Tuesday, March 31, 2009

நேரில் சந்தித்த ஒரு விபத்து - உண்மை அனுபவம்: இரண்டாவது பகுதி

முதல் பாகம் இங்கே.

கே.கே. நகர் அரசு மருத்துவமனை வளாகம். அடிபட்டவர் ஆம்புலன்சின் உள்ளே. நர்ஸ் என்னிடம் பேசும்போது, 'நல்ல வேளை ஹெட் இஞ்சுரி(கபால காயம்) இல்லை, மேல்மட்ட அடிதான். இருந்தாலும் சென்ட்ரலுக்குப் போவதுதான் நல்லது' என்றார். கட்டு போட்டிருந்ததன் காரணமாக இரத்தம் வழிவது நின்றிருந்தது. நண்பனின் கை முழுவதும், மேல் சட்டையில் பல பகுதிகளும் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. அடிபட்டவருக்கு கேட்கவே வேண்டாம், வலது பக்க தாடையில் ஆரம்பித்து மேல் சட்டை முழுவதும் இரத்தம். ஆம்புலன்சில் என் முதல் வினாடிகள். என் கண்கள் அந்த அனுபவத்தை நன்றாகப் படம் பிடித்துக் கொண்டன. அனைத்து வசதிகளையும் கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் அது. முன்னால் இருந்த சிறிய பெட்டிகளில் IV FLUID, IV SET, HAZARD, DRESSING... என்றெல்லாம் எழுதியிருந்தது. சிறிய படுக்கை, அதற்கான தாங்குப்பிடிகள். மூச்சு சாதனங்கள். என்று எனக்குத் தெரிந்த அடிப்படையான மருத்துவ சாதனங்கள் எல்லாம் உள்ளேயே.

அப்படியே என் கவனம் அடிபட்டவர் மீது திரும்ப... திடீரென்று, அந்த நபர் சுயநினைவு வந்து எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போதுதான் நாங்கள் கவனித்தோம் அந்த நபர் 'சொர்க்கலோகத்தில்' மூழ்கி இருந்ததை (முழுத் தண்ணி). மனுசன் எந்த 'டாஸ்மாக்' ல இருந்து நேரே வண்டிய ஓட்டிகிட்டு வந்தானோ தெரியவில்லை. அந்த நிமிடத்திலிருந்து அந்த மனிதன் மேல் இருந்த இரக்கமோ, அல்லது வேறு ஏதோ, வடசென்னையை தாண்டி ஆந்திர எல்லையைத் தொட்டு, தொலைந்து விட்டிருந்தது. அவன் எழுந்து உட்கார்ந்து,

'என்ன நடக்குது இங்க? என்ன எங்க கூட்டிட்டு போறீங்க?' என்றான்.

'யோவ், உனக்கு அடி பட்டுருக்குய்யா. சென்ட்ரல் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறோம்' என்றால்,

'வேண்டாம், என்ன பார்த்த இடத்திலேயே வுட்டுட்டு போங்க, எனக்கு ஒண்ணும் இல்ல. கல்லு மாதிரி உடம்பு, இரும்பு கடை வச்சிருக்கேன், எங்கிட்டயேவா?' என்றான்.

பக்கத்தில் நின்றிருந்த யாரோ ஒருவர் 'தண்ணிய அடிச்சிட்டு, பேசுற பேச்சை பாரு, வண்டி உள்ள படுடா' என்றார்.

'நான் ஸ்டெடியாதான்டா இருக்கேன், நீங்க எல்லாம் என்ன பண்றீங்க?!' என்றவன், ஆம்புலன்சிலிருந்து இறங்கியபடியே தலையில் இட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து கையில் எடுத்துக் கொண்டான்.

நாலு பேர் சேர்ந்து பிடித்து இழுத்து வண்டியினுள் தள்ளி, வண்டியை கிளப்பியாகி விட்டது. நான் அவரது மச்சான் 'பாலகிருஷ்ணனுக்கு' பேசி 'சார், ஃபுல் தண்ணியில உங்க மச்சான் இருக்காரு. அடியும் கொஞ்சம் பலமா பட்டிருக்கு. உடனே சென்ட்ரல் ஜி.ஹெச். க்கு வந்திடுங்க. ஆம்புலன்சு அங்கேதான் போய்க்கிட்டிருக்கு' என்றேன். அடிபட்ட நபர், போனை தன்னிடம் கொடுக்கும்படியும், யாருக்கு போன் பேசுற என்றும் கேட்டான்.

''ராமு' வுக்கு போனை போடு, நானே அவன்கிட்ட பேசுறேன்'
என்றான்.

ராமுக்கு டயல் செய்தாகிவிட்டது. 'ராமு' இன்னொரு மச்சானாம். பேசி முடிக்கும் நேரம் அடிபட்டவன் என்னை நோக்கி 'ராமு கிட்டே எதுக்கு பேசினே? அவன் உனக்கு எதிரியா?' என்றான். ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்த என்னை அடுத்தடுத்து வந்த வாக்கியங்கள் நிலைகுலைய வைத்தன.

'ஆமா, என்னய எங்க கடத்திட்டு போறீங்க? டேய், போலீஸுக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன், இப்போ என்னிய எங்க கூட்டிட்டு போறீங்க?'

'அண்ணே, உங்களுக்கு அடி பட்டிருக்குன்னே! அதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறோம்'

'யாரு சொன்னா, நீங்கே அடிச்சுபுட்டு... டேய், நான் ரொம்ப ஸ்ட்ராங்க், தெரியுமா?'

'சரிண்ணே, பரவாயில்லை கொஞ்ச நேரம் இருங்க, உங்க மச்சான் வந்திடுவாரு. அப்புறமா பேசிக்கலாம்' - வண்டி கோடம்பாக்கம், தியாகராய நகர் தாண்டி அண்ணா சாலையை அடைந்திருந்தது. தள்ளாடிக்கொண்டே இருந்த அவனை நாங்கள் இருவரும் தாங்கலாக பிடித்தே கை வலித்துவிட்டது. படுக்கமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான். இந்நேரத்தில் அவனது மச்சானிடமிருந்து 'அழைப்பு'. பேசிமுடித்ததும் மறுபடியும் நம்ம தண்ணிவண்டி...

'ஆமா, நீ யாரு போன்ல இருந்து பேசினே. நீ பேசுறதுன்னா உன் போனுல பேசு. எம்போன எங்கிட்ட குடு'.

ஐயோ, இவன் இம்சை தாங்க முடியலடா. தலையில அடிபட்டு இரத்தம் வழிந்துகொண்டிருக்க, இந்த தண்ணிவண்டி பேசுற பேச்சை பாரு, என்ற பயங்கர கடுப்பில் பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் புழக்கத்தில் இருந்து இப்போது 'வழக்கொழிந்த சொற்கள்' (!!!) பல தொண்டைவரை வந்து பின்னர், திரும்பிச் சென்றன.

ஒருவழியாக சென்ட்ரலும் வந்தது. அவசர சிகிச்சை பிரிவிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்த அவனை, இழுத்துச் சென்று உள்ளே தள்ளினர்!!!. சிறிது நேரம் காத்திருந்து, அவனது மச்சான் வந்த பின்னர், மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

Monday, March 30, 2009

நேரில் சந்தித்த ஒரு விபத்து - உண்மை அனுபவம் முதல் பகுதி

சென்னை மாநகரின் வெயில் சுட்டெரித்து தூக்கி வீசிய ஒரு அழகு குறைந்திருந்த மாலைப்பொழுது.

நண்பனுடன் 'கே.கே.நகர்' அமுதம் பேருந்து நிறுத்தத்தில் 5E பேருந்திற்காக காத்திருந்தேன். வெகுநேரமாக 5E வராததால், கே.கே.நகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி, அங்கிருந்து அசோக் பில்லருக்கு நடந்து செல்வோம் என முடிவு செய்து ஒரு 12G பேருந்தில் ஏறினோம். பேருந்து நிலையத்திற்கு உள்ளே பேருந்து நுழைந்த போது, பேருந்தில் இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க எத்தனித்தோம். இடது பக்கம் பார்த்து நான் நின்றிருந்தபோது நண்பன் பாதி சாலையை கடந்துவிட்டான். சற்றுதொலைவில் வந்த இரு சக்கர வாகனம் சென்ற பின் கடக்கலாம் என்று நான் நின்றுவிட்டேன். அப்போதுதான் நிகழ்ந்தது அந்த பயங்கரம்.

என்னை கடந்து சென்ற அந்த இரு சக்கர வாகனம், ஏதோ ஒரு வினாடியின் முதல் பாதியில் வலதாகவும் அடுத்த பாதியில் இடதாகவும் வளைந்து, நிலை குலைந்தது. சாலையை கடந்திருந்த என் நண்பனை திரும்பிபார்த்து 'மோகா' என கத்த, அந்த இரு சக்கர ஓட்டியின் கைநழுவி, வலது பக்கமாக சரிந்து, தலை அந்த தார் சாலையில் 'நச்' என்று.... அந்த பிம்பம் இன்னும் என் கண்களுக்குள்ளே!!! அதிர்ச்சியின் பல ரிக்டர்களுக்கு சென்றுவிட்டு இதயம் திரும்ப... ஓடிச்சென்று அந்த பைக்கின் அடியில் சிக்கியிருந்த அவரை விடுவிக்க முயற்சித்தேன். அவரது கை, கால்கள் எவ்வித அசைவுகளும் இன்றி.... தலை அப்படியே மோதியபடி. அந்த கருப்பு தார் சாலையில் நிலைகொண்டிருந்தது.

பைக்கை மெதுவாகத் தூக்கி நிறுத்தினேன். தள்ள முடியவில்லை, கடினப்பட்டு நகர்த்தி சாலையோரத்தில் நிறுத்தினேன். இதற்குள் ஒரு பத்து பேராவது ஓடி வந்திருப்பார்கள். கீழே விழுந்தவர், தலையில் இருந்து...... அவை இரத்தத் துளிகள் அல்ல. இரத்தம் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. 'ஆட்டோ.. ஆட்டோ' - 'ஆட்டோவை நிறுத்துப்பா' - 'தண்ணீ.. தண்ணீ கொண்டுவாங்கப்பா' - 'தண்ணீ குடிக்க கொடுக்காதீங்கப்பா' - 'அந்த ஆட்டோவை நிறுத்து' - 'தண்ணீயை தெளி' - 'இங்கே பக்கத்துல ஹாஸ்பிட்டல் எங்கே இருக்கு?' - 'தலையில எதையாவது வைச்சி கட்டுங்கப்பா' - 'ஆளு மூச்சி விடுறானா?' - 'ஜி.எச். அந்தப் பக்கமா இருக்கு' - 'அவன் போன் ஏதாவது வெச்சிருக்கானா?' - 'ஏய் அந்த ஆட்டோவை நிறுத்து' - 'தூக்கு, ஆ,,, அப்படித்தான். அப்படியே உக்கார வை' - 'போன்ல இருக்குற நம்பர் எதாவதுக்கு கால் பண்ணுங்கப்பா' - 'மெதுவா, தூக்கி உட்கார வை' - 'யாரோ பேசுறான்பா' - 'போனை ஆடடோவில இருக்கறவன்ட குடுப்பா' - 'ஜி.எச்.க்கு ஆட்டோவை விடுப்பா' - 'நான் பார்த்துக்கறேன்க'.

அந்த கூக்குரல்கள். கட்டளைகள். கைகளில் போனை வாங்கிக் கொண்டு நண்பனும் நானும் கூடவே அந்த அடிபட்டவரும் ஆட்டோவில். போனில் பேசிய நபர் இவருக்கு அதிகம் பழகாதவராயிருக்க வேண்டும். கைவிரித்து விட்டார். அதோ, இரு நிமிடங்களில் மருத்துவமனை வந்துவிட்டது. குதித்து ஓடி, எங்கு சென்று யாரைப் பார்த்து அனுமதி வாங்க வேண்டும் என்று கத்தினேன். ஏற்கெனவே, இதேபோல் இரண்டு மூன்று பேர் உள்ளே இருந்தார்கள்.அவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டு நர்ஸ்கள். பக்கத்து அறையில் டாக்டர் இருக்கிறார் என்றார்கள். நான் பயங்கர குழப்பத்தில், ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் எந்த குழப்பத்திலும் இல்லை. டாக்டர், நர்ஸ், ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டி, எல்லாரும் எனக்கு முன்பாகவே ஆட்டோவிற்கு அருகில் உபகரணங்களுடன் சென்றிருந்தார்கள்.

அரசாங்க மருத்துவமனையிலா இதெல்லாம் என்று நான் வியந்து கொண்டே, கைபேசியில் மொத்தமாக இருந்த 15 எண்களில் (10 பெயரில்லாதவை அல்லது செர்வீஸ் நம்பர்கள்)முதலில் கண்ணில் பட்ட பாலகிருஷ்ணனுக்கு பேசினேன். தனது மச்சான்தான் அடிபட்டவர் என்று சொன்ன அவர், தான் உடனே வருவதாகக் கூறினார். இதற்குள் மருத்துவர் அடிபட்டவருக்குத் தலையில் கட்டு போட்டு, முதலுதவி செய்து, ஆம்புலன்சில் அவரை படுக்க வைத்து, காரோட்டியும் தயாராகிவிட்டார். மேலதிக சிகிச்சைக்காக 'சென்ட்ரல்' ஜி.எச். க்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றார்கள்.

நண்பனும் நானும் வண்டியில் ஏறிக்கொண்டோம். வண்டி புறப்பட்டுவிட்டது. அப்போது திரும்பவும் நடந்தது, சற்றும் எதிர்பாராதது... இன்னொரு அதிர்ச்சி.

Sunday, March 29, 2009

வலையுலகின் ஆலன் பார்டர் - அதிரை ஜமால் 10,000 பின்னூட்டங்களைத் தாண்டி...

*வலையில பதிவெழுத ஆரம்பிச்சவங்க யாராவது இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கும்னு நெனைச்சி பார்த்தீங்களா?

*அவனவன் மொத்த பதிவுக்கும் அஞ்சாறு பின்னூட்டம் வாங்கும்போது ஒரு மொக்கை பதிவுக்கு இந்த சம்பவம் நடந்துகிட்டிருக்கே, இது உங்களுக்குத் தெரியுமா?

*பக்கம் பக்கமா எழுதினாக்கூட பார்த்து வாசிச்சிட்டு..... ப்பூ.. இவ்வளவுதானா, இதான் எனக்குத் தெரியுமே-ன்னு சொல்லிட்டு ஒத்த பின்னூட்டம் கூட இடாமல் போகும்போது, ஒண்ணுமே இல்லாத ஒரு இடுகைக்கு இந்த சம்பவம் நடந்துகொண்டிருப்பதை என்னன்னு சொல்றது?

*இன்னமும், ஒருவித வெறியோடு(!!!) 10,000 அடிச்சுட்டுதான் ஆட்டத்தை கலைப்போம் (அப்பவாவது கலைப்பீங்களா!!!) என்று வீரசபதம் எடுத்திருக்கும் எம்குலச் செம்மல்களை 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்'(!!! தேர்தல் நேரமப்பா... அப்படித்தான் வாயில வருது).


இந்த எல்லாத்துக்கும் காரணகர்த்தா, நம்ம அதிரை ஜமால் ஏற்கெனவே மொத்தமாக 10,000 பின்னூட்டங்களை தாண்டி விட்டார். மேலும் ஒரு 10 வரிக்கவிதையிலேயே(கவிதையா!!) 10,000 பின்னூட்டங்களை வரவைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு, என் மொக்கையான, ஆச்சரியம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, March 26, 2009

ஆசிப், பரிசல், ஆதவன், சென்சி - மற்றும் சில கவுஜைகள்!

கடந்த சில நாட்களில் இவர்கள் நடாத்திய கவுஜயின் தத்துவ விசாரணைகளை படித்து அசைபோட்டுக்கொண்டு கழிவறையில் அமர்ந்திருந்த போது கணநேரத்தில் என் சிந்தனையில் வெடித்துச் சிதறிய கவுஜைகள், இதோ உங்கள் பார்வைக்காக.


ஆசிப் பரிசல்
கடிதம்
ஆதவன் சென்ஷி
தம்


பின்'ஊட்டம்'


ராமதாசு
மதில்


அமாவாசை
கூட்டணிகள்


கவிதை
விரயம்
கவுஜ
'__'


'ரம்' சரியா வருமா?


வார்த்தை விரயம் பற்றி பேசிய இந்த கவிஜ மகா புலவர்கள், நேரவிரயம் பற்றியும் தங்கள் இலக்கிய விசாரணையில் விவாதித்திருக்கலாம். இப்படி சில உதாரணக் கவுஜைகளை இட்டிருந்தால், புதிதாக வரும் என்போன்ற நூட்பவாசகன் பல இடங்களிலும் கவுஜ பற்றிய மேலதிகத் தகவல்கள் தேடி 'நேரவிரயம்' செய்ய வேண்டிய அவசியம் வராது.

Wednesday, March 18, 2009

விளம்பர உலகம் - திரை விமர்சனம்

படங்கள் அதிகமாகப் பார்ப்பதாலும், திரை விமர்சனம் பற்றிய இடுகைகள் கண்ணில் அதிகமாகப் படுவதாலும் (படிப்பதாலும்) தலைப்புல டங் ஸ்லிப்பாகிடுச்சுப்பா.. :)

'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' புத்தகத்தை பற்றி 'லக்கி' அவர்கள் முதல் இடுகை இட்டபோது, இது ஏதோ 'டுபாக்கூர்' இடுகை என்றுதான் நினைத்தேன். அதற்கு பலபேர் வாழ்த்து தெரிவித்தபோதுதான் லக்கி அவர்களின் 'சுயரூபம்' (!!!) புரிந்தது. நம்ப லக்கி அவர்களிடம் இவ்வளவு 'சரக்கு' இருக்கான்னு நினைச்சப்போ அப்படியே புல்லரித்தது. பலநாட்கள் லக்கி அவர்களின் சாதனைகளையும் சோதனைகளையும் ஒரு வாசகனாகவும், இப்போது சிறிது நாட்களாக சக பதிவனாகவும் கவனித்துக் கொண்டிருப்பதால்(அவர்கள் தி.மு.க.வில் இருக்கும்போதும் சரி இப்போதும் சரி - ஏப்ரல் மே மாதங்களில் லக்கி அவர்கள் மாம்பழம் விற்க போவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்கி அவர்களே இதை ஒரு பதிவர் கூட்டத்தில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்) அவரது இந்த முதல் முயற்சியை விமர்சிக்காமல் இருந்து, 'வலையுலக காளி' யின் சாபத்துக்கு ஆளாக நான் விரும்பவில்லை. எனவே... (கொஞ்சம் மூச்சு வாங்குது...) நாம் விமர்சனத்துக்கு வருவோம்.

சுண்டி...
விளம்பரங்களை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி தெரிந்து கொள்ள இயல்பாகவே ஆர்வம் தோன்றும். இந்த ஆர்வத்தை சரியாக பயன்படுத்தி முதல் அத்தியாயத்திலேயே வாசகர்களை 'சுண்டி' இழுத்து விடுகிறார் ஆசிரியர். விளம்பர உலகத்தை பற்றி சரியான அறிமுகத்துடன் அதன் வரலாற்றை இழுத்து வந்துவிடுகிறார். இந்த வரலாறு கூட 'மௌரியர்கள்' - 'ராஜபுத்திரர்கள்' என்று தூக்கத்தை வரவழைக்காமல் சுவாரசியமாக இருப்பது புத்தகத்திற்கு பலம்.

இழுக்கும்...
இந்த உலகத்தில் யாரெல்லாம் இயங்குகிறார்கள், எங்கிருந்து இதன் வேர் ஆரம்பிக்கிறது, எங்கே கிளை விரித்து பரவுகிறது, இதன் கனிகளை யார் ருசிக்கிறார்கள் - நீங்களும் இங்கே பழம் பறிக்க முடியுமா என வாசகனை இந்த தலைப்புடன் ஒன்றித்துவிட வைப்பதில் வெற்றி பெற்றுவிடுகிறார் 'யுவகிருஷ்ணா'.

விளம்பர உலகம்...
புத்தகத்தின் கடைசி கட்டத்திற்கு வரும்போது 'ஹாரிபாட்டரின் மாயஉலகம்' போன்ற ஒரு பிரமிப்பு நிச்சயம் எல்லா வாசகர்களுக்கும் (இந்த துறை பற்றி புதிதாக படிப்பவர்களுக்கு) வரும் என்பது என் நம்பிக்கை. கூடவே, இந்த துறையில் உள்ள பணிகள் என்னென்ன, இங்கு நுழைவது எப்படி, என்னென்ன படித்திருக்க வேண்டும் என்ற எல்லா அடிப்படை கேள்விகளுக்கும் பதிலை வைத்திருப்பதால் - புத்தகத்தை படித்துவிட்டு பரணில் வைத்துவிட மனது வரவில்லை.இவ்ளோ இருந்தாலும், புத்தகத்தை படிக்கும் போது (பாதி தூரத்தில்) டார்கெட் ஆடியன்ஸ், மார்க்கெட், கணிப்பு, புள்ளிவிவரம் போன்ற விடயங்கள் திரும்ப திரும்ப (திரும்ப திரும்ப) வருவது மட்டும் கொஞ்சம் போரடிக்கிறது. மற்றபடி ஒரு புது உலகத்தை பற்றிய அனுவத்தை இந்த புத்தகம் உங்களுக்கு தருவது உறுதி. தமிழில் இந்த விதமாக ஒரு புத்தகத்தை தந்த லக்கிலுக் என்ற 'யுவகிருஷ்ணா' வுக்கு நாம் எல்லோரும் நன்றியையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சொல்லியே தீர வேண்டும்.

வாழ்த்துக்கள் லக்கி, sorry 'யுவகிருஷ்ணா'.நூலின் பெயர்: சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
ஆசிரியர் : லக்கிலுக் (அல்லது) யுவகிருஷ்ணா
பக்கங்கள் : 152
விலை: ரூ 70.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

Monday, March 16, 2009

இழை கோட்பாடும் - நமீதாவின் புதிய ஆடையும்!!!

இழை கோட்பாடு(STRING THEORY):
இன்றைய இயற்பியல் உலகில் அதி அவசரமாக தீர்வுகாணவேண்டி, எல்லா வல்லுனர்களாலும் அலசி ஆராயப் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கோட்பாடு (Theory).

"இது என்ன 'பட்டு இழை' யா? அல்லது 'நைலான் இழையா'?" என்று கேட்போருக்கு ஒரு சிறு முன் விளக்கம்.

இயற்கையில் நான்கு விதமான அடிப்படை விசைகள் உண்டு.

1. கோள்களுக்கு இடையேயான/கோள்களில் உள்ள பொருட்கள் மீதான ஈர்ப்பு விசை (Gravity)
2. அணுக்கள் அதன் தன்னிலை பிறழ்ந்து சிதைவதற்கான விசை (Weak).
3. அணுவிற்குள்ளும் அணுக்களுக்கு இடையிலும் பிணைப்புகளை ஏற்படுத்தும் விசை (Electromagnetic).
4. அணுவின் மையக் கருவில் உள்ள துகள்களை பிணைத்துள்ள விசை (Strong).

இயற்பியலின் பிரச்சினையே இந்த நான்கு விசைகளையும் ஒட்டுமொத்தமாக விளக்கும் எந்த தியரியும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்பதுதான். இந்த நான்கையும் 4 in 1 ஆக மாற்ற அறிவியலாளர்கள் ஐன்ஸ்டின் முதற்கொண்டு பலரும் முயற்சி செய்தார்கள்/செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

இந்த இயற்கையை ஓன்றிணைக்கும் முயற்சியில் கற்பனையில் கட்டப்பட்டதுதான் மேற்கூறிய 'இழை'. அணுவில் மையக் கரு இருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த மையக்கருவில் புரோட்டானும் நியூட்ரானும் இருக்கும். இந்த துகள்களுக்கு அடிப்படை 'குவார்க்' என்று இன்றைய நிலையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த 'குவார்க்' குக்கும் அடிப்படையாக 'String' எனப்படும் இழைகள் உள்ளதாக கூறுவதே இழை கோட்பாடு. இப்படி கூறுவதன் மூலம் எல்லா விசைகளுக்கும் ஒரே 'தியரி' பொருந்தும் என நம்புகிறார்கள்.இந்த இழை கோட்பாட்டை தமிழில் 'இழை நியதி' என்ற பெயரில் சில இடங்களில் பார்க்க முடிகிறது. நியதி என்பது இறுதி வடிவம் பெற்றவற்றை குறிப்பிடப் பயன்படும் வார்த்தை. ஆனால் நம்முடைய இழை தியரி ஒரு கொள்கை வடிவத்திலேயே இன்னும் இருப்பதால் 'கோட்பாடு' (புவி மையக் கோட்பாடு, சூரிய மையக் கோட்பாடு போல) என்றே நாம் இதை விளிக்கலாம். இழை கோட்பாடு பற்றிய மேலதிகத் தகவல்கள் இனிவரும் இடுகைகளில்...

டிஸ்கி: இந்த 'இழை' யின் மூலம் நமீதாவுக்கு நவீன(!) ஆடை தயாரிக்க முடியுமா என்று கேட்பவர்கள் தாராளமாக 'நேனோ டெக்னாலஜியை' அணுகலாம்.

Monday, March 9, 2009

யார் இந்த 'ஜோ' மல்லூரி?!!!

இந்த வருட சென்னை புத்தகக் காட்சிக்கு வந்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.

தனி அரங்கில், முகம் முழுக்க தாடியுடன் தமிழ்த்தாய்க்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார். (நுழைவாயில் புகைப்படங்க்ளில் தாடி இல்லாமல், அது உங்கள் பார்வைக்கு இங்கே). 'ஜோ' அவர்களின் அரங்கத்தில் புத்தகத்தின் ஒலிவடிவமோ (அ) புத்தகத்தை பற்றியோ எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.கடந்த மாதத்தில் 'திருநெல்வேலி' சென்றிருந்த போது, அங்கு நடந்துகொண்டிருந்த 'மனோ' புத்தகத் திருவி்ழா - வை காணும் வாய்ப்புக் கிடைத்தது. அரங்குகள் 'மே'மாதக் கல்லூரி வளாகம் போல காட்சியளித்தாலும் அங்கேயும் பின்னணி ஒலியுடன் ஒரு அரங்கு இருந்தது. வேறு யாருமல்ல, நம்ம 'ஜோ மல்லூரி' அவர்களுடையதேதான்.

தாய்மடித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனராம், கவிஞராம், இன்னும் என்னென்னவோ?

யாராவது இவரை பற்றி மேலதிகத் தகவல்கள் தந்தால் தேவலை! இவருடைய வரலாறு தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது.

டிஸ்கி:
இவரை பார்த்ததும் அல்லது இவரை பற்றி கேள்விப்பட்டதும், சில பல 'கவிஞர்'களோ அல்லது மிகச் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய மூன்றெழுத்தில் சுருக்கமாக அழைக்கப்படும், பதிவர்களின் 'ஆல் டைம் ஃபேவரிட்' நடிகரோ உங்கள் ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.