Wednesday, April 8, 2009

நீங்கள் யாருக்காவது ஆறுதல் சொல்லியிருக்கிறீர்களா?

  • அப்பாவையோ அம்மாவையோ இழந்து தவித்த நண்பர்களுக்கு,
  • சொந்தங்கள் பிரிந்த அலுவலக சக பணியாளர்களுக்கு,
  • தன் காதலைப் புரிந்து கொள்ளாமல், தன்னை தட்டிக்கழிக்கும் காதலனை நொந்துகொள்ளும் உங்கள் தோழிக்கு,
  • நல்லவனாய் பழகி துரோகம் செய்து விட்டுச் செல்லும் நட்புகளைஅனுபவித்தவர்களுக்கு,
  • காதலில் மூழ்கித் திளைத்து, கரையேறும்போது தனியாளாய் வருபவர்களுக்கு,
நீங்கள் எப்போதாவது ஆறுதல் சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதா?

கல்லூரியில் படிக்கும் போது வாழ்க்கையே ஒரு விளையாட்டாய்ப் 
போய்க்கொண்டிருந்தது. படித்து முடித்து, வேலைக்கு வந்த பின்னும் அந்த மைதானத்தை விட்டு வெளிவரவில்லை மனது. அலுவலகத்திலும் அதே அரட்டை, அதே பொறுப்பில்லாத தன்மை. அந்த பெரிய மனுஷத் தோரணை ஏனோ வரவில்லை. பிரிவு, அதன் வலிகள், அதனிலிருந்து மீண்டு வருதல் - எதுவுமில்லாமல் சில ஆண்டுகள் ஓடிவிட்டன.

அம்மாவை இழந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தும், தவற விட்டேன். சொல்லத் தெரியவில்லை-நேரில் பார்த்து சொல்லிக் கொள்ளலாம் - இப்படி எல்லாமே. அல்லது 'முதிர்ச்சி வரவில்லையா' என்று தெரியவில்லை. அப்படி இப்படி என்று பலமாதங்கள் கடந்துவிட்டது. 'தொலைபேசியில் ஓரிரு வார்த்தை பேசியிருக்கலாமோ' என்ற குற்ற உணர்வு தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது.

'கல்யாணத்துக்கு கூட போகலைன்னா பரவாயில்ல, ஆனா சாவுக்கு கட்டாயம் போகணும்டா'-ன்னு ஊர்ப்பக்கம் சொல்வார்கள். அதைக்கூட செய்யாமல் இன்னும் சின்னப்பையனாகவே மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் என்னவென்பது?!


கடைசியாய் சமீபத்தில் மற்றொரு தருணத்தில், ஒருமுனையில் என்னால் வெறுமனே கேட்டுக்கொண்டுதான் இருக்க முடிந்தது. ஆனால் அதுவே ஒரு மன முதிர்ச்சி்யை அளித்தது. எனக்குத் தெரிந்துவிட்டது, இன்னும் எனக்கு 'ஆறுதல் சொல்லத் தெரியவில்லை'. ஆனால் காது கொடுத்துக் கேட்க அவ்விடத்தில் நான் இருந்தது, மறுமுனையில் சற்று ஆறுதலளித்திருக்கும்.

ஆறுதல் தேவைப்படும் உங்கள் உறவுகளுக்கு, உங்கள் செவிகள் 'செவிமடுக்கட்டும்', உங்கள் நாவுகள் 'ஆறுதலளிக்கட்டும்'. உங்கள் கரங்கள் அவர்களைத் 'தாங்கிப்பிடிக்கட்டும்'.

படம்: http://pro.corbis.com/

17 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஆறுதல் தேவைப்படும் உங்கள் உறவுகளுக்கு, உங்கள் செவிகள் 'செவிமடுக்கட்டும்', உங்கள் நாவுகள் 'ஆறுதலளிக்கட்டும்'. உங்கள் கரங்கள் அவர்களை 'தாங்கிப்பிடிக்கட்டும்'.
\\

அற்புதம்.

அப்பாவி முரு said...

//ஆறுதல் தேவைப்படும் உங்கள் உறவுகளுக்கு, உங்கள் செவிகள் 'செவிமடுக்கட்டும்', உங்கள் நாவுகள் 'ஆறுதலளிக்கட்டும்'. உங்கள் கரங்கள் அவர்களை 'தாங்கிப்பிடிக்கட்டும்'//

சரியான வார்த்தைகள்...

நான் ஆறுதல் சொன்ன அனுபவங்கள் நிறைய இருக்கு.

சரியான நேரத்தில் சரியாக ஆறுதல் சொன்னால், ஆறுதலடைந்தவர் நெஞ்சி நீங்காமல் இடம்பிடிக்கலாம்..

Anonymous said...

ungal blog peyar thaan oorsutri nengalo ullam sutti.....neraiya vizhyamgal unarthaalum unarvadhu illai ullathai thodum varai...

Vidhya Chandrasekaran said...

அருமருந்து ஓவர் டோஸாகிவிடாமல் இருந்தால் சரி.

அமுதா said...

/*ஆனால் காது கொடுத்துக் கேட்க அவ்விடத்தில் நான் இருந்தது, மறுமுனையில் சற்று ஆறுதலளித்திருக்கும். */
உண்மை. சில வேளைகளில் ஆறுதல் சொல்வதைவிட அமைதியாக இருப்பதே ஆறுதல் தரும்

Unknown said...

நல்லா இருக்குங்க.
பக்குவம் வந்தால் எல்லாம் தானா வரும்.

narsim said...

//உங்கள் கரங்கள் அவர்களை 'தாங்கிப்பிடிக்கட்டும்'.
//

கரெக்ட்

ஹேமா said...

ஆறுதல் என்பது மனதுக்கு ஒரு இதமான மருந்து.மனிதம் நிறைந்த மனிதருக்குள் மட்டுமே நிறைவானதாய் கிடைக்கும் ஒரு மூலிகைச் செல்வம் இந்த ஆறுதல்.

ஊர்சுற்றி said...

நட்புடன் ஜமால், அப்பாவி, இயற்கை...

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஊர்சுற்றி said...

தமிழரசி,

நன்றி நன்றி.

வித்யா,

பொதுவாக இந்த மாதிரி சமயங்களில் ஒவர்டோஸெல்லாம் நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்று நினைக்கிறேன்.

ஊர்சுற்றி said...

அமுதா, ரவிஷங்கர், ஹேமா.
வருகைக்கு நன்றி.
தங்கள் கருத்து மிகவும் உண்மை.

ஊர்சுற்றி said...

நர்சிம்,

இந்தப் பக்கமெல்லாம் வர்றீங்களா!
ரொம்ப ரொம்ப தாங்ஸ்ங்ண்ணா...

ஊர்சுற்றி said...

வேலை கொஞ்சம் இறுக்கமா இருக்கறதால உடனுக்குடன் பதில் இட இயலவில்லை. வருந்துகிறேன்.

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகா, அற்புதமா சொல்லிருக்கீங்க. துக்கங்கள் பகிரும் போது பாதியாகுமாம், ஆறுதல் சொன்னா, அதை விட வலி குறையும்.

படம் ரொம்ப நல்லா இருக்கு.

வால்பையன் said...

ஆற்றுபடுத்துதல் என்பது ஒரு அறிவியல் கலை நண்பா!

யாரொருவர் உறவுகளையும், மனிதர்களையும் மதிக்கிறார்களோ அவர்களுக்கு கைக்கூடி வரும்!

ஊர்சுற்றி said...

வாங்க விக்னேஷ்வரி.
நன்றி நன்றி.

படம்: http://pro.corbis.com/
ல இருந்து எடுத்தது.

ஊர்சுற்றி said...

வாங்க வால்பையா,
எங்கே ஆளயே காணோமேனு பார்த்தேன்.
வரவுக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.