Sunday, January 12, 2014

விநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல்)

தனது துறை(ஐ.டி.) சார்ந்து, இப்படியான ஒரு நாவல் முயற்சிக்கும் அதற்கான உழைப்புக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 'விநாயக முருகனு'க்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பலரும் பலவித கோணத்தில் அணுகும் புதிய(?!) துறையைப் (ஐ.டி.) பற்றிய கதை, என்று சொல்வதை விட, 'ராஜீவ்காந்திசாலை'யின் கதை என்றே சொல்ல வேண்டும். நாவலில், ஐ.டி. பற்றி பேசியதைவிட இந்தச் சாலையைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது(பெயருக்குப் பொருத்தம்தான்). ஆனால், 'பழைய மகாபலிபுரம் சாலை' என்றே பெயரிட்டிருக்கலாம். ஏனென்றால், இப்போது இந்தச் சாலையில் காணக் கிடைக்கும் மாற்றங்களில் பெரும்பாலானவை (ராஜீவ்காந்தி சாலை) பெயர்மாற்றத்திற்கு முன்பே நடந்தவைதானே!

ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் அலுவலக மற்றும் சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் நாவலின் மைய இழையாக இருக்கிறது. இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெறாதவர்கள், தற்கொலை செய்துகொண்ட செய்திகள் கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. அந்தச் செய்திகளை அடித்தளமாகக் கொண்டு நாவல் ஆரம்பிக்கிறது; அடித்தட்டு, நடுத்தட்டு, மேல்தட்டு மக்கள் என வெவ்வேறு வர்க்கப் பின்னணி கொண்டவர்கள் பாத்திரங்களாகக் கையாளப்பட்டிருக்கிறார்கள். சுமார் 25 வருடங்களுக்கு முன்பிருந்த இப்பகுதியின் வாழ்க்கை நிலையும்(குறிப்பாக நாவலூர், செம்மாஞ்சேரி) இப்போதிருக்கும் நிலைமையும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்தேறியுள்ள பொருளாதார, சமூக மாற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அந்த மாற்றத்தினூடாக அப்பகுதி மனிதர்களின் வாழ்வும் சொல்லப்பட்டுள்ளது.

வெவ்வேறு வர்க்கப் பின்னணி கொண்ட மனிதர்களின் கதைகள், இந்த 'ராஜீவ்காந்தி சாலை' என்கிற இழையினால் ஒன்றோடொன்று பின்னிக்கிடப்பதை காலத்தில் முன்னும் பின்னும் நகர்ந்து, விவரிக்கிறார் விநாயக முருகன். பெரும்பாலான வர்ணனைகள் இந்தச் சாலை இருக்கும் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அதில் இயங்கும் மனிதர்களின் பொருளாதார நிலைகள் பற்றியும் இருக்கின்றன. அதற்கு அடுத்தபடி ஐ.டி. துறையினரின் வேலைமுறைகள் பற்றியும், பணம் கொழிக்கும் வாழ்க்கையும், அதன் தொடர்ச்சியான அதனையொட்டிய காமமும் இருக்கின்றன. கொஞ்சம் காதலும், அரசியலும், சாதியும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் இருக்கின்றன. மேற்கூறிய விசயங்கள் அத்தனையையும் தொட்டுவிட்டுச் செல்கின்றது நாவல்.

குறிப்பாக ஐ.டி.துறையில் உயர்மட்டங்களில் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகள், அதனால் பாதிக்கப்படும் இளைஞர்கள், அதற்காக எந்தக் குரலும் எழுப்ப முடியாத சூழல் - இவை விவாதத்திற்குரியவை. இந்தத் துறையில்தான் அதிக சம்பளம் தரப்படுகிறது என்கிற ஒற்றைக் காரணத்தைக் காட்டி, ஐ.டி. ஊழியர்கள் மேல்மட்ட அதிகாரிகளால் சுரண்டப்படும், தூக்கியெறிப்படும் விதத்தினை விளக்குகிறது நாவல். இந்தப் பிரச்சினையைப் பேசிய முதல் நாவல் இதுவாகத்தான் இருக்க முடியும். அதற்காகவே இந்த நாவலுக்கு ஒரு 'சபாஷ்'!

ஐ.டி. பின்னணி கொண்ட எழுத்தாளர் என்பதனாலேயே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் நடக்கும் பணிகளைப் பற்றியும் வேலை முறைகள் பற்றியும் தில்லுமுல்லுகள் பற்றியும் கூட ஒரளவிற்குத் துல்லியமாக எழுத முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். பரவலாக புழக்கத்தில் இருக்கும், ஐ.டி. துறையினருடைய காமம்-காதல் பற்றிய கதைகளை வழிமொழியும் விதத்திலேயே இருக்கின்றது நாவல். அதே நேரத்தில் சாதாரண மக்களிடையே அதே மாதிரிக் கதைகளை வேறு விதங்களில் நாம் பார்க்க முடியும் என்பதையும் பதிவு செய்திருக்கிறது.

பல்வேறு பிரச்சினைகளைத் தொட்டுவிட்டதாலேயோ என்னவோ, நாவல் ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒரு அதீத தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக, பல்வேறு புள்ளிகளை இணைத்து வரைந்த,  தனது வடிவத்தில் தெளிவில்லாத அதேநேரம் வண்ணம் தீட்டப்படாத ஒரு கோலமாக நாவல் எனக்குத் தோற்றமளிக்கிறது.

No comments :