Sunday, January 19, 2014

செல்லமுத்து குப்புசாமி சொன்ன கதை - இரவல் காதலி (நாவல்)

இதன்ஆசிரியர், ஐ.டி. துறையில் பணிபுரிபவர் என்கிற அறிமுகத்தின் காரணமாக, இந்த ஆண்டு படித்த இரண்டாவது நாவல் இது. (முதலாவது 'இராஜீவ்காந்தி சாலை')

இரவல் காதலி:
      தலைப்பே (ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் கூட) கதையை உள்ளடக்கியிருக்கிறது.  மேலும் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியாகிவிட்டதால், கதையைப் பற்றி இங்கு விரிவாக விவாதிக்கப்போவதில்லை.

நாவலுக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளத்தையும் கதையையும் அதற்கான எல்லையையும் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, நாவல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது - மிகச் சில இடங்களில் ஃபிளாஷ் பேக்கும் உண்டு. கதையினூடாகவே, ஐ.டி.துறையின் சில குறிப்பிட்ட விசயங்கள் பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர். வேலைக்கு ஆள் எடுப்பது, புதிய ப்ராஜெக்ட்டுகள் பிடிப்பது  போன்றவை.  மற்றபடி, இது ஐ.டி.துறைக்குள்ளேயே நடக்கும் சம்பவங்களை அதிகம் உள்ளடக்கிய நாவல் இல்லை.

நாவலின் மையப்பாத்திரம் கதையை விவரிப்பதாக உள்ளது. மையப்பாத்திரம் பெண்களின் விருப்பு வெருப்புகளை அதிகம் தெரிந்து புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதாகவும், இந்த குறிப்பான விசயத்தில் மிக மோசமான நிலையில் இருந்து நாளடைவில் மிகத் தேர்ச்சியடைவதாயும் காட்டப்பட்டுள்ளது. பெண்கள் இதைத்தான் விரும்புவார்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே கதையின் நடுவில் வருகிறது. கதையின் பெரும்பகுதி, மையக்கதாப்பாத்திரத்திற்கும் அலுவலக வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்த போது அறிமுகமான இன்னொரு பெண்ணுக்குமானவை - இவர் ஐ.டி.துறையில் பணிபுரிபவர் இல்லை. இவர்களுக்கிடையே நடக்கும் அறிமுகம், அதன் தொடர்ச்சியாக நடக்கும் காதல் உரையாடல்கள் என்பவை தற்கால அறிவியல் வளர்ச்சியின் சாதனங்களான கைப்பேசி, கணிணி என்பவற்றைக்கொண்டு நடக்கின்றன.

முப்பதுகளில் இருக்கும் மையப்பாத்திரம், தனக்குச் சொந்தமாக கார், வீடு, உயர்தர - செலவு அதிகம் செய்யப்படும் இடங்கள் மீதான ஈர்ப்பு, டி.நகரின் நெருக்கடி குறித்தான அதீத வெறுப்பு, என, ஒரு மேல் நடுத்தர வர்க்கத்திற்கான அத்தனை குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசியல் பேசப்படவில்லை. தனி மனிதனுடைய திறமைக்கும், அதீத திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதிலும் இதே மேல் நடுத்தர வர்க்கத்திற்கான மனநிலை அப்பட்டமாகத் தென்படுகிறது.


பரவலாக ஐ.டி. துறையினர் பற்றிப் பேசப்படும் விமர்சனங்களுக்கான தீர்வு இந்நாவலிலும் (ராஜீவ்காந்தி சாலை-யிலும்) மெஸேஜாகச் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழியுங்கள். அவர்களது ஆசைகளை நிறைவேற்றுங்கள். நல்ல சுவாரசியத்துடன் விரிகின்ற கதை, ஓரே மூச்சில் படித்துவிடலாம்.

வாழ்த்துகள் 'செல்லமுத்து குப்புசாமி'.

No comments :