Monday, March 30, 2009

நேரில் சந்தித்த ஒரு விபத்து - உண்மை அனுபவம் முதல் பகுதி

சென்னை மாநகரின் வெயில் சுட்டெரித்து தூக்கி வீசிய ஒரு அழகு குறைந்திருந்த மாலைப்பொழுது.

நண்பனுடன் 'கே.கே.நகர்' அமுதம் பேருந்து நிறுத்தத்தில் 5E பேருந்திற்காக காத்திருந்தேன். வெகுநேரமாக 5E வராததால், கே.கே.நகர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி, அங்கிருந்து அசோக் பில்லருக்கு நடந்து செல்வோம் என முடிவு செய்து ஒரு 12G பேருந்தில் ஏறினோம். பேருந்து நிலையத்திற்கு உள்ளே பேருந்து நுழைந்த போது, பேருந்தில் இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க எத்தனித்தோம். இடது பக்கம் பார்த்து நான் நின்றிருந்தபோது நண்பன் பாதி சாலையை கடந்துவிட்டான். சற்றுதொலைவில் வந்த இரு சக்கர வாகனம் சென்ற பின் கடக்கலாம் என்று நான் நின்றுவிட்டேன். அப்போதுதான் நிகழ்ந்தது அந்த பயங்கரம்.

என்னை கடந்து சென்ற அந்த இரு சக்கர வாகனம், ஏதோ ஒரு வினாடியின் முதல் பாதியில் வலதாகவும் அடுத்த பாதியில் இடதாகவும் வளைந்து, நிலை குலைந்தது. சாலையை கடந்திருந்த என் நண்பனை திரும்பிபார்த்து 'மோகா' என கத்த, அந்த இரு சக்கர ஓட்டியின் கைநழுவி, வலது பக்கமாக சரிந்து, தலை அந்த தார் சாலையில் 'நச்' என்று.... அந்த பிம்பம் இன்னும் என் கண்களுக்குள்ளே!!! அதிர்ச்சியின் பல ரிக்டர்களுக்கு சென்றுவிட்டு இதயம் திரும்ப... ஓடிச்சென்று அந்த பைக்கின் அடியில் சிக்கியிருந்த அவரை விடுவிக்க முயற்சித்தேன். அவரது கை, கால்கள் எவ்வித அசைவுகளும் இன்றி.... தலை அப்படியே மோதியபடி. அந்த கருப்பு தார் சாலையில் நிலைகொண்டிருந்தது.

பைக்கை மெதுவாகத் தூக்கி நிறுத்தினேன். தள்ள முடியவில்லை, கடினப்பட்டு நகர்த்தி சாலையோரத்தில் நிறுத்தினேன். இதற்குள் ஒரு பத்து பேராவது ஓடி வந்திருப்பார்கள். கீழே விழுந்தவர், தலையில் இருந்து...... அவை இரத்தத் துளிகள் அல்ல. இரத்தம் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. 'ஆட்டோ.. ஆட்டோ' - 'ஆட்டோவை நிறுத்துப்பா' - 'தண்ணீ.. தண்ணீ கொண்டுவாங்கப்பா' - 'தண்ணீ குடிக்க கொடுக்காதீங்கப்பா' - 'அந்த ஆட்டோவை நிறுத்து' - 'தண்ணீயை தெளி' - 'இங்கே பக்கத்துல ஹாஸ்பிட்டல் எங்கே இருக்கு?' - 'தலையில எதையாவது வைச்சி கட்டுங்கப்பா' - 'ஆளு மூச்சி விடுறானா?' - 'ஜி.எச். அந்தப் பக்கமா இருக்கு' - 'அவன் போன் ஏதாவது வெச்சிருக்கானா?' - 'ஏய் அந்த ஆட்டோவை நிறுத்து' - 'தூக்கு, ஆ,,, அப்படித்தான். அப்படியே உக்கார வை' - 'போன்ல இருக்குற நம்பர் எதாவதுக்கு கால் பண்ணுங்கப்பா' - 'மெதுவா, தூக்கி உட்கார வை' - 'யாரோ பேசுறான்பா' - 'போனை ஆடடோவில இருக்கறவன்ட குடுப்பா' - 'ஜி.எச்.க்கு ஆட்டோவை விடுப்பா' - 'நான் பார்த்துக்கறேன்க'.

அந்த கூக்குரல்கள். கட்டளைகள். கைகளில் போனை வாங்கிக் கொண்டு நண்பனும் நானும் கூடவே அந்த அடிபட்டவரும் ஆட்டோவில். போனில் பேசிய நபர் இவருக்கு அதிகம் பழகாதவராயிருக்க வேண்டும். கைவிரித்து விட்டார். அதோ, இரு நிமிடங்களில் மருத்துவமனை வந்துவிட்டது. குதித்து ஓடி, எங்கு சென்று யாரைப் பார்த்து அனுமதி வாங்க வேண்டும் என்று கத்தினேன். ஏற்கெனவே, இதேபோல் இரண்டு மூன்று பேர் உள்ளே இருந்தார்கள்.அவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டு நர்ஸ்கள். பக்கத்து அறையில் டாக்டர் இருக்கிறார் என்றார்கள். நான் பயங்கர குழப்பத்தில், ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் எந்த குழப்பத்திலும் இல்லை. டாக்டர், நர்ஸ், ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டி, எல்லாரும் எனக்கு முன்பாகவே ஆட்டோவிற்கு அருகில் உபகரணங்களுடன் சென்றிருந்தார்கள்.

அரசாங்க மருத்துவமனையிலா இதெல்லாம் என்று நான் வியந்து கொண்டே, கைபேசியில் மொத்தமாக இருந்த 15 எண்களில் (10 பெயரில்லாதவை அல்லது செர்வீஸ் நம்பர்கள்)முதலில் கண்ணில் பட்ட பாலகிருஷ்ணனுக்கு பேசினேன். தனது மச்சான்தான் அடிபட்டவர் என்று சொன்ன அவர், தான் உடனே வருவதாகக் கூறினார். இதற்குள் மருத்துவர் அடிபட்டவருக்குத் தலையில் கட்டு போட்டு, முதலுதவி செய்து, ஆம்புலன்சில் அவரை படுக்க வைத்து, காரோட்டியும் தயாராகிவிட்டார். மேலதிக சிகிச்சைக்காக 'சென்ட்ரல்' ஜி.எச். க்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றார்கள்.

நண்பனும் நானும் வண்டியில் ஏறிக்கொண்டோம். வண்டி புறப்பட்டுவிட்டது. அப்போது திரும்பவும் நடந்தது, சற்றும் எதிர்பாராதது... இன்னொரு அதிர்ச்சி.

10 comments :

Anonymous said...

nice posting, thanks, !

ஊர் சுற்றி said...

மேலும் நடந்தது, அடுத்த இடுகையில்...

நட்புடன் ஜமால் said...

அங்கேயே கொண்டு போய்ட்டியள்

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்ஸ்

வித்யா said...

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்:)

ஊர் சுற்றி said...

இதோ எழுதிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில்...

ஊர் சுற்றி said...

மணிப்பாக்கம்,

ஜமால்,

வித்யா... எல்லாரோட வருகைக்கும் நன்றி.

துளசி கோபால் said...

அச்சச்சோ......

கே கே நகரில் அது எந்த மருத்துவமனை?

பாராட்டணுமே அவுங்களை!!!!


ம், அப்புறம்?

வால்பையன் said...

உங்கள மாதிரி உதவி செய்ய நாலு மக்கள் இருக்குரதால தான் தமிழ்நாட்டுல மழை பெய்யுது!

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!

ஊர் சுற்றி said...

துளசி சார்,
அதுகூட கே.கே.நகர் அரசு மருத்துவமனைதான். கட்டாயமா அந்த மருத்துவமனை ஊழியர்களை பாராட்டத்தான் வேண்டும்.

ஊர் சுற்றி said...

வால்பையன் அவர்களே.....

நன்றி, ஆனா அடுத்த இடுகையையும் படிச்சிட்டு வந்திடுங்க.