Wednesday, July 6, 2011

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிராக!

சேவ்-தமிழ்ஸ் (http://save-tamils.org) முயற்சியால், கடந்த ஜூன் 2 ஆம் தேதி பெங்களூரூவில், கேரள, ஆந்திர, கர்நாடக மற்றும் தமிழக மனித உரிமை அமைப்புகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ‘போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தைத்(“Forum against War Crimes and Genocide”) தொடங்கின. அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு(Forum Against War Crimes and Genocide - Karnataka State Committee), சார்பில் ஜூலை 2, பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவை வழங்கினர்.

மன்றத்தின் கர்நாடகக் குழுவில்: மக்கள் சனநாயக முன்னணி(PDF), தலித் சுயமரியாதை இயக்கம்(DSR), பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்(Pedestrian Pictures), கர்நாடக மாணவ அமைப்பு(KSO), கர்நாடக ஜன சக்தி & கர்நாடக வித்யார்தி வேதிகே, சமதா மகிள வேதிகே (All India Progressive Women’s Association), புதிய சோஷலிச மாற்று - Tamils solidarity, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு(NCHRO) மற்றும் அனைத்து கர்நாடக தமிழ் அமைப்புகள் உள்ளன.

மாலை 4:30 மணியிலிருந்து 8:30 வரை நடந்த நிகழ்வில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு முழுவதும் கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வெளிப்படும் புகைப்படங்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன.


நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்தவர்கள்:
*மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த திரு.நகரிகரே ரமேஷ்
*கர்நாடகாவில் முக்கிய எழுத்தாளரும், சுயநிர்ணய உரிமை போராட்டங்களுகு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவருபவருமான திரு.ஜி. இராமகிருஷணன்
*பெங்களூரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு. பால் நியூமன்
*பெங்களூரு சட்டப் பல்கலைக் கழகத்தில் கெளவரவப் பேராசிரியராக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலரான திரு.ஹரகோபால் (APCLC)
*புதிய சோஷலிச மாற்று இயக்கத்தைச் சேர்ந்த திரு.ஜெகதீஸ்
*காஷ்மீரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு.காலித் வாசிம்

********

Monday, June 27, 2011

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வு

இடம்: மெரினா கடற்கரை, சென்னை
நாள்: ஜூன் 26, 2011.



சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் 
(International Day in Support of Victims of Tortured)

சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாளான ஜூன் 26-ல், இலங்கையில் போர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் அடக்குமுறைகள் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காகவும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டும் வதைக்கப்பட்டும் துன்பங்களை அனுபவித்துவரும் தமிழ் மீனவர்களுக்காகவும், மெழுகுதிரி(மெழுகுவர்த்தி) ஏந்தி ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிருந்து ஒருங்கிணைத்தது மே 17 இயக்கம்.

ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவு தெரிவித்தும், போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்சே மற்றும் கூட்டத்தாரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரியும், ஈழத்தில் மக்கள் அமைதியாக வாழ வழிகளை ஏற்படுத்தக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன!



ஈழம் குறித்த எண்ணத்தோடு கூடியிருந்த அத்தனை ஆயிரம் மக்களுக்கு நடுவே அமர்ந்திருந்த அந்த உணர்வு, மிக உன்னதமாக இருந்தது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பொதுநிகழ்வுகளில் நான் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இது. பாதிக்கு மேற்பட்டோர் முதல்தடவை வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.



வேதனைகளை அனுபவிக்கும் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ராஜபக்சே மற்றும் இலங்கை பேரினவாதக் கூட்டத்திற்கு தகுந்த தண்டனையும், அடைபட்டிருக்கும் மக்களுக்கு இயல்பு வாழ்வுமே தற்காலத் தேவை, என்பது யாரும் சொல்லாமலே விளங்கியது!

இலங்கை பேரினவாதத்தின் சித்ரவதைகளை அனுபவிக்கும் நம் மக்களுக்க்கு 
ஆதரவாக, எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இன்றி இத்தனை ஆயிரம் மக்கள் ஒன்றுதிரண்டது, இன்னும் கொஞ்சம் நம்பிக்கையையும், ஏராளமான நெகிழ்ச்சியையும் கொடுத்தது!  


நல்ல ஒருங்கிணைப்பு:
எல்லோரும் பாராட்டும் விதத்தில் நிகழ்வை ஒருங்கிணைத்த இந்தக் குழுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விசயங்கள் நிறைய இருக்கின்றன.

படங்கள்:
நண்பன் குமார். இன்னும் சில புகைப்படங்களுக்கான சுட்டி இங்கே!

Wednesday, June 22, 2011

மெல்லிதயம் படைத்தோரே மெழுகுதிரி(வர்த்தி) ஏந்திட மெரினா நோக்கி வாரீர்



இலங்கையில் கடந்த 2009-ம் வருடம் சிங்கள பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட (1,46,000) ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் தமிழர்களுக்காகவும், 
இதில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 30000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காகவும், 
80000 க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக மாற்றப்பட்ட கொடுமைக்காகவும்,

இலங்கை கடற்படையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், 
காணம்ல்போன 700க்கும் மேற்பட்ட மீனவர்களுக்காவும், 
சிங்கள கடற்படையால் உடல் ஊனமுற்ற 2000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அவர் அவர் குடும்பத்துடன் ஒன்று கூடுவோம்..

மெல்லிதயம் படைத்தோரே
மெழுகுதிரி எந்தி அஞ்சலி செலுத்த
மெரினா நோக்கி வாரீர்..

தேதி : ஜூன் 26, மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை
ஒருங்கிணைப்பு: மே 17 இயக்கம்.

ஜூன் 26 - சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் (International Day in Support of Victims of Torture)

தொடர்பான தளங்கள்:

Wednesday, March 2, 2011

தமிழக மீனவர்களுக்காக உண்ணாநிலைப் போராட்டம்

மீனவர் தாக்குதல் தொடர்பாக ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் தட்டச்சிக்கொண்டிருந்த எனக்கு இதைக் கேட்டவுடனே, அதுவும் என்போன்றவர்கள் நடத்தும் ஒரு எதிர்ப்பு நிகழ்வு என்பதால், யார் நடத்துகிறார்கள்? அவர்கள் நோக்கம் என்ன? பரவலாகச் சென்று சேருகிறதா? மீடியா வருமா? என்ற எந்தக் கேள்விகளும் இல்லாமல் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில் கலந்துகொண்டது உண்மையில் மனநிறைவையும், மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து ஏகப்பட்ட புதிய விசயங்களும் புரிதல்களும் கிடைக்க உதவியது.

பிப்ரவரி 19-ல் இப்போராட்டம் ‘சேவ்-தமிழ்ஸ்’ (http://www.save-tamils.org/) என்ற குழும நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. (’வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ என்ற இவர்களது ஆவணப்படம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் - ஈழத்தின் வரலாறு பற்றிய அற்புதமான முயற்சி) இவர்களில் சிலர் ‘பெரியார் திராவிடக் கழக’த்தோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதால் சனிக்கிழமை காலையிலேயே வந்திருந்த கருஞ்சட்டைகளுடன் நானும் கலந்துகொண்டேன். 

உண்ணாநிலைப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

1. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியி்ல் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை மறுக்காதீர். பாக் நீரிணையை இரு நாட்டு மீனவர்களுக்கும் பொதுவான மீன் பிடி மண்டலமான அறிவித்திடுக.

2. சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டுக் காயமடைந்த தமிழின மீனவர்களுக்கு மருத்துவம், நிதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்குக.

3. சிங்களக் கடற்படையினர் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கடலில் குதித்துக் கரை திரும்பாத தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்குத் துயர்தணிப்பு உதவி வழங்குவதற்கென சட்டங்களை உரிய வகையில் திருத்துக.

4. 500க்கும் மேற்பட்ட தமிழக மீன்வர்களைக் கொன்றொழித்த சி்ங்கள இன வெறி அரசுடனான அரசியல், அரச தந்திர, பொருளாதார, பண்பாட்டு உறவுகளைத் துண்டித்திடுக.


கவிஞர் இன்குலாப் சில கருத்துக்கள் கூறி போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் நான் உள்வாங்கிக்கொண்ட சிலரது கருத்துக்களை முடிந்தவரை அதன் சாராம்சம் கெட்டுவிடாமல் தர முயற்சித்துள்ளேன்.
*******

இன்குலாப்:
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் மக்கள் பலியானபோது பதறி எழுந்த ஊடகங்கள் தமிழக மீனவர்கள் விசயத்தில் மௌனம் காப்பது ஏன்? காஷ்மீரில் பிரச்சினை என்றாலோ, ஆஸ்திரேலியாவில் ஒருவனுக்கு அடிவிழுந்தாலோ கூவிடும் இந்தி(ய) ஊடகங்கள் தமிழன் மீதான தாக்குதலை அதுவும் கொலைவெறித் தாக்குதலை (கொலைகளை) கண்டுகொள்ளாதது ஏன்?

அய்யநாதன் (தமிழ் வெப்துனியா ஆசிரியர்):
இந்திய மீனவர்கள் சுட்டுக்கொலை என்றுதான் நீங்கள் படிக்கிறீர்கள். ஆனால் சிங்கள மீனவர்கள் சுட்டுக்கொலை என்று எங்காவது செய்தி உண்டா? அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்ததேயில்லையா! மீனவர்களின் மீதான தாக்குதல் 1974-ல் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குப் பரிசாக அளித்தபோதுகூட ஏற்படவில்லை. அதற்குப் பின்னரும் இருநாட்டு மீனவர்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மீன் பிடித்து வந்திருக்கிறார்கள். ஆனால், 1976-ல் இருநாட்டு அயலுறவுச் செயலாளர்களுக்கு இடையில் நடந்த கடிதப் பரிமாற்றத்திற்குப் பிறகு சிங்கள ராணுவம் தாக்குதல்களை ஆரம்பித்தது. புலிகள் அங்கே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது புலிகளைச் சுடுகிறோம் என்று மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது புலிகளும் இல்லை! பிறகு ஏன் சுடுகிறார்கள்?

ச.பாலமுருகன் (சோளகர் தொட்டி, நாவலை எழுதியவர்):
ஒரு குற்றம் நடைபெற்று அது காவல் துறையின் கவனத்திற்கு வரும்போது, முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்படவேண்டும்; அதில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவேண்டும். இதுவரை கொல்லப்பட்ட மீனவர்கள் 500க்கும் மேல். ஆனால், சுமார் 130 FIR களே பதியப்பெற்றுள்ளன. இவற்றிலும் பெரும்பாலான வழக்குகள், ‘குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று கூறி முடிக்கப்பட்டுள்ளன (சிங்கள ராணுவம் என்ன, யார் கண்ணிற்கும் புலப்படாமலா இயங்கிவருகிறது?).
ஒருநாட்டின் குடிமகன் அவமானப்படுத்தப்பட்டுக் கொல்லப்படுவது அந்த நாட்டை ஆளும் அரசுக்கே இழைக்கப்பட்ட அவமானமாக எண்ணி, ஆளுவோர் கொதித்து எழவேண்டாமா? தமிழக மீனவனும் இந்தியக் குடிமகன் இல்லையா? அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் சில மாணவர்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு, உயிர்கள் போய்க்கொண்டிருக்கும் தமிழக மீனவன் விசயத்தில் எந்தக் கோபமும் வராதது ஏன்?!

அருள் எழிலன்(ஊடகவியலாளர்):
மீனவர்கள் விசயத்தில் தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருபவர்கள் இங்கிருக்கும் பிரதான கட்சிகள். அதுபோக, தமிழ்த் தேசிய இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் தொடர்ந்து இவ்விசயத்தில் உறுதியில்லாத நிலையிலேயே இருக்கின்றன, தமிழக மீனவர்களை ஏமாற்றி வஞ்சித்து வருகின்றன. இதுவும்போக, பெரும்பாலான மீனவர்கள் சார்ந்திருக்கும் ‘கிறிஸ்தவ’ மதத் தலைவர்கள் அதிக அளவில் தமிழக மீனவர்களை வஞ்சித்து வருகிறார்கள். வெறுமனே திருச்சபை, போதனைகள், பிரசங்கங்கள், பங்கு, அன்பியம் என்று கூறி மக்களை போராட்ட குணத்திலிருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறது கிறிஸ்தவ மதம்! இவ்வெல்லாக் காரணங்களாலேயே மீனவர்களுக்கு ஆதரவாக வலுவான போராட்டம் இதுவரை வரவில்லை.

பேட்ரிக்(மீனவர்களின் பிரதிநிதி):
கொல்லப்பட்ட மீனவர்கள் 500க்கும் மேல். சிங்கள கொடுங்கோல் ராணுவத்தின் சித்ரவதையை அனுபவித்தும், ஆறாக் காயங்கள் பட்டும் முடங்கிப் போயிருக்கிறவர்கள் இன்னும் பலர். சிறுவயதில் தந்தையுடன் கடலுக்குப்போகும்போது, கச்சத்தீவில் கரையிறங்கி உண்டு, இளைப்பாறிய ஞாபகம் இன்னமும் எனக்கு இருக்கிறது! அப்போது, அங்கே எதிர்ப்படும் சிங்கள கடற்படையிடமும் சிங்கள மீனவர்களிடமும் சாப்பாட்டுப்பொருட்களை பங்கிட்டுக்கொள்ளும் அளவிற்கு நட்பு இருந்தது ஒருகாலத்தில்! மீனவர்கள் இப்போதெல்லாம் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை, அவர்களுக்கு வலிமை இல்லை என்றெல்லாம் நினைத்துக்கொள்ளாதீர்கள். எங்களைப்போல் வலிமையானவர்கள் கிடையாது. தண்டவாளங்களையும் தயக்கமில்லாமல் பெயர்த்தெடுப்போம். ஆனால், இப்போது இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகளால் கூர்தட்டிப்போய்க் கிடக்கிறோம்!

முருகானந்தம்(மீனவர்களின் பிரதிநிதி):
கச்சத்தீவு இலங்கைக்குப் பரிசளிக்கப்பட்டபோது இருந்த அதே மத்திய, மாநில அரசுகள்தான் இப்போதும் இருக்கின்றன. ஒரே வித்தியாசம், இப்போது ஒரே அணியில் இருக்கின்றன. ஆளுங்கட்சியினரே‘மீனவர்களைக் காப்பாற்றுங்கள்’ என்று குரலெழுப்பி, சாலைமறியலில் ஈடுபட்டுக் கைதாகிச் சிறைசென்று, சாயங்காலம் வீட்டுக்குச் செல்லும், ஒரு அவலநிலையில் நாம் இருக்கிறோம்.

மோட்சம்(மீனவப் பெண்மணி):
மற்ற எல்லா ஊர்களையும்போலவே மீனவர்களும் ஏகப்பட்ட நெருக்கடிகளையும், அதிகாரிகளின் அலட்சியப்போக்கையும் சந்தித்து வருகிறார்கள். எந்த அதிகாரியும் எங்களுக்கு உதவ முன்வருவதில்லை. எங்களுக்கு எதற்கு இலவச டீவியும் அடுப்பும்?
உயிரே போய்க்கொண்டிருக்கும்போது உலை வைப்பதா முக்கியம்?!

இருதய மேரி(மீனவப் பெண்மணி):
அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 6 மாதம்தான் ஆயிற்று. கடலுக்குப்போன அவள் கணவன் சுடப்பட்டு உயிரில்லாமல் கரைக்கு வந்தான். இவள், பித்துப்பிடித்தாற்போல் இருக்கிறாள். ஏற்கெனவே 5 பெண்களை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் வீட்டில் பைத்தியம்போல இருந்துகொண்டிருக்கிறாள். எதையும் பேசுவதும் கிடையாது. இந்தமாதிரி நிச்சயம் யாராவது ஒருவர், இலங்கையை ஒட்டியுள்ள எல்லாக் கடற்கரைக் கிராமங்களிலும் இருப்பார்.

அஞ்சப்பன்(பஞ்சாயத்துத் தலைவர், வெள்ளப்பள்ளம்):
500க்கும் மேற்பட்ட உயிரிழப்பு, சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி கடலில் குதித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை, 2000க்கும் மேற்பட்ட உடல் பாதிப்புகள், சுமார் 9000 துப்பாக்கிச் சூடுகள்! இதுவரை சிங்கள கடற்படையினால் தமிழக மீனவர்களுக்குக் கிடைத்துள்ளவை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காமல் நாம் கச்சத்தீவை மீட்க வேண்டும்.

ஜோ டி குரூஸ்(ஆழி சூழ் உலகு, கொற்கை நாவல்களை எழுதியவர்):
இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் ஐ.டி. துறையினருக்கு எனது பாராட்டுதல்கள். வெறும் கணிப்பொறியில் மட்டுமில்லாது வீதியிலும் இறங்கிப் போராடும் நிலைக்கு வந்ததற்காக வாழ்த்துக்கள். ‘அறம் செய்ய விரும்பு’ என்றாள் அவ்வை. ‘அறம் செய்’ என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது மனதின் உள்ளிருந்து வெளிப்படும் ஆசையாக இல்லாமல் பேருக்கு ‘நானும் செஞ்சேன்’ என்பதாகவே முடியும் என்பதால்தான் ‘விரும்பு’, அதை விரும்பிச் செய் என்றாள் அவ்வை. அதுபோல நல்லது செய்யவேண்டும் என்பது உள்ளிருந்து வர வேண்டும் - வெறும் பாராட்டுக்கு இல்லாமல்.

விடுதலை ராஜேந்திரன்(பெரியார் திராவிடர் கழகம்):
கச்சத்தீவு சேதுபதி மன்னருடையதாக இருந்தது. தமிழகத்தின் ஒருபகுதியே கச்சத்தீவு என்பதற்கு வரலாற்று ஆவணங்கள் நிறையவே இருக்கின்றன. 1956-ல் சிங்கள கடற்படை ‘கச்சத்தீவு’ பகுதியில் ஒரு பயிற்சி முகாம் நடத்தியது. அப்போது பிரதமரிடம் தெரிவித்தபோது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 70களில் பாகிஸ்தான் இலங்கையில் ஒரு விமான தளம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசுக்குத் தகவல் வந்தது. ஏற்கெனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா மீதிருந்த வெறுப்பை இதன்மூலம் தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் ஆவலாயிருந்தது. அதனால் இந்திராகாந்தி அம்மையார் தமிழகத்தில் யாரோடும் கலந்துரையாடாமல் ‘கச்சத்தீவை’ இலங்கை அரசுக்குப் பரிசாக வழங்கினார். ஆனால் அத்தீர்மானம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறவில்லை. இந்நிலையில் தமிழக அரசு இதழில், கச்சத்தீவுப்பகுதி நீக்கப்பட்டது. எப்படியிருந்தாலும் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது செல்லாது என்று சில வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். என்னதான் மீனவர்கள் எல்லைதாண்டிச் சென்றாலும் ‘ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின்’ சர்வதேச எல்லை விதிகள், யாரையும் ‘சுட்டுக்கொல்வதற்கு’ அதிகாரம் கொடுக்கவில்லை. மீனவர்கள் தாக்கப்படுவதும், இங்கிருந்து யாராவது இலங்கை செல்வதும், திரும்பி வந்து ‘இனி தாக்கமாட்டோம் என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள்’ என்று கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது. உண்மையில் இது எவ்வளவு அபத்தமானது என்று யோசித்துப்பார்த்தால் புரியும். இந்தியா போன்ற ஒரு வல்லரசாக முயற்சிக்கும் ஒரு நாடு, இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டின் அதிகாரி கூறும் ஒப்புதலையே தான் வெளியிடுவது கேவலமானது அல்லாமல் வேறு என்ன? இவர்கள் அல்லவா உறுதிமொழியை நமக்குத் தரவேண்டும்? அல்லது ‘இனி தாக்குதல் தொடுக்கக்கூடாது’ என்று இலங்கையை இவர்களல்லவா மிரட்டவேண்டும்?!

செந்தில் (www.save-tamils.org):
இந்தியா இலங்கைக்கு இடையே சரியாக நடுவில் இல்லை இந்தக் கச்சத்தீவு. இந்திய கடற்கரையிலிருந்து உள்ள தூரம் இலங்கையிலிருந்து உள்ள தூரத்தைக்காட்டிலும் குறைவு. எனவே சர்வதேச எல்லை எப்படி நமக்குக் குறைவாகவும் அவர்களுக்கு அதிகமாகவும் இருக்க முடியும்? (கச்சத்தீவு எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள இந்தச் சுட்டியைக் கிளிக்கவும் ‘கச்சத்தீவு வரைபடம்’)
கச்சத்தீவை மீட்பது நம் மீனவர்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல, என்றபோதிலும் இது இப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய நகர்வில் நம்மை ஒருங்கிணைக்கும்.

பாலபாரதி (ஊடகவியலாளர், மூத்த பதிவர்):
என் பால்யகால நண்பன் ஒருவன். 4 பேராக கடலுக்குப் போனவர்கள் 2 பேர் கொல்லப்பட்டு அவனது அப்பாவும் இவனும் மட்டும் உயிரோடு கரைக்குத் திரும்பினார்கள். கரைக்கு வந்ததில் இருந்து அவன் பேசவேயில்லை. எதையாவது வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான். யாராவது முதுகில் தட்டி என்ன என்றால் மட்டுமே திரும்பினான். கரைக்குத் திரும்பிய மூன்றாவது நாளில் அவனது அப்பா தற்கொலை செய்துகொண்டார்! எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இவனது நிலைமை மேலும் மோசமாகவே, மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். மூளை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சென்னைக்குக் கொண்டுசெல்லும்படியும் கூறினார்கள். கீழ்ப்பாக்கத்தில் சிலமாதங்கள் இருந்தபிறகு, சற்றே தெளிவானான். ஊருக்கு மீண்டும் சென்றபிறகு மெல்ல மெல்ல அவனிடம் பேச்சுக்கொடுத்ததில் தெரியவந்தன அந்த உண்மைகள். உறவினர்களாகச் சென்ற 4 பேரையும் ஓரினச்சேர்க்கைக்குக் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர் சிங்கள வீரர்கள்(வெறியர்கள்). உடன்பட மறுத்தவர்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். தகப்பனும் மகனும் மீண்டு வந்திருக்கின்றனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் அப்பா! இதுபோல் இன்னும் எகப்பட்ட அதிர்வுகள் கடற்கரையெங்கும் பரவிக்கிடக்கின்றன.

நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக நான் என்ன செய்துவிட முடியும்? என்று நினைத்து ஒன்றும் செய்யாமல் இருந்துவிடாதீர்கள். பேசுங்கள். தொடர்ந்து பேசுங்கள். உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம், பக்கத்து வீட்டுக்காரர்களிடம், தெரிந்தவர்களிடம், கடைக்காரர்களிடம், அலுவலக நண்பர்களிடம், பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களிடம், பஸ்ஸில் பழக்கமானவர்களிடம், என்று தொடர்ந்து பேசுங்கள். பிரச்சினை மீதான தெளிவுகளை எல்லோரிடமும் கொண்டுவாருங்கள். ஊடகங்கள் தானாக பேச ஆரம்பிக்கும்.

இவர்கள் தவிர மா.சிவகுமார் (மூத்த பதிவர்) மற்றும் சில பதிவர்களும், வழக்கறிஞர்களும், இளைஞர்களும் வந்திருந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.

(நிகழ்விலிருந்து எடுத்த குறிப்புகளிலிருந்தே தகவல்கள் தரப்பட்டுள்ளன, அவர்கள் பேசியவை அப்படியே பதியப்படவில்லை).

Wednesday, December 15, 2010

மிஷ்கினின் உதவி இயக்குனர்களுக்கு ஒரு கடிதம்!

மிஷ்கின் தமிழ் வலைப்பூக்களைப் படிப்பதில்லை என்று தோணுவதால், உதவியாளர்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கண்ணில் பட்டால் அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடவும்....!

''மிஷ்கின்,
நீங்கள் உலகப்படங்களைப் பார்ப்பதிலும், அயல்மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதிலும் நேரம் செலவிடுவதால், தமிழில் படிக்க உங்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம்! சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் உங்களுடைய பேச்சில் இது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது! விழாவில், நந்தலாலா படத்தைப் பற்றிப் பேசும்போது, சில காட்சிகளைக் கூறி, அவற்றை யாரும் சிலாகித்துப் பேசவோ எழுதவோ இல்லையே என்று ஆதங்கப்பட்டீர்கள். (உ.ம். முதல்காட்சியில் சிறுவன் முகத்துக்கு நேரே கேமரா விரிவது, தூங்குகிறவர்களின் பின்னணியில் பாம்பு நெளியும் காட்சி, இன்னும் சில.) நீங்கள் தமிழ் வலைப்பூக்களை வாசித்திருந்தீர்களேயானால், பாராட்டி எழுதப்பட்ட விமர்சனங்களில் எத்தனையோபேர் இந்தக் காட்சிகளை மிகவும் சிலாகித்து, கொண்டாடி எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள்! ஆனால் உங்களுக்குத்தான், ஆங்கில எழுத்துக்களைப் படிப்பதற்கே நேரம் போதவில்லையே! பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?! 'காப்பி என்று சொல்லிவிட்டார்கள்', என்று காதில் விழுந்த தகவல்களை வைத்துக்கொண்டு பொங்கி எழுகிறீர்கள்! ஆனால் வலையுலகில் உங்கள் படத்தைக் கொண்டாடியவர்களே அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும், 'தமிழின் முதல் படம்' என்கிற அளவிற்குப் பாராட்டிப் பேசியவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது தெரியுமா?

'காப்பி' அடிக்கவில்லை, இது என் உணர்வில் வளர்ந்த கதை என்கிறீர்கள், ஆனால் 'கிகுஜிரோ'வின் (கிட்டத்தட்ட) அத்தனை கதாப்பாத்திரங்களும் 'நந்தலாலாவி'ல் வலம் வருகிறார்களே, அதை என்னவென்று கூறுவது? கதையில் வரும் சில காட்சிகள் ஒரு 'இன்ஸ்பிரேசனாக' (குருநாதருக்கு மரியாதை செலுத்தும் விதமாக) வைத்தேன் என்கிறீர்கள்! கதாப்பாத்திரங்களும் அப்படியேவா?

இதுமாதிரி இன்னும் எத்தனையோ கேள்விகள் பதிலளிக்கப்படாமலே இருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் உங்களை 'தமிழின் மிகத் திறமையான இயக்குனர்களுள் ஒருவர்' என்று ஒத்துக்கொள்கிறோம்! ஆனால் உங்களை ஒரு மிகச் சிறந்த 'படைப்பாளி' என்று கூற முடியாது! இன்னும் நான்கைந்து படங்கள் 'நந்தலாலா' போல, இல்லை அதைவிட அதிகமாகச் செய்யுங்கள்! நீங்கள் ஒரு 'அறிவுஜீவி' என்ற பட்டத்தை நாங்களே கொடுக்கிறோம்! அதை நீங்களே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்!''

உண்மையான உலகப்படங்களைப் படைத்திட வாழ்த்துக்களுடன்,
ஊர்சுற்றி ஜோன்சன்.