Friday, August 14, 2009

சுதந்திர தினங்களும் தொலைந்துபோன தேசிய உணர்வும்!

'சுதந்திர தினம்'
ஒரு மயக்கும் வார்த்தை.

பள்ளிப் பருவத்தில் - 8ம் வகுப்பு வரை:
ஒருவித மிடுக்குடன் 'சீருடையை' அணிந்துகொண்டு என்றுமில்லாத 'ஒற்றுமையுணர்ச்சி' மேலோங்க, பள்ளி விழாவில் கலந்துகொண்டது இன்னும் நினைவிருக்கிறது. சுந்திர தினம் - குடியரசு தினமென்றால் பள்ளியில் கொடியேற்றுதல் ஒரு விழாவாகவே நடக்கும். யாராவது உள்ளூர் அல்லது பக்கத்து ஊர் பிரபலம்(!) விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார். கொடியேற்றிய பிறகு 'கொடிப்பாட்டு' என்று ஒன்று பாடுவோம். "தாயின் மணிக்கொடி பாரீர்....." என்று துவங்கி 'வந்தே மாதரம்' என்ற வார்த்தைகளை உச்சஸ்தாயில் பாடும் போது முதுகெலும்பு சிடுசிடுக்க, மயிர்கள் புல்லரிக்க, பலமுறை உணர்ச்சிப் பெருக்கோடு நின்றிருக்கிறேன்.

பள்ளிப் பருவத்தில் - 8ம் வகுப்பிற்குப் பிறகு:
9-ம் வகுப்பிலிருந்து பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டதால், பள்ளி விழாக்களில் நேரடிப் பங்கேற்பு இல்லை. ஆனால், அப்போதிருந்துதான் தலைநகரில் நடக்கும் அணிவகுப்பினையும் அங்கு விதவிதமாய் இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும் ஊர்வலங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். அணிவகுப்பில், 'இந்தியாவே தயாரித்த ஏவுகணை' என்றெல்லாம் சொல்லும்போது - அதன் அருகில் நடந்துசெல்லும் வீரனாக என்னையே கற்பனைசெய்துகொண்டு நெஞ்சை நிமிர்த்தியதுமுண்டு.

கல்லூரிக் காலத்தில்:
கல்லூரியிலும் இதே நிலை. எத்தனை தடவை பார்த்தாலும் திகட்டாத ஒரு இன்ப அனுபவம் இந்த 'அணிவகுப்பு'. 'நான் ஒரு இந்தியன்' என்று சொல்லி பலமுறை கர்வப்பட்டிருக்கிறேன். இந்தியா சொந்தமாக ஒரு ராக்கெட்டோட போல்ட் செய்தாக் கூட 'லேய் படிச்சியாடா, இந்தியா சொந்தமா இதச் செஞ்சிருக்கு. நாமதான்டா உலகத்திலயே மூணாவது/நாலாவது' இப்படியெல்லாம் சொல்லித்திரிந்திருக்கிறேன். சொந்தமாக இந்தியா செயற்கைக் கோள்களை ஏவியதையெல்லாம் ஒரு அபூர்வ நிகழ்வாக நண்பர்களிடத்திலே பரப்பியிருக்கிறேன். எங்கள் ஊரின் அருகாமையில் இந்தியாவின் சொந்த முயற்சியில்(ரஷ்யாவின் உதவியோடு) நடைபெற்றுவரும் ராக்கெட் இஞ்சின் 'சோதனை' ஒன்று அவ்வப்போது நடக்கும். அந்த சத்தமெல்லாம் நாடி நரம்பெங்கும் பாய்ந்து 'இந்திய' முறுக்கேற்றியதும் இந்தக் காலத்தில்தான்.
எப்போதும் 'அமெரிக்கா, அமெரிக்காதான் சூப்பர் நாடு' என்று சொல்லித்திரிந்த சக மாணவனை ஒரு அறைக்குள் அடைத்து, நாங்கள் ஒரு சில 'தேசபக்தர்கள்(!)' ஒன்று சேர்ந்து 'இந்தியா இஸ் கிரேட்' என்று சொல்ல வைத்திருக்கிறோம்.

சென்னைக்கு வந்த பிறகு:
சென்னைக்கு வேலைக்கு வந்த பிறகு, கடற்கரை, கோட்டைக்கு அதிகாலையிலே சென்று அணிவகுப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளைத் தவறாமல் பார்வையிட்டிருக்கிறேன். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது மட்டுமே 'தேசபக்தி' பெருக்கெடுத்து ஒடும் நண்பர்களின் 'தற்காலிக தேசபக்தியை' சகட்டுமேனிக்கு விமர்சித்திருக்கிறேன். நண்பன் ஒருவன் டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பை நேரடியாகப் பார்த்ததை விவரித்த போது, - 'ம்ம்.., நாமளும் ஒருநாள் கட்டாயம் பார்த்தாகணும்' என்று தீர்மானம் எடுத்து சில மாதங்கள்தான் ஆகின்றன.

ஆனால் இப்போதோ நிலைமை 'தலைகீழ்'. என்னடா வெங்காயம் 'தேசிய உணர்வு' என்று எண்ணுகிறேன் - சில உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தபின்.

தேச பக்தியை விட மனித உயிர்கள் எவ்வளவோ மேலானவை.

12 comments :

M.S.E.R.K. said...

ஆமாம். கண்ணீர் மல்க ஆமோதிக்கிறேன் நண்பா.

அத்திரி said...

நச்'னு சொல்லியிருக்கீங்க

Anonymous said...

அருமையான பதிவு. இப்பதிவு எனது உணர்வுகளின் வெளிப்பாடாகவே உணர்கிறேன். :)

Anonymous said...

உணர்வுமிக்க பதிவு,

வால்பையன் said...

அதில் பெரும்பங்கு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது!

SUMAZLA/சுமஜ்லா said...

//'இந்தியாவே தயாரித்த ஏவுகணை' என்றெல்லாம் சொல்லும்போது - அதன் அருகில் நடந்துசெல்லும் வீரனாக என்னையே கற்பனைசெய்துகொண்டு நெஞ்சை நிமிர்த்தியதுமுண்டு. //

இந்த உணர்வுக்காக பெருமைப்பட்ட நான், கடைசி வரிகளை படித்த போது, முகம் வாடி விட்டேன்.

ஜோ/Joe said...

ஆமாம் ..ஆமாம்.

Anonymous said...

100% TRUE

மகா நடிகன் said...

yes, it is true.
very good writing.

jackiesekar said...

உங்கள் கருத்தோடு சிறிதும் மாற்றம் இல்லாமல் அப்படியே உடன்படுகின்றேன்

ஊர்சுற்றி said...

பின்னூட்டம் இட்ட எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பின்னூட்டியதற்காக நீங்கள் தண்டிக்கப்படலாம். ஜாக்கிரதை! :)

kalyan said...

True thaan...
Naattai aalvorukku thaan yellaigal..
Makkalukku anaivarum makkal thaan..

Ada Poda... I think the current kids are not falling in the trap of this Imaginary good feeling about patriotism..

Namma thaan romba overa pesittu thirinjittome...