Wednesday, April 1, 2009

காதலின் முதல் SMS (உண்மையில் கதை!)

உங்களில் காதலிக்காதவர் எவரேனும் இவன் மேல் கல் அடியுங்கள்!!! -காதல் க்ரைஸ்ட். 

நள்ளிரவு நேரம். சென்னையில் இருந்து சில நூறு கல் தொலைவில் தடதடத்துக் கொண்டிருந்தது அந்த இரயில். பாதித் தூக்கத்தில், S10 பெட்டியின் ஒரு பக்கவாட்டு மேல் படுக்கையில் நான். கடைசியாய் என் கைபேசியின் 'கேன்சல்' பொத்தானை அழுத்தியதாய் நினைவு. இரயில் ரிதத்திலிருந்து வித்தியாசப்பட்டு மிக அருகில் ஒலித்த 'டக் தடக் தடக்' என்ற சத்தம் தூக்கத்தை நிறுத்தியது. 'கைபேசி கைநழுவியிருந்தது!'. நண்பனின் கைபேசியில் இருந்து வந்த மங்கலான வெளிச்சத்தில் தேடிப் பார்த்தாகிவிட்டது. என் கைபேசி என்னிடமிருந்து விடுதலையாகி, ஜன்னல் கம்பிகளில் மோதி, இரயிலுக்கு வெளியே எங்கோ இருட்டில் தஞ்சமடைந்திருக்க வேண்டும்.

திண்டுக்கல் வரை விழித்திருந்து நண்பனை வழியனுப்பிவிட்டு, அதற்கு அப்பால் நான் இன்னொரு பெட்டியில் பயணிக்க வேண்டும்(திண்டுக்கல்லில் இருந்து இன்னொரு பயண்ச்சீட்டு) என்பதை மறந்து அயர்ந்து தூங்கிவிட்டேன். கண்ணில் தெரிந்தது மதுரை இரயில் நிலையம்.
S7 நோக்கி நடந்தேன்.இருக்கை எண் 40-ஐ அடைந்ததும் ஒருமுறை கண்ணை கசக்கிக் கொண்டேன். அங்கு அவள் உட்கார்ந்திருந்தாள். இல்லை, அழகாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். இல்லை, இல்லை அவள் மட்டுமே அந்த கம்பார்ட்மெண்டில் அமர்ந்து அழகாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒருமுறை இருக்கை எண்ணை உறுதி செய்துவிட்டு உட்கார்ந்துகொண்டேன்.

'மதமும் பகுத்தறிவும்' என்ற ஒரு கட்டுரைகளின் தொகுப்பை கொண்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். சற்றுநேரம் அதில் மூழ்கினேன். ஏற்கெனவே இரயில் தாமதமாய் சென்று கொண்டிருந்தது. வீட்டில் இந்நேரம் தேட ஆரம்பித்திருப்பார்கள்.  கைபேசி தொலைந்த தகவலை எப்படி வீட்டிற்கு தெரிவிப்பது என்ற யோசனையில் புத்தகத்தை மூடினேன். எதிரில் இருந்த அவளிடம் பேச்சு கொடுத்து அவளது கைபேசியை கேட்டேன். புதிராய்ப் பார்த்த அவளிடம், என் கைபேசியை தவறவிட்டதை கூறி என் நிலைமையை விளக்கினேன். தன்னுடைய 'NOKIA 6600'-ஐ என்னிடம் நீட்டினாள்.

வீட்டிற்கு தகவலை சொல்லிவிட்டு, "என் மொபைல் என்ன நிலைமையில இருக்குன்னு தெரியல, அதுக்கு ஒருதடவை டயல் பண்ணி பார்த்துடறேன்" என்றேன். "சரி" என்று தலையை மட்டுமே ஆட்டினாள். என்னுடைய எண் "தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக" பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒலித்தது. அவளிடம் கைபேசியை திரும்ப கொடுத்துவிட்டு, நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் கவனத்தை திருப்ப கழுத்தை திருப்பினேன்.


அப்போதுதான் கவனித்தேன் அவள் கைகளில் இருந்த புத்தகத்தை. 'இம்மானுவேல் கான்ட்'(Immanuel Kant)-டின் 'Critick of Pure Reason'. ஓரிரு வினாடி ஆச்சரியத்தில் உறைந்து போனேன். தத்துவம் என்றாலே பொதுவாக பெண்களுக்கு ஆகாது. அதுவும் எந்த சமரசத்திற்கும் ஒத்துவராத மிகவும் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து மடிந்த, ஆனால் தத்துவ உலகிற்கு அழியா செல்வங்களையும் கொடுத்த, மேதை 'கான்ட்' பற்றி படிப்பது என்றால்!!! எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி 'ரிக்டர்' அளவுகோலில் 9.4-ஐ தாண்டியிருக்கும்.

'நீங்க கான்ட் பத்தியா படிக்கிறீங்க?' என்றேன் அந்த ஆச்சரியத்துடனே.
'ம்ம்' என்று பதில்.


'ஃபிலாஸஃபி ல ரொம்ப ஈடுபாடு உண்டா உங்களுக்கு?'
என்றேன். 'ஆமா' என்று மறுபடியும் ஒற்றை வரியில் பதில். 20-30 நிமிடங்கள் ஆகியிருக்கும். வண்டி விருதுநகர் பக்கம் வந்துவிட்டது.

'கான்ட் எழுதின புத்தகம் நீங்க ஏதாவது படிச்சிருக்கீங்களா?'
என்று எங்களிடையே குடிகொண்டிருந்த அந்த மௌனத்தை கலைத்து அவள் கேட்ட கேள்விக்கு, 'கான்ட் பற்றி கேள்வி ஞானம் மட்டுமே உண்டு' என்று பதிலளித்தேன்.

எப்படி இந்த புத்தகமெல்லாம் உங்களுக்கு அறிமுகமானது, கான்ட் கூறும் பல விஷயங்கள் குழப்பும் விதமாகவும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்குமே? அதிலும் ஒரு பெண், நீங்கள் எப்படி இந்த புத்தகத்தை அணுகுகிறீங்கள்? என்பன போன்ற என் (கடலை) கேள்விகளுக்கு பதிலளித்தாள்.

தான் எம்.பி.ஏ. படித்திருப்பதாகவும், விளம்பரத் துறையின் ஆர்வம் மிகுதியால் அதில் நுழைந்து கிளையன்ட் சர்வீசிஙகில் இருப்பதாகவும் சொன்னாள். இந்தத் துறையில் நுழைந்த பின்னர் கிடைத்த அனுவங்களும் நண்பர்களும் தத்துவம் பற்றி படிக்க காரணம் என்றாள். அவள், பேசிக்கொண்டிருந்த போது என் கண்கள் அவள் கண்களிலும், சில வினாடிகள் அவள் தடதடக்கும் அவள் உதடுகளிலும் நிலை கொண்டன.

சுதாரித்துக் கொண்டு, எனது ஆர்வமும் இதைச் சார்ந்தே இருப்பதை பகிர்ந்து கொண்டேன். புத்தகங்கள் எங்கள் பைகளுக்கு சென்று விட்டன. கோவில்பட்டி எப்போதோ கடந்துவிட்டதை காணவில்லை நான். எங்களின் விவாதங்கள் எங்கெல்லாமோ சென்று திரும்புவதற்குள்.....திருநெல்வேலி வந்து, இரயில் நின்றும் விட்டது. இரயிலுக்கு வெளியே அவள் அப்பா. கணநேரத்தில் கையசைத்துவிட்டு கடந்துவிட்டாள்.

ஊரில் மூன்று நாட்கள். திரும்பவும் சென்னை. வந்ததும் புதிய சிம் கார்டு வாங்கினேன். ப்ளாக்(block) பண்ணியிருந்த அதே எண்ணை திரும்பவும் ஆக்டிவேட்(Activate) செய்தேன். நண்பனின் கைபேசியில் சிம்மை இட்டு இயக்கியதும் வந்த முதல் SMS.

'ஹாய், இது புவனா. ரயில்ல சந்திச்சோமே? நீ எப்படி இருக்க? ரொம்ப சாரி, அன்னிக்கு பேச்சு சுவாரசியத்துல உன் பேரையே கேக்க மறந்துட்டேன்'

நீ்ங்க 'நீ' யாக மாறியிருந்தது! (தொலைந்துபோன என் நம்பருக்கு நான் அவள் கைபேசியிலிருந்து முயற்சி செய்தேனல்லவா? அதிலிருந்து என் எண்ணை எடுத்திருந்திருக்கிறாள்!)

அதைப் படித்து பிரமித்திருந்த நேரத்தில் இன்னொரு SMS. 'ஹேய், புது சிம் வாங்கிட்டியா?' (உபயம்: முந்தைய SMS-ன் டெலிவரி ரிப்போர்ட்).



இன்றோடு இரண்டு மாதங்களாகிவிட்டன, நான் அவளிடம் என் காதலை சொல்லி. 2 1/2 வருடங்களாகிவிட்டன அவளை இரயிலில் பார்த்து. உங்களுக்கு நினைவிருக்கிறதா, உங்கள் காதலின் முதல் SMS?

8 comments:

Anonymous said...

நைஸ்! நண்பா! அதிர்ஷ்டசாலிதான் நீங்க.. கலக்குங்க!

வியா (Viyaa) said...

i still remember my 1st sms..
sweet memories..

வால்பையன் said...

போரடிக்காத நடை!
இடையில் வந்த தத்துவமும் அதன் எழுத்தாளரையும் தவிர!
உண்மை சம்பவமாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை!

எனக்கு எஸ்.எம்.எஸ். இப்போ இரண்டு வருடமாக தான் அனுப்ப தெரியும்.

Tamilar said...

இந்த உண்மை கதைய வச்சு ஒரு சினிமா எடுக்கலாம்..... நான் ரயில் வண்டியில் போனால் யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை! நல்லா ஊர் சுத்துங்க சார்

ஊர்சுற்றி said...

ஷீ-நிசி...
எல்லாமே அப்படியே உண்மையில்லை... கொஞ்சம் கற்பனையை கலந்து கட்டியது.

ஊர்சுற்றி said...

வியா.... உண்மாயாகவா..?!!

வாழ்த்துக்கள.
ஷீ-நிசி சொன்னத அப்படியே உங்களுக்கு சொல்றேன்..//அதிர்ஷ்டசாலிதான் நீங்க.. கலக்குங்க!//

ஊர்சுற்றி said...

வால்பையா,

ரொம்ப ரொம்ப நன்றிங்க, உங்க பின்னூட்டத்துக்கு.

அந்த தத்துவமும் எழுத்தாளரும் ஒரு இடைச்செருகல்...

இனிமே ஏதாவது எழுதுறப்போ, இன்னும் கொஞ்சம் கவனிச்சு எழுதுறேன்.

ஊர்சுற்றி said...

தமிழர்,

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.
நீங்க சினிமா எடுக்க ரெடின்னா... இந்த கதையை நான் உங்களுக்குத் தரத் தயார்!

:)