Friday, June 26, 2009

'நேரம் இப்போது' மடாக்குடிகாரர்களின் மத்தியில் ஒரு ரிப்போர்ட்

சென்னையில் ஒருசில 'மடாக்குடிகாரர்களால்' முற்றுகையிடப்பட்டுள்ள 'வேளச்சேரியில்' இருக்கும் ஒரு 'டாஸ்மாக்' பாரிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்.....(பின்னணியில் அதிரடியாய் ஒரு குத்துப்பாட்டைக் கற்பனை செய்துகொள்ளவும்)

செய்தியாளர் வாசிக்கிறார்: 'நேரம் இப்போது' தான் சென்னையில் மடாக்குடிகாரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள ஒரு டாஸ்மாக்கினுள் நுழைந்த முதல் தொல்லைக்காட்சி சேனல். (கேமரா, இருளடித்த பகுதிகளில் சுற்றி சுற்றி ஒரு ரவுண்டு, சுவர் ஒரம் தனியாய் பஞ்சாயத்து நடத்தும் குடிமகர்களின் மீது ஒரு ரவுண்டு என வந்துவிட்டு, அனாதையாய்க் கிடக்கும் சில பாட்டில்களின் மீது மேயத்தொடங்குகிறது). நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பதுதான் கடந்த நான்கைந்து நாட்களாக நடந்துவரும் 'மடாக்குடிகாரர்களின்' போலி டாஸ்மாக் மதுக்கள் மீதான எதிர்ப்பு மையம் கொண்டிருந்த இடம்.

பாரில் நிருபர் கையில் மைக்குடன்:
(கையில் காலி (ஃபுல்)பாட்டிலுடன் நிற்கும் நான்கைந்து நபர்களை பின்னணியில் காட்டி) இதுதான் போலீசாருக்கு மிக சவாலான இடம், இவர்களைத் தாண்டி போலீசார் செல்வது அவ்வளவு சுலபமாக இருக்காது! ஏனென்றால் இவர்களிடம் கோலி சோடா இருப்பதாகவும் அதை அவர்கள் எந்நேரமும் போலீசார் மீது விட்டெறியலாமென்றும் 'நேரம் இப்போது'வின் மற்றொரு செய்தியாளர் 'பாண்டிச்சேரியில்' இருந்து தகவல் அனுப்பியுள்ளார் (கேமரா சுற்ற சுற்ற நிருபரும் சுற்றுகிறார், பின்னணியில் சில போலீசாரின் உருவங்கள் தெரிகின்றன). இந்த இடத்தைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவது போலீசாருக்கு மிகவும் கடினமான விசயமாக இருக்கும். என்ன நடக்கிறது என்பதை நாமும் தெரிந்துகொள்வோம். 'மடாக்குடிகாரர்களை' சமாளிக்க இந்த போலீஸ் படை போதாது, எனவே 'எஸ்பிளனேடில்' இருந்து இரண்டோ மூன்றோ போலீஸ் படை வந்துகொண்டிருக்கிறது.

மற்றொரு நிருபர் கையில் வேறொரு மைக்குடன்:
முற்றுகையிடப்பட்டுள்ள டாஸ்மாக்கை விடுவிக்கும் நோக்கில் நடக்கும் இந்த ஆப்பரேஷன் ஆரம்பித்து நான்கைந்து நாட்களில் இன்றுதான் போலீசார் இந்த தூரத்திற்கே வந்துள்ளார்கள் (பாரின் இரண்டாவது வரிசை பெஞ்சைக் காட்டி). ஏனென்றால் வழியெங்கும் காலி பாட்டில்களை உடைத்துப் போட்டிருந்தார்கள் ஒருசில 'சலம்பல்' பார்ட்டிகள். நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, சற்று தூரத்தில் குடிகாரர்களின் ஒரு கூட்டத்தார் காலி பாட்டில்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளார்கள் எனவும் அங்கிருந்துதான் போலீசார் மீது தாக்குதலும் நடத்திவருகிறார்கள் எனவும் தெரிகிறது. அவர்கள் எங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதையும் எப்படித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்க போலீஸார் மிகவும் போராடிவருகிறார்கள்.

மறுபடியும்
செய்தியாளர் வாசிக்கிறார்:
நீங்கள் பார்த்தது, நமது நிருபர்கள் 'சொட்டாச்சார்யா' மற்றும் 'ஜம்மித்து' அளித்த செய்தித் தொகுப்பு. அவர்கள் போலீசாருடன் மடாக்குடிகாரர்களின் பிடியிலுள்ள வேளச்சேரி' பாரின் மையப்பபகுதிக்கு முதன்முதலாகச் சென்று, செய்திகளை நமக்கு நேரடியாகத் தந்துகொண்டிருக்கிறார்கள். போலீஸார் ஒரு பகுதிக்குமேல் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

'எதை வைத்து இப்படி எழுதுகிறேன்' என நினைப்பவர்கள் இங்கே கிளிக்குங்கள்.
(வருங்காலத்தில் நியூஸ் ரிப்போர்ட்டிங் இப்படியும் இருக்கலாம் என்ற ஒரு கற்பனையில் மேற்குறிப்பிட்ட வீடியோவின் தாக்கத்தில் எழுதப்பட்டது.)

3 comments :

வால்பையன் said...

அது மடாக்குடி அல்ல, ”மொடக்குடி”

வால்பையன் said...

வீடியோ ரொம்ப தான் தாக்கியிருக்கு!

ஊர்சுற்றி said...

அப்புடியா!

எங்க ஊர்பக்கமெல்லாம் 'மடா' ன்னுதானே சொல்றாங்க!