Friday, November 13, 2009

ஊர்சுற்றி வலையுலகம் சுற்ற வந்த கதை

இந்த கொடுமையை நீங்கள் ஒருமாதத்திற்கு முன்பே படித்திருக்க வேண்டியது. தள்ளிப்போனாலும், விடுவதாக இல்லை. வலைபதிவதில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள பதிவர் கேவிஆர் அவர்கள் ஒருமாதத்திற்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தார். இதோ சொல்கிறேன், இதுவரையிலான எனது வலை வரலாற்றை. :)

சென்னை வந்த புதிது:
வேலை நிமித்தம் 2006 இறுதியில் சென்னைக்கு வந்தேன். அது சென்னைக்கான எனது இரண்டாவது பயணம். ராயபுரத்தில், அடையாறில் பின்பு 2006 டிசம்பர் இறுதியில் வேளச்சேரியில் (இன்றுவரை இங்குதான்).

ப்ராஜெக்டும் பென்ஞ்சும்:
ஒரு மாதம் கூட்டத்தோடு கூட்டமாக ட்ரெயினிங், பின்பு கூறு போட்டு விற்பதுபோல் வேறுவேறு அலுவலகங்களுக்குப் பிரிந்துசென்றோம்.
பொட்டி தட்டுபவர்கள் எல்லோரும் கடந்துவந்திருக்கும் 'வெட்டி'ப்பொழுதுகளை(பென்ஞ்) அனுபவித்துக்கொண்டிருந்த காலம். எங்கள் மேனேஜர், பல எம்.பி. அளவுள்ள பி.டி.எஃப். கோப்புகளைக் கொடுத்து 'இத நல்லா படிங்க, நம்ம ப்ராஜக்ட்ல பயன்படப்போகிற எல்லா தகவல்களும் இருக்கு' இப்படி சொல்லிவிட்டுப் போக - பொறுப்பா உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். எவ்ளோ நேரம்தான் படிக்கிறது?! சும்மா கூகிளிக்கொண்டிருப்போம். அப்போதுதான் 'நம்ம ஊர் பேர' குடுத்தா கூகிள் என்ன கொடுக்கும்' என்று தேடினேன். இன்னொரு பிரபலமான ஊர் பற்றிய தகவல்கள் கிடைத்தன. பக்கத்திலிருந்த இன்னொரு 'பென்ஞ்சி'(!)லிருந்து ஒரு குரல் - 'மக்களே, எங்க ஊர குடு - மருங்கூர்'.

மாற்றியமைத்த மருங்கூர்:
2007 ஜனவரி. கூகிளின் விடைப்பக்கங்களில் முதலில் வந்தது 'மா.சிவகுமார்' அவர்களின் வலைப்பூ. மருங்கூர் - அவரது சொந்த ஊர். மருங்கூரைத் தேடிய நண்பர், வலைப்பூவிலிருந்த மின்னஞ்சல் முகவரிமூலம் அவரைத் தொடர்புகொண்டார் - நானோ, தேன்கூட்டைத் திறந்தேன். அப்படியே தமிழ்மணமும் தெரியவந்தது. வெட்டியாக உட்கார்ந்திருந்த காலங்களில் அலுவலகம் வந்ததும் முதலில் திறப்பது 'தேன்கூடு'தான். அப்போது நான் அதிகம் படித்தவர்கள் ஓசைசெல்லா - தமிழச்சி - மா.சிவகுமார் - லக்கிலுக் - செந்தழல் ரவி - 'விடாது கருப்பு'(என்ன கொடுமைங்க - எல்லாப் பிரச்சினைகளும் தெரியவந்தபோதுதான் விடாது கருப்பை விட்டுத் தொலைத்தேன்!). வலையுலகம் தவிர இதுபற்றி விவாதிக்க எனது அறையிலும் அப்போது சரியான ஆட்கள் இருந்ததால், கொஞ்ச நாட்களிலேயே தீவிர வாசகனாகி இருந்தேன். அப்போதுதான் மா.சிவகுமார் அவர்களின் அறிவுரையில் வலைப்பூவை உருவாக்கினேன், மருங்கூருக்கு நன்றி தெரிவித்து எனது முதல் இடுகையையும் இட்டேன். 2007 ல் (ஜனவரி-பிப்ரவரி) 4 இடுகைகள் - அலுவலகத்திலிருந்தே.

அலுவலகம் வேலைக்கே!:
இந்த நிலையில் - எனது நெருங்கிய நண்பன் (என் மானசீக குரு) - அலுவலக பொருட்களை நமது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தவறில்லையா? என்று ஒரு கேள்வியை வீசியெறிந்தான். அத்தோடு நிறுத்தினேன் எனது முதல் இன்னிங்ஸை. 2008, மே-ல் எனக்கென கணிணி வாங்கி - பிஎஸ்என்எல் இணைய இணைப்பையும் பெற்றபின்னர்தான் அடுத்த இன்னிங்ஸ். இன்றும், ஏதேனும் மிக முக்கியமான விசயம்(தலைபோகிற காரியம்) அன்றி அலுவலகத்தின் பொருட்களை சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்துவது இல்லை.

பதிவர் சந்திப்புகள்:
2008-ல் பதிவர் சந்திப்புகள் நடந்தபோது 'நாமளும்தான் பதிவராகிட்டோமே போனாத்தான் என்ன' (இரண்டு மூன்று இடுகைகள்தான் இட்டிருந்தேன்) என்ற நினைப்பில் சென்று என்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். இன்றுவரை எதையோ எழுதிக் கிழித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏதோ கொஞ்சம் பேசப்பட்டவை:
நான் எழுதி, எனக்கே பிடித்த இடுகை 'காதலின் முதல் SMS (உண்மையில் கதை)'. பாதி உண்மையும் கலந்திருப்பதால் நண்பர்கள் மத்தியில் டரியலாக்கிய கதை. அப்புறம் பரவலாக (?!) பேசப்பட்டது 'வலைப்பதிவர்கள் பிழையின்றி எழுத - சந்திப்பிழைகள் ஒரு அறிமுகம்' என்று தலைப்பிலேயே பிழையோடு வந்த இடுகை.

அறிவியலில் எனக்கு அதிக ஆர்வம் என்பதால் 'அறிவியல்பூ' என்ற பெயரில் இன்னொரு வலைப்பூவையும் ஆரம்பித்து அவ்வப்போது எழுதிவருகிறேன்.

மென்தமிழும் என் அனுபவமும்:
தொடக்கத்தில் ஃபொனடிக் முறையிலான சில ஆன்லைன் எடிட்டர்களைப் பயன்படுத்தி வந்தேன். தமிழ்99 எனக்கு அறிமுகமான உடனேயே அதில் தட்டச்சப் பழகிக்கொண்டேன் (நேர மிச்சம் அதிகம்). கணிணி சொந்தமாக வாங்கிய பிறகு, அதிலேயே இன்ஸ்டால் செய்கிறமாதிரி ஏதாவது கிடைக்குமா என்று தேடி, ஈகலப்பை(தமிழ்99) இன்ஸ்டால் செய்துகொண்டேன். ஒரு பதிவர் சந்திப்பில், அண்ணன் 'தல' பாலபாரதி சொல்பேச்சைக் கேட்டு NHM Writer இன்ஸ்டால் செய்து கொண்டேன். இதில் ஈகலப்பையில் இருந்த சில தட்டச்சும் சிக்கல்கள், மொழிமாற்றும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது - இது எனக்குப் பிடித்திருக்கிறது. நான் பரிந்துரைப்பது NHM Writer -ம் தமிழ்99-ம் தான்.

நான் என்ன எழுதினாலும் வந்து படித்து, என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை இந்நேரம் சமர்ப்பிக்கிறேன்.

இந்த தொடரை இழுத்துச் செல்ல அழைப்பது,
3) ஜெய்ஹிந்த்புரம் பீர் முஹம்மது.
விதிமுறைகள் இங்கே.
வாங்க மக்கள்ஸ், வந்து உங்க கதையையும் சொல்லுங்க.

6 comments :

பின்னோக்கி said...

அனுபவம் நன்றாக இருக்கிறது.
இதை அலுவலக கணினியில் படிக்கிறேன். குற்ற உணர்வு.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

நல்ல பகிர்வு:)

பீர் | Peer said...

ஐயா ஊர்சுற்றி, உமக்கென்ன உலகம் சுற்றிய வரலாறு அழகா சொல்லிட்டீர். வரலாறுக்கு நான் எங்க போவேன்.. யோசிச்சுத்தான் எழுதணும். கொஞ்சம் டைம் கொடுங்க, கண்டிப்பா எழுதுறேன்.

மற்றபடி, உங்களது கடைசிபத்தி எனக்கும் பொருந்தும். :)

=====

//அலுவலகத்தின் பொருட்களை சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்துவது இல்லை. //

நீங்க ரொம்ப நல்லவரு :)

ஊர்சுற்றி said...

எல்லோருக்கும்,
வரவுக்கு நன்றி.

வருங்காலத்தில், இன்னொரு வரலாற்று இடுகையில் இந்த இடுகையும் இடம்பெறும் என நிச்சயமாய் நம்புகிறேன். :)

KVR said...

உங்க வரலாறு நல்லா இருக்கு. ஒரு மாசம் கழிச்சு வந்தாலும் நல்லா இருக்கு.

ஊர்சுற்றி said...

நன்றி கே.வி.ஆர். அவர்களே.