Monday, February 26, 2007

ஆலைகள் வைப்போம், கல்விச் சா(ஆ)லைகள் வைப்போம்?!

கல்லூரியில், நான் படித்த துறைக்கு, வரும் ஆண்டுகளுக்கான அங்கீகாரம் பெரும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக, பழைய மாணவர்களுடனான "கலந்துரையாடலில்" பங்கு பெற, கடந்த சனிக்கிழமை கல்லூரிக்கு சென்றிருந்தேன்.
நான் பொறியியல் கல்லூரியில் நுழைந்த முதல் நாளில் வகுப்பு எடுத்த பேராசிரியரை அன்றும், முதலாகச் சந்திதேன். நான் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்றிருந்ததாலும், கணக்கு எனக்கு கனாவில் மட்டுமே எளிதாகத் தெரிந்ததாலும், எனக்கு இருந்த தயக்கங்களை நீக்கியவர் அவர். எப்போதும் சுறுசுறுப்புடன், முகத்தில் புன்னகையுடன் இருப்பவர். மாணவர்களுடன் எளிதாகப் பழகுபவர்.

அன்று நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, அவரோடு உரையாடிக்கொண்டிருந்த போது, ஏதோ ஒன்று அவரிடம் தொலைந்து போயிருப்பதை கண்டேன்................சற்று நேரத்தில் அவரே அனைத்தையும் விளக்கினார்.

அவர் கூறியவை,

" முன்பு போல் இல்லை. இப்போது, கல்விச் சாலைகள், கல்வி ஆலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. வெறும் புத்தகத்தை மனனம் செய்து மாணவர்களிடம் ஒப்பித்து, அதை அவர்கள் தேர்வில் எழுதினால் போதும், தோல்வி இல்லாமல் கடந்து சென்றால் மட்டும் போதும் என்றாகிவிட்டது.
இதற்கு முக்கிய காரணமாக பெற்றோர்களும் இருக்கிறார்கள். பள்ளிகளில் பாடம் நடத்தியது போலவே கல்லூரிகளிலும் நடத்த வேன்டும் என்று நினைக்கிறார்கள். தன் பிள்ளை கண்டிப்போடு வளர வேன்டும், தேர்வு நன்றாக எழுதுவதற்கு மட்டும் படிக்க வேண்டும், ஒரு நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று எல்லா "வேண்டும்" களையும் 'பெற்றோர் ஆசிரியர் சந்திப்ப்லும்' கூறுகிறார்கள்.
இதனால், புரிய வேண்டும், படிப்பில் ரசனை வேண்டும், ஆர்வம் வேண்டும், அறிவு வளர வேண்டும், சுயமாக சிந்திக்க வேண்டும் என்ற "வேண்டும்"கள் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் காணாமல் போய், கடைசியில் இப்போது தொலையும் நிலையில் உள்ளது".

அவர் பேச்சிலிருந்த உண்மையை ஒப்புக்கொண்டு (ஓரளவிற்கு நானும் இவற்றை எல்லாம் அனுபவித்து இருந்ததால்), கல்லூரியை விட்டு வெளியேறும் போது கனத்த உள்ளத்தோடு வரவேண்டியதாயிற்று.

No comments: