Tuesday, November 8, 2011

லஞ்சத்தை ஊக்குவிக்கும் அப்துல் கலாம்!

எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடக்கிறது!

A.B.J. அப்துல் கலாமுக்கு மக்களிடன் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கூடங்குளம் பிரச்சினையின் தீவிரத்தைக் குலைக்க அரசு செய்யும் முயற்சி பெருவெற்றி பெற்றுள்ளதுபோல் தோன்றுகிறது. அரசு சொல்லி தான் வரவில்லை என்று கலாம் மறுப்பு தெரிவித்துள்ளபோதும், இந்த பிரச்சினையில் தானாகவே தலையிட்டு, கருத்து சொன்னது மட்டுமில்லாமல் 36 பக்க அறிக்கையையும் கொடுத்திருக்கும் திரு. கலாம் அவர்கள், தமிழக மீனவர் பிரச்சினைக்காக இப்படி ஒரு அறிக்கை எங்காவது கொடுத்திருக்கிறாரா? என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.

தன் வாழ்நாள் முழுவதும் அரசு விஞ்ஞானியாக இருந்தவரும், 1998-ம் ஆண்டு அணுகுண்டு சோதனைக்கு முக்கியக் காரணியாகவும், அக்னி போன்ற ஏவுகணைகளுக்கான சோதனையில் பெரும்பகுதியையும் செலவிட்ட, இந்தியக் குழந்தைகளின் ஏகபோக ஆதரவு பெற்ற திரு அப்துல் கலாம் அவர்கள், 'தான் ஆடாவிட்டாலும், தன் சதையாடும்' என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

அணுஉலை ஆதரவாளர்களுக்கு இது நல்ல தருணம். அப்துல் கலாமின் அறிக்கையை அவுலாகப் போட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு ஊடகங்கள் மென்று கொண்டிருக்கும்.

'கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் வராது' என்று அவர் கூறியதில் நமக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஆனால், கூடவே அறிக்கை என்ற பெயரில் 10 (11?)அம்சத் திட்டம் ஒன்றை அவர் முன்வைத்திருக்கிறார். அந்த திட்டங்களின் மதிப்பு 200 கோடி(?!)

இந்த அறிக்கை சார்ந்துதான் நமது கேள்விகள் எல்லாம். 

அப்துல் கலாம் அவர்களே,

*அணுஉலை பாதுகாப்பானதா இல்லையா என்பது பற்றிதானே கருத்துகூற வந்தீர்கள்? ஒரு விஞ்ஞானியாக, பாதுகாப்பு குறித்தான கருத்து மட்டும் சொல்லிவிட்டுப்போகாமல், 10-அம்சத் திட்டம் என்பதை எதற்காகத் தயாரித்து வழங்கினீர்கள்?

*நீங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில்,  அரசாங்கம் மக்களுக்குச் செய்து தந்திருக்க வேண்டிய அடிப்படை விசயங்களும் அடங்கியுள்ளன. இத்தனை நாட்கள் அதைச் செய்துதராதது எதனால்?


*அப்படியானால் அடிப்படை உரிமைகளே, அணுஉலை போன்ற பேரழிவு திட்டங்களை எதிர்த்தால்தான் கிடைக்குமா இந்நாட்டில்?


*14,000 கோடி மதிப்பிடப்பட்டுள்ள அணுஉலை திட்டத்திற்கு,  மக்களுக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணமாக நீங்கள் கருதுவதுதான் ரூ.200கோடி மதிப்புள்ள உங்களது 10 அம்சத் திட்டங்களா?

*குழந்தைகளிடம் 'லஞ்சம் வாங்கும் உங்கள் பெற்றோர்களைக் கண்டியுங்கள்' என்று கூறும் நீங்கள், அணுஉலை எதிர்ப்பு இன்றி இயங்குவதற்கு, அரசாங்கத்தையே லஞ்சம் கொடுக்கத் தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்?

*'என்ன செய்தாவது ஒரு விசயத்தை நிறைவேற்று' என்பதுதானே லஞ்சத்திற்கு மூலம். உங்களுடைய 10 அம்சத் திட்டமும் இதே விதத்தில்தானே இருக்கிறது?

*********

ஜெர்மனி, மின்உற்பத்தியில் அணுஉலையின் தேவையின்றியே தன்னிறைவு பெற்றுவிட்டதாகச் சொல்லும் நீங்கள், அங்கு நடைமுறையில் உள்ள முறைகளை ஏன் இந்தியாவும் பரிசீலிக்குமாறு பரிந்துரைக்கக்கூடாது? 


ஜெர்மனிக்கு வேண்டாம், இந்தியாவுக்கு மட்டும் அணுஉலை வேண்டுமா?!

அழிவு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகிச்சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
*********

எங்களுக்குத் தேவை, மக்கள் பயந்துவாழும் ஒரு வல்லரசு நாடு அல்ல! அமைதியாக வாழும் நல்லரசே!

Wednesday, November 2, 2011

ராவா ஒரு Ra-One விமர்சனம்!

ஏதோ ரோபோ படமாம்…. ஆர்ட்டிஃபிஸியல் இன்டெலிஜன்ட்ஸாம்…. விர்ச்சுவல் வேர்ல்டாம்…. இன்விசிபிள் ரேய்சாம்…. ஈவிலாம்… குட்டாம்…. பைட்டாம்…. பாட்டாம்…. ரொமான்ஸாம்…. சென்டிமென்டாம்….

**********************************************************************************

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கம்ப்யூட்டர் கேம்ஸ் வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார் மக்கு ஜீனியஸான(!) ‘அப்பா’ என்று அழைக்கப்படும் சேகர். இந்த ம(க்)கா ஜீனியஸ், வடிவமைக்கும் ஒரு ரியல்+விர்ச்சுவல் கேம் வேர்ல்டில் இருந்து வெற்றிகாணவே முடியாத, யாராலும் அழிக்கவே முடியாத ஒரு வில்லன் மற்றும் அவனை எதிர்க்கும் ஹீரோ இருவரும் நம்முடைய ரியல் வேர்ல்டுக்குள் நுழைவதுதான் கதை.

****

>>>முதல்பாதியில் வில்லன் நம்முடைய ரியல் வேர்ல்டுக்குள் நுழைவதுவரை கொடுத்த பில்டப்புக்கு, இரண்டாம் பாதியில் ஓண்ணும் வொர்த் இல்லீங்கோ!!!

மை கொஸ்டின்ஸ்:
????ஏனுங்க, ஏதோ சயின்ஸ் ஃபிக்சன்னு சொன்னீங்கோ, ஆனா சயின்ஸ் எங்கேங்க இருக்கு? பேருமட்டும் டெக்னிக்கலா கொடுத்தா போதுமா?

????கம்ப்யூட்டர் கேம முழுசாவே டெஸ்ட் பண்ணல, அதுக்குள்ள மார்க்கெட்டுக்கு போகுதே அது எப்புடி?

????விர்ச்சுவல் கம்ப்யூட்டர் கேம்தானே பண்ணுனீங்க? அதுக்கு ஒருசில சென்சார்ஸ் அண்டு கன்ட்ரோலர்ஸ்தான் தேவை! ஆனா எங்கேயிருந்து ஒரு முழு ரோபோவுக்கான பார்ட்ஸ் செஞ்சீங்க? அந்த கார்ட்(HART) கார்ட்-டுன்னு சொல்றீங்களே, அதுக்கும் கேம் விளையாடுறவங்களுக்கும் என்ன சம்பந்தம்?

????டெவலப்மென்ட் இடத்தையே துவம்சம் பண்ணிட்டு போயிட்டடாரு வில்லன், ஆனா ஒரு ஃபயர் அலார்மோ வேற ஏதுமோ இல்லை. அட அத விடுங்க, பலநாளா அந்த இடத்தையே ஆரும் எட்டிக்கூடப்பார்க்கலை! போலீஸே வரலீங்கோ. அது எப்படிங்கோ?!

????”பைத்தியக்காரன்… பைத்தியக்காரன்” என்று பின்னணியில்(ஷாரூக் இன்ட்ரோ!) பாடுவதாகட்டும் ”ஐயோ” என்று பின்னணி வருவதாகட்டும், சில தமிழ் வார்த்தைகளை வைத்து இரட்டை அர்த்த காமெடிகளைத் தூவுவதாகட்டும், இந்த படத்துல இதுக்கு என்னாங்க அவசியம்??!!

கவனித்தவை:
ஒரு காட்சியில் தமிழக முதல்வர், இதயதெய்வம், கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, டாக்டர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவை - சும்மா ஜுஜூபியாக கிண்டல் செய்துவிட்டுப் போகிறார்கள்! கூடியவிரைவில் ஹிந்தி படம் பார்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கி எழுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ரா-ஒன். திரும்ப திரும்ப சொல்லுங்க…ராஒன்-ராஒன்-ராவண், நம்ம ராவணனுங்க(நான் சொல்லலீங்க! படத்துலயே சொல்றாங்க). இந்த விர்ச்சுவல் வேர்ல்ட் இராவணன்(Ra-One), தசரா அன்று எரிக்கப்படும் ரியல் வேர்ல்ட் ராவணணுடைய தலைக்குப் பொருந்தி நடந்துவரும் காட்சி! சூப்பர்!

வரலட்சுமி நோன்பு வர்ற நாளுக்கும் தசரா வர்ற நாளுக்கும் எவ்ளோஓஓஓ இடைவெளி இருக்கு! ஆனா படத்துல அடுத்தடுத்து ஒண்ணோ ரெண்டோ நாளுக்குள்ள வர்ற மாதிரி இருக்கு! யாராவது கவனிச்சீங்களா?

ரஜினி ஏதோ சீன்ல வர்றாராமே:
பாவம். மேக்கப் கோளாறு, மொக்கை டயலாக்(வேற ஏதாவது உருப்படியா பேசக் குடுத்துருக்கலாம்) என்று ரஜினியை கிரியேட்டிவாக பயன்படுத்தாவிட்டாலும், அந்தக் காட்சிக்குக் கொடுத்திருக்கும் பில்ட்-அப், பரவாயில்லை!

சயின்ஸா சாமியா?
இந்த விசயத்தில் நம்மில் நிறைய பேருக்கு எப்போதுமே ஒரு குழப்பம் இருக்கும்! ஒண்ணு சயின்சுன்னு சொல்லணும், இல்லேன்னா சாமின்னு சொல்லணும். ஹீரோ தன் பலம் முழுவதையும் காட்டி ரயிலை நிறுத்திவிடும் காட்சியின் கடைசி வினாடியில், பின்புறம் சாமி சிலையைக் காட்டிவிடுவது! (அப்போ என்னாத்துக்கு ஹீரோவுக்கு பவர், கிவர், கார்ட், அது இதுன்னு அவ்ளோ பில்டப் கொடுக்கணும்?!) சயின்சுக்கும் சாமிக்கும் முடிச்சுப்போடும் வேலையை இந்தப் படத்திலும் பண்ணியிருக்கிறார்கள்.

சூப்பர்:
கிராஃபிக்ஸ்! ஒளிப்பதிவு!

மொன்னை:
இதை சயின்ஸ் பிக்சன்னு சொல்றது! இரண்டாம் பாதி திரைக்கதை!

பரிதாபம்:
இங்கேயும் மின்சார ரயிலில் நாயகியைக் காப்பாற்றுகிறார் ஹீரோ ரோபோ(இல்ல, கேம்லேருந்து வந்த ப்ரோக்ராம்?!). அந்த காட்சியில், ரயிலில் தொங்கி தொங்கி முன்னேறுவது…! ‘‘ஏம்பா, நம்ம ரஜினி எந்திரன்ல எம்புட்டு அழகா ரயில்மேல ஓடி வந்தாரு” என்று சொல்ல வைத்துவிடுகிறது!
*********************************************************************************

என்னமோ போங்க, இதுக்கு எந்திரனே பரவாயில்லை! ”அப்டிக்கா பண்றோம், இப்டிக்கா பண்றோம்னு, உருண்டு புரண்டு பண்றோம், ராவா பண்றோம்”னு சொல்லி நம்ம காச ஆட்டைய போடுறதே இந்த சூப்பர் ஸ்டாருங்களுக்கு வேலையாப் போச்சு!!!!

இது குழந்தைகளுக்கான படம் இல்லீங்கோ!

Saturday, October 15, 2011

"புதிய தலைமுறை"யின் அபத்தம்!

'அணுவின்றி' என்று தலைப்பிட்டு இந்தவார 'புதிய தலைமுறை(!)' (20 Oct 2011) தலையங்கம் எழுதியுள்ளது.

அதிலிருந்து சில வரிகள்...

//தமிழகம் மின்பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுதான். அதுவும் கணிசமான அளவு பெருக்குவதுதான். தமிழகத்தில் பாயும் நதிகளின் நீர்வரத்து, அண்டை மாநிலங்கள் அனுமதிப்பதைப் பொருத்து இருக்கிறது. காற்று ஆண்டு முழுவதும் கிடைக்காது. சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்வது அதிகச் செலவும் இடமும் பிடிக்கும். இவை எதைக் கொண்டும் கணிசமான அளவு மின்னுற்பத்தி செய்ய இயலாது. நிலக்கரி, பெட்ரோல் விளி மண்டலத்தில் கரிப்படலங்களை ஏற்படுத்தி பருவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் அணு மின்சாரம்தான் கணிசமான உற்பத்திக்கான வழி...//

//ஓடுகிற ஆறு, ஓசையிடும் கடல், அடுப்பில் எரியும் நெருப்பு, மின்சாரம், போக்குவரத்து, இயந்திரங்கள், ஏன் உண்ணும் உணவில் கூட விபத்துக்கான சாத்தியங்கள், பக்க விளைவுகள் உண்டு. அதற்காக அவையே வேண்டாம் எனச் சொல்லி விடுவோமா? தினம் சாலை விபத்துகளைப் படிக்கிறோம். பயணங்களை நிறுத்தி விட்டோமா? ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன எனத் தெரிந்தும் ஏன் முன்பதிவில் இத்தனை முண்டியடித்தல்?

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது. கூடங்குளப் போராட்டக் குழுவினர் எந்த மாதிரியான பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுப் பெறட்டும். அதை விட்டு பேச்சுவார்த்தையே நடத்தமாட்டோம், வல்லுநர்கள் உட்பட யார் சொன்னாலும் அதற்கு செவி மடுக்கமாட்டோம், அணுமின் நிலையத்தை மூடியே ஆக வேண்டும் எனக் கோருவது நியாயமானதல்ல. //

*******

அணுஉலையின் ஆபத்துகளை அறிந்துகொண்டு விழிப்புணர்வு பெற்று, உலகமே அணுஉலை வேண்டாம் என்கிற நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது,'புதிய தலைமுறை' (இனியொரு விதி செய்வோம்!) என்று பெயரை வைத்துக்கொண்டு, வெற்றிலை மெல்லும் பழையகால பாட்டிபோல ஒரு பக்கத்திற்கு புலம்பி வைத்திருக்கிறது. 

உலகத்தில் பல இடங்களிலும் மாற்று எரிபொருள், இயற்கை எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துதல், உயிரியல் எரிபொருட்கள் என்று ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இக்காலத்தில், அதற்கான உந்துதலை இங்கிருக்கும் மிகப்பெரிய சக்தியான இளைய சமுதாயத்திடம் விதைக்காமல்,  இயற்கை/மாற்று ஆற்றல் ஆராய்ச்சிகளில் இந்திய இளைஞர்களின் பங்கு என்ன? என்று கேள்வி கேட்காமல், இளைஞர்களிடம் அபாயகரமான அணுவின் மீது மோகத்தை விதைக்கிறது 'புதிய தலைமுறை(!)'.

இனி வரும் காலத்தில் இந்திய மக்களுக்குத்தான் அதிய மின்னாற்றல் தேவைப்படும். அதற்காக இந்தியா முழுவதும் அணுஉலைகள் வைத்தாலும் 10% ஆற்றல்தான் அதிலிருந்து பெறமுடியும் என்பது இந்த அணுஉலை வல்லுநர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் தலைமுறைகளையும் பணயம் வைப்பது வெறும் 10% ஆற்றலுக்காகவா? என்று கேள்வி எழுப்பாமல் இப்படி எழுதியிருப்பது, 'புதிய தலைமுறையினரை', 'புழுத்த தலைமுறையினராக' மாற்றவா?

Tuesday, September 27, 2011

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக...


சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயிரம் குரல்களைத் தாங்கி வருகிறது இந்தப் பறையடி...




பரமக்குடி தலித் படுகொலைகள் - கருத்தரங்கு
தேவநேயப் பாவாணர் அரங்கம், அண்ணாசாலை, சென்னை.
24 செப்டம்பர் 2011.
புத்தர் கலைக்குழுவினர் நிகழ்த்திய பறையடியில் இருந்து ஒரு பகுதி.....


Thursday, September 1, 2011

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒருநாள்!

கடந்த செவ்வாயன்று மரண தண்டனை நாள் குறிக்கப்பட்ட 'பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன்' இவர்களது தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்கக் கூறி, இடைக்காலத் தடை பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு சில வினாடிகளுக்குப் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் மகிழ்ச்சிக்கொண்டாட்டங்கள் இதோ புகைப்படங்களாக.

மூன்று தமிழர்களையும் விடுவிப்பதில் கிடைத்திருக்கும் ஒரு முதல்கட்ட வெற்றியைக் கொண்டாடுகிறபோது உணர்ச்சிவெள்ளத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மிதந்ததை இந்தப் படங்களில் பார்க்கலாம்!






இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உண்ணாவிரதப் பந்தலின் முன்பு தமிழார்வலர்கள் இனிப்பு வழங்கியும் மேளதாளத்தோடு ஆடிப்பாடியும் கொண்டாடினார்கள்.



ஐந்துநாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் வடிவு, கயல் மற்றும் சுஜாதா - 'மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை' தீர்ப்பு கேள்விப்பட்டதும், மகிழ்ச்சியில்!