Thursday, April 30, 2009

வலைப்பதிவர்கள் பிழையின்றி எழுத! - சந்திப் பிழைகள் ஒரு அறிமுகம்

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாய்ங்க!!!
இல்ல இல்ல...
கிளம்பிட்டேன்யா கிளம்பிட்டேன்!!!
*************

கீழ் உள்ள தொடர்களை வாய்விட்டுப் படியுங்கள்.
பதிவர் கூட்டத்திற்குச் சென்றேன்.
தாமிராவைக் (ஆதிமூலகிருஷ்ணனைக்) கண்டேன்.
பேசிப் பார்த்தேன்.
கலைஞர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
கலைஞர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

இவற்றைப் படிக்கும்பொழுது தொடர்களின் இடையில் 'ச்', 'க்', 'ப்', 'த்' என்னும் எழுத்துகள் அமைந்து இயல்பாக ஒலிப்பதை அறிவீர்கள். இவ்வாறன்றி, 'கூட்டத்திற்கு சென்றேன்', 'தாமிராவை கண்டேன்'. 'பேசி பார்த்தேன்', 'உண்ணாவிரதத்தை தொடங்கினார்' எனப் படிக்கும்போது இயல்பான ஒலியமைப்பு இல்லை என்பதை அறியலாம்.

நிலைமொழிகளோடு 'க, ச, த, ப' வருக்கத்தில் தொடங்கும் வருமொழிகள் அமையும்பொழுது 'க், ச், த், ப்' மிகும் இடங்களை அறிந்து அவை என்னென்ன இடங்கள் எனக் கூறியுள்ளார்கள் நம் இலக்கணத்தில். அவ்வாறு அறியாது பயன்படுத்தினால் பொருள் வேறுபாடு ஏற்படும்.

எ-டு 1: 'நாடி துடிக்கிறது' என்னும்பொழுது 'ஒருவனது கை நாடி துடிக்கிறது' என்று பொருள்.
'நாடித் துடிக்கிறது' என்னும்பொழுது 'ஒருவரை நாடித்(விரும்பி) துடிக்கிறது' என்று பொருள்படும்.

எ-டு 2: 'இது ஒரு தந்தப்பெட்டி'
'நண்பர் எனக்குத் தந்த பெட்டி'
'தந்தப் பெட்டி' என்னும்பொழுது 'தந்தத்தால் ஆனப்பெட்டி' எனவும்,
'தந்த பெட்டி' என்னும்பொழுது 'கொடுத்த பெட்டி' எனவும் பொருள்படுகிறது.
எனவே வல்லினம் மிகும் இடம், மிகா இடம் அறிதல் வேண்டும்.

கீழே வல்லினம் மிகும் இடங்கள் சிலவும் வல்லினம் மிகா இடங்கள் சிலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் சந்திப் பிழைகளைத் தவிர்க்கலாம்.


வலிமிகும் இடஙகள்:
1. அப்படி, இப்படி என்னும் சொற்களின் பின் வலிமிகும்.
அப்படி + கூறினான் = அப்படிக் கூறினான்.
இப்படி + சொன்னார் = இப்படிச் சொன்னார்.

2. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்.
நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்.

3. அங்கு, இங்கு என்னும் சுட்டுத் திரிபுப் பெயர்களின் பின் வலிமிகும்.
அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன்.
இங்கு + பார்த்தேன் = இங்குப் பார்த்தேன்.

4. இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்வரும் வலி மிகும்.
பையை + கொடு = பையைக் கொடு.

5. நான்காம் வேற்றுமை உருபிற்கும் பின்வரும் வலிமிகும்.
சென்னைக்கு + சென்றான் = சென்னைக்குச் சென்றான்.

6. ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலிமிகும்.
தை + திங்கள் = தைத் திங்கள்
தீ + பற்றியது = தீப் பற்றியது

வலிமிகா இடங்கள்:

1. எழுவாய்த் தொடரில் வலிமிகாது.
குரங்கு + கடித்தது = குரங்கு கடித்தது.

2. வினைத் தொகையில் வலிமிகாது.
விளை + பயிர் = விளைபயிர்

3. உம்மைத் தொகையில் வலிமிகாது.
செடி + கொடி = செடிகொடி

4. அடுக்குத் தொடரில் வலிமிகாது.
தீ + தீ = தீ தீ

5. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது.
நீர் + குடித்தான் = நீர் குடித்தான்.


பயிற்சி:
'நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா'.

மேலுள்ள வாக்கியத்தை சந்திப் பிழையின்றி பின்னூட்டத்தில் எழுதுக. :)
************************
என்னமோ எல்லாரும் எழுதுறாங்க, நாமளும் ஒரு பெரிய சிந்தனையாளராகிட்டோம்ல(அடங்கொக்க மக்கா), அதனால எழுதுவோம் - என்று ஒரு எண்ணத்தில்தான் எழுத வந்தேன். எழுதுறது சரி, பிழையில்லாமல் எழுதுகிறாயா? என்று 'நானே கேள்வி' கேட்டபோது... 'நாம எல்லாம் யாரு? பச்சைத் தமிழன். நம்ம எழுத்துலயாவது, பிழையாவது' என்ற மமதையுடன் 'நானே பதில்' சொல்லிக்கொண்டேன்.

ஆனால் கடந்த முறை ஊருக்குச் சென்ற போது 8-வகுப்பு தேர்வுக்காக புத்தகத்துடன் முட்டி மோதிக் கொண்டிருந்த சிறுமியின் கையிலிருந்த மேற்கண்ட இலக்கணங்களை கண்டபோது....
'அடங்கொண்ணியா, ஒத்தை எழுத்துக்கே இத்தனை இலக்கணமா?!'
என்று கலக்கம் ஏற்பட்டுவிட்டது.

************************

பிடிச்சிருந்தா தமிழ்மணத்துல கையை உயர்த்திப் பிடியுங்கள் இங்கே!.

பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்து கொஞ்சமா மாத்திப் போட்டதுதாங்க இது.
நீங்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமா? வாருங்கள். ஆன்லைன் பாடப்புத்தகங்கள் இங்கே.

55 comments :

வால்பையன் said...

மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள்!

இனி எனக்கு சந்திப்பிழை வருவது கடினம் தான்!

கோவி.கண்ணன் said...

நன்றாக இருக்கிறது.

//ஆய், போய் என்னும் வினையெச்சங்களின்//

இது சிலேடை பொருளில் வருகிறதே.
:))))

ஊர் சுற்றி said...

வால்பையா,

இது எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ளது. அதை அப்படியே ரொம்ப கொஞ்சமா மாத்திப்போட்டு இங்கே கொடுத்திருக்கிறேன்.
நான் ஒரு காலத்தில, 'ஐ'ல ஒரு வார்த்தை முடிஞ்சா அதுக்கு அப்புறம் வலிமிகாது என்று 'சூடம்' அடிச்சு சத்தியம் பண்ணினவன் (அடிச்சி இல்ல - அடிச்ச மாதிரி :) ).

இப்போ அதையெல்லாம் நினைச்சா 'வெறும் காத்துதாங்க வருது' என்கிற கதைபோல இருக்கிறது. :)))

வால்பையன் said...

//இது எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ளது. //

அருகில் அமர்ந்திருந்த பிகரை சைட் அடிக்கவே நேரம் சரியாக இருந்ததால், அந்த புத்தகம் எப்படி இருக்குனு கூட எனக்கு தெரியாது தல!

முனைவர்.இரா.குணசீலன் said...

தேவையான முயற்ச்சி..வாழ்த்துக்கள்..!

கடைக்குட்டி said...

நாராயணா இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலப்பா!!!

கரெக்டா வாத்தியாரே ???

அறிவிலி said...

ஆய், போய், வினை "எச்சம்" - என்னங்க இதெல்லாம்?

பதிவு சூப்பர். நல்ல விஷயம்.

சென்ஷி said...

//பயிற்சி: 'நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா'. //

நாராயணா! இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா

செல்வேந்திரன் said...

அண்ணே எனக்குன்னே எழுதனாப்பல இருக்கு... நன்றி!

- சந்திப்பிழை சாம்ராட்

Suresh said...

நல்ல பதிவு என்னை எல்லாரும் திட்டிக்கிட்டே இருக்காங்க ஒரே பிழையா இருக்குனு .. நல்ல வேளை ... இது வந்தது.. கொஞ்சம் பிழை கம்மி ஆகும்

துளசி கோபால் said...

நல்ல பதிவு நாராயணா:-)))

நளன் said...

நல்லதொரு பதிவு.

அக்னி பார்வை said...

நல்ல பதிவு, இன்னும் சில பயிற்ச்சிகளில் இது சரியாகி விடும் என நம்புகிறேன்..நல்ல முயற்ச்சி

malar said...

நல்ல பதிவு .

இதை மதிரி ர ற

ண =ன

படுத்துது

லவ்டேல் மேடி said...

ஆஅவ்வ்வ்வ் ....!! இதுநாலு வரைக்கும் நானு பிழை இல்லாமத்தேன் எழுதிகிட்டு இருந்தேன்.....!! இப்ப வேற இந்த பதிவ படுச்சிட்டேன் ...!! இனி எப்புடி இருக்குமின்னு தெரியுலீங்கோவ் ...!!!!!

தீப்பெட்டி said...

மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றிகள் பல..

//. அங்கு, இங்கு என்னும் சுட்டுத் திரிபுப் பெயர்களின் பின் வலிமிகும்.
அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன்.
இங்கு + பார்த்தேன் = இங்குப் பார்த்தேன். //

இது சரிதானா? குழப்பமாக இருக்கிறது.

ஊர் சுற்றி said...

தங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி....
நான் அவசரமாக பயணம் (ஊர்சுற்ற) செல்ல இருப்பதால் உங்கள் பின்னூட்டங்களுக்கு - பதிலளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு.

தீப்பெட்டியின் கேள்வியை நானும் கேட்டு வைக்கிறேன்:)! ஊர் சுற்றி வந்த பின் பதில் தாருங்கள்.

குப்பன்_யாஹூ said...

சின்ன வயசுல இலக்கணத்தின் சுவையும் அருமையும் தெரியாமல் மதிப்பெண்ணிற்காக படித்து இப்போது வருத்தப் படுகிறேன்.குப்பன்_யாஹூ

Suresh said...

உங்க பதிவு யூத்புல் விகடனில் வாழ்த்துகள் நண்பா

பதி said...

நல்ல பதிவு !!!!!

//கோவி.கண்ணன் said...

நன்றாக இருக்கிறது.

//ஆய், போய் என்னும் வினையெச்சங்களின்//

இது சிலேடை பொருளில் வருகிறதே.
:))))
//


:))))))

Dr.Rudhran said...

thank you

Thamizhan said...

அருமை
எளிமை
அனைவர்
பெருமை
தமிழின்
இனிமை.

ஊர் சுற்றி said...

கோவி.கண்ணன் அவர்களே, பதி அவர்களே,

இதை பாடப்புத்தகத்தில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன். பாடநூல் கழகத்தைத் தொடர்பு கொள்ளவும். :))) ஹிஹிஹி...

ஊர் சுற்றி said...

முனைவர்.இரா.குணசீலன்,
கடைக்குட்டி,
சென்ஷி,
அறிவிலி,
செல்வேந்திரன்,
சுரேஷ்,
துளசி கோபால்,
நளன்,
அக்னி பார்வை,
மலர்,
லவ்டேல் மேடி,
தீப்பெட்டி,
ராமலக்ஷ்மி,
குப்பன்_யாஹூ,
Dr.Rudhran,
Thamizhan,

எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
முதன்மு்தலாக என் பதிவிற்கு வந்திருக்கும் (பின்னூட்டமும் இட்டிருக்கும்) உங்களில் பலருக்கும் மேலும் மேலும் நன்றிகள். :)

ஊர் சுற்றி said...

//நாராயணா இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலப்பா!!!//

கடைக்குட்டி,
சென்ஷி,

மிகச்சரி. :)

ஊர் சுற்றி said...

தீப்பெட்டி,
ராமலக்ஷ்மி,
உங்கள் குழப்பத்திற்கான எனது பதில்
ஏற்கெனவே கூறியபடி...

//இதை பாடப்புத்தகத்தில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன். பாடநூல் கழகத்தைத் தொடர்பு கொள்ளவும். :))) ஹிஹிஹி..//

திரும்பவும் ஒரு ஹிஹிஹி..

ஊர் சுற்றி said...

சுரேஷ்,

நம்பளையெல்லாமா யூத்ஃபுல் விகடனில் போட்டுள்ளார்கள்?!!!!

நன்றி நன்றி.

S Senthilvelan said...

அருமையான பதிவு..

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

பிரேம்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

ஊர் சுற்றி said...

S Senthilvelan,
பிரேம்குமார்,

நன்றி நன்றி.

நசரேயன் said...

இதே மாதிரி நிறைய சொல்லுங்க, எனக்கு எல்லாம் ஏகப்பட்ட எழுத்து பிழை

ஊர் சுற்றி said...

நசரேயன்,

கட்டாயமா முயற்சி பண்ணுவேன்.
தங்கள் மறுமொழிக்கு நன்றி.

thevanmayam said...

வலிமிகும் இடங்கள்!
வலிமிகா இடங்கள்
அருமை!!

thevanmayam said...

நல்ல பதிவு, இன்னும் சில பயிற்ச்சிகளில் இது சரியாகி விடும் என நம்புகிறேன்..நல்ல முயற்ச்சி///

பயிற்சி!!
முயற்சி!!
என வரவேண்டும்!!

ராஜ நடராஜன் said...

'ப்' என்ற உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்கிறோமோ என்று நினைப்பதுண்டு.

உப்பு சேத்துகிட்டா தப்பில்லங்கிற மாதிரி இருக்குது உங்க பதிவு.நன்றி.

ஊர் சுற்றி said...

thevanmayam,

நல்ல கவனிப்பு.

@ராஜ நடராஜன்,

நன்றி நன்றி.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

புதிய தமிழ்த்தாத்தா வாழ்க..! :))

கிரி said...

நல்லா இருக்குங்க!

இதை போல பதிவுகள் நிறைய எழுதுங்க.. பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஊர் சுற்றி said...

"தல" நன்றி நன்றி.

கிரி - இதோ களமிரங்கிட்டேன். எங்கே அந்த 8-ம் வகுப்பு புத்தகம். :)

ஸ்ரீ.... said...

மிகவும் அருமையான பதிவு. அவ்வப்போது இம்மாதிரிப் பதிவுகள் தரவும்.

ஸ்ரீ....

ஊர் சுற்றி said...

ஸ்ரீ,

முயற்சி செய்கிறேன். (இருக்கவே இருக்கு, பள்ளிப் பாடப்புத்தகங்கள்!!!) ஹிஹிஹி...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

நன்றி நண்பரே!! கற்றுக் கொள்ள நிறைய இருக்கு.

[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] said...

nandru

ஊர்சுற்றி said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix,
[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்],

வருகைக்கு நன்றி.

ஜோதிஜி said...

முனைவர் கூட வாழ்த்துக்கள் என்று சொல்லி இருக்கிறார். சமீபத்தில் சீனா ஐயா கொட்டியது ஞாபகத்திற்கு வருகிறது. வாழ்த்துகள் தானே. உங்கள் எளிய நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

╬அதி. அழகு╬ said...

ஏப்ரல் பதிவை இன்றே பார்க்க வாய்த்தது.

தாங்களிட்டிருக்கும் பின்னூட்டங்களில் சில எழுத்துப் பிழைகள் உள.

திருத்தங்களை வரவேற்பீர்கள் எனும் நம்பிக்கையில்:

தலைப்பில் : சந்திப் பிழைகள் ஒரு ஓர் அறிமுகம் [வருமொழி உயிர்].

இது எட்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உள்ளது [வன்தொடர்க் குற்றியலுகரம்].

நான் அவசரமாகப் பயணம் (ஊர்சுற்ற) செல்ல [வேற்றுமைத் தொகை]

இதோ களமிங்கிட்டேன்

நன்றி!

ஊர்சுற்றி said...

ஜோதிஜி,
நன்றி.

ஆனால் 'க்கள்' என்பது 'கள்' போன்று ஒலிப்பதால் 'க்' வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் 'க்' வருமென்றே நான் எண்ணுகிறேன்.

அதி.அழகு,
தங்கள் குட்டுகளுக்கு தலை வணங்குகிறேன். குறிப்பிட்ட இந்த இடுகைக்குப் பின்னரே என்னை நானும் திருத்திக்கொண்டேன். இன்னும் திருத்திக்கொண்டிருக்கிறேன். நீங்கள் சுட்டிக்காட்டியது எனக்கு மகிழ்ச்சியே. தல 'பாலபாரதி'யும் 'ஒரு' என்று வந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

திகழ் said...

வெற்றிக்கு வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

தமிழ்மணம் விருதுக்கு என் வாழ்த்துக்கள் ஊர்சுற்றி! பயனுள்ள இடுகை!

ராமலக்ஷ்மி said...

வெல்கம் பேக் ஊர்சுற்றி!

நான்கு மாதங்கள் கழித்து இப்போதுதான் என் வாழ்த்தை வெளியிடுகிறீர்கள்:)!

ஊர்சுற்றி said...

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...!!! (ரொம்ப லேட்டோ?!!) :)

ராமலக்ஷ்மி அக்கா,
:( இந்த கமென்ட கூட பப்ளிஷ் பண்ண கொஞ்சம் லேட்டாகிடுச்சு!!! கோச்சுக்காதீங்க!

ராமலக்ஷ்மி said...

இல்லையில்லை. என் இன்றைய பதிவில் சொன்ன மாதிரி, இடைவெளி விட்டு மீண்டும் எழுதவருபவர்களைப் பார்க்கும் போது சந்தோஷம்தான் மேலிடுகிறது:)!

வாங்க எழுதுங்க. வாழ்த்துக்கள்.

Prakash Gomathinayagam said...

பையை + கொடு = பையைக் கொடு.

இது எழுவாயும் ஆயிற்றே ? அப்ப புள்ளி எழுத்து இருக்க கூடாதில்ல ?

Prakash Gomathinayagam said...

இது எழுவாயும் ஆயிற்றே ? அப்ப புள்ளி எழுத்து இருக்க கூடாதில்ல ?