Sunday, October 4, 2009

நானும் காமன் பிளாக்கர் - என்னையும் ஆட்டையில சேர்த்துக்கங்க

நானும் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்துட்டேனுங்க!

ட்விட்டரில் 'அச்சம்தவிர்' லோகு சொன்ன இந்த வார்த்தைக்காக இந்த இடுகை. :)

'காமன் மேன்' என்று தன்னை அடையாளப்படுத்தும் அந்த கதாப்பாத்திரம் 2 கிலோ தக்காளி வாங்குகிறார். அப்படியென்றால் வீட்டில் 'குளிர்பதனப் பெட்டி' (ரெஃப்ரிஜ்ரிரேட்டர்) இருக்கிறது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு 7 மணிக்குள் வந்துவிடுவதாக சொல்கிறார் [நிச்சயமாக மென்பொருள் துறையில் வேலையில்லை :) ] சரி, ஒரு நடுத்தரக் குடும்பம்.

தகவல் தொடர்புக்காக அவர் பயன்படுத்தும் கருவிகளின் மதிப்பு - கூட்டி கழித்துப் பார்த்தால் சில லகரங்களைத் தொடும். அப்புறம் 5 கிலோ வெடிமருந்து - அதன் மார்க்கெட் விலையென்ன?. கடைசியில் ஒரு ஜீப் வெடிக்கப்படுகிறது. அது யாரோடது? சரி, இதெல்லாம் அவரோட செலவில் வாங்கியது என்றாலும், வீட்டில மனைவிக்குத் தெரியாமல் இதெல்லாம் எப்படி ஒரு காமன் மேனுக்கு சாத்தியம்? அந்த கதாப்பாத்திரம் எங்கேனும் திருடினாரா? ஆனால் காந்தி பற்றி பேச தனக்கு உரிமை இருப்பது போல காட்டிக்கொள்கிறாரே?

சீட்டுக் குலுக்கிப்போட்டு நாலுபேரையும் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். அப்படியென்றால் இன்னும் சீட்டுக் குலுக்கிப்போடப் போகிறாரா? 4 பேரும் இறந்தது "தப்பிக்க முயன்றதால்" என்றுதான் ஊடகங்கள் மூலமாக தகவல் வெளியாகிறது. இதைப் பார்த்து மற்ற தீவிரவாதிகள் தாக்காமல் விட்டுவிடுவார்களா? கதாப்பாத்திரத்தின் நோக்கம் என்ன - 'தீவிரவாதிகளுக்கு ஒரு அச்சம் இருந்தால் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்' என்பதுதானே! அதன் நோக்கம் படத்தில் எந்த வகையில் நிறைவேறியிருக்கிறது? தீவிரவாதிகளுக்கு இது எவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது? ஒண்ணையும் காணோம்.

அப்புறம் எல்லாம் முடிந்ததும், தனது உபகரணங்களை அழித்துவிடுகிறது கதாப்பாத்திரம். அப்படியன்றால் நான்கு மாதம் கஷ்டப்பட்டு இவர் எதைச் சாதித்தார்? அவரது கருத்தை மக்களுக்கு அல்லது அரசு எந்திரத்திற்கு கொண்டு சேர்த்தாரா? (ஒருசில காக்கிச் சட்டைகளைத் தவிர!).

எல்லாத்தையும் விட்டுடுங்க. படைப்பு, படைப்பாளி, பிரதி இப்படி எல்லாத்தையும் (உன்னைப்போல் ஒருவன் படத்தைக் கூட).

இந்த காமன் மேனுக்கு என்ன வேண்டும்? 'தீவிரவாதிகளுக்கு உடனுக்குடன் தண்டனை தரப்படவேண்டும்'. ஆனால் பெரும்பாலான வலைப்பூக்களில் விவாதிக்கப்பட்டது போல, முஸ்லிம் நண்பர்களுக்கு எதிராக ('மட்டுமே' இதை இந்த இடத்தில் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்) இந்த காமன் மேனின் விருப்பம் திரும்பியிருப்பது - ஏற்றுக்கொள்ளக் கூடியதா? உண்மையிலேயே இதுதான் ஒரு காமன் மேனின் ஆசையாக இருக்கிறது என்றால் 'தீவிரவாதம்' என்ற பதத்திற்கு நாம்(காமன் மேன்) கொண்டுள்ள அடையாளங்கள் என்ன?

மும்பை தாக்குதலின் போது 'தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்' என்ற குரல் ஓங்கி ஒலித்தபோது 'அதன் மூல வேர்களும் ஒழிக்கப்படவேண்டும்' என்றும் சிலர் குரல் கொடுத்தார்கள். அப்போதுதான் எனக்குத் தீவிரவாதத்தின் பல பரிணாமங்கள் விளங்கின. இதை என் சக பணியாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டபோது என்னை ஆமோதித்தவர்கள் ஒருசிலரே! மற்ற அத்தனை பேருக்கும் 'தீவிரவாதி' என்றவுடனே 'தாடி, காஷ்மீர், அல்லா, தானியங்கி துப்பாக்கி' மட்டுமே நினைவிற்கு வந்துவிடுவது ஏன் என்று தெரியவில்லை! இவர்கள் 'காமன் மேன்' என்கிற பதத்திற்குள் வந்துவிடுகிறார்கள் எனில், ஒரு காமன் மேனுக்கு இந்த மாதிரி எண்ணம் இருப்பது, கருத்துப் பரிமாற்றத்தில் நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறதா?

நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)

விளக்கம்:
குணங்குன்றிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

இதுதானே ஒரு காமன் மேனுக்குத் தோண வேண்டும்?

11 comments :

ராஜா | KVR said...

பழைய ஹீரோயிஸ கள்ளை புதிய மொந்தையில் கொடுத்திருக்கிறார்கள், அவ்வளவே

அக்னி பார்வை said...

ஏன் இந்த ரத்த வெறி

பின்னோக்கி said...

என்ன ஒரு ஆராய்ச்சி..ஹாட்ஸ் ஆஃப்

Suresh Kumar said...

என்ன சொல்ல ?

கே.ரவிஷங்கர் said...

காஸ்ட் டு த காமன் மேன் ரொம்ப ஜாஸ்தி உங்க விவரப்படி.10 லட்சம் வருமா? நல்ல அலசல்.

பீர் | Peer said...

காமன் மேன், குப்பனோ சுப்பனோ இல்லை என்கிறார். அப்போ, குப்பனும் சுப்பனும் யார்? நீங்களும் நானும் யார்?

ஆர்டிஎக்ஸ் வைத்திருப்பதால், எல்லா மொள்ளமாறி தனமும் தெரிந்திருப்பதால், காமன் மேனும் தீவிரவாதிதானா?

-இப்படிக்கு, மொள்ளமாரிக்கு சரியாக ஸ்பெல்லிங் கூடத்தெரியாத குப்பனோ சுப்பனோ.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஊர்சுற்றி ஸார்..

தலைப்பு வைக்கும்போது சிம்பல்களை வைக்காதீர்கள்.. தமிழ்மணம் ஏற்றுக் கொள்ளாது.

அதனால்தான் இப்போது உங்களது பதிவின் தலைப்பு தெரியாமல் போய் உள்ளது.

பதிவை எனது தொகுப்பில் இணைத்துவிடுகிறேன்..!

நன்றி..

ஊர்சுற்றி said...

ராஜா,
அக்னி பார்வை,
பின்னோக்கி,
Suresh Kumar,
கே.ரவிஷங்கர் சார்,
பீர்,
உண்மைத் தமிழன் ஐயா,

எல்லோருக்கும் நன்றி. படம் பார்க்கும்போது சிலர் புகழ்ந்த அளவிற்கு எனக்கு எதுவும் தோணவில்லை. மேற்கூறிய கேள்விகள்தான் திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தன.

உண்மைத் தமிழன் ஐயா,
தமிழ்மண விசயம் புரிஞ்சிடுச்சி. நானும் அங்கிட்டு போயி தேடிகிட்டு இருந்தேன்!:( உங்க ஜீப்புல என்னையும் எத்திகிட்டீங்களா. நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நல்லது ஊர்சுற்றி. நீங்கள் வண்டில ஏறீட்டீங்க :)

கலையரசன் said...

//மற்ற அத்தனை பேருக்கும் 'தீவிரவாதி' என்றவுடனே 'தாடி, காஷ்மீர், அல்லா, தானியங்கி துப்பாக்கி' மட்டுமே நினைவிற்கு வந்துவிடுவது ஏன் என்று தெரியவில்லை! //

முற்றிலும் உண்மை! எனக்கு தெரிந்த சில பிளாக்கர்களே அப்படிதான் வெளிபடையா பேசுறாங்க பாஸ்..

ஊர்சுற்றி said...

ச.செந்தில்வேலன்,
வருகைக்கு நன்றி.

@கலையரசன்,
என்னத்த சொல்ல?!!!