சில வருடங்களுக்கு முன்பு மே மாதத்தில் ஒருநாள். அன்று காலைதான் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. இப்போது உள்ளது போல் இன்டர்நெட் பிரபலமடையாத காலம். கைபேசிகளோ அப்போதுதான் அறிமுகமாகியிருந்தன. தேர்வு முடிவுகள் முதல்முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டப்பட்டிருந்தன. அது நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் இருக்கும் பள்ளிக்கூடம் என்பதால், தேர்வு முடிவுகள் பள்ளிக்கு வந்து சேர்ந்து, அதை பள்ளியில் ஒட்ட எப்படியும் இரவு 7 மணியாகிவிடும். இவனுடன் படித்த பெரும்பாலான மாணவர்கள் பக்கத்து ஊருக்கு பஸ் ஏறிச்சென்றோ தங்கள் உறவினர்களுக்கு போன் செய்து கேட்டோ தங்கள் மதிப்பெண்களைப் பார்த்துவிட்டனர்.
மாத்ஸ் கிளாஸில் சந்தியா, ஹக்கீம் என எப்பவுமே முதல் மதிப்பெண்ணுக்கு போட்டிபோடும் அத்தனை பேரும் ரிஸல்ட் பார்த்துவிட்டார்கள். ராமு, சுபா - வெல்லாம் பக்கத்து ஊருக்குச் சென்று இன்டர்நெட்டில் ரிசல்ட் பார்த்துவிட்டார்கள். ஏன் ரஞ்சித் கூட பக்கத்து ஊருக்கு சென்று 'ப்ரௌவ்ஸிங்' செய்து ரிசல்ட் பார்த்துவிட்டானாம். இவனுடைய நெருங்கிய நண்பன் கோபால்தான் எல்லா விசயத்தையும் சொன்னான். மத்தியானம் 2 மணி இருக்கும், ''உன் நம்பருக்கும் ரிஸல்ட் பார்த்துடுவோமா?'' என்று கோபால் கேட்டதற்கு, இவன் வேண்டாமென்று மறுத்துவிட்டான். காரணம் 'ரிஸல்ட்' பார்க்க 10 ரூபாயாம். இவனிடம் இருந்ததோ மொத்தமாய் 25 ரூபாய். சித்தி ஊருக்கு 'திருவிழாவிற்கு செல்ல' கார் செலவுக்காக அம்மா கொடுத்தகாசு. இன்னொன்று 'எப்படியும் சாயங்காலம் பள்ளிக்கூடத்தில் ரிஸல்ட் ஒட்டிவிடுவார்கள், அப்போது பார்த்துக் கொள்ளலாம். வர்ற மார்க்குதானே வரும்' என்ற எண்ணம். முதல் இடைத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு, ஏன் - மூன்றாம் திருப்புதல் தேர்வில் கூட 1000த்தைத் தொடவில்லையே! மிஞ்சி மிஞ்சி போனா 1020 வரும் என்று மனசிற்குள் நினைத்துக்கொண்டே, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கோபாலுடன் சேர்ந்து சாயங்காலம் 5 மணிக்கு பள்ளிக்கூடம் சென்றான்.
சந்தியா அங்கு ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள் - அவள் அழகுமுகம் முழுக்க புன்னகையோடு. இதுவரை பார்த்த ரிஸல்ட்-டில் அவள்தான் அதிக மார்க்காம், சந்தோஷமாய்ச் சொன்னாள். (சந்தோசமாய் இருக்கும்போது எப்படித்தான் இந்த பெண்களுக்கு மாத்திரம் அழகு கூடிவிடுகிறதோ!) 10-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த ப்ரியாவை பள்ளிக்கூடத்தில் எங்கேயும் காணவில்லை. எல்லா வாத்தியார்களும் அவள்தான் +2விலும் முதலிடம் வருவாள் என்று உறுதியாய் நம்பி இருந்தார்கள். ஆனால் அவளோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாதிரி பலபேரின் கணக்குகளைப் பொய்யாக்கிவிட்டாள். ப்ரியாவுக்கு போட்டியாக அதிக மார்க் வாங்கும் ஹக்கீம் கூட மார்க் குறைந்துவிட்டானாம்.
கிட்டத்தட்ட முதல் மூன்று மதிப்பெண்கள் முடிவாகிவிட்டன. சுமார் ஒருமணிநேரம் காத்திருந்து, அப்போதும் ரிஸல்ட் பள்ளிக்கூடத்திற்கு இன்னும் வராததால் பலபேர் வீடு சென்றுவிட்டார்கள். ஜாண் சார் தன்னுடைய அந்த பழைய டிவிஎஸ் வண்டியில் கையில் ரிசல்ட் பேப்பர்களோடு வந்து இறங்கினார். அதை ஸ்டாண்ட் போட்டு நிறுத்த 10 பையன்கள் ஒடி வந்தார்கள் - மற்றவர்கள் அவரைச்சுற்றிக் கொண்டார்கள். இவனும் மெதுவாய் நகர்ந்து முன்னால் செல்ல, போர்டில் மதிப்பெண் தாள்களை ஒட்டச் சென்றவர் இவனைப் பார்த்ததும் கையை நீட்டி வாழ்த்துச் சொன்னார். 'இவன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண்ணாம்!'. இவனாலேயே நம்ப முடியவில்லை. அருகில் நின்ற அத்தனை சக மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தும், ஒருசிலர் வாழ்த்து சொல்லியும் செல்ல, இவனுக்கு ஏதோ கனவு காண்பது போல இருந்தது.
மறுநாள் உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் இருந்து பேட்டி. 'நான் இத்தனை மார்க்கு வாங்கினதுக்கு அப்பா அம்மா சப்போர்ட்டுதான் காரணம். என் டீச்சர்ஸ் எல்லாருக்கும் தாங்க்ஸ். அவங்க இல்லைன்னா நான் இத்தனை மார்க்கு வாங்கியிருக்க முடியாது. ஸ்பெஷலா அம்மாவுக்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும். எனக்கு ராத்திரியில காஃபி போட்டு குடுத்து ஒழுங்கா தூங்காம ரொம்ப கஷ்டப் பட்டாங்க.....'. 'அப்புறம், நான் BE படிக்கப் போறேன் - அதுல 'எலக்டரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்' குரூப்ல சேரப்போறேன் - பெரிய சயின்டிஸ்ட் ஆகப் போறேன்' என்று நான்காவது டேக்கில் சரியாய்ச் சொன்னான் (அப்போ எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ்தான் ஃபேமஸ் - பக்கத்து வீட்டு சங்கர் அண்ணன்கூட இதையேதான் சொன்னார், ஆனால் இவனுக்கு அப்படின்னா என்னான்னு கூட தெரியாது).
அவன் இன்றைக்கு ஒருமூலையில் இருந்து பொட்டி தட்டிக்கொண்டு, இந்த இடுகையை எழுதிவிட்டு உங்களை வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.
இவனுக்கு இது சம்பந்தமாக ஒரு ஆசை/கேள்வி உண்டு.
''இந்த மாதிரி முதலிடம் எடுத்துவிட்டு, 'அதுவாகப்போறேன், இதுவாகப்போறேன்'' என்று பேட்டிகொடுத்த அத்தனைபேரும் இன்று என்ன செய்து கொண்டிருப்பார்கள்?''
8 comments:
என் தம்பி கூட பத்தாவது முதல் மதிப்பெண்!
டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் கோல்டு மெடலிஸ்ட்.
ஆனா இப்போ டி புரொமோட் ஆகி வேலை போகாம இருக்க கடுமையா உழைக்கிறான்!
படிப்பு என்பது மேலே போடும் உடை மாதிரி ஆகிறீச்சு தலைவா! பெருசா அது உதவுறதில்ல!
அடியேனும் பொட்டித்தான் தட்டிக்கிட்டு இருக்கேன்.. :))
//அவன் இன்றைக்கு ஒருமூலையில் இருந்து பொட்டி தட்டிக்கொண்டு, இந்த இடுகையை எழுதிவிட்டு உங்களை வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். //
!!!
என்னக்கும் இந்த சந்தேஹ்ம் ரொம்ப நாள இருக்கு. I doubt the education system doesn't reflect your knowledge or success. Its just like a T20 match. You win on that day.
வால்பையன் said...
//படிப்பு என்பது மேலே போடும் உடை மாதிரி ஆகிறீச்சு தலைவா! பெருசா அது உதவுறதில்ல!//
:(
ஜியா.
நீங்களும் நம்ம கட்சியா? வாங்க வாங்க..
சரவணகுமரன், Sowri,
தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.
//''இந்த மாதிரி முதலிடம் எடுத்துவிட்டு, 'அதுவாகப்போறேன், இதுவாகப்போறேன்'' என்று பேட்டிகொடுத்த அத்தனைபேரும் இன்று என்ன செய்து கொண்டிருப்பார்கள்?'' //
எனக்கும் ரொம்ப நாட்களாக இந்த சந்தேகம் உண்டு.. இது மட்டுமல்ல இன்னும் பல சந்தேகங்கள்
பின்னூட்டத்திற்கு நன்றி கிரி...
இந்த மாதிரி யாரையாச்சும் பார்த்தீங்கன்னா அந்த அனுபவத்தைப் பகிர்ந்துக்கங்க...
Post a Comment