Tuesday, June 30, 2009

நறுக்கென்று நாலு வார்த்தை - உண்மையில் கதை!

அவளுக்காகத்தான் காத்திருந்தான்.

"அவள் வரட்டும், நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுவிடுகிறேன். பிடிக்கவில்லையென்றால் சொல்லித் தொலைவதுதானே!'' என்றுதான் தீவிரமாக அவன் சிந்தித்திருக்க வேண்டும். அவன் முகத்தில் அத்தனை விரக்தி வெளிப்பட்டுக் கிடந்தது. கடந்த இரண்டு மாதங்களில் என்னவெல்லாம் நடந்துவிட்டது...

கல்லூரியில் படித்த நாட்களிலும் சரி, இப்போது சிங்கார சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்யும்போதும் சரி, அவன் செய்யும் சேட்டைகளுக்கும் சொல்லும் நகைச்சுவைகளுக்கும் அளவே கிடையாது. அவனது 'அதிவேக' நகைச்சுவை ததும்பும் மறுமொழிகளுக்கென்றே அவனைச் சுற்றி ஒரு நண்பர் வட்டம் உண்டு. எல்லா விசயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவமும், கேலி, கிண்டல் என்று இருந்தாலும், பொறுப்பாகவும் இருப்பவன். இரண்டு மாதம் முன்புவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, அவள்மீது இவன் காதல் கொள்ளும்வரை.

'புவனா' - வருடத்தொடக்கத்தில் அவனது பணிக்குழுவில், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியபோது வந்து சேர்ந்தாள். நன்றாக புரியும்படி பேசுவாள். 'எளிதில் எந்த கஷடமான லாஜிக்கையும் விளக்கிவிடுவாள்' என்பதற்காக இவனது வயதையொத்த மற்ற ஆண்கள் அவளிடம் மட்டுமே விளக்கம் கேட்கத் தொடங்கினார்கள் - வேற எதுக்கு அவளை டாவ் அடிக்கத்தான்!. இவனும் தன் திறமையெல்லாம் பயன்படுத்தி 'சாதாரணமாகப் பேசுவது போல' மெனக்கெட்டு அவளிடம் பேசினான், அவளைச் சிரிக்க வைக்க முயற்சி செய்தான்.

புவனா, பொதுவாக எல்லோரிடமும் எந்த அலட்டலும் இல்லாமல் பழகுவதைப் போலவே இவனிடமும் நடந்துகொண்டாள். இவனோ, அவளை நினைத்து குச்சி ஐஸாய் உருகிவந்தான். முதல் மூன்று மாதங்கள் வரை எல்லாம் சரியாய்த்தான் போய்க்கொண்டிருந்தன. ஆனால், அதற்குப் பிறகு புவனாவின் போக்கில் சில மாற்றங்கள் தென்பட்டன. ஒழுங்காக வேலையை முடிப்பது கிடையாது, சதாரணமாக அவள் பழகும் முறைகளில் 6 இல்லை அதற்கு மேலாகவே வித்தியாசங்கள் தென்பட்டன. தனியாக இவன் 'கேன்டீனிலோ' 'லிஃப்டிலோ' நின்றிருந்தால் பேசுவதைத் தவிர்த்தாள், மற்ற எல்லோரும் இவனது நகைச்சுவைக்கு சிரிக்கும்போது அவள் மட்டும் 'உம்' மென்று இருந்தாள்.

ஒரு கட்டத்தில் உடன் வேலை செய்பவர்கள், ''இவனால்தான் புவனா இப்படி மாறிவிட்டாள், இவன் அடிக்கடி சென்று பேசி அவளைத்தொந்தரவு செய்திருக்கிறான்'' என்றெல்லாம் பேச ஆரம்பித்த போது, இவனுக்கு என்னவோ பண்ணியது. சீக்கிரத்திலேயே, புவனா அந்த பணிக்குழுவில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அதே நிறுவனத்தின் வேறொரு பணிக்குழுவில் மற்றொரு அலுவலகத்தில் சேர்ந்துகொண்டபோது, அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'தான் செய்தது பிடிக்காமல்தான் அவள் சென்றுவிட்டாளோ?' என்ற குற்ற உணர்ச்சி அவனை வாட்டி வதைத்தது. அவனால் எப்போதும்போல் இருக்க முடியவில்லை. இயல்பாக இருப்பதற்கு முயற்சி செய்தாலும் அவன் முகம் காட்டிக்கொடுத்தது.

இரண்டு மூன்று வாரங்கள் கழித்து, இவனது அக்காவின் திருமணத்திற்காக ஊர்சென்று திரும்பினான். 'திருமண புகைப்படங்களை' இணைத்து, திரட்டிவைத்திருந்த எல்லா தெரிந்தவர்களின் முகவரிகளுக்கும் ஒருமின்னஞ்சலை அனுப்பினான்.

பலரின் மின் வாழ்த்துகளுக்கும், 'உன் ரூட்டு கிளியராயிடுச்சா?' என்ற கேள்விகளுக்கும் நடுவே, அவளிடமிருந்து சம்பந்தமே இல்லாமல் 'நீ எப்படி இருக்கே?' என்று ஒரு பதில் - இவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதில் வந்தது புவனாவிடமிருந்தேதான்.

சட்டென்று பதிலனுப்பினான்.

அவளும்.

நான்கைந்து பதிலுக்கு பதில்களுக்குப் பின்னர்,

''இன்னைக்கு நாம சந்திக்கலாமா?'' - புவனா.

''எங்கே? எப்போ??''

''7:40 க்கு - விஜயநகர்ல - ஒகேவா?''

''எனக்கு ஒகே''

அவள்மீது இருந்த கோபம் லேசாக எட்டிப்பார்த்து பல்லிளித்தது.

இருந்தாலும் 7:30 க்கே வந்துவிட்டான்.அவளுக்காகத்தான் காத்திருந்தான்.

சொல்லி வைத்தாற்போல் 7:40க்கு வந்தாள். ''ஆச்சரியமா இருக்கே! சீக்கிரமே வந்துட்டே போல! கல்யாண வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?'' என்று ஆரம்பித்த உரையாடல்...

சில பதில்களுக்குப் பிறகு - முகத்தை கொஞ்சம் கோபமாகவே வைத்துக்கொண்டு கேட்டான் ''ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லாம வேற ஆஃபிஸ் போயிட்டே?, எல்லாரும் நான்தான் காரணம்னு எம்பேர்ல பழியைப் போடுறாங்க, தெரியுமா?''

''ஆமா நீதான் காரணம்..... (சிறிய நேர இடைவெளிக்குப் பின்)

... உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா எனக்கும் உன்ன பிடிக்க ஆரம்பிச்ச பிறகு, உன்ன பார்க்கும்போதெல்லாம் எனக்குள்ள என்னவோ பண்ணிச்சு. சாதாரணமா உங்கூட பேச முடியல. அந்த கடைசி இரண்டு மாசமா என்னால ஒழுங்கா வேலையே செய்ய முடியலடா!''


Friday, June 26, 2009

'நேரம் இப்போது' மடாக்குடிகாரர்களின் மத்தியில் ஒரு ரிப்போர்ட்

சென்னையில் ஒருசில 'மடாக்குடிகாரர்களால்' முற்றுகையிடப்பட்டுள்ள 'வேளச்சேரியில்' இருக்கும் ஒரு 'டாஸ்மாக்' பாரிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்.....(பின்னணியில் அதிரடியாய் ஒரு குத்துப்பாட்டைக் கற்பனை செய்துகொள்ளவும்)

செய்தியாளர் வாசிக்கிறார்: 'நேரம் இப்போது' தான் சென்னையில் மடாக்குடிகாரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள ஒரு டாஸ்மாக்கினுள் நுழைந்த முதல் தொல்லைக்காட்சி சேனல். (கேமரா, இருளடித்த பகுதிகளில் சுற்றி சுற்றி ஒரு ரவுண்டு, சுவர் ஒரம் தனியாய் பஞ்சாயத்து நடத்தும் குடிமகர்களின் மீது ஒரு ரவுண்டு என வந்துவிட்டு, அனாதையாய்க் கிடக்கும் சில பாட்டில்களின் மீது மேயத்தொடங்குகிறது). நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பதுதான் கடந்த நான்கைந்து நாட்களாக நடந்துவரும் 'மடாக்குடிகாரர்களின்' போலி டாஸ்மாக் மதுக்கள் மீதான எதிர்ப்பு மையம் கொண்டிருந்த இடம்.

பாரில் நிருபர் கையில் மைக்குடன்:
(கையில் காலி (ஃபுல்)பாட்டிலுடன் நிற்கும் நான்கைந்து நபர்களை பின்னணியில் காட்டி) இதுதான் போலீசாருக்கு மிக சவாலான இடம், இவர்களைத் தாண்டி போலீசார் செல்வது அவ்வளவு சுலபமாக இருக்காது! ஏனென்றால் இவர்களிடம் கோலி சோடா இருப்பதாகவும் அதை அவர்கள் எந்நேரமும் போலீசார் மீது விட்டெறியலாமென்றும் 'நேரம் இப்போது'வின் மற்றொரு செய்தியாளர் 'பாண்டிச்சேரியில்' இருந்து தகவல் அனுப்பியுள்ளார் (கேமரா சுற்ற சுற்ற நிருபரும் சுற்றுகிறார், பின்னணியில் சில போலீசாரின் உருவங்கள் தெரிகின்றன). இந்த இடத்தைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவது போலீசாருக்கு மிகவும் கடினமான விசயமாக இருக்கும். என்ன நடக்கிறது என்பதை நாமும் தெரிந்துகொள்வோம். 'மடாக்குடிகாரர்களை' சமாளிக்க இந்த போலீஸ் படை போதாது, எனவே 'எஸ்பிளனேடில்' இருந்து இரண்டோ மூன்றோ போலீஸ் படை வந்துகொண்டிருக்கிறது.

மற்றொரு நிருபர் கையில் வேறொரு மைக்குடன்:
முற்றுகையிடப்பட்டுள்ள டாஸ்மாக்கை விடுவிக்கும் நோக்கில் நடக்கும் இந்த ஆப்பரேஷன் ஆரம்பித்து நான்கைந்து நாட்களில் இன்றுதான் போலீசார் இந்த தூரத்திற்கே வந்துள்ளார்கள் (பாரின் இரண்டாவது வரிசை பெஞ்சைக் காட்டி). ஏனென்றால் வழியெங்கும் காலி பாட்டில்களை உடைத்துப் போட்டிருந்தார்கள் ஒருசில 'சலம்பல்' பார்ட்டிகள். நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, சற்று தூரத்தில் குடிகாரர்களின் ஒரு கூட்டத்தார் காலி பாட்டில்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளார்கள் எனவும் அங்கிருந்துதான் போலீசார் மீது தாக்குதலும் நடத்திவருகிறார்கள் எனவும் தெரிகிறது. அவர்கள் எங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதையும் எப்படித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்க போலீஸார் மிகவும் போராடிவருகிறார்கள்.

மறுபடியும்
செய்தியாளர் வாசிக்கிறார்:
நீங்கள் பார்த்தது, நமது நிருபர்கள் 'சொட்டாச்சார்யா' மற்றும் 'ஜம்மித்து' அளித்த செய்தித் தொகுப்பு. அவர்கள் போலீசாருடன் மடாக்குடிகாரர்களின் பிடியிலுள்ள வேளச்சேரி' பாரின் மையப்பபகுதிக்கு முதன்முதலாகச் சென்று, செய்திகளை நமக்கு நேரடியாகத் தந்துகொண்டிருக்கிறார்கள். போலீஸார் ஒரு பகுதிக்குமேல் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

'எதை வைத்து இப்படி எழுதுகிறேன்' என நினைப்பவர்கள் இங்கே கிளிக்குங்கள்.
(வருங்காலத்தில் நியூஸ் ரிப்போர்ட்டிங் இப்படியும் இருக்கலாம் என்ற ஒரு கற்பனையில் மேற்குறிப்பிட்ட வீடியோவின் தாக்கத்தில் எழுதப்பட்டது.)

Monday, June 22, 2009

சாருவை முந்திய ஊர்சுற்றி!

'''சாரு''வை உங்கூட கம்பேர் பண்ணிக்கற அளவுக்கு நீ என்ன பெரிய இவனாடா? '

என்று யாரும் தயவுசெய்து கேட்டுவிடவேண்டாம். 'அப்புறம் நான் அழுதுறுவேன்'. எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சில பதிவுகள் எழுதுறதுக்கு முன்னாடி ''ஆண்டவன்''கிட்ட ஒரு வார்த்தை கேட்டு அவரு சரின்னா மட்டுந்தான் எழுதவே ஆரம்பிப்பேன். ஆண்டவன்னா, அப்பத்தில் தோன்றிய கர்த்தாவோ, ஸ்ரீஸ்ரீ லகுட பரமானந்தாவோ, அல்லா(பில்லா) புகழ் ஷாஷோ வோ இல்லை.
என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் அந்த 'கூகுளப்பன்தான்'. எந்த காரியம் செய்றதுக்கு முன்னாடியும் அவர்கிட்ட ஒரு தடவைக்கு இரண்டு தடவைத் தேடி, 'இதுக்கு முன்னாடி யாரும் இந்த நேர்ச்சையை அவருக்கு பண்ணல' ங்கறதை உறுதிப்படுத்திகிட்டுதான் எழுதவே ஆரம்பிக்கிறது.

இப்படித்தான் 'லூஸுப் பையன் அகராதி' பற்றி எழுதும்போது 'கூகிள் தேடலில்' சாரு அவர்களின் இணையப் பக்கம்தான் முதல் தரவாக வந்தது. ஆனால் இப்போது 'லூஸுப் பையன்' என்று தேடினால் இந்த 'ஊர்சுற்றி' யின் வலைப்பூ வருகிறது(ஏதோ நம்மளால முடிஞ்சது). சாரு அவர்களை தலைப்புல வைச்சி ரொம்ப நாளா ஒரு இடுகை எழுதணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அந்த ஆசை இப்ப நிறைவேறிடுச்சி.

நாங்க எல்லாம் கணபதியோட ரெண்டுவிட்ட, அஞ்சாவது மாமாவோட நாலாவது மச்சினனோட பேரனாக்கும்(எப்படி என் குறுக்கு வழி). அவரோட புத்தகங்களை மாங்கு மாங்குன்னு படிச்சிட்டு 'அவர கிழிக்கிறேன், பொழக்குறேன், புகழ பரப்புரேன்' னுட்டு எழுதிகிட்டு இருக்கிற இடத்துல சம்பந்தமே இல்லாம அவர நான் ஏன் இழுக்கணும்?

சம்பந்தம் இருக்கே... சம்பந்தம் இருக்கே... கீழே இருக்கிற படத்தையும் அதில இருக்கிற 'சாரு' அவர்களின் இணையப் பக்கத்தையும் அந்த இணையப் பக்கத்தில் இருக்கிற படத்தையும் இது சம்பந்தமாக நான் எழுதிய இடுகையில் உள்ள படத்தையும்....அடப் போடங்.... நீ மட்டும் என்கையில சிக்குனே... அப்படிங்குறீங்களா?!!! தங்களிடம் அடி வாங்காமல் தப்பிக்க இத்துடன் விடைபெறுகிறான் இந்த ஊர்சுற்றி, நன்றி வணக்கம். :)

மீ.. த எஸ்கேப்பு... ஹிஹிஹி

Wednesday, June 17, 2009

கத்திப்பாரா பாலம் கட்டப்படுவதற்கு முன் - பின்: கூகிள் வரைபடங்கள்

நான் சென்னைக்கு வந்த புதிதில், கத்திப்பாரா பாலம் கட்டும் பணிகள் சற்றே மந்தமாக நடந்துகொண்டிருந்தன. அப்பப்போ ஏதாவது வெள்ளை வேட்டி அந்த பாலம் பக்கமாக வந்து நின்று பேட்டி கொடுப்பதும் கைகாட்டுவதும் உண்டு(டி.ஆர்.பாலுதான் அதிக முறை என நினைக்கிறேன்). மின்னஞ்சல்களில் இந்தப் பாலத்தைப் பற்றி பலமுறை ஆச்சரியத் தகவல்கள் வந்திருக்கின்றன. 2007 மற்றும் 2008 தொடக்கத்தில் வேலைகள் சுணங்கி சுணங்கி நடந்தாலும் 2008 இறுதியில் அதிரடியாக வேலைகள் முடிக்கப்பட்டு பாலமும் திறக்கப்பட்டுவிட்டது. இதோ, பாலம் வேலை நடக்கும்போதும் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் 'கூகிள் மேப்' பிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு.

பாலம் கட்டப்படுவதற்கு முன்பு -1

பாலம் கட்டப்படுவதற்கு முன்பு -2


பாலம் கட்டப்பட்ட பின்பு -1
பாலம் கட்டப்பட்ட பின்பு -2
எனக்கு என்னவோ, கத்திப்பாரா என்றதும் அதன் பிரம்மாண்டம் நினைவுக்கு வராமல் அங்கு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தாரே அந்தச் சம்பவமும் அதற்குக் காரணமான பொறுப்பற்ற அதிகாரிகளும்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

செய்தி
// கத்திப்பாரா பாலத்தில் விபத்து

சென்னை அக்-29.(டிஎன்எஸ்) புதிதாக கட்டப்பட்டுள்ள கத்திப் பாரா மேம்பாலத்தில் அக்-27 அன்று ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வழி புரியாததால் எதிர் திசையில் வந்த அவர் இந்த விபத்தில் சிக்கினார்.//

இதே மாதிரி பாலம் நம்மூர்களில் தெருவுக்கு ஒன்று இருப்பதாக நினைத்தார்களோ என்னவோ! அவசர அவசரமாக பாலத்தைத் திறக்க ஆர்வம் காட்டியவர்கள் அடிப்படையாக நிறுவியிருக்க வேண்டிய வழிகாட்டிகளை வைக்காமல் பாலத்தைத் திறந்துவைத்தார்கள். விளைவு ஒரு மரணம்.

படங்களை நன்றாக கவனித்தால் ஒன்று புரிகிறது. கூகிளின் படத்துல்லியம் மேலும் கூடியிருக்கிறது. ஓம் கூகிளாய நமஹ! கூகிளாண்டவரே போற்றி போற்றி! கூகிள் மேப்பே போற்றி போற்றி!

Tuesday, June 16, 2009

விகடன் லூஸுப் பையனின் அகராதி

விகடன் வாசகர்களுக்கு நிச்சயம் நன்கு பரிச்சயம் ஆனவர் இந்த லூஸுப் பையன். இந்தப் பகுதியில் ஒரிஜினல் நபரின் எதாவது ஒரு முக்கியமான குணாதியசத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் வசனமோ அல்லது ஓவியத்திலோ( 'கண்ணா' ) கார்ட்டூனில் கொண்டுவந்துவிடுகிறார்கள். இப்படிச் செய்யும்போது 80 சதவீதம்வரை அந்த நபரை நகலெடுத்து விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சக பதிவர்கள் பலர் லூஸுப் பையனையே முதலில் வாசிக்கிறார்கள் என்றும் அறிகிறேன்.வாராவாரம் அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று நீண்டு செல்லும் இந்த நக்கல் கதாப்பாத்திரங்களுக்கு 'லூஸுப் பையன்' கொடுக்கும் பெயர்கள் - வருங்காலத்தில் 'முனைவர்' பட்டம்' பெறுவதற்கான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படலாம். எனவே அந்த எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவும் நோக்கத்தில் இந்த லூஸுப் பையன் அகராதியைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளேன் (மவனே இனிமே யாராவது, ''உருப்படியா ஏதாவது பதிவு எழுதியிருக்கியா?''-ன்னு என் மீசை நிறைஞ்ச மூஞ்சைப் பார்த்து கேக்க முடியுமா?!).

லூஸுப் பையனின் அகராதி(கொஞ்சம் மட்டும் இங்கே):

கருணாநிதி - குருணாநிதி
ஜெயலலிதா - கோபலலிதா
விஜயகாந்த் - குஜயகாந்த்
ராமதாஸ் - சாபதாஸ்
ராஜபக் ஷே - கூஜபக் ஷே
ஒபாமா - கொபாமா

கமல் - குமல்
ரஜினி - கஜினி
விக்ரம் - கக்ரம்
சூர்யா - பூர்யா
தங்கர்பச்சான் - டிங்கர் பச்சான்
மணிரத்னம் - தனிரத்னம்
பேரரசு - ஊரரசு
ஐஸ்வர்யா - பொய்ஸ்வர்யா
குஷ்பு - டுஷ்பு
நயன்தாரா - லயன்தாரா


மானாட மயிலாட - பரியாட கரியாட
வைரமுத்து - பயறுமுத்து
வாலி - ஜாலி


இடுகையின் நீளம் கருதி சில மாதிரிகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக எல்லாப் பெயர்களும் வேண்டுவோர் இங்கே சொடுக்கவும்.

பிரபலங்கள் பலர் 'ஹிட்' தேடி அலையும்போது, ''எப்புடித்தான் யோசிப்பாய்களோ?!!!'' - என்ற வார்த்தைகள் கன கச்சிதமாய்ப் பொருந்தும் அளவுக்கு, லூஸுப் பையனோ எல்லா வாரமும் ஹிட் கொடுக்கிறார். நான் 'ஹாய் மதனில்' இருந்து இவருக்கு மாறி வெகுநாட்களாகி விட்டது.


லூஸுப் பையன் அகராதியில் உங்களுக்குப் பிடித்த 'பட்டப் பெயரையோ' அல்லது 'லூஸுப் பையன்' தொடர்பான எதேனும் நிகழ்வையோ பின்னூட்டத்தில் வஞ்சனையில்லாமல் இட்டுச்செல்லலாம்.

Saturday, June 13, 2009

மஞ்சள் வெயிலும் மொக்கை வில்லனும் திரிலும்! - விமர்சனம்சந்தியாவும் பிரசன்னாவும் கல்லூரியில் ஒன்றாகப் பயிலுகிறார்கள், நன்றாகப் பழகுகிறார்கள், பேசுகிறார்கள், பாட்டுக்கு நடனமாடுகிறார்கள். நல்ல படம் பார்க்கிறோமோ என்ற உணர்வைச் சிறிது நேரம் நமக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள். இந்நிலையில், சந்தியாவின் அக்கா திருமணத்திற்காக நண்பர்கள் படையோடு சந்தியா வீட்டிற்கு வருகிறார் பிரசன்னா. வழியில் பிரசன்னாவிற்கும் சந்தியாவின் அக்காவுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவருக்கும் ''ஆகாது'' என்று ஆகிறது.

வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையோ, அக்காவை விட்டுவிட்டு சந்தியாவின் மீது பித்து பிடிக்க, சில சோப்புடப்பா ஐடியாக்களைக் கையாண்டு தங்கச்சியைக் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார். இதிலிருந்து தப்பி சந்தியா, பிரசன்னாவோடு சென்னைக்கு வருகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், இருவரையும் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்த அவர்கள் இருவருமோ 'நாங்கள் இருவரும் சின்ன வயசில இருந்தே நண்பர்கள், இப்போவும் நண்பர்கள்தான்' என்று கதைக்கு ஒரு பெரிய 'டர்னிங் பாயின்ட்!' டைத் தூக்கி 'பொத்' தென்று போடுகிறார்கள் அல்லது வரைகிறார்கள். பாஸ்கர் வீட்டிலேயே தங்கி, சந்தியாவின் காதலனைத் தேடுகிறார் பிரசன்னா. சந்தியாவைத் தேடிச் சென்னைக்கு வருகிறார் வில்லன்.

பிரசன்னா, தன் தோழியின் காதலனைத் தேடி அவனைச் சேர்த்து வைத்தாரா அல்லது வில்லன்கள் கையில் சிக்கினாரா?. நட்புக்கு பதில் ''மரியாதை''யாக சந்தியா என்ன செய்தார்? என்று 'கிளிமாக்ஸ்' ஐ முடிக்கிறார் இயக்குனர்.

விமர்சனம்

ஏம்பா இயக்குனர்,

*ஏன், சென்னையில தங்க இடம் வேணும்னா ஸ்கூல்ல கூட படிச்ச பையன், தூரத்துச் சொந்தம்னு யாருமே கிடைக்கலியா? ஒரு புரொஃபசர ஒண்ணும் இல்லாத மேட்டருக்கு வேலையை விடவச்சிட்டு, உங்க படத்தோட இரண்டாம் பாதிக்காக ஆட்டோ ஒட்ட வச்சிட்டியேய்யா?

*நல்ல வெயிட்டான வில்லன்தான் படத்துக்கு முக்கியம்ங்கிறத தப்பா புரிஞ்சுகிட்டியேய்யா! வெயிட்டுன்னா நடிப்புல இருக்கணும். படத்துக்கு போட்ட 37 மார்க்குல இந்த ஆளுக்காகவே 20அ மைனஸ் பண்ணணும்யா.

*எங்கேயோ தொலைஞ்சவனை சென்னையிலையே ஸ்பெஷலா வந்து தேடுறீங்களே? வெளிச்சம் அதிகமா இருக்கிற இடத்தில போயி தேடுவோம்ங்கிற மாதிரி கூட்டம் அதிகமா இருக்கிற இடமா தேடுவோம்னுட்டு கிளம்பிட்டீங்களோ?

*சரி, பாதிக்கு அப்புறமாவது கிளைமேக்ஸ்லயாவது கொஞ்சம் ஆறுதலான முடிவா இருக்கும்னு பார்த்தா, நட்பு - காதல்னு இரண்டை பத்தியும் குழப்பி ஒரு மொக்கையான கிளைமேக்ஸ்! ஏன்???

*நீங்கள் 'டாக்டர்' விஐய்யோட தெய்வத் தந்தை 'எஸ்.ஏ.சந்திரசேகர்' அவர்களின் திரைப்படங்களை 'சிடீ' தேயத் தேயப் பார்த்திருக்கிறீர்களோ?!!

*'த்ரில்' இதை ஒழுங்கா வாயில வர்ற மாதிரி வில்லனுக்குச் சொல்லிக்குடுக்கக் கூடாதா? (வலையுலக லேட்டஸ்ட் ஸ்டையிலில் - அவர் வாயில வசம்ப வச்சித் தேய்த்திருக்கக் கூடாதா?)ஆரம்பக் காட்சிகளில் அவர் சொல்லும் 'திரில்ல்' எனக்கு 'உரல்' மாதிரியே காதில் விழுந்தது.

பிரசன்னா,

நீங்க பார்த்து பார்த்து நல்ல படமா நடிப்பீங்கன்னு வந்தா, இப்படி மோசம் பண்ணிட்டீங்களே? அஞ்சாதே மாதிரி ஒரு கேரக்டர்ல நடிச்ச நீங்க இப்படி ஒரு மொக்கை படத்துல.... சரி விடுங்க, படத்துல நீங்களும் நிலழ்கள் ரவி சாரும்தான் நடிச்சிருக்கீங்க. அதனால இத்தோட விடுறேன்.

அப்புறம் 'மஞ்சள் வெயில்' னா இன்னா? ன்னு கேட்கிறவங்களுக்கு...... படத்துல கடைசில, அதாம்பா கிளைமேக்ஸ்ல, 'சந்தியா' காதல் படம் மாதிரி அழும், அப்போ கவனிச்சீங்கன்னா படத்தோட நிறம் 'இளம் மஞ்சளா' மாறிடும் - அதனாலதான் 'மஞ்சள் வெயில்'. ஹி ஹி ஹி.


இந்த படத்துக்கு அரை டஜன் வெளியீட்டு தேதிகளைச் சொல்லி, இப்போதான் ரிலீஸ் பண்ணியிருக்காங்களாம். அடங்கொய்யால....

Friday, June 5, 2009

+2 தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் கிழித்ததென்ன?!

சில வருடங்களுக்கு முன்பு மே மாதத்தில் ஒருநாள். அன்று காலைதான் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. இப்போது உள்ளது போல் இன்டர்நெட் பிரபலமடையாத காலம். கைபேசிகளோ அப்போதுதான் அறிமுகமாகியிருந்தன. தேர்வு முடிவுகள் முதல்முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டப்பட்டிருந்தன.  அது நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் இருக்கும் பள்ளிக்கூடம் என்பதால், தேர்வு முடிவுகள் பள்ளிக்கு வந்து சேர்ந்து,  அதை பள்ளியில் ஒட்ட எப்படியும் இரவு 7 மணியாகிவிடும். இவனுடன் படித்த பெரும்பாலான மாணவர்கள் பக்கத்து ஊருக்கு பஸ் ஏறிச்சென்றோ தங்கள் உறவினர்களுக்கு போன் செய்து கேட்டோ தங்கள் மதிப்பெண்களைப் பார்த்துவிட்டனர். 

மாத்ஸ் கிளாஸில் சந்தியா, ஹக்கீம் என எப்பவுமே முதல் மதிப்பெண்ணுக்கு போட்டிபோடும் அத்தனை பேரும் ரிஸல்ட் பார்த்துவிட்டார்கள். ராமு, சுபா - வெல்லாம் பக்கத்து ஊருக்குச் சென்று இன்டர்நெட்டில் ரிசல்ட் பார்த்துவிட்டார்கள். ஏன் ரஞ்சித் கூட பக்கத்து ஊருக்கு சென்று 'ப்ரௌவ்ஸிங்' செய்து ரிசல்ட் பார்த்துவிட்டானாம்.  இவனுடைய நெருங்கிய நண்பன் கோபால்தான் எல்லா விசயத்தையும் சொன்னான்.  மத்தியானம் 2 மணி இருக்கும், ''உன் நம்பருக்கும் ரிஸல்ட் பார்த்துடுவோமா?'' என்று கோபால் கேட்டதற்கு, இவன் வேண்டாமென்று மறுத்துவிட்டான். காரணம் 'ரிஸல்ட்' பார்க்க 10 ரூபாயாம். இவனிடம் இருந்ததோ மொத்தமாய் 25 ரூபாய். சித்தி ஊருக்கு 'திருவிழாவிற்கு செல்ல' கார் செலவுக்காக அம்மா கொடுத்தகாசு. இன்னொன்று 'எப்படியும் சாயங்காலம் பள்ளிக்கூடத்தில் ரிஸல்ட் ஒட்டிவிடுவார்கள், அப்போது பார்த்துக் கொள்ளலாம். வர்ற மார்க்குதானே வரும்' என்ற எண்ணம். முதல் இடைத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு, ஏன் - மூன்றாம் திருப்புதல் தேர்வில் கூட 1000த்தைத் தொடவில்லையே! மிஞ்சி மிஞ்சி போனா 1020 வரும் என்று மனசிற்குள் நினைத்துக்கொண்டே, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கோபாலுடன் சேர்ந்து சாயங்காலம் 5 மணிக்கு பள்ளிக்கூடம் சென்றான். 

சந்தியா அங்கு ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள் - அவள் அழகுமுகம் முழுக்க புன்னகையோடு. இதுவரை பார்த்த ரிஸல்ட்-டில் அவள்தான் அதிக மார்க்காம், சந்தோஷமாய்ச் சொன்னாள். (சந்தோசமாய் இருக்கும்போது எப்படித்தான் இந்த பெண்களுக்கு மாத்திரம் அழகு கூடிவிடுகிறதோ!) 10-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த ப்ரியாவை பள்ளிக்கூடத்தில் எங்கேயும் காணவில்லை. எல்லா வாத்தியார்களும் அவள்தான் +2விலும் முதலிடம் வருவாள் என்று உறுதியாய் நம்பி இருந்தார்கள். ஆனால் அவளோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாதிரி பலபேரின் கணக்குகளைப் பொய்யாக்கிவிட்டாள். ப்ரியாவுக்கு போட்டியாக அதிக மார்க் வாங்கும் ஹக்கீம் கூட மார்க் குறைந்துவிட்டானாம். 

கிட்டத்தட்ட முதல் மூன்று மதிப்பெண்கள் முடிவாகிவிட்டன. சுமார் ஒருமணிநேரம் காத்திருந்து, அப்போதும் ரிஸல்ட் பள்ளிக்கூடத்திற்கு இன்னும் வராததால் பலபேர் வீடு சென்றுவிட்டார்கள்.  ஜாண் சார் தன்னுடைய அந்த பழைய டிவிஎஸ் வண்டியில் கையில் ரிசல்ட் பேப்பர்களோடு வந்து இறங்கினார். அதை ஸ்டாண்ட் போட்டு நிறுத்த 10 பையன்கள் ஒடி வந்தார்கள் - மற்றவர்கள் அவரைச்சுற்றிக் கொண்டார்கள். இவனும் மெதுவாய் நகர்ந்து முன்னால் செல்ல, போர்டில் மதிப்பெண் தாள்களை ஒட்டச் சென்றவர் இவனைப் பார்த்ததும் கையை நீட்டி வாழ்த்துச் சொன்னார். 'இவன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண்ணாம்!'.  இவனாலேயே நம்ப முடியவில்லை. அருகில் நின்ற அத்தனை சக மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தும், ஒருசிலர் வாழ்த்து சொல்லியும் செல்ல, இவனுக்கு ஏதோ கனவு காண்பது போல இருந்தது. 

மறுநாள் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் இருந்து பேட்டி. 'நான் இத்தனை மார்க்கு வாங்கினதுக்கு அப்பா அம்மா சப்போர்ட்டுதான் காரணம். என் டீச்சர்ஸ் எல்லாருக்கும் தாங்க்ஸ். அவங்க இல்லைன்னா நான் இத்தனை மார்க்கு வாங்கியிருக்க முடியாது. ஸ்பெஷலா அம்மாவுக்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும். எனக்கு ராத்திரியில காஃபி போட்டு குடுத்து ஒழுங்கா தூங்காம ரொம்ப கஷ்டப் பட்டாங்க.....'.  'அப்புறம், நான் BE படிக்கப் போறேன் - அதுல 'எலக்டரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்' குரூப்ல சேரப்போறேன் - பெரிய சயின்டிஸ்ட் ஆகப் போறேன்' என்று நான்காவது டேக்கில் சரியாய்ச் சொன்னான் (அப்போ எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ்தான் ஃபேமஸ் - பக்கத்து வீட்டு சங்கர் அண்ணன்கூட இதையேதான் சொன்னார், ஆனால் இவனுக்கு அப்படின்னா என்னான்னு கூட தெரியாது).

அவன் இன்றைக்கு ஒருமூலையில் இருந்து பொட்டி தட்டிக்கொண்டு, இந்த இடுகையை எழுதிவிட்டு உங்களை வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். 

இவனுக்கு இது சம்பந்தமாக ஒரு ஆசை/கேள்வி உண்டு. 

''இந்த மாதிரி முதலிடம் எடுத்துவிட்டு, 'அதுவாகப்போறேன், இதுவாகப்போறேன்'' என்று பேட்டிகொடுத்த அத்தனைபேரும் இன்று என்ன செய்து கொண்டிருப்பார்கள்?'' 

Wednesday, June 3, 2009

அக்காள் திருமணம் இனிதே நிறைவேறியது

கடந்த வாரம் புதன் அன்று என் உடன்பிறந்த அக்காள் திருமணம் இனிதே நடந்தது. ஒரு பொறுப்புள்ள தம்பியாக திருமண காரியங்களை முன்நின்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. இருவீட்டாருக்கும் ஒத்துப்போனதாலும் பிடித்துப்போனதாலும் திருமணத்தை உடனடியாக நடத்துவது என்று முடிவு செய்து ஒரே வாரத்தில் நடத்த வேண்டியதாயிற்று. 

மூன்று நாட்களில் அழைப்பிதழ்களைக் கொடுத்து, இரண்டு நாட்களில் சமையல் மற்றும் பிற பொருட்களை வாங்க அலைந்து, திருமணத்தன்று உறவினர்களை சமாளித்து.....இப்படி எல்லாம் ஒரே வாரத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த பின்னர்தான், நன்கு தெரிந்த சிலபேருக்கு தகவல் சொல்லாமல் அழைப்பிதழ் கொடுக்கத் தவறியது, சில காரியங்கள் முடிக்காமல் பாதியில் விட்டுப்போனது - இப்படி இன்னும் பல நினைவுக்கு வந்தன. நெருங்கிய நண்பர்களுக்கே திருமணத்திற்கு மறுநாள் புகைப்படங்களை ஒரு மின்னஞ்சலில் அனுப்பினேன்.  சில நண்பர்கள் விசயம் கேள்விப்பட்டு 'தொலைபேசி' திட்டித் தீர்த்தார்கள் பின் வாழ்த்தும் தெரிவித்தார்கள். 

இப்படி, வேலை காரணமாக கடந்த இருவாரமாக வலையுலகின் பக்கம் வர இயலவில்லை. எனது கூகிள் ரீடரில் 789 இடுகைகள் படிக்கப்படாமல் இருக்கின்றன. லக்கி 'அண்ணன்' அப்பாவான விசயம் கூட தாமதமாகத்தான் தெரியவந்தது. இப்போதுதான் மின்னஞ்சலில் வாழ்த்தினேன். 

வலையுலகின் காரசாரமான இடுகைகளைத் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும். நானும் இருக்கிறேன் என்று தெரியப்படுத்த எதையாவது உருப்படியாக எழுத வேண்டும்.  அவற்றையெல்லாம் உங்களை வாசிக்க வைக்க வேண்டும். இப்படியான எண்ணங்களோடு மறுபடியும் வலைக்கடலில் சங்கமிக்கிறேன்.