Wednesday, October 7, 2009

2012 ல் உலகம் அழியுமா - லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ன சொல்கிறது

உலகம் 2012ல் அழிவதற்கான ஏழு காரணங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இந்த விசயம் தொடர்பாக எனது முந்தைய இடுகை 1.

முந்தைய இடுகையில் "'பைபிள்' என்ன கூறுகிறது?" என்று எனக்குத் தெரிந்த விசயங்களைக் கூறியிருந்தேன். இந்த இடுகை 'CERN" எனப்படும் அமைப்பினால், கூடிய விரைவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் உலகின் மிகப்பெரிய அணுக்கருத் துகள் ஆய்வுக் கருவியான LHC (Lorge Hadron Collider - லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்) பற்றியது.

LHC ன்னா என்ன?:
நமக்கு அணுக்களைப் பற்றித் தெரியும். அணுவைச் சுற்றி வருவது எலக்ட்ரான். அணுக்களின் கருவில் உள்ள துகள்கள் 'நியூட்ரான் மற்றும் புரோட்டான்'. இந்த அணுக்கருவில் உள்ள துகள்கள் 'ஹாட்ரான்கள்' என்று அழைக்கப்படுகின்றன. நம்மூர் படங்களில் காட்டப்படும் கோழிச்சண்டை ஆட்டுச்சண்டைபோல இந்த துகள்களை நேருக்கு நேர் மோதவிட்டு ஆராய்ச்சி செய்வதுதான் இந்த மிஷினின் வேலை.

LHC க்கும் உலகம் அழியறதுக்கும் என்ன சம்பந்தம்?:
"இந்த மிஷின் வேலைசெய்ய ஆரம்பித்து துகள்கள் மோதும்போது சிறிய சிறிய கருந்துளைகள் உருவாகும். கருந்துளைகள் அதிக ஈர்ப்பு ஆற்றல் கொண்டவை. எனவே அவை சுற்றியுள்ள பொருட்களை ஈர்த்து பெரிதாக வளர்ந்துவிடும். ஆராய்ச்சி பண்ணுவதற்காக உள்ள இந்த மிஷினையேகூட அனகோண்டா பாம்புபோல விழுங்கிவிடும். இன்னும் சக்தியுள்ள கருந்துளையாக மாறி 'ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா' என ஒவ்வொரு கண்டமாக விழுங்கி பூமியையே ஏப்பம் விட்டுவிடும். கடைசியில் பூமி இருந்த இடத்தில் ஒரு கால்பந்து அளவிலான 'கரும்பொருள்' மட்டுமே இருக்கும்" என்கிறார்கள் சிலர் (அடங்கொண்ணியாஆஆஆ!).

கரும்பொருள் என்றால் என்ன? - சூரியன் எப்படி நம் கண்ணுக்குத் தெரிந்து மிகப் பெரிய சக்தியாக இருக்கிறதோ அதைவிட அதிகமாக கண்ணுக்குத் தெரியாத சக்திகள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன. இவற்றின் ஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் தன்னைச் சுற்றியுள்ள எல்லா பொருட்களையும் தன்னுள் ஈர்த்து வைத்துக்கொள்ளும். ஒளிகூட இதிலிருந்து வெளிவருவது கடினம்.

LHC-னால் கருந்துளைகள் உருவாகுமா?
"ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தின்படி நிர்மாணிக்கப்பட்ட, 'ஈர்ப்பு விசை'யின் பண்புகளின்படி இத்தகைய சிறிய அளவிலான கருந்துளைகள் LHC ல் உருவாக சாத்தியமில்லை" - இது CERN விஞ்ஞானிகளின் வாதம்.

ஆனாலும் சில தியரிகளின்(Theory) படி சிறிய அளவிலான கருந்துளைகள் உருவாகலாம். ஆனால் சில தியரிகள் இத்தகைய கருந்துளைகள் உடனடியாக அழிந்துவிடும் என்றும் கூறுகின்றன.

இதற்கு முன்பு இதுபோன்று துகள் மோதல்கள் நடந்துள்ளனவா?:
ஆம். LHC உருவாவதற்கு முன்பு சிறிய அளவிலான கருவி LEP 1989-ல் இருந்து 2000-ம் வரை பயன்பாட்டில் இருந்தது. இது பயன்பாட்டில் இருந்தபோது இந்த துகள் மோதல்கள் பலமுறை நடந்துள்ளன. அந்த மோதல்கள் மூலம் எந்த விதமான ஆபத்துகளும் உருவாகவில்லை.

ஆனால் அவற்றின் ஆற்றல் அளவுகள் கொஞ்சம் கம்மி. இப்போது தயார் நிலையில் உள்ள LHC-ன் செயல்பாட்டு ஆற்றல் மிக அதிகம்.

எவ்வளவு அளவு அதிக ஆற்றல்?:
பழைய LEP திட்டத்தில் 100 GeV பயன்படுத்தினார்கள். லேட்டஸ்ட் LHC-ல் அதிகபட்சமாக 7 TeV ஆற்றலில் துகள்களை முடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இது 70மடங்கு அதிகம்.


இத்தனை மடங்கு அதிக ஆற்றல் இருந்தாலும் 'கருந்துகள்' உருவாவது மற்ற கதிர்வீச்சுகள் உருவாவது, அதனால் பாதிப்பு ஏற்படுவது இது எதுவும் நடந்துவிடாது என்று உறுதியளிக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

மீப்பெரு அணுக்கருத்துகள் முடுக்கி (LHC) & ஆன்டி மேட்டர் (Antimatter) பற்றிய எனது மற்றொரு இடுகை, ''அறிவியல் பூ''(எனது இன்னுமொரு வலைப்பூ) -ல் வெளியானது இங்கே.

LHC பற்றி படிக்க:

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரின் - பாதுகாப்பு பற்றி:

துகள் மோதலின் வரலாறு CERN-ல்:

1eV ன்னா - ஒரு தனித்த எலக்ட்ரான் ஒரு வோல்ட் மின்னழுத்தத்தில் பெறக்கூடிய இயக்க ஆற்றல்.
1eV = 1.602 X 10^-19 joules.
1GeV=10^9eV
1TeV=10^12eV

Monday, October 5, 2009

கொலுவுக்குப் போய் பர்ஸ் தொலைத்த கதை

பீட்டர் - ரொம்ப இங்கிலிபீஸ்ல கதைக்கிறவன்.
எப்.எம் ரேடியோ - ஒயாம பேசுறவ (ன்).

இப்படி கல்லூரியில் படிக்கும்போது எத்தனையோ குறிச்சொற்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்/பார்த்திருப்பீர்கள். அப்படி எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு குறித்தொடர் உருவாகிய அனுபவம் இது.



கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் நண்பர்கள் வீட்டில் ஏதாவது விசேசம் என்றால் மொத்தமாகக் கிளம்பி போவது எங்களுடைய வழக்கம். இது எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தியின் வீட்டு கொலு & நவராத்திரி -க்கு போகிற அளவிற்கு வளர்ந்தது(!). நாங்கள் ஆண்/பெண் என்று ஒரு கும்பலே அவர்கள் வீட்டிற்கு அன்று சென்றிருந்தோம். நவராத்திரியும் அதுவுமாக தூங்காமல் இருக்க வேண்டுமாமே! எங்கள் தோழியின் சிறுவயது புகைப்பட ஆல்பம், அவளது பொம்மை கலெக்சன் இப்படி எல்லாவற்றையும் பார்வையிட்ட பின், முன்னிரவு நேரத்தில் நடந்த பாட்டுப்போட்டி முடிந்து அப்போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. கொஞ்ச பேர் வட்டமாக அமர்ந்து சீட்டு ஆடிக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் சிலபல பதார்த்தங்களைப் பதம்பார்த்துக்கொண்டு அரட்டையடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் ஒருவன் திடீரென்று 'டேய் என் பர்ஸை காணோம்டா, போய் பார்த்துட்டு வந்துடறேன்' என்று சொல்லிவிட்டு மாடியில் பையன்களுக்கு என்று ஒதுக்கியிருந்த அறைக்கு கிளம்பிப்போனான். திரும்பி வந்து அமைதியாக அமர்ந்துகொண்டான். ஒருசிலபேர் 'பர்ஸ் கிடைச்சுதாடா?' என்று கேட்க 'ஆங். கிடைச்சுது' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னான். இரண்டு நிமிடம் கழித்து அவன் பாக்கெட்டைத் தற்செயலாக பார்த்தபோது அங்கே பர்ஸ் இல்லை. 'டேய் பர்ஸை பேக்ல வச்சிட்டு வந்திட்டியா?' என்றேன். அப்போது அவன் என் காதுபக்கம் வந்து 'பர்ஸெல்லாம் தொலைக்கலடா, ஒன்னுக்கு முட்டிகிட்டு வந்திச்சி. புள்ளங்கல்லாம் இருக்கு. அதான் இப்படி சொல்லிட்டு கிளம்பிட்டேன்' என்றான். அவ்வளவுதான் நானும் 'பர்ஸை தொலைச்சிட்டேன்'! :)

நான் திரும்பி வந்ததும் இன்னொருத்தனும் இதேமாதிரி விசாரிக்க, அவனும் பர்ஸை தொலைக்கவேண்டி வந்தது. சற்று நேரத்தில் பசங்க கூட்டமாக 'பர்ஸை காணோம்டா' என்று சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். உட்கார்ந்திருந்த பசங்க முகத்தில் சின்ன சிரிப்பு இழையோடியது. பொண்ணுங்களுக்கு 'இவனுங்க ஏதோ பண்றானுங்க ஆனா என்னான்னு புரியல' - சிலபேர் புரிந்திருந்தார்கள்.

இந்த அக்கப்போரெல்லாம் ஓய்ஞ்சு பத்து இருபது நிமிடம் ஆகியிருக்கும். முதல்ல 'பர்ஸை தொலைச்ச' நண்பன் எந்திரிச்சு, பசங்க நாலைஞ்சு பேருக்கு மட்டும் கேட்கும்படி இன்னொரு நண்பன்கிட்ட 'நண்பா பேக்ஐ எங்க வச்சேன்னு தெரியலியேடா, போய் தேடிப்பார்த்துட்டு வந்துடறேன்' னுட்டு அவசரமா கிளம்பி போனான். :)

Sunday, October 4, 2009

நானும் காமன் பிளாக்கர் - என்னையும் ஆட்டையில சேர்த்துக்கங்க

நானும் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்துட்டேனுங்க!

ட்விட்டரில் 'அச்சம்தவிர்' லோகு சொன்ன இந்த வார்த்தைக்காக இந்த இடுகை. :)

'காமன் மேன்' என்று தன்னை அடையாளப்படுத்தும் அந்த கதாப்பாத்திரம் 2 கிலோ தக்காளி வாங்குகிறார். அப்படியென்றால் வீட்டில் 'குளிர்பதனப் பெட்டி' (ரெஃப்ரிஜ்ரிரேட்டர்) இருக்கிறது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு 7 மணிக்குள் வந்துவிடுவதாக சொல்கிறார் [நிச்சயமாக மென்பொருள் துறையில் வேலையில்லை :) ] சரி, ஒரு நடுத்தரக் குடும்பம்.

தகவல் தொடர்புக்காக அவர் பயன்படுத்தும் கருவிகளின் மதிப்பு - கூட்டி கழித்துப் பார்த்தால் சில லகரங்களைத் தொடும். அப்புறம் 5 கிலோ வெடிமருந்து - அதன் மார்க்கெட் விலையென்ன?. கடைசியில் ஒரு ஜீப் வெடிக்கப்படுகிறது. அது யாரோடது? சரி, இதெல்லாம் அவரோட செலவில் வாங்கியது என்றாலும், வீட்டில மனைவிக்குத் தெரியாமல் இதெல்லாம் எப்படி ஒரு காமன் மேனுக்கு சாத்தியம்? அந்த கதாப்பாத்திரம் எங்கேனும் திருடினாரா? ஆனால் காந்தி பற்றி பேச தனக்கு உரிமை இருப்பது போல காட்டிக்கொள்கிறாரே?

சீட்டுக் குலுக்கிப்போட்டு நாலுபேரையும் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். அப்படியென்றால் இன்னும் சீட்டுக் குலுக்கிப்போடப் போகிறாரா? 4 பேரும் இறந்தது "தப்பிக்க முயன்றதால்" என்றுதான் ஊடகங்கள் மூலமாக தகவல் வெளியாகிறது. இதைப் பார்த்து மற்ற தீவிரவாதிகள் தாக்காமல் விட்டுவிடுவார்களா? கதாப்பாத்திரத்தின் நோக்கம் என்ன - 'தீவிரவாதிகளுக்கு ஒரு அச்சம் இருந்தால் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்' என்பதுதானே! அதன் நோக்கம் படத்தில் எந்த வகையில் நிறைவேறியிருக்கிறது? தீவிரவாதிகளுக்கு இது எவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது? ஒண்ணையும் காணோம்.

அப்புறம் எல்லாம் முடிந்ததும், தனது உபகரணங்களை அழித்துவிடுகிறது கதாப்பாத்திரம். அப்படியன்றால் நான்கு மாதம் கஷ்டப்பட்டு இவர் எதைச் சாதித்தார்? அவரது கருத்தை மக்களுக்கு அல்லது அரசு எந்திரத்திற்கு கொண்டு சேர்த்தாரா? (ஒருசில காக்கிச் சட்டைகளைத் தவிர!).

எல்லாத்தையும் விட்டுடுங்க. படைப்பு, படைப்பாளி, பிரதி இப்படி எல்லாத்தையும் (உன்னைப்போல் ஒருவன் படத்தைக் கூட).

இந்த காமன் மேனுக்கு என்ன வேண்டும்? 'தீவிரவாதிகளுக்கு உடனுக்குடன் தண்டனை தரப்படவேண்டும்'. ஆனால் பெரும்பாலான வலைப்பூக்களில் விவாதிக்கப்பட்டது போல, முஸ்லிம் நண்பர்களுக்கு எதிராக ('மட்டுமே' இதை இந்த இடத்தில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்) இந்த காமன் மேனின் விருப்பம் திரும்பியிருப்பது - ஏற்றுக்கொள்ளக் கூடியதா? உண்மையிலேயே இதுதான் ஒரு காமன் மேனின் ஆசையாக இருக்கிறது என்றால் 'தீவிரவாதம்' என்ற பதத்திற்கு நாம்(காமன் மேன்) கொண்டுள்ள அடையாளங்கள் என்ன?

மும்பை தாக்குதலின் போது 'தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்' என்ற குரல் ஓங்கி ஒலித்தபோது 'அதன் மூல வேர்களும் ஒழிக்கப்படவேண்டும்' என்றும் சிலர் குரல் கொடுத்தார்கள். அப்போதுதான் எனக்குத் தீவிரவாதத்தின் பல பரிணாமங்கள் விளங்கின. இதை என் சக பணியாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டபோது என்னை ஆமோதித்தவர்கள் ஒருசிலரே! மற்ற அத்தனை பேருக்கும் 'தீவிரவாதி' என்றவுடனே 'தாடி, காஷ்மீர், அல்லா, தானியங்கி துப்பாக்கி' மட்டுமே நினைவிற்கு வந்துவிடுவது ஏன் என்று தெரியவில்லை! இவர்கள் 'காமன் மேன்' என்கிற பதத்திற்குள் வந்துவிடுகிறார்கள் எனில், ஒரு காமன் மேனுக்கு இந்த மாதிரி எண்ணம் இருப்பது, கருத்துப் பரிமாற்றத்தில் நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறதா?

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)

விளக்கம்:
குணங்குன்றிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

இதுதானே ஒரு காமன் மேனுக்குத் தோண வேண்டும்?