Tuesday, March 31, 2009

நேரில் சந்தித்த ஒரு விபத்து - உண்மை அனுபவம்: இரண்டாவது பகுதி

முதல் பாகம் இங்கே.

கே.கே. நகர் அரசு மருத்துவமனை வளாகம். அடிபட்டவர் ஆம்புலன்சின் உள்ளே. நர்ஸ் என்னிடம் பேசும்போது, 'நல்ல வேளை ஹெட் இஞ்சுரி(கபால காயம்) இல்லை, மேல்மட்ட அடிதான். இருந்தாலும் சென்ட்ரலுக்குப் போவதுதான் நல்லது' என்றார். கட்டு போட்டிருந்ததன் காரணமாக இரத்தம் வழிவது நின்றிருந்தது. நண்பனின் கை முழுவதும், மேல் சட்டையில் பல பகுதிகளும் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. அடிபட்டவருக்கு கேட்கவே வேண்டாம், வலது பக்க தாடையில் ஆரம்பித்து மேல் சட்டை முழுவதும் இரத்தம். ஆம்புலன்சில் என் முதல் வினாடிகள். என் கண்கள் அந்த அனுபவத்தை நன்றாகப் படம் பிடித்துக் கொண்டன. அனைத்து வசதிகளையும் கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் அது. முன்னால் இருந்த சிறிய பெட்டிகளில் IV FLUID, IV SET, HAZARD, DRESSING... என்றெல்லாம் எழுதியிருந்தது. சிறிய படுக்கை, அதற்கான தாங்குப்பிடிகள். மூச்சு சாதனங்கள். என்று எனக்குத் தெரிந்த அடிப்படையான மருத்துவ சாதனங்கள் எல்லாம் உள்ளேயே.

அப்படியே என் கவனம் அடிபட்டவர் மீது திரும்ப... திடீரென்று, அந்த நபர் சுயநினைவு வந்து எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போதுதான் நாங்கள் கவனித்தோம் அந்த நபர் 'சொர்க்கலோகத்தில்' மூழ்கி இருந்ததை (முழுத் தண்ணி). மனுசன் எந்த 'டாஸ்மாக்' ல இருந்து நேரே வண்டிய ஓட்டிகிட்டு வந்தானோ தெரியவில்லை. அந்த நிமிடத்திலிருந்து அந்த மனிதன் மேல் இருந்த இரக்கமோ, அல்லது வேறு ஏதோ, வடசென்னையை தாண்டி ஆந்திர எல்லையைத் தொட்டு, தொலைந்து விட்டிருந்தது. அவன் எழுந்து உட்கார்ந்து,

'என்ன நடக்குது இங்க? என்ன எங்க கூட்டிட்டு போறீங்க?' என்றான்.

'யோவ், உனக்கு அடி பட்டுருக்குய்யா. சென்ட்ரல் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறோம்' என்றால்,

'வேண்டாம், என்ன பார்த்த இடத்திலேயே வுட்டுட்டு போங்க, எனக்கு ஒண்ணும் இல்ல. கல்லு மாதிரி உடம்பு, இரும்பு கடை வச்சிருக்கேன், எங்கிட்டயேவா?' என்றான்.

பக்கத்தில் நின்றிருந்த யாரோ ஒருவர் 'தண்ணிய அடிச்சிட்டு, பேசுற பேச்சை பாரு, வண்டி உள்ள படுடா' என்றார்.

'நான் ஸ்டெடியாதான்டா இருக்கேன், நீங்க எல்லாம் என்ன பண்றீங்க?!' என்றவன், ஆம்புலன்சிலிருந்து இறங்கியபடியே தலையில் இட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து கையில் எடுத்துக் கொண்டான்.

நாலு பேர் சேர்ந்து பிடித்து இழுத்து வண்டியினுள் தள்ளி, வண்டியை கிளப்பியாகி விட்டது. நான் அவரது மச்சான் 'பாலகிருஷ்ணனுக்கு' பேசி 'சார், ஃபுல் தண்ணியில உங்க மச்சான் இருக்காரு. அடியும் கொஞ்சம் பலமா பட்டிருக்கு. உடனே சென்ட்ரல் ஜி.ஹெச். க்கு வந்திடுங்க. ஆம்புலன்சு அங்கேதான் போய்க்கிட்டிருக்கு' என்றேன். அடிபட்ட நபர், போனை தன்னிடம் கொடுக்கும்படியும், யாருக்கு போன் பேசுற என்றும் கேட்டான்.

''ராமு' வுக்கு போனை போடு, நானே அவன்கிட்ட பேசுறேன்'
என்றான்.

ராமுக்கு டயல் செய்தாகிவிட்டது. 'ராமு' இன்னொரு மச்சானாம். பேசி முடிக்கும் நேரம் அடிபட்டவன் என்னை நோக்கி 'ராமு கிட்டே எதுக்கு பேசினே? அவன் உனக்கு எதிரியா?' என்றான். ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்த என்னை அடுத்தடுத்து வந்த வாக்கியங்கள் நிலைகுலைய வைத்தன.

'ஆமா, என்னய எங்க கடத்திட்டு போறீங்க? டேய், போலீஸுக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன், இப்போ என்னிய எங்க கூட்டிட்டு போறீங்க?'

'அண்ணே, உங்களுக்கு அடி பட்டிருக்குன்னே! அதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறோம்'

'யாரு சொன்னா, நீங்கே அடிச்சுபுட்டு... டேய், நான் ரொம்ப ஸ்ட்ராங்க், தெரியுமா?'

'சரிண்ணே, பரவாயில்லை கொஞ்ச நேரம் இருங்க, உங்க மச்சான் வந்திடுவாரு. அப்புறமா பேசிக்கலாம்' - வண்டி கோடம்பாக்கம், தியாகராய நகர் தாண்டி அண்ணா சாலையை அடைந்திருந்தது. தள்ளாடிக்கொண்டே இருந்த அவனை நாங்கள் இருவரும் தாங்கலாக பிடித்தே கை வலித்துவிட்டது. படுக்கமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான். இந்நேரத்தில் அவனது மச்சானிடமிருந்து 'அழைப்பு'. பேசிமுடித்ததும் மறுபடியும் நம்ம தண்ணிவண்டி...

'ஆமா, நீ யாரு போன்ல இருந்து பேசினே. நீ பேசுறதுன்னா உன் போனுல பேசு. எம்போன எங்கிட்ட குடு'.

ஐயோ, இவன் இம்சை தாங்க முடியலடா. தலையில அடிபட்டு இரத்தம் வழிந்துகொண்டிருக்க, இந்த தண்ணிவண்டி பேசுற பேச்சை பாரு, என்ற பயங்கர கடுப்பில் பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் புழக்கத்தில் இருந்து இப்போது 'வழக்கொழிந்த சொற்கள்' (!!!) பல தொண்டைவரை வந்து பின்னர், திரும்பிச் சென்றன.

ஒருவழியாக சென்ட்ரலும் வந்தது. அவசர சிகிச்சை பிரிவிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்த அவனை, இழுத்துச் சென்று உள்ளே தள்ளினர்!!!. சிறிது நேரம் காத்திருந்து, அவனது மச்சான் வந்த பின்னர், மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

11 comments :

ஊர் சுற்றி said...

மக்களே, நீங்க யாராவது இந்த மாதிரி ரொம்ப சீரியாஸா போயி, அப்புறமா ரொம்ப மொக்கையான சம்பவங்களை அனுபவிச்சு இருக்கீங்களா?!!!

ஊர் சுற்றி said...

இதுதான் கொடுமைனு பார்த்தா, வீட்டுக்கு வர்ற வழியில இன்னொரு கொடுமை நடந்தது. அதை இன்னொரு இடுகையாக இடுகிறேன்.

வால்பையன் said...

இதுக்காக டென்ஷன் ஆகவேண்டாம்.
தண்ணி போட்டு ஆக்சிடெண்ட் ஆனா இன்சூரன்ஸ் க்ளைம் ஆகாது. அதனால் டென்ஷன் ஆகிருக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

ரொம்ப ஊர் சுற்றுகிறீர்களோ

Suresh said...

ஹா ஹா ஹா ora kodumai mela kodumai ya makkale

ஊர் சுற்றி said...

ஒண்ணுமே புரியலயே வால்பையா... ஃபுல் மப்புல இருக்குறவன் இதப்பத்தியெல்லாமா யோசிப்பான்?!!!

ஊர் சுற்றி said...

வாங்க ஜமால், சுரேஷ்.

ஏதோ கொஞ்சம் கொஞ்சம் சுத்திகிட்டு இருக்கேன். நிறைய ஊர் சுத்தணும்னுதான் ஆசை!

வால்பையன் said...

//ஊர் சுற்றி said...

ஒண்ணுமே புரியலயே வால்பையா... ஃபுல் மப்புல இருக்குறவன் இதப்பத்தியெல்லாமா யோசிப்பான்?!!!//

ஆம் முடியும்!
உயிர் போற நேரத்திலும் மானம் போகாமல் இருக்க முயற்சிப்பான்.

மற்றவர்கள் எப்படியோ நான் அப்படி தான்

ஊர் சுற்றி said...

வால்பையா...
நான் இந்த கோணத்திலே யோசிக்கவே இல்லையே!!! இது எத்தனை டிகிரி வெச்சி யோசிச்சீங்கண்ணு தெரியல...!!!
ஆனா தண்ணியடிச்ச(அடிபட்ட) அந்த ஆளு பண்ணுன அலும்பு, தாங்க முடியல...

ஹேமா said...

நான் இதுக்கு ஒண்ணும் சொல்ல வரல.நான் சும்மா தண்ணி குடிக்கிறேன்ன்னு சொன்னதுக்கே,
சோடா கலந்து குடிஙகன்னு , உப்புமடச் சந்தில பட்டம் எல்லாம் தாறாங்க.இனி நான் ஒண்ணும் சொல்லப் போறதில்ல.

ஊர் சுற்றி said...

ஹேமா, இப்படியெல்லாமா நடக்குது அங்கே!!! நானும் அங்கே வர்றேன்...