Monday, October 5, 2009

கொலுவுக்குப் போய் பர்ஸ் தொலைத்த கதை

பீட்டர் - ரொம்ப இங்கிலிபீஸ்ல கதைக்கிறவன்.
எப்.எம் ரேடியோ - ஒயாம பேசுறவ (ன்).

இப்படி கல்லூரியில் படிக்கும்போது எத்தனையோ குறிச்சொற்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்/பார்த்திருப்பீர்கள். அப்படி எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு குறித்தொடர் உருவாகிய அனுபவம் இது.கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் நண்பர்கள் வீட்டில் ஏதாவது விசேசம் என்றால் மொத்தமாகக் கிளம்பி போவது எங்களுடைய வழக்கம். இது எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தியின் வீட்டு கொலு & நவராத்திரி -க்கு போகிற அளவிற்கு வளர்ந்தது(!). நாங்கள் ஆண்/பெண் என்று ஒரு கும்பலே அவர்கள் வீட்டிற்கு அன்று சென்றிருந்தோம். நவராத்திரியும் அதுவுமாக தூங்காமல் இருக்க வேண்டுமாமே! எங்கள் தோழியின் சிறுவயது புகைப்பட ஆல்பம், அவளது பொம்மை கலெக்சன் இப்படி எல்லாவற்றையும் பார்வையிட்ட பின், முன்னிரவு நேரத்தில் நடந்த பாட்டுப்போட்டி முடிந்து அப்போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. கொஞ்ச பேர் வட்டமாக அமர்ந்து சீட்டு ஆடிக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் சிலபல பதார்த்தங்களைப் பதம்பார்த்துக்கொண்டு அரட்டையடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் ஒருவன் திடீரென்று 'டேய் என் பர்ஸை காணோம்டா, போய் பார்த்துட்டு வந்துடறேன்' என்று சொல்லிவிட்டு மாடியில் பையன்களுக்கு என்று ஒதுக்கியிருந்த அறைக்கு கிளம்பிப்போனான். திரும்பி வந்து அமைதியாக அமர்ந்துகொண்டான். ஒருசிலபேர் 'பர்ஸ் கிடைச்சுதாடா?' என்று கேட்க 'ஆங். கிடைச்சுது' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னான். இரண்டு நிமிடம் கழித்து அவன் பாக்கெட்டைத் தற்செயலாக பார்த்தபோது அங்கே பர்ஸ் இல்லை. 'டேய் பர்ஸை பேக்ல வச்சிட்டு வந்திட்டியா?' என்றேன். அப்போது அவன் என் காதுபக்கம் வந்து 'பர்ஸெல்லாம் தொலைக்கலடா, ஒன்னுக்கு முட்டிகிட்டு வந்திச்சி. புள்ளங்கல்லாம் இருக்கு. அதான் இப்படி சொல்லிட்டு கிளம்பிட்டேன்' என்றான். அவ்வளவுதான் நானும் 'பர்ஸை தொலைச்சிட்டேன்'! :)

நான் திரும்பி வந்ததும் இன்னொருத்தனும் இதேமாதிரி விசாரிக்க, அவனும் பர்ஸை தொலைக்கவேண்டி வந்தது. சற்று நேரத்தில் பசங்க கூட்டமாக 'பர்ஸை காணோம்டா' என்று சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். உட்கார்ந்திருந்த பசங்க முகத்தில் சின்ன சிரிப்பு இழையோடியது. பொண்ணுங்களுக்கு 'இவனுங்க ஏதோ பண்றானுங்க ஆனா என்னான்னு புரியல' - சிலபேர் புரிந்திருந்தார்கள்.

இந்த அக்கப்போரெல்லாம் ஓய்ஞ்சு பத்து இருபது நிமிடம் ஆகியிருக்கும். முதல்ல 'பர்ஸை தொலைச்ச' நண்பன் எந்திரிச்சு, பசங்க நாலைஞ்சு பேருக்கு மட்டும் கேட்கும்படி இன்னொரு நண்பன்கிட்ட 'நண்பா பேக்ஐ எங்க வச்சேன்னு தெரியலியேடா, போய் தேடிப்பார்த்துட்டு வந்துடறேன்' னுட்டு அவசரமா கிளம்பி போனான். :)

11 comments :

Jana said...

தமிழ் இலக்கணத்தில் இடக்கரடக்கம், குழுகுக்குறி, சிலேடை என பல வடிவங்கள் உண்டு இந்த மூன்றையும் கொலுபார்க்கப்போய் நீங்கள் கையாண்டுள்ளீர்கள். பாராட்டுக்கள். படிக்கும்போதே சுவாரஸ்யமாக இருந்தது.

ஹேமா said...

ஓ...இதுக்கு இப்பிடி ஒரு சிலேடை வசனம் இருக்கா !

கார்ல்ஸ்பெர்க் said...

ரெம்ப நாளைக்கு அப்பறமா என்னை "உண்மையிலேயே" சிரிக்க வைத்த பதிவு.. :))

அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா ரசிச்சேன்

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

Noted!! அடுத்த முறை உஷாரா இருந்துக்குவாங்க, அதுக்குள்ள கோட வேர்ட மாத்திடாதிங்கப்பா!!

Muruganantham Durairaj said...

ரசித்து சிரித்தேன் :-)

வால்பையன் said...

படிச்சி முடிச்சதும் எனக்கும் பர்ஸ் தொலைஞ்சு போச்சு!

ஊர்சுற்றி said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி Jana, ஹேமா, கார்ல்ஸ்பெர்க், Muruganantham Durairaj.

Jana ரொம்ப நன்றிங்க.
குழுகுக்குறி - குழுஊக்குறி என்று படித்த ஞாபகம்.

//ஹேமா said...
ஓ...இதுக்கு இப்பிடி ஒரு சிலேடை வசனம் இருக்கா !//
இன்னும் இதேபோல நிறைய இருக்கு.

// கார்ல்ஸ்பெர்க் said...
ரெம்ப நாளைக்கு அப்பறமா என்னை "உண்மையிலேயே" சிரிக்க வைத்த பதிவு.. :)) //

மிக மிக நன்றி.

ஊர்சுற்றி said...

நன்றி அபுஅஃப்ஸர், ஷஃபிக்ஸ்/Suffix.
வால்பையன் அண்ணே நன்றி.

// ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
Noted!! அடுத்த முறை உஷாரா இருந்துக்குவாங்க, அதுக்குள்ள கோட வேர்ட மாத்திடாதிங்கப்பா!!//

மாத்தறதா இல்லீங்க. :)

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கே.........

nallas said...

Purse tholacha pala Peru la nanum oruthan