Friday, April 3, 2009

இந்தியப் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதா? - புதுசு கண்ணா புதுசு

எங்கு நோக்கினும் 'இந்தியா அதை சாதித்துவிட்டது, இதை சாதித்துவிட்டது, இந்த துறையில் நாம்தான் முதலிடம், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டது, வல்லரசா எப்போ மாறும்?' என்பது போன்ற விடயங்கள் விரவிக்கிடக்கின்றன. (எங்க தமிழ்நாட்டுல அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யாரு? ங்கறது கூட இதுக்கு முன்னாடி சாதாரணம்). 

 இதைப்பற்றியெல்லாம் அதிகமாக சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. உண்மையிலேயே நம் நாடு மகத்தான சாதனைகளை செய்து வருகிறதா?, நம்முடைய பொருளாதார நிலை உயர்ந்துள்ளதா? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், கடந்த வாரத்தில் ஊருக்கு சென்றிருந்த போது இதற்கெல்லாம் விடை கிடைத்தது. 

திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பேரூராட்சி அது. கிட்டத்தட்ட, 6 வருடங்களுக்கு பிறகு அந்த பேருந்து நிலையத்தில் அதிக நேரம் செலவிட்டு அதன் அக்கம் பக்கத்தை கவனித்தேன். 

அன்று - இன்று.... 

அதே கடைகள் - டிஜிடல் பேனர்களுடன். 
நேரம் தவறிய அதிக சத்தமெழுப்பும் பேருந்துகள் - எண்ணிக்கை கொஞ்சம் அதிகம், சிற்றுந்து எக்ஸ்ட்ரா. 
அதே அழுக்கேறிய சீருடைகள், பட்டன் இல்லாமல் ஊக்குகள் அலங்கரிக்கும் அரசாங்க பள்ளி மாணவர்கள் - சீருடை நிறம் மட்டும் வேறு. 
பாஸ்டர்(போதகர்) மாருதி 800ல் சென்றவர் - 'ஒப்ட்ராவோ ஆப்ட்ராவோ', அந்த காரில் செல்கிறார். 
சிவன் கோவில் இடிந்து தகர்ந்த நிலையில் - புதுவித பூச்சுகளுடன் பல இலட்சம் விழுங்கிவிட்டு நிற்கிறது.
ஒத்தை காரில் பஞ்சாயத்து அலுவலகம் வந்த MLA - குறைந்தது 3 வாகனங்கள் புடைசூழ. 


என்னமோப்பா... ஏதோ 'இந்தியா ஒளிர்கிறது' ன்னீங்க. அப்புறம் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் சக்கை போடு போடுகிறதுங்கறீங்க. ஒண்ணுமே புரியலப்பா. உண்மையிலேயே இங்க என்னதான் மாற்றம் நடந்துகிட்டிருக்கு. 

எப்பவோ ஒருதடவை பேருந்து வருகிற ஊரில் கூட, முந்தாநாள் வந்த புது திரைப்படத்தோட திருட்டு குறுந்தகடு சர்வசாதாரணமாக உலாவிக்கொண்டு இருக்கிறது. ஒரு 'கடவுச்சீட்டு' (Passport) சம்பந்தமாக விசாரணைக்கு வந்த காவலர் அன்றைக்கு 100ரூ. கேட்டார்; இன்றைக்கு 300 ரூபாய் கேட்கிறார். சதவீதக் கணக்கில் பார்த்தால் 200 சதம் வளர்ச்சி.  இத்தனை நாள் இல்லாமல் 'புதுசு கண்ணா புதுசு' என்கிற ரீதியில் அரசுத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் - தேர்தல் நேரம்!. 

நல்லா இருக்குதுப்பா உங்க வளர்ச்சியும்.....!

7 comments:

நட்புடன் ஜமால் said...

நல்லா சொன்னேள் போங்கோ ...

வால்பையன் said...

இந்திய பொருளாதாரம் உயரவில்லை
ஆனால்
அரசியல்வாதிகளின் வங்கி சேமிப்பு
உயர்ந்து விட்டது!

அத்திரி said...

//விசாரணைக்கு வந்த காவலர் அன்றைக்கு 100ரூ. கேட்டார்; இன்றைக்கு 300 ரூபாய் கேட்கிறார். சதவீதக் கணக்கில் பார்த்தால் 200 சதம் வளர்ச்சி.//

அருமையான் வளர்ச்சி.இதை பத்தியெல்லாம் பேசினா....... அடப்போங்கப்பா...

அண்ணனுக்கு திருநெல்வேலியா??

ஊர்சுற்றி said...

வாங்க ஜமால்,

வால்பாயா... இப்பொழுதெல்லாம் சும்மா தெரிந்தே எல்லாவற்றையும் செய்கிறார்கள்...

ஊர்சுற்றி said...

அத்திரி... வாங்க.

திருநெல்வேலியேதான்.
கொஞ்ச தூரம் தள்ளி. ஒரு 50 கி.மீ.

மாசிலா said...

தமிழ் மொழியெனும் ஆக்கும் அறிவாயுதம் ஊடாக உங்கள் பதிவின் கீழ் காணும் ஸ்டாலின் எனும் கொடுங்கோளன், மகாபாதகன், கொலைகாரன் வழியாக இம்மொழி பழகுபவர்களைஅழிக்கும் மக்களாக மாற்ற முயற்சிக்காதீர்கள். உடனடியாக இவன் படைத்தை விலக்க ஏற்பாடு செய்யுங்கள்!

ஊர்சுற்றி said...

மாசிலா,

அவர் கொடுங்கோலரோ என்னவோ,
அதைப் பற்றி எனக்குத் தெரியாது. வரலாற்றில் நடந்தவற்றை காட்டுவதுதான் அந்த விட்ஜெட்டின் வேலை.