ பிளாப் ஆகுது - இருந்தாலும் இவனுக்கு எப்படிய்யா இத்தனை ரசிகர்கள்?'' இந்த மாதிரியான எண்ணமாக இருக்குமோ?!!!

ஒரு விசயம்:
அந்த வன்முறை பின்னூட்டங்களில் வெளிப்படுவதைத் தவிர்க்க பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்படுகிறது.

Tuesday, November 24, 2009

பிடிச்சவங்க பிடிக்காதவங்க - யாரையும் விடுவதாய் இல்லை

இந்த இடுகை எழுதுவதற்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது! (மத்த இடுகையெல்லாம் மணிக்கணக்கா உட்கார்ந்து யோசிச்சி எழுதுறியாடா? என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரியும்).

பொதுவாகவே, எனக்கு ஒரு பழக்கம். பிடிச்சவங்களை சட்டுன்னு அடையாளம் காட்டுறது. ஆனா பிடிக்காதவங்கன்னு வந்தா 'பகிர்ந்துகொள்வதில்லை'.

ஆனால் மாதவராஜ் அவர்களின் இந்த வரிகளைப் (பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர். எதாவது ஒரு இடத்தில் அவர்களைப் பிடிக்காமல் போகிறது. ஜெயமோகன் எப்போது அருந்திராயை ’குருவிமண்டை’ என்று சொன்னாரோ அப்போதிலிருந்து அவர் பிடிக்காமல் போய்விட்டார் எனக்கு. அதற்காக அவரது ரப்பரும், காடும் எனக்குப் பிடிக்காமல் போகாது. பதில்களை/ பதில் சொல்கிறவர்களை இப்ப்டி புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.) படித்துவிட்ட பிறகு இதை எழுதுவதில் இருந்த குழப்பம் போய்விட்டது.


பிடித்தவர் - பிடிக்காதவர்

(காமராஜர்) ஸ்டாலின் - ஜெயலலிதா
பிரான்சிஸ் கிருபா - ஜோ.மல்லூரி
ராமகிருஷ்ணன் - இரமணிச்சந்திரன்
இளையராஜா - விஜய் ஆன்டனி(தற்போது)
பாலா - பேரரசு
கமல் - சிம்பு
வேகா - ஸ்ரேயா


என்னை அழைத்தவர்கள்:

தொடரை இழுத்துச் செல்ல நான் அழைப்பது:
3) Cheers with Jana ஜனா (ஏற்கெனவே எழுதிவிட்டார் - சுட்டி இங்கே)
விதிமுறைகள் இங்கே.
வாங்க மக்கள்ஸ், வந்து நீங்களும் பிடிச்சது பிடிக்காதது சொல்லுங்க.

படிச்சது பிடிக்காதது பற்றி....
ஜோ.மல்லூரியின் ஏகப்பட்ட பில்ட்அப்புகள் - என்ன கொடுமை சரவணா எனச் சொல்ல வைத்தன - நான் அவரது படைப்புக்களை(!) படிக்கவில்லை என்றாலும். அவரைப் பற்றிய எனது ஒரு இடுகை இங்கே. நடிகைகள்லாம் தமிழ்நாட்டுலதான் இருப்பாங்களான்னு தெரியல. இருக்கலாம்ங்கற நம்பிக்கைல இவங்க பேர போட்டிருக்கேன்.

Sunday, November 22, 2009

ஆஆஆஆஆணிபிடுங்குதல் என்றொரு வார்த்தை


தண்ணீர் குடிக்க வேண்டுமாம், அடிவயிறு குரலெடுத்துக் கூவுகிறது
தடதடதடவென ஒலியுடன் சேர்ந்து மினுமினுக்கிறது
தெருவெல்லாம் வெள்ளம், கவனிக்க முடியாமல் கண்களிலும்
தழும்புகிறது

அமைதியைக் கிழித்து வெடிக்கும் தொலைபேசி அழைப்புகள்
எப்போது வீடு திரும்புவேன் எனக்கேட்கும் தாய்.
திரையிட்டு மறைக்கிறது, மறுநாளுக்கான அலுவல்கள்
மழையை சிறைபிடிக்க வைத்திருந்த புகைப்படக் கருவி
மறைந்தே இருக்கிறது என் கால்சட்டைப் பைக்குள்!
நான்கு சதுர அடிகளுக்குள் முழு நாளே அடங்கிவிடுகிறது!
கேட்டால்,

ஆணிபிடுங்குதல் - நகைச்சுவையோடு சொல்லிவிடலாம்!

புகைப்படம்: நண்பன் 'பாலா' விடமிருந்து balasailendran@gmail.com.

Wednesday, November 18, 2009

ஈரம் இல்லாமல் ஆவியுடன் பேசிய சம்பவம் - திரைப்பட விமர்சனம் அல்ல

இந்த சம்பவத்தில் வரும் சம்பவங்கள்(!) அத்தனையும் உண்மையே(பெயர்களைத் தவிர).


அப்போதுதான் 'செல்போன்' எனப்படும் ஒரு வஸ்து அறிமுகமாகி இருந்தது. இப்போது 'மொக்கை' செர்வீஸ் என்று சொல்லப்படும் ஒரு நிறுவனம்தான் அன்றைக்கு இருந்த ஒரே செர்வீஸ் புரொவைடர். கல்லூரியில் செல்ஃபோன் வைத்திருந்த ஒத்தை கை எண்ணிக்கையில் 'சங்கரும்' ஒருவன் என்பதால் அவனுக்குத் தனி 'மாஸ்'. அரைகிலோவுக்கு அதிகமாக இருக்கும் அந்த போன் தொலைந்தது அவனுக்கு 'ஆடையில்லாமல் தெருவில் நடப்பது' போல இருந்தது. நேற்று மாலையிலிருந்து அவனுக்கு எதுவுமே புரிபடவில்லை.

ஏற்கெனவே ஒருசில திருட்டுக்களில் அடிபட்ட 'தங்கராஜ்'தான் இதெல்லாம் செய்திருக்கக் கூடும் என சிலர் தூபம் போட இவனும் அதை நம்ப ஆரம்பித்தான். இந்த நேரம்தான் அவன் ரூம்மேட் 'மாப்ள, இங்க பாரு. நீ தேடி அலையிறதுனால எந்த பிரயோஜனமும் கிடையாது. நம்ம முத்து இருக்காம்ல - ரூம் 162 - அவன் ஒரு புக் வச்சிருக்கான். ஆவி பத்தின புக். நாம ஆவிக கூட பேசி, களவாண்டது யாருண்ணு கண்டுபிடிச்சிடலாம்' என்றான். இந்த பேய் பூதத்தில் ஏற்கெனவே நம்பிக்கை வைத்திருந்த சங்கர் உடனே சரியென்றான்.



எல்லாம் தயார், ஆரம்பிக்க வேண்டியதுதான். ஹாஸ்டலில் ஒரு அறை. கதவு, ஜன்னல்கள் அவற்றில் இருந்த சின்ன ஓட்டைகள் முதற்கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டு அந்த பிற்பகல் நேரத்தில், அறைக்குள் இருள்கவ்வ அதிக சிரத்தை எடுக்கப்பட்டிருந்தது. ஒரு 'ஒய்ஜா போர்ட்'டைச் சுற்றி மூன்று பேர் - சங்கர், சங்கரின் ரூம்மேட், முத்து. அந்த போர்டில் ஆங்கில எழுத்துக்கள் இரண்டு வரிகளில் நல்ல இடைவெளி விட்டு எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழாக மூன்றாவது வரியில் எண்கள் மேலும் Yes & No. இன்னும் சில குறியீடுகள் இந்த எழுத்துக்களைச் சுற்றிலும் இருந்தன.

ஏதாவது நல்லது நடந்தால் சரி என்று 'தேமே' வென்று போர்டின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் சங்கர். அவனுக்கு எதிரில் அவனது ரூம்மேட். அவன்தான் சும்மாயிருந்த 'சங்கரை' உசுப்பிவிட்டு இங்கு அழைத்துவந்தவன். ஆவிகளின் எக்ஸ்பெர்ட் 'முத்து', சங்கரின் ரூம்மேட் கையில் ஒத்தை ரூபாயைக் கொடுத்து ஒய்ஜா போர்டில் வைத்து அழுத்திப் பிடிக்கச் சொன்னான். பின்பு கையில் இருந்த புத்தகத்திலிருந்து சில வரிகளை வாசிக்க ஆரம்பித்தான்.

''புண்ணியலோக ஆவிகளே....! நீங்கள் எங்கள் குரலுக்கு வாருங்கள்'' என்று புத்தகத்திலிருந்து சில வரிகளை உளறியவன், சில நிமிடங்களில் 'சர்ச்சுகளில்' ஆவிவந்ததாக நம்பப்படுபவர்கள் உளறுவது போல ''வாருங்கள், வந்து பதில் சொல்லுங்கள்'' என்று தனக்குப் பிடித்தபடி கூப்பிட ஆரம்பித்தான். பின்பு ஓய்ந்து நிறுத்தினான். இப்போது எல்லாருடைய கண்களும் ஒய்ஜா போர்டில் ஒத்தை ரூபாய் காயினை ஆட்காட்டி விரலால் அழுத்தியிருந்த சங்கர் ரூம்மேட்டின் விரல்களின் மேல் குவிந்தன.

'சங்கருக்கு' எதோ நல்லது நடப்பது போல ஒரு உணர்ச்சி. எப்படியும் தனது தொலைந்துபோன மொபைல் போனைக் கண்டுபிடித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை மெதுவாக கண்களில் உதித்துக் கொண்டிருந்தது.

அப்போது,
''டேய், வார்டன்கிட்ட எவனோ போட்டுக் குடுத்துட்டாண்டா, இங்கதான் வந்துகிட்டு இருக்காரு'' - எவனோ ரூம் கதவுப்பக்கம் வந்து சிக்னல் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அடுத்த நிமிடம் பேயையும் காணோம், பேயைக் கான்டாக்ட் பண்ண வந்தவங்களையும் காணோம்! சங்கரோட அந்த பழைய மொக்கை மொபைல் இன்னமும் கிடைக்கவில்லை. யாராவது மீடியம் இருந்தா ஆவிகள்கிட்ட கேட்டு சொல்லுங்களேன்!

[மேல இருக்கிற படங்கள் நிறைய இடத்தில கிடைக்குது! சோர்ஸ் எதுன்னே தெரியல! :( ]

Monday, November 16, 2009

2012 (ருத்ரம்) ஒரு பார்வை - பகுதி 1

''உலகமே அழியப் போகுது, உஷாரா இருந்துக்கப்பூ.
மவனே என்ன பண்ணுனாலும் சங்குதான்.
இன்னும் இரண்டே இரண்டு வருஷம்தான், பூமித்தாய் வாயைப் பிளக்கப்போறா, நாம எல்லாரும் உள்ள போகப்போறோம்'' இப்படி உரக்க சொல்வதற்குத் தோதுவாக நல்ல விளம்பரத்தோடும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடும் வெளிவந்துள்ள படம் ('நெட்டுல ரிலீஸ் ஆகிடுச்சா'ன்னு நீங்க கேட்கிறது புரியுது!).

உலகம் அழியப் போகிறதைப் பற்றி பலரும் பலவிதத்தில் பீதியையும் பேதியையும் கிளப்பிவிடும் நேரத்தில், கண்ணுக்குள் இதையெல்லாம் கொண்டுவரும் ஒரு மாயாஜாலம்.

உலகத்தின் அழிவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு(இப்போது, அதாவது 2009) விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். அதிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்ற ரகசிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதைத் தெரிந்துகொள்ளும் ஒரு சாதாரண குடிமகன் தன் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. அமெரிக்காவில் ஆரம்பித்து, இந்தியா, சீனா என்று பயணித்து ஆப்பிரிக்காவில் முடிகிறது - சொல்லப்போனால், தொடங்குகிறது!


படங்கள்:http://www.whowillsurvive2012.com/

உலக உருண்டையின் உள்ளே ஏற்படும் மாற்றங்கள், கண்ட நகர்வு, நிலப்பரப்பு உள்வாங்குதல் (அ) உருக்குலைதல், அதனால் இன்னமும் கனன்று கொண்டிருக்கும் பூமியின் உள்பகுதி வெப்பக் குழம்புகள் வெளிவருதல், கடலுக்குள் நிலம் அமிழ்ந்துபோதல், இதையெல்லாம் கடந்து ஒரு குடும்பம் ரகசியமாகத் தயாரிக்கப்பட்டு வரும் கப்பலைத் தேடிப் பயணிக்கிறது. அதை அவர்கள் எப்படி அடைந்தார்கள்? எப்படித் தப்பிக்கிறார்கள்? என்பது 2012-ல்.

படத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்கள். இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகளை செயற்கையான கிராஃபிக்ஸில் மிரளும் விதத்தில் தந்திருக்கிறார்கள். செயற்கையான கட்டடங்கள், வாகனங்களின் பேரழிவுகள் கண்ணைவிட்டு இன்னும் அகலவில்லை. படத்தில் எல்லாமே பிரம்மாண்டம்தான். இந்த அழிவுகளைத் தரையில் இருந்து பார்ப்பது அத்தனை வியப்பைத் தராது என்பதாலோ என்னவோ, கேமரா பாதிநேரம் வானிலேயே பயணிக்கிறது. அதற்குத் தோதுவாக பயணங்களும் விமானத்தில் அமைவது பொருந்திப்போகிறது.

படம்: www.sbs.com.au/films/movie/4432/2012

முதற்பாதியின் அத்தனை பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது ஒரு குறை. ஆனால் இரண்டாம் பாதியில் மனித இனம், அன்பு, புதுவாழ்வு, இதையெல்லாம் பற்றிப் பேசி உணர்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடுகிறார்கள். உலகம் கடலில் ஆழ்வதும் சேர்ந்தே நடக்கிறது.

இப்படத்தைப் பற்றி எழுத இன்னும் அதிக இடம் தேவைப்படும் என்பதால் இத்தோடு முடிக்கிறேன்.

தமிழ் டப்பிங்:
இதைப் பற்றி நான் சொல்லியே தீர வேண்டும். இத்தனை அழகாக, எத்துணைப் பொருத்தமான மொழிமாற்றம். மிகச்சரியாக சில இடங்களில் ஆங்கிலத்தை அப்படியே பயன்படுத்தி, சரியான வார்த்தைகள்! அப்பப்பா! தமிழில் மாற்றிய குழுவிற்கு ஒரு சபாஷ்.

இப்படத்தைப் பற்றி மேலும் எனது உளறல்கள் வரும் நாட்களில்....
இப்படத்தின் ஆங்கில வெர்ஷனைப் பற்றி நம்ம 'ஹாலிவுட் பாலா' எழுதிவிட்டார் - இங்கிட்டு போயி படிச்சிக்குங்க.

சரி, LIC-ல இப்போ எந்த பாலிசி ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு? :)

Friday, November 13, 2009

ஊர்சுற்றி வலையுலகம் சுற்ற வந்த கதை

இந்த கொடுமையை நீங்கள் ஒருமாதத்திற்கு முன்பே படித்திருக்க வேண்டியது. தள்ளிப்போனாலும், விடுவதாக இல்லை. வலைபதிவதில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள பதிவர் கேவிஆர் அவர்கள் ஒருமாதத்திற்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தார். இதோ சொல்கிறேன், இதுவரையிலான எனது வலை வரலாற்றை. :)

சென்னை வந்த புதிது:
வேலை நிமித்தம் 2006 இறுதியில் சென்னைக்கு வந்தேன். அது சென்னைக்கான எனது இரண்டாவது பயணம். ராயபுரத்தில், அடையாறில் பின்பு 2006 டிசம்பர் இறுதியில் வேளச்சேரியில் (இன்றுவரை இங்குதான்).

ப்ராஜெக்டும் பென்ஞ்சும்:
ஒரு மாதம் கூட்டத்தோடு கூட்டமாக ட்ரெயினிங், பின்பு கூறு போட்டு விற்பதுபோல் வேறுவேறு அலுவலகங்களுக்குப் பிரிந்துசென்றோம்.
பொட்டி தட்டுபவர்கள் எல்லோரும் கடந்துவந்திருக்கும் 'வெட்டி'ப்பொழுதுகளை(பென்ஞ்) அனுபவித்துக்கொண்டிருந்த காலம். எங்கள் மேனேஜர், பல எம்.பி. அளவுள்ள பி.டி.எஃப். கோப்புகளைக் கொடுத்து 'இத நல்லா படிங்க, நம்ம ப்ராஜக்ட்ல பயன்படப்போகிற எல்லா தகவல்களும் இருக்கு' இப்படி சொல்லிவிட்டுப் போக - பொறுப்பா உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். எவ்ளோ நேரம்தான் படிக்கிறது?! சும்மா கூகிளிக்கொண்டிருப்போம். அப்போதுதான் 'நம்ம ஊர் பேர' குடுத்தா கூகிள் என்ன கொடுக்கும்' என்று தேடினேன். இன்னொரு பிரபலமான ஊர் பற்றிய தகவல்கள் கிடைத்தன. பக்கத்திலிருந்த இன்னொரு 'பென்ஞ்சி'(!)லிருந்து ஒரு குரல் - 'மக்களே, எங்க ஊர குடு - மருங்கூர்'.

மாற்றியமைத்த மருங்கூர்:
2007 ஜனவரி. கூகிளின் விடைப்பக்கங்களில் முதலில் வந்தது 'மா.சிவகுமார்' அவர்களின் வலைப்பூ. மருங்கூர் - அவரது சொந்த ஊர். மருங்கூரைத் தேடிய நண்பர், வலைப்பூவிலிருந்த மின்னஞ்சல் முகவரிமூலம் அவரைத் தொடர்புகொண்டார் - நானோ, தேன்கூட்டைத் திறந்தேன். அப்படியே தமிழ்மணமும் தெரியவந்தது. வெட்டியாக உட்கார்ந்திருந்த காலங்களில் அலுவலகம் வந்ததும் முதலில் திறப்பது 'தேன்கூடு'தான். அப்போது நான் அதிகம் படித்தவர்கள் ஓசைசெல்லா - தமிழச்சி - மா.சிவகுமார் - லக்கிலுக் - செந்தழல் ரவி - 'விடாது கருப்பு'(என்ன கொடுமைங்க - எல்லாப் பிரச்சினைகளும் தெரியவந்தபோதுதான் விடாது கருப்பை விட்டுத் தொலைத்தேன்!). வலையுலகம் தவிர இதுபற்றி விவாதிக்க எனது அறையிலும் அப்போது சரியான ஆட்கள் இருந்ததால், கொஞ்ச நாட்களிலேயே தீவிர வாசகனாகி இருந்தேன். அப்போதுதான் மா.சிவகுமார் அவர்களின் அறிவுரையில் வலைப்பூவை உருவாக்கினேன், மருங்கூருக்கு நன்றி தெரிவித்து எனது முதல் இடுகையையும் இட்டேன். 2007 ல் (ஜனவரி-பிப்ரவரி) 4 இடுகைகள் - அலுவலகத்திலிருந்தே.

அலுவலகம் வேலைக்கே!:
இந்த நிலையில் - எனது நெருங்கிய நண்பன் (என் மானசீக குரு) - அலுவலக பொருட்களை நமது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தவறில்லையா? என்று ஒரு கேள்வியை வீசியெறிந்தான். அத்தோடு நிறுத்தினேன் எனது முதல் இன்னிங்ஸை. 2008, மே-ல் எனக்கென கணிணி வாங்கி - பிஎஸ்என்எல் இணைய இணைப்பையும் பெற்றபின்னர்தான் அடுத்த இன்னிங்ஸ். இன்றும், ஏதேனும் மிக முக்கியமான விசயம்(தலைபோகிற காரியம்) அன்றி அலுவலகத்தின் பொருட்களை சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்துவது இல்லை.

பதிவர் சந்திப்புகள்:
2008-ல் பதிவர் சந்திப்புகள் நடந்தபோது 'நாமளும்தான் பதிவராகிட்டோமே போனாத்தான் என்ன' (இரண்டு மூன்று இடுகைகள்தான் இட்டிருந்தேன்) என்ற நினைப்பில் சென்று என்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். இன்றுவரை எதையோ எழுதிக் கிழித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏதோ கொஞ்சம் பேசப்பட்டவை:
நான் எழுதி, எனக்கே பிடித்த இடுகை 'காதலின் முதல் SMS (உண்மையில் கதை)'. பாதி உண்மையும் கலந்திருப்பதால் நண்பர்கள் மத்தியில் டரியலாக்கிய கதை. அப்புறம் பரவலாக (?!) பேசப்பட்டது 'வலைப்பதிவர்கள் பிழையின்றி எழுத - சந்திப்பிழைகள் ஒரு அறிமுகம்' என்று தலைப்பிலேயே பிழையோடு வந்த இடுகை.

அறிவியலில் எனக்கு அதிக ஆர்வம் என்பதால் 'அறிவியல்பூ' என்ற பெயரில் இன்னொரு வலைப்பூவையும் ஆரம்பித்து அவ்வப்போது எழுதிவருகிறேன்.

மென்தமிழும் என் அனுபவமும்:
தொடக்கத்தில் ஃபொனடிக் முறையிலான சில ஆன்லைன் எடிட்டர்களைப் பயன்படுத்தி வந்தேன். தமிழ்99 எனக்கு அறிமுகமான உடனேயே அதில் தட்டச்சப் பழகிக்கொண்டேன் (நேர மிச்சம் அதிகம்). கணிணி சொந்தமாக வாங்கிய பிறகு, அதிலேயே இன்ஸ்டால் செய்கிறமாதிரி ஏதாவது கிடைக்குமா என்று தேடி, ஈகலப்பை(தமிழ்99) இன்ஸ்டால் செய்துகொண்டேன். ஒரு பதிவர் சந்திப்பில், அண்ணன் 'தல' பாலபாரதி சொல்பேச்சைக் கேட்டு NHM Writer இன்ஸ்டால் செய்து கொண்டேன். இதில் ஈகலப்பையில் இருந்த சில தட்டச்சும் சிக்கல்கள், மொழிமாற்றும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது - இது எனக்குப் பிடித்திருக்கிறது. நான் பரிந்துரைப்பது NHM Writer -ம் தமிழ்99-ம் தான்.

நான் என்ன எழுதினாலும் வந்து படித்து, என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை இந்நேரம் சமர்ப்பிக்கிறேன்.

இந்த தொடரை இழுத்துச் செல்ல அழைப்பது,
3) ஜெய்ஹிந்த்புரம் பீர் முஹம்மது.
விதிமுறைகள் இங்கே.
வாங்க மக்கள்ஸ், வந்து உங்க கதையையும் சொல்லுங்க.

Tuesday, November 3, 2009

கண்டேன்(சன்) காதலை

சன் டீவியின் கடும் தொந்தரவிற்குப்(!) பிறகு, பல கல் தூரம் பிரயாணம் செய்து கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தப் படத்தைப் பார்த்தேன். :)

உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை 'கண்டேன் காதலை' என்கிற தமிழ்ப் படம் 'ஜப் வி மெட்' (ஹிந்தி) படத்தின் மறுபதிப்பு என்று. ''மகிழ்ச்சியாக இருக்கும் கதாநாயகி - துயரத்தில் நாயகன் - நாயகியைப் பார்த்து மனமாற்றம் - நாயகன் வெற்றி - நாயகிக்கு ஒரு சோகம் - நாயகன் உதவி - இருவருக்கும் காதல்'' இப்படி ஏற்கெனவே இதில் பல பரிணாமங்களை நாம் தமிழ்சினிமாவில் பார்த்துவிட்டோம் என நினைக்கிறேன்(ஒரே படத்தில் இல்லையென்றாலும் வேறுவேறு படங்களில்). மேற்கூறிய சங்கிலி ஒன்றாக வருவது இந்தப் படத்தில்.


திரைக்கதை, இயக்கம் - கண்ணன்:
ஹிந்திப் படத்தின் திரைக்கதையை (பெரும்பாலும்) அப்படியே வெளிக்கொண்டுவந்திருக்கிறார் கண்ணன், அதனால் கதைக்கு எந்தக் குந்தகமும் இல்லை. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ரயில்பயணம், அதில் ஓர் பெண்ணுடன் சந்திப்பு என்று ஆரம்பித்து பயணத்தை இனிதே தொடர்கிறது கதை. நாயகன் சோகமே வடிவாக இருக்க நாயகியோ சின்னக்குழந்தாக துள்ளிக்குதிக்கிற ஒரு பெண்.


முதல்பாதியில் சோகம் நிரம்பித் ததும்பும் அந்தக் கதாப்பாத்திரத்தோடு நம்மையும் ஒன்ற வைத்துவிடுகிறார் பரத். தமன்னா 'கரீனா கபூரின்' துள்ளலைக் கொண்டுவர மெனக்கெட்டு கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார் - பரவாயில்லை. தமன்னாவின் சில முகபாவங்கள் சற்று செயற்கையாய்த் தெரிகின்றன, மற்றபடி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில், பரத்திடம் இருந்திருக்க வேண்டிய அந்த சந்தோஷம், புதுத் தெம்பு ஏனோ கொஞ்சம் குறைந்திருப்பது போல ஒரு உணர்வு.

திருச்சிக்கான பயணம், திருச்சியிலிருந்து தேனிக்கான பயணம் இவற்றை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக படமாக்கியிருக்கலாம். திடீர்த் தடீரென்று கூட்டமாக ஆடுவதும் எங்கெங்கோ போவதும் ஏனென்று தெரியவில்லை! குறும்புப் பெண் தமன்னாவிடம் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதை வெளிக்காட்டுவதில் இரண்டாம் பாதியில் பரத் சற்றே சறுக்கியிருக்கிறார். வசனங்கள் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருந்திருந்தால் சற்றே தேவலை. 'சத்யம்' போல சரிந்துகிடக்கும் ஒரு நிறுவனத்தை மீட்கவேண்டிய நேரத்தில், பேசும் பேச்சுபோல அது இல்லை!

திரைக்கதையில் முக்கியமான மாற்றம் 'சந்தானம்' என்கிற கதாப்பாத்திரம். இதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். சந்தானம் மட்டும் இல்லையென்றால் சன் டீவி இந்தப் படத்தை நிச்சயமாய்ச் சீண்டியிருக்காது என்பது என் எண்ணம்.


படம் முழுக்க வண்ணங்களை வரவி விட்டிருக்கிறார்கள். உடை, பின்னணி, இடங்கள் எல்லாமே வண்ணங்களால் நிறைந்திருக்கின்றன - அழகு. ஹிந்திப் படத்தைக் காப்பியடித்திருப்பது தமன்னாவின் உடைகளிலும், பரத்-தமன்னா இருவரும் தனிமையில் இருக்கும் ஒருசில காட்சிகளிலும் பளிச்செனத் தெரிகிறது. அதுவும் படத்திற்கு அழகே!

நான் என்னதான் விமர்சனம் எழுதினாலும் சன் டீவியில் இது முதலிடம் பெறுவது திண்ணம்! ஜப் வி மெட்(மன்னிக்க) கண்டேன் காதலை - பார்க்கலாமுங்கோ!

Sunday, November 1, 2009

சிறு இடைவேளைக்குப் பிறகு

அவ்வப்போது சிறிய இடைவெளி விடுவதுதான் என்றாலும் என்னைப் பொறுத்தவரை கடந்தமாத இடைவெளி, சற்று அனுபவம் நிறைந்தது. எழுதுவது என்பது 'பசி', 'தாகம்' மாதிரி என்பார் வைரமுத்து (சிகரங்களை நோக்கி புத்தகத்தில்). நம்மில் அதிகம்பேருக்குப் பரிட்சயமான நிலாரசிகன் - ''எழுத்து மூளையில் தோன்றி, கையில் வரும்போதே எழுதிடணும்ங்க'' என்றார் (செப்டெம்பர் மாத மழையோடு கூடிய பதிவர் சந்திப்பில்). அந்தமாதிரி பசியோ தாகமோ எதுவும் தோணவில்லையா அல்லது வேலையிலோ குழப்பத்திலோ என்னை நானே மூழ்கவிட்டு விட்டேனா என்றும் தெரியவில்லை. வலையில் எழுதுவது என்பதையும் தாண்டி வழக்கமாக நான் செய்துவந்த உருப்படியான ஒருசில விசயங்களும் மிஸ்ஸிங். எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டுபிடித்து, அதைச் சரிசெய்துவிட்டு இப்போது 'மனதில் புத்துணர்ச்சியோடு மீண்டும் (மென்டலி ரிஃப்ரெஷ்ட்)'.

இந்த நேரத்தில் என் மௌனத்தைப் புரிந்துகொண்ட என் நண்பர்களுக்கு என் நன்றிகள். அவ்வப்போது ட்விட்டியது அங்கு கற்றுக்கொண்ட சில விசயங்கள் -மற்றபடி புதிதாக எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பது, பல நாட்களைத் தொலைத்துவிட்ட உணர்வைக் கொடுக்கிறது.

இந்த நேரத்திலும் நான் செய்த உருப்படியான சில விசயங்கள்,

வைரமுத்து அவர்கள் எழுதிய 'சிகரங்களை நோக்கி' என்ற கவிதை நடையிலான கதையைப் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்துவிட்டது வைரமுத்துவின் வார்த்தைப் பிரயோகம். ஒவ்வொரு பொருட்களையும் வர்ணிக்கும் வார்த்தைகளும் விவேகமான விவாதங்களும் நிறைந்தது. படித்து ரசிக்க ஒரு இனிமையான புத்தகம். ஒரே நாளில் மூன்று முறை படித்து இன்புற்றேன். சில பக்கங்கள் எத்தனை முறை வாசித்தாலும் சலிக்கவில்லை.

வானத்தில் வியாழன் மற்றும் சில கோள்களின் இடங்கள்,
நிலவைப் பொறுத்து அவற்றின் தூரம் இவற்றை
சிலநாட்களுக்குக் கவனித்தேன். உதவிய சுட்டி இங்கே.
ஆர்வமூட்டியது, கலிலியோ வியாழனின் நான்கு
துணைக்கோள்களைக் கண்டுபிடித்த 400-ம் ஆண்டு
கொண்டாட்ட நிகழ்வுகள். - "கலிலீயன் இரவுகள்" என்ற
இந்த வானியல் கொண்டாட்டத்தில் இந்தியாவில்
நடந்த நிகழ்வுகளுக்கான சுட்டி இங்கே.

இப்போதைக்கு முதல் வேலை,
படிக்காமல் கூகிள் ரீடரில் தேங்கிக்கிடக்கும் இடுகைகளைப்
படித்து பின்னூட்டமிடவேண்டும். :)

Wednesday, October 7, 2009

2012 ல் உலகம் அழியுமா - லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ன சொல்கிறது

உலகம் 2012ல் அழிவதற்கான ஏழு காரணங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இந்த விசயம் தொடர்பாக எனது முந்தைய இடுகை 1.

முந்தைய இடுகையில் "'பைபிள்' என்ன கூறுகிறது?" என்று எனக்குத் தெரிந்த விசயங்களைக் கூறியிருந்தேன். இந்த இடுகை 'CERN" எனப்படும் அமைப்பினால், கூடிய விரைவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் உலகின் மிகப்பெரிய அணுக்கருத் துகள் ஆய்வுக் கருவியான LHC (Lorge Hadron Collider - லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்) பற்றியது.

LHC ன்னா என்ன?:
நமக்கு அணுக்களைப் பற்றித் தெரியும். அணுவைச் சுற்றி வருவது எலக்ட்ரான். அணுக்களின் கருவில் உள்ள துகள்கள் 'நியூட்ரான் மற்றும் புரோட்டான்'. இந்த அணுக்கருவில் உள்ள துகள்கள் 'ஹாட்ரான்கள்' என்று அழைக்கப்படுகின்றன. நம்மூர் படங்களில் காட்டப்படும் கோழிச்சண்டை ஆட்டுச்சண்டைபோல இந்த துகள்களை நேருக்கு நேர் மோதவிட்டு ஆராய்ச்சி செய்வதுதான் இந்த மிஷினின் வேலை.

LHC க்கும் உலகம் அழியறதுக்கும் என்ன சம்பந்தம்?:
"இந்த மிஷின் வேலைசெய்ய ஆரம்பித்து துகள்கள் மோதும்போது சிறிய சிறிய கருந்துளைகள் உருவாகும். கருந்துளைகள் அதிக ஈர்ப்பு ஆற்றல் கொண்டவை. எனவே அவை சுற்றியுள்ள பொருட்களை ஈர்த்து பெரிதாக வளர்ந்துவிடும். ஆராய்ச்சி பண்ணுவதற்காக உள்ள இந்த மிஷினையேகூட அனகோண்டா பாம்புபோல விழுங்கிவிடும். இன்னும் சக்தியுள்ள கருந்துளையாக மாறி 'ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா' என ஒவ்வொரு கண்டமாக விழுங்கி பூமியையே ஏப்பம் விட்டுவிடும். கடைசியில் பூமி இருந்த இடத்தில் ஒரு கால்பந்து அளவிலான 'கரும்பொருள்' மட்டுமே இருக்கும்" என்கிறார்கள் சிலர் (அடங்கொண்ணியாஆஆஆ!).

கரும்பொருள் என்றால் என்ன? - சூரியன் எப்படி நம் கண்ணுக்குத் தெரிந்து மிகப் பெரிய சக்தியாக இருக்கிறதோ அதைவிட அதிகமாக கண்ணுக்குத் தெரியாத சக்திகள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன. இவற்றின் ஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் தன்னைச் சுற்றியுள்ள எல்லா பொருட்களையும் தன்னுள் ஈர்த்து வைத்துக்கொள்ளும். ஒளிகூட இதிலிருந்து வெளிவருவது கடினம்.

LHC-னால் கருந்துளைகள் உருவாகுமா?
"ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தின்படி நிர்மாணிக்கப்பட்ட, 'ஈர்ப்பு விசை'யின் பண்புகளின்படி இத்தகைய சிறிய அளவிலான கருந்துளைகள் LHC ல் உருவாக சாத்தியமில்லை" - இது CERN விஞ்ஞானிகளின் வாதம்.

ஆனாலும் சில தியரிகளின்(Theory) படி சிறிய அளவிலான கருந்துளைகள் உருவாகலாம். ஆனால் சில தியரிகள் இத்தகைய கருந்துளைகள் உடனடியாக அழிந்துவிடும் என்றும் கூறுகின்றன.

இதற்கு முன்பு இதுபோன்று துகள் மோதல்கள் நடந்துள்ளனவா?:
ஆம். LHC உருவாவதற்கு முன்பு சிறிய அளவிலான கருவி LEP 1989-ல் இருந்து 2000-ம் வரை பயன்பாட்டில் இருந்தது. இது பயன்பாட்டில் இருந்தபோது இந்த துகள் மோதல்கள் பலமுறை நடந்துள்ளன. அந்த மோதல்கள் மூலம் எந்த விதமான ஆபத்துகளும் உருவாகவில்லை.

ஆனால் அவற்றின் ஆற்றல் அளவுகள் கொஞ்சம் கம்மி. இப்போது தயார் நிலையில் உள்ள LHC-ன் செயல்பாட்டு ஆற்றல் மிக அதிகம்.

எவ்வளவு அளவு அதிக ஆற்றல்?:
பழைய LEP திட்டத்தில் 100 GeV பயன்படுத்தினார்கள். லேட்டஸ்ட் LHC-ல் அதிகபட்சமாக 7 TeV ஆற்றலில் துகள்களை முடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இது 70மடங்கு அதிகம்.


இத்தனை மடங்கு அதிக ஆற்றல் இருந்தாலும் 'கருந்துகள்' உருவாவது மற்ற கதிர்வீச்சுகள் உருவாவது, அதனால் பாதிப்பு ஏற்படுவது இது எதுவும் நடந்துவிடாது என்று உறுதியளிக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

மீப்பெரு அணுக்கருத்துகள் முடுக்கி (LHC) & ஆன்டி மேட்டர் (Antimatter) பற்றிய எனது மற்றொரு இடுகை, ''அறிவியல் பூ''(எனது இன்னுமொரு வலைப்பூ) -ல் வெளியானது இங்கே.

LHC பற்றி படிக்க:

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரின் - பாதுகாப்பு பற்றி:

துகள் மோதலின் வரலாறு CERN-ல்:

1eV ன்னா - ஒரு தனித்த எலக்ட்ரான் ஒரு வோல்ட் மின்னழுத்தத்தில் பெறக்கூடிய இயக்க ஆற்றல்.
1eV = 1.602 X 10^-19 joules.
1GeV=10^9eV
1TeV=10^12eV

Monday, October 5, 2009

கொலுவுக்குப் போய் பர்ஸ் தொலைத்த கதை

பீட்டர் - ரொம்ப இங்கிலிபீஸ்ல கதைக்கிறவன்.
எப்.எம் ரேடியோ - ஒயாம பேசுறவ (ன்).

இப்படி கல்லூரியில் படிக்கும்போது எத்தனையோ குறிச்சொற்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்/பார்த்திருப்பீர்கள். அப்படி எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு குறித்தொடர் உருவாகிய அனுபவம் இது.



கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் நண்பர்கள் வீட்டில் ஏதாவது விசேசம் என்றால் மொத்தமாகக் கிளம்பி போவது எங்களுடைய வழக்கம். இது எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தியின் வீட்டு கொலு & நவராத்திரி -க்கு போகிற அளவிற்கு வளர்ந்தது(!). நாங்கள் ஆண்/பெண் என்று ஒரு கும்பலே அவர்கள் வீட்டிற்கு அன்று சென்றிருந்தோம். நவராத்திரியும் அதுவுமாக தூங்காமல் இருக்க வேண்டுமாமே! எங்கள் தோழியின் சிறுவயது புகைப்பட ஆல்பம், அவளது பொம்மை கலெக்சன் இப்படி எல்லாவற்றையும் பார்வையிட்ட பின், முன்னிரவு நேரத்தில் நடந்த பாட்டுப்போட்டி முடிந்து அப்போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. கொஞ்ச பேர் வட்டமாக அமர்ந்து சீட்டு ஆடிக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் சிலபல பதார்த்தங்களைப் பதம்பார்த்துக்கொண்டு அரட்டையடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் ஒருவன் திடீரென்று 'டேய் என் பர்ஸை காணோம்டா, போய் பார்த்துட்டு வந்துடறேன்' என்று சொல்லிவிட்டு மாடியில் பையன்களுக்கு என்று ஒதுக்கியிருந்த அறைக்கு கிளம்பிப்போனான். திரும்பி வந்து அமைதியாக அமர்ந்துகொண்டான். ஒருசிலபேர் 'பர்ஸ் கிடைச்சுதாடா?' என்று கேட்க 'ஆங். கிடைச்சுது' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னான். இரண்டு நிமிடம் கழித்து அவன் பாக்கெட்டைத் தற்செயலாக பார்த்தபோது அங்கே பர்ஸ் இல்லை. 'டேய் பர்ஸை பேக்ல வச்சிட்டு வந்திட்டியா?' என்றேன். அப்போது அவன் என் காதுபக்கம் வந்து 'பர்ஸெல்லாம் தொலைக்கலடா, ஒன்னுக்கு முட்டிகிட்டு வந்திச்சி. புள்ளங்கல்லாம் இருக்கு. அதான் இப்படி சொல்லிட்டு கிளம்பிட்டேன்' என்றான். அவ்வளவுதான் நானும் 'பர்ஸை தொலைச்சிட்டேன்'! :)

நான் திரும்பி வந்ததும் இன்னொருத்தனும் இதேமாதிரி விசாரிக்க, அவனும் பர்ஸை தொலைக்கவேண்டி வந்தது. சற்று நேரத்தில் பசங்க கூட்டமாக 'பர்ஸை காணோம்டா' என்று சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். உட்கார்ந்திருந்த பசங்க முகத்தில் சின்ன சிரிப்பு இழையோடியது. பொண்ணுங்களுக்கு 'இவனுங்க ஏதோ பண்றானுங்க ஆனா என்னான்னு புரியல' - சிலபேர் புரிந்திருந்தார்கள்.

இந்த அக்கப்போரெல்லாம் ஓய்ஞ்சு பத்து இருபது நிமிடம் ஆகியிருக்கும். முதல்ல 'பர்ஸை தொலைச்ச' நண்பன் எந்திரிச்சு, பசங்க நாலைஞ்சு பேருக்கு மட்டும் கேட்கும்படி இன்னொரு நண்பன்கிட்ட 'நண்பா பேக்ஐ எங்க வச்சேன்னு தெரியலியேடா, போய் தேடிப்பார்த்துட்டு வந்துடறேன்' னுட்டு அவசரமா கிளம்பி போனான். :)

Sunday, October 4, 2009

நானும் காமன் பிளாக்கர் - என்னையும் ஆட்டையில சேர்த்துக்கங்க

நானும் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்துட்டேனுங்க!

ட்விட்டரில் 'அச்சம்தவிர்' லோகு சொன்ன இந்த வார்த்தைக்காக இந்த இடுகை. :)

'காமன் மேன்' என்று தன்னை அடையாளப்படுத்தும் அந்த கதாப்பாத்திரம் 2 கிலோ தக்காளி வாங்குகிறார். அப்படியென்றால் வீட்டில் 'குளிர்பதனப் பெட்டி' (ரெஃப்ரிஜ்ரிரேட்டர்) இருக்கிறது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு 7 மணிக்குள் வந்துவிடுவதாக சொல்கிறார் [நிச்சயமாக மென்பொருள் துறையில் வேலையில்லை :) ] சரி, ஒரு நடுத்தரக் குடும்பம்.

தகவல் தொடர்புக்காக அவர் பயன்படுத்தும் கருவிகளின் மதிப்பு - கூட்டி கழித்துப் பார்த்தால் சில லகரங்களைத் தொடும். அப்புறம் 5 கிலோ வெடிமருந்து - அதன் மார்க்கெட் விலையென்ன?. கடைசியில் ஒரு ஜீப் வெடிக்கப்படுகிறது. அது யாரோடது? சரி, இதெல்லாம் அவரோட செலவில் வாங்கியது என்றாலும், வீட்டில மனைவிக்குத் தெரியாமல் இதெல்லாம் எப்படி ஒரு காமன் மேனுக்கு சாத்தியம்? அந்த கதாப்பாத்திரம் எங்கேனும் திருடினாரா? ஆனால் காந்தி பற்றி பேச தனக்கு உரிமை இருப்பது போல காட்டிக்கொள்கிறாரே?

சீட்டுக் குலுக்கிப்போட்டு நாலுபேரையும் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். அப்படியென்றால் இன்னும் சீட்டுக் குலுக்கிப்போடப் போகிறாரா? 4 பேரும் இறந்தது "தப்பிக்க முயன்றதால்" என்றுதான் ஊடகங்கள் மூலமாக தகவல் வெளியாகிறது. இதைப் பார்த்து மற்ற தீவிரவாதிகள் தாக்காமல் விட்டுவிடுவார்களா? கதாப்பாத்திரத்தின் நோக்கம் என்ன - 'தீவிரவாதிகளுக்கு ஒரு அச்சம் இருந்தால் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்' என்பதுதானே! அதன் நோக்கம் படத்தில் எந்த வகையில் நிறைவேறியிருக்கிறது? தீவிரவாதிகளுக்கு இது எவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது? ஒண்ணையும் காணோம்.

அப்புறம் எல்லாம் முடிந்ததும், தனது உபகரணங்களை அழித்துவிடுகிறது கதாப்பாத்திரம். அப்படியன்றால் நான்கு மாதம் கஷ்டப்பட்டு இவர் எதைச் சாதித்தார்? அவரது கருத்தை மக்களுக்கு அல்லது அரசு எந்திரத்திற்கு கொண்டு சேர்த்தாரா? (ஒருசில காக்கிச் சட்டைகளைத் தவிர!).

எல்லாத்தையும் விட்டுடுங்க. படைப்பு, படைப்பாளி, பிரதி இப்படி எல்லாத்தையும் (உன்னைப்போல் ஒருவன் படத்தைக் கூட).

இந்த காமன் மேனுக்கு என்ன வேண்டும்? 'தீவிரவாதிகளுக்கு உடனுக்குடன் தண்டனை தரப்படவேண்டும்'. ஆனால் பெரும்பாலான வலைப்பூக்களில் விவாதிக்கப்பட்டது போல, முஸ்லிம் நண்பர்களுக்கு எதிராக ('மட்டுமே' இதை இந்த இடத்தில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்) இந்த காமன் மேனின் விருப்பம் திரும்பியிருப்பது - ஏற்றுக்கொள்ளக் கூடியதா? உண்மையிலேயே இதுதான் ஒரு காமன் மேனின் ஆசையாக இருக்கிறது என்றால் 'தீவிரவாதம்' என்ற பதத்திற்கு நாம்(காமன் மேன்) கொண்டுள்ள அடையாளங்கள் என்ன?

மும்பை தாக்குதலின் போது 'தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்' என்ற குரல் ஓங்கி ஒலித்தபோது 'அதன் மூல வேர்களும் ஒழிக்கப்படவேண்டும்' என்றும் சிலர் குரல் கொடுத்தார்கள். அப்போதுதான் எனக்குத் தீவிரவாதத்தின் பல பரிணாமங்கள் விளங்கின. இதை என் சக பணியாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டபோது என்னை ஆமோதித்தவர்கள் ஒருசிலரே! மற்ற அத்தனை பேருக்கும் 'தீவிரவாதி' என்றவுடனே 'தாடி, காஷ்மீர், அல்லா, தானியங்கி துப்பாக்கி' மட்டுமே நினைவிற்கு வந்துவிடுவது ஏன் என்று தெரியவில்லை! இவர்கள் 'காமன் மேன்' என்கிற பதத்திற்குள் வந்துவிடுகிறார்கள் எனில், ஒரு காமன் மேனுக்கு இந்த மாதிரி எண்ணம் இருப்பது, கருத்துப் பரிமாற்றத்தில் நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறதா?

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)

விளக்கம்:
குணங்குன்றிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

இதுதானே ஒரு காமன் மேனுக்குத் தோண வேண்டும்?

Thursday, September 17, 2009

இன்று ஒரு தகவல் - நான் எடுத்த அவரது புகைப்படம்!

கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷ்ண மடத்தில்' பேசும்போது பார்த்தது.

  • உங்கள் பால்ய காலத்து நினைவுகளை அசைபோடும்போது என்னவெல்லாம் மனதில் வருகிறது?
  • எத்தனை மனிதர்கள் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள்?
  • நீங்கள் மிகவும் இரசித்த விசயம் எது?
  • சிறுவனாக/சிறுமியாக இருந்தபோது நீங்கள் நண்பர்களுடன் விவாதித்த சம்பவங்கள், செய்திகள் என்னென்ன?
**************

எனது சிறுவயதை நினைவு கூறும்போது முக்கியமாக நினைவுக்கு வருவது ரேடியோவும் தென்கச்சியும். நான் முதன் முதலாக ரேடியோவைக் கவனிக்க ஆரம்பித்தது, 1994-95 ஆம் வருடங்களில் - பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது.

தூத்துக்குடி வானொலி:
  • காலை 7 மணியில் இருந்து 7:15 வரை பக்திப் பாடல்கள் (இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமய பக்திப் பாடல்கள் ஒவ்வொன்று, நேரம் மீதமிருந்தால் ஏதேனும் ஒரு மதத்திலிருந்து இன்னும் ஒரு பாடல்).
  • 7:15 - 7:25 செய்திகள் (டெல்லி அஞ்சல்).
  • 7:25 - 7:30 'இன்று ஒரு தகவல்'.
சில நாட்களில், 7:28க்கே, இன்று ஒரு தகவல் முடிந்துவிடும். அத்தனை குறுகியதாக இருந்தாலும், மிகப்பெரும் அறிவியல், சமூக, பண்பாட்டு தகவல்களை வாரி வழங்கிய அற்புத நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் அறிவியல் தகவல்கள்தான் தொடர்ந்து கேட்கும்படி செய்தன. காலையில் காஃபியுடன் 'இன்று ஒரு தகவலை'க் கேட்பதற்காகவே 'ஆகாசவாணி'யின் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்த காலம் அது. இன்று அறிவியல் செய்திகளில் நான் அதிக ஆர்வம் காட்டுவதற்கு அடிப்படையான காரணம் இதுதான்.


'அதிஷா'விற்கு வெகு காலத்திற்கு முன்பே ஜென் கதைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தென்கச்சி. அவரை முதல் முதலாய் நேரில் பார்த்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் (2007 /2008 எது என்று நினைவில் இல்லை). அதன் பிறகு கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷண மடத்தில்'. 4-13-2008 அன்று 'இராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தின்' நூறாவது ஆண்டுவிழா' விற்குப் பேச வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், படிக்கட்டில் அவர் (இன்னொருவர் கைத்தாங்கலாக) நடந்து செல்ல, அருகிலேயே நடந்து சென்றேன் . அவரோடு ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும் என்று தோணினாலும் ஏதையோ யோசிக்க (இங்கே சென்னையில்தானே இருக்கப்போகிறார், பின்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் - என்ற உணர்வு) பிரமித்தபடியே நின்றிருந்தேன்.

பல வருடங்கள் வானொலியில் ஒலித்த குரல், எனக்கு மிக அருகே நடந்து சென்றது - எனக்குள் இருந்த, அவரை ரசித்த அந்த சிறுவனுக்கு எப்படி ஆச்சரியமும் பரவசமும் தராமல் இருக்க முடியும்?
சென்னைக்கு வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்த ஒருசில தருணங்களில் அதுவும் ஒன்று.

அவர் அந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்தது முன்பே தெரிந்திருக்கவில்லை. மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச பேட்டரியை வைத்து, எனது கேமிராவைப் பயன்படுத்தி அன்றைக்கு எடுத்த கடைசி புகைப்படம். (அவரை கிளிக்க மட்டுமே எஞ்சியிருந்ததோ என்னவோ?)



அழியாப் புகழ் தென்கச்சியின் குரலுக்கு!

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி!

தென்கச்சி கோ.சுவாமிநாதன்


என் மனம் கொள்ளை கொண்ட, நான் சிறுவயதில் மிகவும் நேசித்த, மதித்த ஒரு மனிதனின் இறுதிநாள் இன்று. அவருக்கு எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

Tuesday, September 15, 2009

ஸ்ரேயா கோஷலும் சக்கை போடு போடும் ஹிந்தி பாடல்களும்!

கடந்த ஆண்டில்தான் ஹிந்திப் படங்களும் பாடல்களும் பார்க்க, கேட்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் பாடல்கள் பலதடவைகள் கேட்கும்படியாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கீழே கொடுத்துள்ள இரண்டு பாடல்களும். இவற்றின் வீடியோ காட்சி பார்த்ததில்லை. ஆனால் பலதடவை பாடல்களைக் கேட்டுள்ளேன்.

1) சிங் இஸ் கிங் படத்தில் 'தேரி ஒரீ' என்ற பாடல்

பாடியவர்கள்: Shreya Ghoshal, Rahat Fateh Ali
இசை: Pritam


2) ராஸ் - த மிஸ்ட்ரி கன்டின்யூஸ் படத்தில் 'சோனியோ' என்ற பாடல்

பாடியவர்கள்: Shreya Ghoshal, Sonu Nigam.
இசை: Raju Singh


ராஸ் - த மிஸ்ட்ரி கன்டின்யூஸ் படத்துக்கு நான்கு இல்ல ஐந்து பேர் இசையமைத்திருக்கிறார்கள். வேறு வேறு பாட்டுக்கு வேறு வேறு நபர்கள்.

அப்புறம், இந்த 'ஸ்ரேயா கோஷல்' பொண்ணு இருக்கே, எப்படி பாட்டு படிக்குது பாருங்க! அழகா வேற இருக்கு :). தெரிஞ்சவங்க யாராவது இருந்தா ஊர்சுற்றியைப் பற்றி நல்லவிதமாக எடுத்துச் சொல்லி பரிந்துரைக்கலாம். :)

போனஸ் பாட்டு:
ஸ்ரேயா கோஷலுக்கு 2007 ம் ஆண்டுக்கான இந்திய அரசின் 'சிறந்த பாடகிக்கான' விருதைப் பெற்றுத் தந்த 'ஜப் வி மெட்' படத்தின் பாடல்.



2008-ம் ஆண்டுக்கான விருது இவ்விடுகையின் முதல் பாடலுக்காகவும் 2009-ம் ஆண்டுக்கான விருது இரண்டாம் பாடலுக்காகவும் ஸ்ரேயா கோஷலுக்குக் கொடுக்கப்பட்டால் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை!

பொறுப்பி(டிஸ்கி):
கபில் சிபில் தபில் எனது தூரத்து சொந்தமும் அல்ல!
இது மறைமுக ஹிந்தி திணிப்பு அல்ல!

குறிப்பு:
எம்பெட் ப்ளேயரில் உள்ள பாட்டு படிப்பதற்கு '>' (Play Next Song) என்ற பட்டனை அழுத்தவும் (Play பட்டனை ஒட்டினாற்போல வலதுபக்கம்).

Monday, September 14, 2009

சிருகதை பட்டரையிள் பிள்ளைகள் - என்ன கொடுமை இது!

8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கண மின் புத்தங்களின் தொடுப்புகள் கீழே!

8-ம் வகுப்பு - தமிழ் இலக்கணம் என்ற பிரிவில்.
9-ம் வகுப்பு - தமிழ் இலக்கணம் என்ற பிரிவில்.
10-ம் வகுப்பு - தமிழ்த் துணைப்பாடம் என்ற பிரிவில்.
11-ம் வகுப்பு - சிறப்புத் தமிழ் என்ற பிரிவில்.
12-ம் வகுப்பு - சிறப்புத் தமிழ் என்ற பிரிவில்.

என்ன கொடுமை இது! சிறுகதைப் பட்டறை என்று வைத்துவிட்டு 'உங்களில் பிழையில்லாமல் தமிழில் எழுத எத்தனை பேரால் முடியும்' என்ற கேள்விக்கு பளிச்சென்று பதில் சொல்ல ஏன் யாராலும் முடியவில்லை?

யுவன் சந்திர சேகரும், பா.ராவும் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்கள் - பட்டறையில்.

பா.ரா. பேசும்போது, வலைப்பூக்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், 200 வலைப்பதிவர்களில் ஒருவர், தமிழில் பிழையின்றி எழுதுவதைக் கண்டுபிடிப்பதே(தேறுவது) மிகவும் கடினமாக இருக்கிறதென்றும் கூறினார்.

நானும் இந்தக் குட்டையில் ஊறிய மட்டைதான் என்று கூறிக்கொண்டு, எற்கெனவே இதுசம்பந்தமாக எனது பழைய இடுகை...

Saturday, September 12, 2009

2012 ல் உலகம் அழியும் - பைபிள் சொல்கிறதாம்!

2000ல் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்கள், இப்போது 2012 என்கிறார்கள். பெரிய வித்தியாசம் என்னவென்றால், இப்போது விதவிதமாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பைபிளி'லும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறது என்ற 'ஜெய்ஹிந்த்புரத்'தின் பின்வரும் ஒரு 'ட்வீட்' டைப் பார்த்தபின்தான் இந்த ''7 காரணம் மேட்டரைப்'' பற்றி தெரியவந்தது.

'ஜெய்ஹிந்த்புரத்'தின் ட்வீட்டு.
//7s to end world 2012-Mayan Calendar, Sun Storms, The Atom Smasher, The Bible says..(?), Super Volcano,The Physicists,Slip-Slop-Slap-BANG//

இணையத்தில் இதுபோல நிறைய உலாவுகிறது. கூகிளில் தேடினால் ஆயிரக்கணக்கில் பக்கங்கள் வந்து குவிகின்றன.

2012ல் பூமி அழிந்துவிடுமாம். அதற்கு ஏழு காரணங்கள்:
1) மாயன் காலண்டர்.
2)சூரியப் புயல்.
3)CERN ல் உள்ள லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (இயக்கத்தில் இருந்தால்).
4)பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.
5)சக்திவாய்ந்த எரிமலை.
6)இயற்பியலாளர்களின் கணிதம்.
7)புவிகாந்த துருவ மாற்றம்.

பைபிள்னு ஏதோ சொல்லியிருக்கிறார்களே, என்று மீண்டும் கூகிளினால் மேலதிகத் தகவல்கள் கிடைத்தன.

பைபிளில் என்னதான் உள்ளது?
''பூமியில் மிகப்பெரும் போர் நடக்கும். அந்தப் போரின் முடிவில், கடவுள் பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டு பூமியை ஆள்வார், அதற்குப் பிறகு இறந்த அனைவரும் மறு உயிர் பெற்று நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் கெட்டவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள்''. இதுதாங்க!


ஆனால் 2012ல்தான் இந்தப் போர் நடக்கவிருப்பதாக பலபேர் சொல்கிறார்கள். இது நடக்குமா, நடக்காதா? என்று தெரிந்துகொள்ளும் முன்பு பைபிளில் இது தொடர்பாக உள்ள விசயங்களைச் சிறிது 'விம்' பார் போட்டு அலசினால் நல்லது.

யார், எப்போது சொன்னது?
பைபிள் புத்தகங்களில் கடைசியாக உள்ளது 'திருவெளிப்பாடு (அ) வெளிப்படுத்தல்' (Revelation). இதை எழுதியவராகச் சொல்லப்படுபவர் 'ஜான்'. காலம், கி.பி.1 அல்லது 2 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி 'நாஸ்ட்ராடமஸ்' என்பவர் பல முன்னறிவுப்புகளை சொல்லிவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்களோ, அதேபோல் உலகத்தின் இறுதிநாட்களைப் பற்றி 'கடவுள் தனக்கு சொன்னதாக' இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூறிக்கொள்கிறார். இதில் 17 - ம் அதிகாரத்தில் மேற்கண்ட இறுதிப் போர் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு முந்தைய அதிகாரங்களில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும் முன்னறிவித்திருக்கிறார் ஜான்.


முந்தைய 16 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விசயங்கள் நடந்தால் மட்டுமே 17-ம் அதிகாரத்தில் வரும் விசயத்தையும் நாம் நடக்கும் என்று நம்ப முடியும். முதல் பதினாறு அதிகாரத்தில், ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு, புதிய இஸ்ரேல், ஏழு எக்காளம், அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும், நாடுகள் ஒன்றுதிரட்டப்படுதல்.... இப்படி பல விசயங்கள் நடக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நடந்துவிட்டனவா? அல்லது நடந்துகொண்டிருக்கின்றனவா? என்று கேட்டால், அதற்குச் சரியான பதில் இல்லை. அதேநேரம், இவை நேரடியாகச் சொல்லப்பட்டவை அல்ல, சில உருவகங்ள் குறிப்புகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

முந்தைய 16 அதிகாரங்களில் உள்ள விசயங்களை நிரூபிக்காமல் சும்மா மொட்டையாக "உலகம் அழிந்துவிடும்'' என்று சொல்லிக்கொள்வது அறியாமை. மேலும், மிகப்பெரும் 'போதகர்கள்' கூட நிச்சயம் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் - கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் ஒரு தொழிலை 2012 வரைக்குமா அவர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள்?


  • இந்த இடுகையைப் படித்து நீங்கள் மரணபயம் கொண்டால்(!) அதற்கு இந்த ஊர்சுற்றி பொறுப்பல்ல.
  • இந்த மாதிரி விசயங்களையெல்லாம் நம்பி 2011 வரை, எல்லா கேடித்தனமும் செய்துவிட்டு 2012 முதல் நாள் பாவமன்னிப்பு வாங்கிக்கொள்ளலாம் என யாரேனும் முடிவெடுத்தால் அதற்கும் இந்த ஊர்சுற்றி பொறுப்பல்ல!
  • ஜெய்கிந்த்புரத்தின் 'ட்வீட்'டில் இருந்து ஆரம்பித்திருப்பதால் இது அவருக்கு எதிரான இடுகை அல்ல.

தகவல்:
வரும் காலங்களில் மேலே கூறப்பட்டுள்ள 7 காரணங்களையும் தனித்தனியாக இடுகையிடலாம் என்று இருக்கிறேன். ஜெய்கிந்த்புரத்தின் 'ட்வீட்'டுக்கு நன்றி. :)