Thursday, May 14, 2009

நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன!

*உங்கள் வீட்டு முற்றம், கூடம் - இரவு நேரத்தில் இங்கு அமர்ந்து வானத்தை ரசித்திருக்கிறீர்களா?
*உங்கள் சகோதரர்கள், பக்கத்து வீட்டு அக்கா, அண்ணா, சின்னக்குழந்தைகள் இவர்களோடு ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தியிருக்கிறீர்களா?
*கட்டிலில் படுத்துக்கொண்டே அரட்டையடித்துக்கொண்டு இரவு நேர வானத்தின் எழிலை உற்று நோக்கியிருக்கிறீர்களா?

கொஞ்சம் மேகமும் அதிகமாய் நட்சத்திரங்களும் நிறைந்த, அந்த முன்னிரவு நேர வானம் - பல கதைகளையும் சுகமான அனுபவங்களையும் தரவல்லது. 


பள்ளிப் பருவத்திலே, இப்படியாகக் கழிந்த இரவுகளை அதிகம் அனுபவித்தவன் நான். வானம்தான் எத்தனை அழகு அதன் நட்சத்திரப் பூக்களின் அலங்கரிப்பில்! 
அந்த 'L' வடிவத்தில் அமைந்த நான்கு நட்சத்திரங்கள், வில் வடிவத்தில் அமைந்தவை, கொத்தாக ஒரு நட்சத்திரக் கூட்டம், பிரகாசமாய் ஒன்று தினமும் வெவ்வேறு இடத்தில்(அது நட்சத்திரமல்ல 'வெள்ளி' - சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள் என்று வெகு காலத்திற்குப் பின்தான் எனக்குத் தெரிந்தது!) - இவைகளின் இடங்களை மனதில் குறித்து வைத்துக் கொள்வதில் எனக்கு அலாதி இன்பம். சரியாக இரவு 8 மணிக்கு நட்சத்திரங்கள் அமைந்திருக்கும் இடத்தை வைத்து அது எந்த மாதம் என்று கண்டுபிடிக்கலாம். தெரியுமா உங்களுக்கு?

இந்த எல்லாச் சிதறல்களிலும் தனித்துவமாக எனக்குப் பிடித்தது 'செவ்வாய்'. செவ்வாய் கிரகத்தை நான் கிரங்கிப்போய் உற்று நோக்குவதை வைத்து 'உனக்கு செவ்வாய் கிரகத்தில்பெண் பார்த்துவிடுவோமா?' என்று கேட்ட பக்கத்து வீட்டு அக்கா, வானத்தின் விளக்கங்களைக் கதைகளில் வடித்த அடுத்த தெரு அண்ணா என்று விரிகிறது வானத்துடனான என் நட்பு. 

கல்லூரி வரும்வரை 'நிலா'வுடனான எனது தொடர்பு ஆரம்பித்துவிடவில்லை(பொண்ணு இல்லீங்க!). நிலாவைத் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் கல்லூரி நாட்களில்தான் ஏற்பட்டது. அப்போதுதான் கோள்களையும் நட்சத்திரங்களையும் 'தொலைநோக்கியில்' பார்க்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது. என் கனவுலகில், வானத்தில் மிதப்பதற்காகவே நள்ளிரவில் மிதிவண்டியில் பயணித்த நாட்கள் எனக்கு உற்சாகம் அளிப்பவை. எங்கள் கிராமத்திலும், ஏன் கல்லூரிக்காலத்திலும் கூட வானம் நட்சத்திரங்கள் நிறைந்து மகிழ்ச்சியாகவே காணப்பட்டது. 

இப்போது - இங்கே சென்னையில், முற்றமும் இல்லை கூடமும் இல்லை. நண்பன் சொன்னான் 'நகரத்தில் நட்சத்திரங்களைக் குறைவாகவே காண முடியும்' என்று- புகை, காற்று மாசுபாடு நட்சத்திரங்களை மறைத்து விடும் என்றான். நான் நம்பவில்லை. தொடர்ந்த முன்னிரவு அலுவல்களும், இல்லாத மொட்டைமாடி இரவுணவுகளும் வானத்துடனான எனது தொடர்பைக் குறைந்துதான் விட்டன. இங்கே நகரத்திலோ சினிமா, அரசியல் நட்சத்திரங்களே நம் கண்களில் அதிகம் மின்னுகின்றனர், அவ்வப்போது சின்னத்திரை நட்சத்திரங்கள். ஆனால் புகையால் மூடப்பட்டோ, மேகத்தால் சூழப்பட்டோ வானம் இல்லாவிட்டாலும் 'நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன' அல்லது 'நமக்கு எப்போதாவதுதான் நேரம் கிடைக்கிறது!'


கூடம் - வீட்டிற்கு உள்ளே நடுவில் அமைந்த திறந்தவெளி(படம் கீழே).


9 comments :

அபுஅஃப்ஸர் said...

நல்லபதிவு..
நினைவுகளை வெளிக்கொண்டதற்கு நன்றி

வாழ்த்துக்கள்

அமுதா said...

/*வானம்தான் எத்தனை அழகு அதன் நட்சத்திரப் பூக்களின் அலங்கரிப்பில்!*/
காணக் காண அதன் அழகில் உள்ளிழுத்து நேரத்தை மறக்கச் செய்யும். அழகாக அந்த நினைவுகளை வெளிக்கொண்டு வருகிறது தங்கள் பதிவு.

Suresh said...

எத்துணை அழகு அந்த வானமும் இந்த நட்சதிரமும்

வால்பையன் said...

கிராமபுரங்களில் மொட்டைமாடியில் இரவு படித்திருக்கும் போது, மெதுவாய் நகரும் சாட்டிலைட்டுகள் பார்க்கலாம்,

45 வினாடிகளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வரும்,

சில நேரங்களில் எதிரெதிர் திசைகளில் இடிப்பது போலெல்லாம் வரும்.

ஊர்சுற்றி said...

நன்றி அபுஅஃப்ஸர்.

நன்றி அமுதா. இதுதான் தங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

ஊர்சுற்றி said...

சுரேஷ்,

அந்த 'இந்த' நட்சத்திரம் - நான்தானே?!!! ஹிஹிஹி... :)

ஊர்சுற்றி said...

வால்பையன் அவர்களே,

மிகச்சரியாய் சொன்னீர்கள். நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் ஒரு சிறு திருத்தம்.

இந்த வகை (தாழ்மட்ட) செயற்கைக்கோள்கள் பூமியை ஒருமுறை சுற்ற சுமார் 90 நிமிடங்கள் ஆகும். மணிக்கு 25,000 முதல் 30,000 கி.மீ. வேகத்தில் இவை பூமியை சுற்றும்.

வால்பையன் said...

//இந்த வகை (தாழ்மட்ட) செயற்கைக்கோள்கள் பூமியை ஒருமுறை சுற்ற சுமார் 90 நிமிடங்கள் ஆகும். மணிக்கு 25,000 முதல் 30,000 கி.மீ. வேகத்தில் இவை பூமியை சுற்றும். //

தகவலுக்கு நன்றி!
நம்மளுட்க்ஹெல்லாம் செவி வழி செய்திகள் தான்
படிக்கவெல்லாம் நேரம் கிடையாது!

(படிக்க தெரியாததற்கு இப்படி ஒரு சாக்கு)

Anonymous said...

nandru.
naan blog ku puthusu