Tuesday, May 12, 2009

தேர்தல் நாள் - குளக்கரை - ஒரு கொலை! - உண்மையில் கதை!

அவருக்கு 55 வயது இருக்கும். எங்க ஊர் சின்னப்பிள்ளைகள் எல்லாம் அவரை 'சைக்கிள் மாமா' என்றுதான் கூப்பிடுவார்கள். அவர் குளித்து சுத்தமாக இருப்பாரோ இல்லையோ, அவரது சைக்கிள் அவ்வளவு பளபளப்பாக இருக்கும். ரிடையர்ட் ஆகிவிட்ட அவருக்கு 'போஸ்ட் ஆபிஸ் திண்ணை'யில உட்கார்ந்து அரட்டை அடிப்பதும், சின்ன சின்ன சாமான் வாங்குவதற்குக் கூட பக்கத்து ஊருக்கு சைக்கிள் மிதிப்பதுமே முக்கியமான வேலை. 'ரிடையர்ட் ஆன பிறகு வேற வேலையில்லாம சைக்கிளைத் துடைச்சி சுத்தம் செய்றாரு' இப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்பு கூட அவர் இப்படித்தானாம் - அம்மா சொன்னது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

சைக்கிள் சம்பந்தமாக அத்தனை தகவல்களும் அவருக்கு அத்துப்படி. புது வண்டி வாங்குவது, எப்படி பாகங்களை இணைப்பது, ஹாண்டில் பாரில் இருந்து, பால்ஸ் மாற்றுவது வரை எல்லாமே அவராகவே செய்து கொள்வார், கோட்டம் எடுப்பது கூட(சக்கரத்தில் (RIM)ஏற்படும் வளைவுகளை நிமிர்த்தி சரி செய்வது). டயர் தேய்ந்தால் கூட உடனே மாற்றிவிடுவார், அதுவும் அவர் வழியே தனிவழிதான். எல்லாரும் ஹெர்குலிஸ் என்றால் அவர் மட்டும் ஹீரோ சைக்கிள் வைத்திருப்பார்.

எங்கள் வீட்டு 'டீவி' பெட்டியை சரிசெய்ய 'வில்சனின்' அண்ணன் 'பெஞ்சமின்'னிடம் அம்மா கொடுத்திருந்தாள். வில்சன் என்னைவிட ஒருவருடம் முன்னால் பிறந்ததால் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். இந்த வில்சனுக்கு, தான்தான் அறிவாளி என்று நினைப்பு. எங்கே போனாலும் இவன்தான் எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசுவான். பக்கத்து ஊருக்குப் படிக்க போன பையன்களிலேயே அவன் ஒருத்தன்தான் வாட்ச் கட்டியிருந்தான். வெளிநாட்டிலிருந்து அவன் மூத்த அண்ணன் அனுப்பிவிட்டதாம். எல்லாப் பையன்களும் அவனிடம் மணிகேட்டுக் கொண்டுதான் வேகமாக சைக்கிள் மிதிப்பார்கள். அவனைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலாய் வரும்.

அன்று தேர்தல் நாள். எல்லாருக்கும் விடுமுறை. 'பெஞ்சமின்' அண்ணன், டீவி சரிசெய்ய அம்மாவிடம் பணம் வாங்க வீட்டுக்கு வந்திருந்தார். என் பிறந்த நாளுக்கு வைத்திருந்த பாயாசத்தில் ஒரு டம்ளர் குடித்துவிட்டு தனது தேய்ந்துபோன பழைய சைக்கிளில் பக்கத்தூருக்கு கிளம்பினார், டீவியில் எரிந்துபோன சில பாகங்கள் வாங்குவதற்காக. இங்கிருந்து பக்கத்து ஊருக்கு, குளக்கரை வழியில் சென்றால் 15 நிமிடம் ஆகும். அப்பொழுது மணி பன்னிரெண்டரை இருக்கும், அவர் 1 1/2 மணிக்கெல்லாம் திரும்பி வந்து டீவியை சரிசெய்தால், 3 மணிக்கெல்லாம் டீவி பார்க்கலாம். இந்த கணக்கு என் மனதில் ஒட, நான் விளையாடுவதற்காக வெளியே வந்தேன். போஸ்ட் ஆபிஸுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு 'வில்சன்' தனது எலக்ட்ரானிக் வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருசில பெருய தலைகளும், அவர்களோடு சைக்கிள் மாமாவும் உட்கார்ந்து எலெக்சன் முடிவுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வில்சன், தன் அண்ணனுக்கு கையசைத்து 'அண்ணே, இந்த வாட்ச்சுக்கு ஒரு செல் வாங்கிட்டு வாண்ணே - அலாரம் அடிக்கமாட்டேங்குது' என்று குரல் கொடுத்தான். பதில் அளிக்க பக்கத்தில் சென்ற பெஞ்சமின் அண்ணன், சைக்கிள் மாமாவைக் கண்டதும், 'ம்ம்' என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அது என்னமோ தெரியவில்லை, 'சைக்கிள் மாமாவுக்கு பெஞ்சமின் அண்ணனைக் கண்டாலே பிடிக்காது. பெஞ்சமின் அண்ணன் பக்கத்து ஊருல சைக்கிள் மாமாவுக்கு சொந்தக்காரப் பொண்ண சைட் அடிச்சாராம். டீவி சரிபண்ண போன இடத்துல இரண்டுபேருக்கும் லவ்வாகி, அது அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சு போச்சாம். அந்த அக்கா வீட்ல உள்ளவங்க சைக்கிள் மாமாட்ட சொல்லி பெஞ்சமின் அண்ணனை கண்டிக்க சொன்னாங்களாம். அப்போ சைக்கிள் மாமா பேசத் தெரியாம பேசி பெஞ்சமின் அண்ணன்கிட்ட நல்லா ஏச்சு வாங்கிட்டாங்களாம். அண்ணிக்கி இருந்து ரெண்டு பேரும் முறைச்சி பார்த்துட்டேதான் இருக்காங்க' என்று இந்த 8-ம் வகுப்பு படிக்கும் 'சுந்தர்' பெரிய ஆள் மாதிரி பேசினது என் மனதிற்குள் விரிந்து மறைந்தது.

மற்ற எதையும் கவனிக்காமல் கோவில் கிரவுண்டுக்கு நடையைக் கட்டினேன். அங்கே ஒருத்தனையும் காணோம். தேர்தல் என்பதால் அங்கே விளையாடக்கூடாதாம். ஊருக்கு வடக்குத் தெருவில் விளையாட்டுச் சத்தம் கேட்க அங்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். லேசாகத் தூறல் விழ ஆரம்பித்தது, பின் ஓய்ந்துபோனது - வெயிலுக்கு இதமாக. தோராயமாக அரைமணிநேரம் போயிருக்கும், சுந்தர்தான் வந்து சொன்னான். 'நம்ம வில்சனோட அண்ணேன் பெஞ்சமின் இருக்காவலா, அவியள குளத்தாங்கரையில யாரோ வெட்டிபோட்டுனானுவளாம்'

நாங்கள் கிடைத்த அரைவண்டி, முக்கால்வண்டி(சைக்கிள்தான்) எல்லாம் எடுத்துக்கொண்டு ஒட்டமும் நடையுமாக குளக்கரைக்குச் சென்றோம். எல்லாம் முடிந்துபோயிருந்தது. குளக்கரையை ஒட்டியுள்ள கிணற்றைச் சுற்றி மண்டியிருந்த புதரில் பெஞ்சமின் அண்ணாவைக் குதறிப் போட்டிருந்தார்கள்.

அதேநேரம் 'சைக்கிள் மாமா' எதிர்த்திசையில் இருந்து வந்தார். வந்தவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரியவர்களிடம் பேச ஆரம்பித்தார், 'நம்ம வட்டவயிறன் இருக்காம்லா, அவன்தான் சொன்னான். நான் இப்போதான மேக்க போனேன். என் கையில சிக்காம போயிட்டானுவளே! வட்டவயிறன் போலீஸ்ட்ட சொல்லியிருக்கானாம்டே, இப்போ வந்துருவாங்க'. இதை பெரியவர்கோடு நின்று கேட்டுக்கொண்டிருந்த வில்சன் தன் கடிகாரத்தை இரண்டு மூன்றுமுறை பார்த்துக்கொண்டு சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டான்.

போலீஸ் வந்தார்கள். 'யாருடே முதல்ல பாத்தது? எத்தனை பேரு செஞ்சான்டாவது தெரியுமாடே?' என்ற பத்துநிமிட கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. வில்சன் மெதுவாகச் சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசினான். இன்ஸ்பெக்டர் 'சைக்கிள் மாமாவையும்' மற்ற சிலரையும் விசாரணைக்காக கூட்டிச் சென்றார். அன்று சாயங்காலமே சைக்கிள் மாமா, 'கொலையாளிகளை தான் பார்த்ததாகவும், சம்பவ இடத்தைக் கடக்கும்போது அந்த நான்குபேரும் பெஞ்சமின் அண்ணனை கிணற்றுக்கு அருகே இழுத்துக்கொண்டு சென்றதாகவும், இதற்கெல்லாம் மேலே அவர்களைத் தனக்குத் தெரியு்மென்றும், அவர்கள் பெஞ்சமின் அண்ணனைக் காதலித்த அந்த பெண்ணுக்கு சொந்தகாரப் பையன்கள் என்றும்' ஒப்புக்கொண்டார்.


இந்த வில்சன் போலீஸிடம் அப்படி என்ன பேசினான்? தெரிஞ்சிருந்தா பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுப் போங்கள். பிடிக்கவில்லை என்றாலும் பின்னூட்டத்தில் திட்டுங்கள்.

3 comments:

வால்பையன் said...

அண்ணன் குளக்கரை வழியாக போவது சைக்கிள் மாமாவுக்கு தெரியும்னு சொல்லியிருப்பான்!

Unknown said...

சைக்கில் மாமாவ புடுச்சீங்கன்னா... அவரோட புது சைக்கிள லாவிக்கலாமின்னு சொல்லீருப்பான்....!!!!!

ஊர்சுற்றி said...

இந்த மொக்கை கதைக்கு நான் இனிமே வந்து விடை வேற சொல்லணுமா?!!!

என்னதான் மொக்கையா இருந்தாலும் வந்து மறுமொழியிட்ட வால்பையனுக்கும், லவ்டேல் மேடிக்கும் மனமார்ந்த நன்றிகள். :)))