Tuesday, December 9, 2014

ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி

கத்திரி கேசாத்ரி சொல்றது என்னான்னா....

நரேந்திர மோடி கேபினெட்ல ரெண்டு பிராமணாள சேர்த்துண்டத பாராட்டினது நாட்ல பெரிய பிரச்சினையாயிடுது.

ஏதோ அந்த காலத்துல சொசைட்டில எங்களவாள்லாம் பெரிய இடத்துல இருந்தா. ஆனா இப்ப அப்படியா இருக்கு? எங்களவாளுக்கெல்லாம் ஏதோ  கொஞ்சோண்டுதான் பவர் இருக்கு. (என்ன பத்தாயிரம் இருபதாயிரம் புக்கு விக்குற அளவுக்கு இருக்குமா?) எண்ணிக்கைல எங்களவாள்லாம் கொஞ்சமாத்தான் இருக்கா! பொது இடத்துல பார்க்கக்கூட முடியாது. (ஆமா, அவாள்லாம் கார்ல போவா, பெரிய பெரிய மால்லதான் இருப்பா. சாதாரண மக்கள் இருக்குற இடத்துக்கு ஏன்  வரப்போறா?) இதே நிலமதான் தமிழ்நாட்லேயும்.

சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடியே, தமிழ்-தெலுங்கு பிராமின் சர்க்கார் உத்தியோகத்துல ஏகத்துக்கும் இருந்தா. எப்ப இந்த 'ஜஸ்டிஸ் பார்ட்டி'யும் 'திராவிடாள் குரூப்'பும் சேர்ந்துண்டு கோட்டாவ கொண்டு வந்தாளோனோ, அன்னிக்கே போச்சு. மெடிக்கல் சீட்ல நம்மவாளுக்கு இடம் இல்ல, கவர்மென்ட் உத்தியோகத்துலேர்ந்து, என்ஜினீரிங்க் காலேஜ்லேர்ந்தெல்லாம் மொத்தமா விரட்டியடிச்சுட்டா.(அப்புறம்?)

அரசியல்ல முழுசா எந்த அதிகாரமும் இல்லாம ஆக்கிட்டா. தமிழ்நாட்ல நடந்த இந்த அநியாயத்தெல்லாம் பார்த்துண்டு, எங்களவால்லாம் பம்பாய்க்கும் டெல்லிக்கும் வேலைக்குப் போனா. இதெல்லாம் 1970-ல (அச்சச்சோ, என்னா அடக்குமுறைக்கெல்லாம் ஆளாகியிருக்கா பாருங்கோ!). 1900-க்குப் பின்னாடி நிறைய இன்ஜினீரிங் காலேஜ் வந்தபின்னாடி, பிராமணாள்லாம் இன்ஜினீரிங்க படிச்சா அப்புறம் இந்த ஐ.டி. மேனேஜ்மென்ட்ல தேவை அதிகமானதுனால MBA படிச்சா. இன்னிக்கு ஐ.டி. மேனேஜ்மென்ட், ஆடிட்டிங்ல எல்லாம் நம்மாளுங்கதான் இருக்கா.

நிறைய பேரு யு.எஸ். போயிட்டா. பின்ன, அங்க சிலிக்கான் வேலி வளர்ச்சியெல்லாம் நம்மவளாவாலதானே. இந்தியாவுலயே நிறையபேரு தொழில் தொடங்கினா, ஐ.டி.புரட்சிக்கு வழிவகுத்தா.

என்னதான் நாங்கல்லாம் அரசியல்ல இருந்து விலகியிருந்தாலும், தமிழ்நாட்ல எதுக்கெடுத்தாலும் எங்களதான் திட்டுறா! மோடி பிராமினிக்கல்ங்குறா, ஜெயலலிதா கூடதான் பிராமினிக்கலா இருக்கா. ஆனா, இந்த திமுகவுக்கு மட்டும்தான், சான்ஸ்கிரிட்ட ப்ரோமோட் பண்ணாலும் பிராமினிக்கல், 'இந்தி'ய ப்ரோமோட் பண்ணினாலும் ப்ராமினிக்கல். எல்டிடிஈ-க்கு எதிரா பிஜெபியோ காங்கிரஸோ, யார் பேசினாலும் ப்ராமினிக்கல். மார்க்கெட் எகானமி, க்ளோபலைசேசன் கூட ப்ராமினிக்கல்ங்குறா.

தமிழ்ல படம் எடுக்குறாளோ இல்லியோ, இவால்லாம் எப்பவுமே எங்களவாள 'பேடா’தான் காட்டுறா. இப்பகூட 'ஜீவா'ன்னு ஒரு படம் வந்ததோணோ, அதுல கூட ஏதோ எங்களவா எல்லாம் சேர்ந்து சதி பண்ணிதான் அவாளயெல்லாம் ஸ்டேட் லெவல் டீம்ல விளையாடவிடாம பண்ணிட்டதா சொல்றா. பிராமின்ஸ்லாம் மத்தவங்கள 2000 வருஷமா அடக்கியாண்டாங்க, படிக்கவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்றதெல்லாம் இப்ப பேஷனாயிடுத்து. அவா அவா இஸ்டத்துக்கு பேசறா. எதுக்கும் ஆதாரம் கிடையாது, அடுத்து எந்த ஆராய்ச்சியும் கிடையாது. (இந்த கட்டுரைக்கு எத்தன புள்ளிவிவரங்கள அம்பி கொடுத்திருக்கா? நீங்களே பாத்துக்கோங்கோ).

பிற்படுத்தப்பட்டவா பண்ற அடிதடிக்கெல்லாம்கூட நாங்கதான் காரணம்ங்குறா! இந்த சாதில்லாம் உருவாக்குனது நாங்கதான்தானாம், அதனால இதுக்கெல்லாம் நாங்கதான் பொறுப்புங்கறா. ஆனா, உண்மை அது கிடையாது.

புள்ளிவிவரங்கள்லாம் கூட இருந்தாலும் (ஆனா புளைளையாண்டன் கொடுக்கமாட்டன்!), அங்கங்க பாக்குறத காதுபட கேக்குறத வச்சி சொல்றேன், பிராமின்ஸ்தான் நிறைய இன்டர்-காஸ்ட் மேரேஜ் பண்ணியிருக்கா. நாங்கல்லாம் கௌரவக்கொலை பண்றது இல்ல பாருங்கோ.

நாங்கள்லாம்தான் இந்த மாநிலத்தோட கலையைப் பாதுகாக்குறோம், பழமையான நினைவிடங்களை சின்னங்களைப் பாதுகாக்குறோம், இந்த மாநிலத்தோட கலாச்சாரத்தையே பாதுகாக்குறோம் (என்னாதூ?). தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வ்வளவோ பண்ணியிருக்கோம். அறிவியல், இன்ஜினீரிங், மெடிக்கல் அப்புறம் கல்விக்கு இந்த மாநிலத்துக்காக எவ்வளவோ பண்ணியிருக்கோம்.(ஓஓஓஓ அப்படியா?)

ஆனா, அரசியல்ரீதியா ஒதுக்கப்பட்ட, சமுதாயத்தால பழிக்கப்பட்ட இந்த தமிழ் பிராமணர்கள் அவங்களோட அடையாளத்த எப்படிப் பாதுகாக்கப்போறோம்னு தெரியல? அதேநேரத்துல பாதுகாப்பா எப்ப உணரப்போறோம்னும் தெரியல?

படிப்புலயோ, வேலைலயோ, அரசியல்லயோ பிராமணாளுக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்க வாய்ப்பில்லே. எங்களவாளுக்கு வேண்டியதெல்லாம், மத்தவாளப் போல இந்த நாட்டுக்கு சேவைசெய்யுறதுக்கான வசதியான சூழல்தான். ஒரு லிபரல் நாட்ல, எப்படி மத்தவாள்லாம், அதான் இந்த முஸ்லிம், கிறிஸ்டியன்ஸ், பார்சி, ஜெயின்லாம், தங்களுக்குன்னு நம்பிக்கை, கலாச்சாரம், பழக்கவழக்கம், உடை, மொழின்னு இருக்காளோ, அதேமாதிரி தமிழ் பிராமின்ஸும் தங்களோட அடையாளத்தோட இருக்கணும்னு நினைக்குறா.
எங்களவாள பிராமினா இருக்க விடுங்கோ,
தமிழனா இருக்க விடுங்கோ,
இந்தியனாவும் இருக்க விடுங்கோ!

எங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்ல மாறணும்! (பஞ்ச் டயலாக்கா?)

Saturday, April 19, 2014

#NoMo #நோமோ - நரேன் ராஜகோபாலனின் முகநூல் பதிவுகளின் தொகுப்புவெளிவந்துவிட்டது!

நரேன் ராஜகோபாலன் - அவர்களின் 'குஜராத்', 'மோடி' குறித்த முகநூல் பதிவுகளின் தொகுப்பு. செப்டெம்பர் 2013 முதல் 11 ஏப்ரல் 2014 வரையிலான இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிவுகளின் தொகுப்பு - பி.டி.எஃப் வடிவில்

https://drive.google.com/file/d/0Bz8An0ZmAw-jaXRwNFU0aWRWb0U/edit?usp=sharing

(மேற்கண்ட கூகிள் ட்ரைவ் லிங்கில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்).

கடந்த சில வாரங்களாக, அலுவலக 'ஆணிகள்' இதுவரை இல்லாத அளவில் இருந்த காரணத்தினால் அதிக தாமதமாக வெளிவந்திருக்கின்றது இந்தத் தொகுப்பு.

இரண்டாம் பக்கத்தில், 'குஜராத்தின் போலி வளர்ச்சி' யை எதிர்கொள்ளும் புள்ளிவிவரங்கள் அடங்கிய பதிவுகளின் தொகுப்பும், ஊடகங்கள் குறித்தான பதிவுகளின் தொகுப்பும் இடம் பெற்றுள்ளன.

**********

அனைவருக்கும் முன்வைக்கும் நரேன் ராஜகோபாலனின் வரிகள்...

//நீங்கள் பார்க்கும் டிவி செய்திகள், நாளிதழ்கள், கேட்கும் வானொலிகள், சமூக வலைதள உரையாடல்கள் எல்லாமே staged; pre-mediated; pre-designed & scripted. இதில் இருப்பவை நீங்கள் எதிர்பார்க்கும் உண்மைகள் இல்லை. மாறாக, நம்மை நம்பவைக்கக்கூடிய, நம்முடைய சிந்தனைகளை மழுங்கடிக்கக்கூடிய, நம்முடைய எண்ணங்களை ”அவர்களின்” எதிர்பார்ப்புக்கு ஆதரவாக மாற்றக்கூடிய, நம்மை யோசிக்கவிடாமல் தொடர்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட பொய்களை இட்டு நிரப்பக் கூடிய சூழல் திட்டமிட்டு உருவாகிக் கொண்டு இருக்கிறது//

Sunday, January 19, 2014

செல்லமுத்து குப்புசாமி சொன்ன கதை - இரவல் காதலி (நாவல்)

இதன்ஆசிரியர், ஐ.டி. துறையில் பணிபுரிபவர் என்கிற அறிமுகத்தின் காரணமாக, இந்த ஆண்டு படித்த இரண்டாவது நாவல் இது. (முதலாவது 'இராஜீவ்காந்தி சாலை')

இரவல் காதலி:
      தலைப்பே (ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் கூட) கதையை உள்ளடக்கியிருக்கிறது.  மேலும் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியாகிவிட்டதால், கதையைப் பற்றி இங்கு விரிவாக விவாதிக்கப்போவதில்லை.

நாவலுக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளத்தையும் கதையையும் அதற்கான எல்லையையும் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, நாவல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது - மிகச் சில இடங்களில் ஃபிளாஷ் பேக்கும் உண்டு. கதையினூடாகவே, ஐ.டி.துறையின் சில குறிப்பிட்ட விசயங்கள் பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர். வேலைக்கு ஆள் எடுப்பது, புதிய ப்ராஜெக்ட்டுகள் பிடிப்பது  போன்றவை.  மற்றபடி, இது ஐ.டி.துறைக்குள்ளேயே நடக்கும் சம்பவங்களை அதிகம் உள்ளடக்கிய நாவல் இல்லை.

நாவலின் மையப்பாத்திரம் கதையை விவரிப்பதாக உள்ளது. மையப்பாத்திரம் பெண்களின் விருப்பு வெருப்புகளை அதிகம் தெரிந்து புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதாகவும், இந்த குறிப்பான விசயத்தில் மிக மோசமான நிலையில் இருந்து நாளடைவில் மிகத் தேர்ச்சியடைவதாயும் காட்டப்பட்டுள்ளது. பெண்கள் இதைத்தான் விரும்புவார்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே கதையின் நடுவில் வருகிறது. கதையின் பெரும்பகுதி, மையக்கதாப்பாத்திரத்திற்கும் அலுவலக வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்த போது அறிமுகமான இன்னொரு பெண்ணுக்குமானவை - இவர் ஐ.டி.துறையில் பணிபுரிபவர் இல்லை. இவர்களுக்கிடையே நடக்கும் அறிமுகம், அதன் தொடர்ச்சியாக நடக்கும் காதல் உரையாடல்கள் என்பவை தற்கால அறிவியல் வளர்ச்சியின் சாதனங்களான கைப்பேசி, கணிணி என்பவற்றைக்கொண்டு நடக்கின்றன.

முப்பதுகளில் இருக்கும் மையப்பாத்திரம், தனக்குச் சொந்தமாக கார், வீடு, உயர்தர - செலவு அதிகம் செய்யப்படும் இடங்கள் மீதான ஈர்ப்பு, டி.நகரின் நெருக்கடி குறித்தான அதீத வெறுப்பு, என, ஒரு மேல் நடுத்தர வர்க்கத்திற்கான அத்தனை குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசியல் பேசப்படவில்லை. தனி மனிதனுடைய திறமைக்கும், அதீத திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதிலும் இதே மேல் நடுத்தர வர்க்கத்திற்கான மனநிலை அப்பட்டமாகத் தென்படுகிறது.


பரவலாக ஐ.டி. துறையினர் பற்றிப் பேசப்படும் விமர்சனங்களுக்கான தீர்வு இந்நாவலிலும் (ராஜீவ்காந்தி சாலை-யிலும்) மெஸேஜாகச் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழியுங்கள். அவர்களது ஆசைகளை நிறைவேற்றுங்கள். நல்ல சுவாரசியத்துடன் விரிகின்ற கதை, ஓரே மூச்சில் படித்துவிடலாம்.

வாழ்த்துகள் 'செல்லமுத்து குப்புசாமி'.

Sunday, January 12, 2014

விநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல்)

தனது துறை(ஐ.டி.) சார்ந்து, இப்படியான ஒரு நாவல் முயற்சிக்கும் அதற்கான உழைப்புக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 'விநாயக முருகனு'க்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பலரும் பலவித கோணத்தில் அணுகும் புதிய(?!) துறையைப் (ஐ.டி.) பற்றிய கதை, என்று சொல்வதை விட, 'ராஜீவ்காந்திசாலை'யின் கதை என்றே சொல்ல வேண்டும். நாவலில், ஐ.டி. பற்றி பேசியதைவிட இந்தச் சாலையைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது(பெயருக்குப் பொருத்தம்தான்). ஆனால், 'பழைய மகாபலிபுரம் சாலை' என்றே பெயரிட்டிருக்கலாம். ஏனென்றால், இப்போது இந்தச் சாலையில் காணக் கிடைக்கும் மாற்றங்களில் பெரும்பாலானவை (ராஜீவ்காந்தி சாலை) பெயர்மாற்றத்திற்கு முன்பே நடந்தவைதானே!

ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் அலுவலக மற்றும் சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் நாவலின் மைய இழையாக இருக்கிறது. இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெறாதவர்கள், தற்கொலை செய்துகொண்ட செய்திகள் கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. அந்தச் செய்திகளை அடித்தளமாகக் கொண்டு நாவல் ஆரம்பிக்கிறது; அடித்தட்டு, நடுத்தட்டு, மேல்தட்டு மக்கள் என வெவ்வேறு வர்க்கப் பின்னணி கொண்டவர்கள் பாத்திரங்களாகக் கையாளப்பட்டிருக்கிறார்கள். சுமார் 25 வருடங்களுக்கு முன்பிருந்த இப்பகுதியின் வாழ்க்கை நிலையும்(குறிப்பாக நாவலூர், செம்மாஞ்சேரி) இப்போதிருக்கும் நிலைமையும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்தேறியுள்ள பொருளாதார, சமூக மாற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அந்த மாற்றத்தினூடாக அப்பகுதி மனிதர்களின் வாழ்வும் சொல்லப்பட்டுள்ளது.

வெவ்வேறு வர்க்கப் பின்னணி கொண்ட மனிதர்களின் கதைகள், இந்த 'ராஜீவ்காந்தி சாலை' என்கிற இழையினால் ஒன்றோடொன்று பின்னிக்கிடப்பதை காலத்தில் முன்னும் பின்னும் நகர்ந்து, விவரிக்கிறார் விநாயக முருகன். பெரும்பாலான வர்ணனைகள் இந்தச் சாலை இருக்கும் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அதில் இயங்கும் மனிதர்களின் பொருளாதார நிலைகள் பற்றியும் இருக்கின்றன. அதற்கு அடுத்தபடி ஐ.டி. துறையினரின் வேலைமுறைகள் பற்றியும், பணம் கொழிக்கும் வாழ்க்கையும், அதன் தொடர்ச்சியான அதனையொட்டிய காமமும் இருக்கின்றன. கொஞ்சம் காதலும், அரசியலும், சாதியும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் இருக்கின்றன. மேற்கூறிய விசயங்கள் அத்தனையையும் தொட்டுவிட்டுச் செல்கின்றது நாவல்.

குறிப்பாக ஐ.டி.துறையில் உயர்மட்டங்களில் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகள், அதனால் பாதிக்கப்படும் இளைஞர்கள், அதற்காக எந்தக் குரலும் எழுப்ப முடியாத சூழல் - இவை விவாதத்திற்குரியவை. இந்தத் துறையில்தான் அதிக சம்பளம் தரப்படுகிறது என்கிற ஒற்றைக் காரணத்தைக் காட்டி, ஐ.டி. ஊழியர்கள் மேல்மட்ட அதிகாரிகளால் சுரண்டப்படும், தூக்கியெறிப்படும் விதத்தினை விளக்குகிறது நாவல். இந்தப் பிரச்சினையைப் பேசிய முதல் நாவல் இதுவாகத்தான் இருக்க முடியும். அதற்காகவே இந்த நாவலுக்கு ஒரு 'சபாஷ்'!

ஐ.டி. பின்னணி கொண்ட எழுத்தாளர் என்பதனாலேயே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் நடக்கும் பணிகளைப் பற்றியும் வேலை முறைகள் பற்றியும் தில்லுமுல்லுகள் பற்றியும் கூட ஒரளவிற்குத் துல்லியமாக எழுத முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். பரவலாக புழக்கத்தில் இருக்கும், ஐ.டி. துறையினருடைய காமம்-காதல் பற்றிய கதைகளை வழிமொழியும் விதத்திலேயே இருக்கின்றது நாவல். அதே நேரத்தில் சாதாரண மக்களிடையே அதே மாதிரிக் கதைகளை வேறு விதங்களில் நாம் பார்க்க முடியும் என்பதையும் பதிவு செய்திருக்கிறது.

பல்வேறு பிரச்சினைகளைத் தொட்டுவிட்டதாலேயோ என்னவோ, நாவல் ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒரு அதீத தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக, பல்வேறு புள்ளிகளை இணைத்து வரைந்த,  தனது வடிவத்தில் தெளிவில்லாத அதேநேரம் வண்ணம் தீட்டப்படாத ஒரு கோலமாக நாவல் எனக்குத் தோற்றமளிக்கிறது.

Wednesday, December 4, 2013

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பையைக் கொட்டி ஆக்கிரமிப்பு!!!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி ஏற்கெனவே செய்தித் தாள்களிலும், வலைப்பூக்களிலும் பலர் எழுதியிருக்கிறார்கள்.

ஆதங்கத்தில் எழுதப்பட்ட இடுகைகள் சில...
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (நவ, 2009)
http://haripandi.blogspot.in/2009/11/blog-post_09.html

குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்! (மார்ச், 2010)
http://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

பள்ளிக்கரணை - சதுப்பு நிலக்காடு (2012) - விளக்கப் படங்களுடன் சிறப்பான பதிவு
http://www.raguc.com/2012/06/blog-post.html

செய்திகள் சில:
நவ, 2013-ல் வெளியான ஒரு செய்தி
முதல்வருக்காக விரைவில் வெற்றி விழா: நேரில் சந்தித்த "பெப்சி' நிர்வாகிகள் அறிவிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=843291

//முதல்வருடனான சந்திப்பு குறித்து, அமீர் கூறியதாவது: தொழிலாளர்களின் கோரிக்கைகளை, 15 நிமிடங்களுக்கு மேலாக, முதல்வர் கவனத்துடன் கேட்டார். வெளி மாநிலத்தில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, இங்கு படப்பிடிப்பு தளங்கள் இல்லாத சூழ்நிலை, சென்னையில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, சம்பள உயர்வு ஒப்பந்தம் போடாதது என, எல்லா கோரிக்கைகளையும் கேட்டார். பின், கோரிக்கைகளை படித்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை சந்தித்த முதல்வருக்கு, 23 ஆயிரம் தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சார்பில், நன்றி. சென்னையில், படப்பிடிப்பு நடத்த, அனுமதி கொடுத்திருப்பதாக, முதல்வர் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட, பள்ளிக்கரணை அருகில், முதல்வர், 85 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்தார். அதன்பின் அந்த இடம், சதுப்பு நிலம் என்பது தெரிய வந்தது. இதனால், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.//

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க ரூ. 5 கோடி (யாரிடமிருந்து மீட்க?)
http://dinamani.com/edition_chennai/chennai/2013/04/11/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/article1539543.ece

//சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில சூழலியலை மீட்டெடுக்க 2013-14ஆம் ஆண்டில் ரூ. 5 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
112 பறவை இனங்கள், 21 ஊர்வன இனங்கள், 9 நீர்நில வாழ் இனங்கள், 46 வகை மீன்கள், 7 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆகியவற்றுக்கு சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வாழ்விடமாக உள்ளது.
2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியலை மீட்டெடுத்துப் பாதுகாக்க ரூ. 15.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2012-13-ம் ஆண்டில் உறைவிட மேம்பாடு, பாதுகாப்பு, ஆராய்ச்சி, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு ரூ. 5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.//

5 கோடி ரூபாய்க்கு என்ன பண்ணினாங்கன்னு கேட்காதீங்க! என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னும் கேட்காதீங்க! இனிமே என்ன பண்ணுவாங்கன்னும் கேட்காதீங்க.

பாதுகாப்பு, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு-க்கு செலவு பணிணியிருக்கிறதா சொல்லியிருக்காங்க(உறைவிட மேம்பாடு, ஆராய்ச்சி - அப்படி எதுவும் நடக்குதா என்ன?). பழைய அறிவிப்புப் பலகைகளுக்குக் கொஞ்சதூரம் தள்ளி , சில புது அறிவிப்புப் பலகைகளை வைச்சிருக்காங்க.

(இந்த அறிவிப்புப் பலகையெல்லாம் வைக்கிறதுக்குப் பல லட்சம் அல்லது சில கோடிகள் ஆகும் பாருங்க!!)

விழிப்புணர்வுன்னு சொல்றாங்களே, அது யாருக்குத் தேவை? அங்கே குப்பை கொட்டுகிற அரசாங்கத்திற்கா, மாநகராட்சிக்கா? இல்லை சும்மா அந்த வழியா போகிற பொதுமக்களுக்கா?டிச, 2013 -ல் எடுக்கப்பட்ட கூகிள் மேப் படம்

2007, 2008-களில் நான் கவனித்திருக்கிறேன். அப்போது குப்பை கொட்டப்பட்ட இடங்களிலிருந்து வெகுதூரம் சதுப்புநிலத்திற்குள் குப்பைமேடு(இப்போது) வந்துவிட்டது.

http://www.raguc.com/2012/06/blog-post.html - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பு பற்றி, இந்தப் பதிவில் ரகு விரிவாக விளக்கியிருக்கிறார். மேலும் சில செய்திகளுக்கான சுட்டிகளும் இடுகையில் இடம்பெற்றுள்ளன.

இன்னும் சில ஆண்டுகளில், இந்த ஆக்கிரமிப்புகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, அரசே இந்தப் பகுதி நிலத்தை, வீட்டுமனைகளாக மாற்றி விற்றாலும் விற்கும்!!!

Monday, November 4, 2013

இப்படியாக, 'சரணாகதி'யடைந்தார் 'உலக நாயகன்' என்று அழைக்கப்படும் கமலஹாசன்

ஆமாம். 'ஜெயா டிவி'-யில் 02 நவ 2013 அன்று கமல் தோன்றி 'நடித்த' சிறப்புப் பட்டிமன்றத்தை (முன்)பின்வைத்து எழுதப்படுவதுதான் இந்த இடுகை.


இப்படியாக சரணாகதியடைந்தார் 'உலக நாயகன்' என்று அழைக்கப்படும் 'கமலஹாசன்'.

''தலைவா படம் திரையிடப்பட்டால் திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மர்மக் கடிதம் மூலம் அச்சுறுத்தல்'' என்று கூறி, அந்தப் படத்தையே திரையிடாமல் செய்ததன் பின்னாலுள்ள அரசியல் பற்றி அறிந்தவர்களுக்கு, இந்த 'ஜெயா டிவி' நிகழ்ச்சியைப் பார்த்த அல்லது கேள்விப்பட்ட உடனேயே இது மனதில் தோன்றியிருக்க வேண்டும்.

ஆனாலும், இன்னமும் கமலைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் எழுத்துகளை இணையத்தில் காணும்போது......சில அடிப்படை விசயங்களை அவர்கள் கணக்கில் கொள்வதே இல்லை எனத் தோன்றுகிறது.

1. கமல் தற்போதைய போட்டி நிறைந்த சினிமா உலகில் ஒரு சிறந்த வியாபாரி
2. பெரிய அளவில் வியாபாரம் செய்வதற்காக அன்றி, புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமா வளர்ச்சிக்காகவோ கலை தாகத்திற்காகவோ அவர் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.
3. தனது வியாபாரத்திற்கு தடையாக யாராவது வருவார்கள் என்று தெரிந்தால் அவர்களுடன் எந்நேரமும் சமரசம் செய்யத் தயாராக இருப்பவர்.

விஸ்வரூபம் - 1 ல் ஏற்பட்ட பிரச்சினை அடுத்து வரவிருக்கும் இரண்டாம் பாகத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இப்போதே 'துண்டு போட்டு' வைக்கிறார் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி, அம்மா, டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களிடம். அதற்கான முன்னோட்டம்தான் தீபாவளியன்று அரங்கேறிய பட்டிமன்றம். 

இந்த விசயத்தில் கமல் தன் சுயமரியாதையை அடகு வைத்திருக்கிறாரா இல்லையா? 'இல்லை' என்கிறார்கள் இப்போதும் கமல் ரசிகர்களாக இருப்பவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் 'அம்மா காலில் விழுவது' மட்டும்தான் அடகுவைக்கிற வகையில் வருமோ என்னவோ! 'தலைவா' பட விவகாரத்தில், விசயம் வீதிக்கு வந்த பிறகு 'கொடநாடு' தேடி ஓடியவர் நடிகர் விஜய். 'விஸ்வரூபம்-2' விசயத்தில் படம் வெளிவரும் முன்பே 'போயஸ் கார்டன்' தேடி ஓடியிருக்கிறார் நடிகர் கமல். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?!

கமலை, 'கலைஞன்', 'உலக நாயகன்' என்றெல்லாம் அழைப்பதுபோல், 'வியாபாரி' என்றும் அழைப்பது பற்றி யோசித்தால் நல்லது!

***********

கமலின் 'ஜெயா டிவி' பட்டிமன்றம் குறித்து பலரால் எழுதப்பட்ட ட்வீட்டுகளிலிருந்து சில:

https://twitter.com/thoatta/status/396510227622678528
//மதசார்பற்ற மாநிலம் போவேன், நாடு போவேன்னு சொன்ன கமல் சார் கடைசில என்னவோ ஜெயா டிவி ஸ்டூடியோ தான் போயிருக்காரு//

https://twitter.com/senthilcp/status/396524923549523968
//சார், உங்க தமிழ் ஆசான் யார்? கமல் -= தி முக ஆட்சி நடந்தா கலைஞர் , அதிமுக ஆட்சி நடந்தா கண்ணதாசன்//

https://twitter.com/thirumarant/status/396508289674272768
//என்னை பற்றி பேச நானே எப்படி நடுவராவதுன்னு யோசிச்சேன்,(அப்பறம் அம்மா நினைவுக்கு வந்தாங்க ஒத்துக்கிட்டேன்) - கமல்//

https://twitter.com/senthilcp/status/396307140383502337
//நிருபர் - டி வி ல நடுவரா நீங்க? ஏன்? !! கமல் - நம்ம படம் பிரச்சனை இல்லாம ரிலீஸ் ஆகனும்னா எதுவும் தப்பில்லை # ஜெயா டி வி//

Friday, July 26, 2013

ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி?

கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது ஓரளவிற்கு பிரபலமடைந்து வந்தாலும், இன்னமும், ஆண்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்தும் நண்பர்கள் சிலர் இதில் தடுமாற்றத்தோடு இருப்பதைக் காணமுடிகிறது. பலருக்கு எப்படி 'ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் (இணைய இணைப்பு இல்லாமலேயே) தட்டச்சுவது?' என்பது தெரியாமலே இருக்கின்றது!

இதை விளக்குவதற்காகத்தான் இந்த இடுகை. முடிந்தவரையில் எளிமையாக, படிப்படியாக விளக்க முயன்றிருக்கிறேன். இந்த வழிமுறைகளை உங்கள் கைப்பேசிகளில் பயன்படுத்த ஆண்ட்ராய்டு 4.X.X பதிப்பு இருக்க வேண்டும். இதற்கும் முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்பு எனில்,  தமிழ் மொழியை காட்டுவதற்கான வசதியை அந்த கைப்பேசி தயாரிப்பாளரே ஆண்ட்ராய்டில் நிறுவியிருக்க வேண்டும் அல்லது ரூட்(Root) என்கிற முறையில் சில சித்து வேலைகளை நாமே செய்ய வேண்டும் (இதுபற்றிய தொழில்நுட்ப அறிவு எனக்கு இல்லை, எனவே ஆண்ட்ராய்டு 4.X.X க்கு முந்தைய பதிப்புகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி? என்பது  இந்த இடுகையில் விளக்கப்படவில்லை).


ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி?

1) ''கூகிள் ப்ளே'' சென்று "Tamilvisai" தரவிறக்கம் செய்து நிறுவவும்.

2) ''செட்டிங்க்ஸ்''-> ல் ''லேங்குவேச் அண்ட் இன்புட்'' செல்லவும் (Settings->Language and input)

3) ''தமிழ்விசை''(TamilVisai)-ஐ தேர்வு செய்யவும்

 4) தட்டச்சு(Type) செய்ய வேண்டிய இடத்திற்கு/பக்கத்திற்குச் செல்லவும் - புதிய குறுஞ்செய்தி(SMS) அல்லது மின்னஞ்சல்(E-Mail) தட்டச்சும் பக்கம் அல்லது இணைய உலவி(Browser)யின் பக்கம்.

5) ''நோட்டிஃபிகேசன்''(Notification Bar) பாரை கீழிறக்கி, ''சூசு இன்புட் மெத்தட்(Choose Input Method)'' ஐ கிளிக் செய்யவும்.

 6) ''தமிழ்விசை'' (TamilVisai) ஐ தேர்வு செய்யவும்

7) கீபோர்டில் தெரியும் ''த'' என்கிற நீல நிற விசையை அழுத்தவும்

8) தேவையான ''தட்டச்சு முறை''யைத் தேர்வு செய்யவும்
 குறிப்பு: 'ங்' விற்கு பதில் 'ஞ' என தவறாக மூன்றாவது வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 9) இப்போது தமிழில் விசைகளை அழுத்தி தட்டச்சவும். உங்களுக்குப் பிடித்த தட்டச்சு முறையில் தமிழில் எழுதலாம். கீழே இருக்கும் படத்தில் நீங்கள் பார்ப்பது ''தமிழ் 99'' முறையிலான விசைகள்.

இப்போது எங்கும் தமிழ்..


 


ஆண்ட்ராய்டில் தமிழில் தட்டச்சுவது பற்றி கூகிளிடம் கேட்டால், 
இந்தப் பதில் கிடைத்தது. இதையும் படிக்கவும்.
http://www.bloggernanban.com/2013/01/read-write-in-tamil-on-android.html