Wednesday, February 25, 2009

பிரான்சிஸ் கிருபா என்கிற பைத்தியக்காரன்!

விகடனில் 'மல்லிகை கிழமைகள்' என்ற தலைப்பில் பலரையும் கிறங்கடித்த கவிதைகளை எழுதியவன் இந்த பிரான்சிஸ் கிருபா. விகடனில் அந்த கவிதைகளை படிக்கும் போது அது ஒரு 'பெண்' என நான் எண்ணியதுண்டு.

கற்பனையை பாடலாக்கலாம்...
இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஏக்கத்தை கவிதையாக்கலாம்...
ஒன்றுடன் ஒன்று ஒப்புமைப்படுத்தி எழுதலாம்...
இயற்கையை கவியில் வடிக்கலாம்...

ஆனால் கற்பனைக்கு எட்டாத, புரிந்து கொள்வதற்கு சிக்கலான, மந்திர வார்த்தைகளை கவிதையாக்குகிறான் இந்த பைத்தியக்காரன். நான் வாசித்த ஒரு சில கவிஞர்களில் மிகவும் வித்தியாசமானவன் இவன்.

இவன் 'அலைகளிடமிருந்து பலூனை பிடுங்குகிறான்', 'கதறியழுகின்ற கனவுகளை தொடுக்கிறான்', 'மழை நூலக ஊழியராகிறான்'.

மஞ்சள்நிற இசைத்தட்டில் நிலா
மவுனமாகச் சுழல
பூக்களுக்கு விசிறும் வண்ணச் சிறகுகள்
நடனக் குறிப்புகளால் நிரம்புகிறது.
வெயிலேறி மினுமினுக்கும் காட்டு நதிகள்
குருதிக்குள் பாயந்து கலக்கிறது.
வெண்சிகப்பு கூழாங்கற்கள் பாதையடைக்கின்றன.
அலை நெளிக்கும் நடனச் சுவடுகளில்
காலம் தன் பாதங்களைப் பணிவாக வைக்கிறது.
நடனமிடும்போதெல்லாம் நான்
யாரையோ அணிந்துகொள்ளத் தவிக்கிறேன்
முடிவுவரை என்னைக் களைவதே நடனமாயிருக்கிறது.
நடனமிடும்போது
கெட்ட கனவுகளின் விஷம் முறிகிறது.
முத்தமிடும்போது கடல்
மீனின் நடனமாகிறது.


- 'வலியோடு முறியும் மின்னல்' என்கிற கவிதைத் தொகுப்பில் ஜெ.பிரான்சிஸ் கிருபா எழுதியது.

தொண்டன் - தொண்டராக
தலைவன் - தலைவராக
கலைஞன் - கலைஞராக (கருணாநிதி ஞாபகத்திற்கு வந்தால், அதற்கு இந்த ஊர்சுற்றி பொறுப்பில்லை)
கவிஞன் - கவிஞராக பதவி உயர்வு காத்திருக்கிறது இந்தக் கவிஞனுக்கு.

அதுவரை, அவரது கவிதைகளைப் படித்து பித்து பிடித்து அலையலாம் வாருங்கள்.

Monday, February 23, 2009

நான் அப்பவே சொன்னேன்ல!

ரஹ்மான் ஜெயிச்சிட்டாரு....

என்னோட முந்தைய இடுகையை பாருங்க!

D. It is written.

Sunday, February 22, 2009

ஆஸ்கர் அவுட்டாகிடுச்சு...ரஹ்மான் ஜெயிச்சுட்டாரு...!



சரியாக இந்திய நேரப்படி இன்று மாலை 5:00 மணிக்கு துவங்கவிருக்கும் ஆஸ்கர் விழாவிற்கு இந்த வருட சிறப்பு, நம் இந்திய நாட்டிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விருது பெறப் போவது.

'ஸ்லம்டாக் மில்லியனர்' உடன் போட்டியிடும் மற்ற படங்களையெல்லாம் கவனித்து பார்த்துவிட்டு நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேனா?

அல்லது

நடுராத்திரியில பூலோக (சீ) மேலோக கடவுளர்களெல்லாம் ஒன்றுகூடி வந்து கனவில் கதைத்துவிட்டு சென்றார்களா?

என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஏனென்றால்...



விருது பெறப்போகும் நம்ம ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

செய்தி:
'ஸ்லம்டாக் மில்லியனர்' பட நாயகி 'ஃபிரைடா பின்டோ' இரகசியமாய் திருமணம் செய்து கொண்ட கணவரிடமிருந்து இரகசியமாகப் பிரிந்தார் (?!!!). (இப்போ தனியாதான் இருக்காங்களாம்!)

Thursday, February 19, 2009

கலைஞருக்கு 35 ஜெவுக்கு 5 - ஆச்சரியமான முடிவுகள்!

தலைப்பை பார்த்ததும், இது ஏதோ 'திமுக' ஆதரவு கருத்துக் கணிப்பு என்றோ, அல்லது 2009, ஏபரல் 10-ம் தேதியிட்ட 'தினகரன்' நாளிதழில் வெளிவரக் காத்திருக்கின்ற கருத்துக் கணிப்பு என்றோ எண்ணவேண்டாம்.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில(பல)வாரங்களில் வரவிருக்கின்றது. பல பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக்கொண்டு கருத்துக் கணிப்புகளை வெளியிட காத்திருக்கின்றன. நானும் முந்திக்கொண்டு, சும்மானாச்சுக்கும் இந்த கணிப்பை வெளியிடுகிறேன். என்று நீங்கள் கணித்தால்.... ம்ஹீம். அதுவும் இல்லை.

தலைப்பில் குறிப்பிட்ட எண்களை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் 'திருநெல்வேலி' வரை வரவேண்டியிருக்கும். அப்படியே காலாற போய் தெரிந்து கொண்டு வரலாம் வாருங்கள்.

கடந்த வாரம் நெல்லை வரை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஜங்கசனில் இருந்து 'புதிய பேருந்து நிலையம்' (?!!! 2002 லேயே திறந்து அது இப்போ அரதப் பழசாகி விட்டது, இன்னமும் இப்படியேதான் கூப்பிடறாங்கப்பா) வரை செல்ல பேருந்தில் ஏறினேன்.

அப்போது காதில் விழுந்த இரு சக பயணிகளின் உரையாடல் இதோ உங்கள் பார்வைக்கு...

'இந்த பஸ்லதான்யா எல்லா கூட்டமும் ஏறுது'
'ஆமா காத்திருந்துலா ஏறியிருக்கு'
'மெட்ராஸ்ல உட்ட மாதிறி இங்கேயும் பஸ் உட்டா யாரு ஏறுவா? இங்க எல்லாரும் சாதாரண வேலைக்குப் போறவனா இருப்பான், மூணு கிலோ மீட்டருக்கு 7 ரூபா கொடுக்கணும்னா யோசிக்க மாட்டானா ? LSS லயே 5 ரூபாதான் வாங்கறான்.'
'இந்த மந்நிரிகளுக்கெல்லாம் என்ன தெரியும், அவனுவ பாட்டுக்கு A.C. காருல வந்துட்டு போயிடுவானுவ'

பேருந்தை விட்டு கீழே இறங்கிய பின் இன்னுமொரு இடத்தில்....

'அது என்னது கருணாநிதி பஸ் - ஜெயலலிதா பஸ் ?'
'ஜெயலலிதா ஆட்சியில உட்டது அந்த பச்சை கலர் பஸ். இப்போ கலர் கலரா டிக்கெட் வெலையெல்லாம் கூட வச்சி வார பஸ்-லாம் கருணாநிதி பஸ்'

நான் நிதானமாக உட்கார்ந்து கணக்கு எடுத்ததில் 6 கருணாநிதி பேருந்துகளைத் தொடர்ந்து 1 ஜெயலலிதா பேருந்து வந்தது.
6:1 = 35:5 (தோராயமாக).

செய்தி 1:
'தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயராமலேயே தரமான போக்குவரத்துச் சேவை' - கடந்த வாரத்திலும்(!) வெளியான அரசு விளம்பரம்.
செய்தி 2:
முதல் கட்ட வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்பிலிருந்து எந்த வகை கருத்துக் கணிப்பையும் வெளியிடத் தடை - தேர்தலை ஆணையம்.

Sunday, February 15, 2009

சிவா மனசுல சக்தி - எத்தனை மார்க்?

முதல் பாதி:

நன்றாக ஆரம்பித்து, காதல் வரை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். 'கண்ட நாள் முதல்', 'டிஷ்யும்' போன்ற படங்களின் சாயல் வந்துவிடக்கூடாது என்று மிகவும் மெனக்கெட்டுள்ளார். அதில் ஒரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளார். ஒரு பெண்ணையும் பையனையும் சந்திக்கவைத்து, மோதவைத்து இறுதியில் காதலில் விழவைப்பதில் காட்சியமைப்பு திரைக்கதை எல்லாம் அருமை.

இரண்டாம் பாதி:

முதல் பாதியில் 'சிவா' வுடன் முடியும் மோதலை தொடர்ந்தே தீருவது, மேலும் அடுத்தடுத்து கதாப்பாத்திரங்கள் தங்கள் முடிவை மாற்றி மாற்றி பேசுவது, என்று இரண்டு மூன்று 'கிளைமேக்ஸ்' தொடரந்து வருகின்றன.

காமெடி நல்லாத்தானே இருக்கு என்று நினைக்கும்போதே, சில மொக்கையிலும் மொக்கையான காமெடித் திணிப்புகள் - ரொம்ப ஓவர். சில நேரம் என்னதான் நடக்கிறது என்ற குழப்பமே வந்துவிடுகிறது.

மொத்தத்தில்:
திரைக்கதை - பின்பாதி சொதப்பல்
இசை - ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்ல
மார்க் - 38 (விகடன்ல இதுக்கு மார்க் போடுவாங்களான்னு தெரியல).

வேண்டுகோள்:
படத்தில 'சிவா' வுக்கு தங்கச்சியா நடிச்ச அந்த பொண்ணோட முகவரி இருந்தா யாராவது குடுங்களேன். காதலர் தினம் முடிஞ்சாலும் பரவாயில்லை.

'ஞானசம்பந்தம்' சார் - தயவு செய்து இந்த மாதிரி மொக்கை ரோல்களில் இனியாவது நடிக்காமல் இருங்களேன்.

Wednesday, February 11, 2009

ஒரு நாடு - ஒரு ராக்கெட், ஒரு நகரம் - ஒரு சிக்னல்: சென்னை, வேளச்சேரி

இடம்: சென்னை, வேளச்சேரி - விஜயநகர்.

இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் வந்துள்ள இளம் கன்னியர்/காளையர் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள சென்னை மாநகரின் முக்கியமான இடம் (திருவான்மியூர் - பெசன்ட் நகருக்கு அடுத்தபடியாக).

விஜயநகர் - தாம்பரம்
விஜயநகர் - தரமணி
விஜயநகர் - கிண்டி

கடந்த ஒரு வருடமாக கவனித்து வருகிறேன். இங்கு போக்குவரத்து போலீசார் குறைந்தது நான்கைந்து பேர் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள். தற்போது இங்கு புதியதாக போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் சிக்னல் நிறுவப்பட்டுள்ளது (வெள்ளோட்டமோ என்னவோ? - இதற்கு இவ்வளவு நாள் ஆனது மிகமிக அதிகம்)

அதை நன்றாக கவனித்தவர்களுக்கு தெரியும், 'நடை பயணிகளுக்கு' (பாதசாரிகள்) என்று தனியாக எந்த விளக்கும் இங்கு வைக்கப்படவில்லை. பெரும்பாலான வாகன ஓட்டிகள், குறிப்பாக மாநகர பேருந்து ஓட்டுனர்கள் இந்த சிக்னலை எல்லாம் மதித்ததாகவே தெரியவில்லை. நடை பயணி்கள் 'வளை'யிலிருந்து வெட்டிவிடப்(வெளிப்)பட்ட எலிகள் போல அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள். நடைபயணிகளுக்கு முன்னுரிமை - அதுகூட இல்லை, ஒரு அஞ்சு செகண்டாவது கொடுத்து, ஓட சொல்லியிருக்கலாம்.

"ஒரே 'ராக்கெட்'டில் 12 செயற்கைக்கோள்களை அனுப்புகிறோம், நிலவில் மனிதனால் செய்யப்பட்ட பொருளை இறக்கிய நான்காவது நாடு" என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் ஒரு முச்சந்தியில் 'சிக்னல்', - அதை ஒழுங்காய் வைக்க நமக்கு தெரியவில்லை.

ஒருசில 'Intel' அல்லது 'PIC' அல்லது ஏதோ ஒருவகை 'மைக்கரோகன்ட்ரோலரை' (Microcontroller) வைத்து, சிலநாள் அந்த இடத்தை பற்றிய 'கள ஆய்வு' மற்றும் சில வார உழைப்பு இவற்றுடன் செய்து முடிக்கிற வேலை. பல ஆயிரம் 'லூப்'புகள் உள்ள ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவத் தெரிந்த நமக்கு "இங்கே எங்கே 'லூப்' இருக்கிறது?" என்று தெரிந்துகொள்வது மிக அவசியமானது.

Tuesday, February 3, 2009

இலங்கை:ஈழம் - தமிழனின் கனவு நாசமாகட்டும் !

இடம் - இலங்கை மற்றும் தமி்ழீழப் பகுதியாக அறிவிக்கப் பட்ட பகுதிகள் மற்றும் உலகம்.
காலம் - தெரியவில்லை
காட்சி(கள்) - விளங்கவில்லை...

* இலங்கை இராணுவப் படைகள் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் புகுந்து 'எதையோ/யாரையோ தேடுகிறேன் பேர்வழி' என்று 'அறவழியில்' தேடுதல் வேட்டை நடத்துகின்றன.

* தமிழர்களின் பாஸ்போட்டுகள் பறிக்கப்படுகின்றன அல்லது மறுக்கப் படுகின்றன.

* செய்திகள் வெளிவருவது திட்டமிட்டு முடக்கப்படுகிறது.

* இலங்கை அரசு 'இன்டர்போலுடன்' இணைந்து 'பயங்கர(வாதிகள்!)' தேடுதல் வேட்டை நடத்துகிறது.

* இலங்கையில் அமைதி(?!) திரும்பிவிட்டதாக 'இந்தியாவும் + இலங்கையும்' கூட்டு அறிக்கை வெளியிடுகின்றன.

* இதை (கூறுகெட்ட) உலக சமுதாயமும் 'உறுதி செய்ததாக' அறிவிக்கிறது.

* நயன்தாராவின் 'சம்பளமும்' - எந்திரனின் 'லேட்டஸ்ட் - அதிரடி புகைப்படங்களும்' தலைப்புச் செய்திகளாக மறுபடியும் மாறுகின்றன.

* 'சீமான்' மீண்டும் கைது செய்யப் படுகிறார்/அல்லது 'தேனி சுகுமாரோ - திண்டுக்கல் சாரதியோ' தீக்குளிக்கிறார்கள்.

* தமிழுலகம் மீண்டும் என்ன செய்யப்போகிறது? என்ற என் பலத்த எதிர்பார்ப்பினூடே....

அந்த கனவு கலைகிறது....


இந்த 'நாடும்' அதன் 'பகுத்தறிவில்லாத' மக்களும் நாசமாய்ப் போகட்டும்... இந்தத் தமிழனின் கனவும் நாசமாய்ப் போகட்டும்.