அவளுடன் ஒருநாள் முழுவதும் செலவிடப் போகிறேன் என்ற உணர்வே என் மயிர்க்கால்களை புல்லரிக்க வைத்தது. அதுவும் இரயில் நிலையத்தில் அவளைப் பார்த்த பின்பு - மாலை, இரவு என தொடர்ந்து அவள் ஞாபகம்தான். எப்படியெல்லாம் மாறிவிட்டாள், எவ்வளவு சகஜமாக இனிமையாகப் பேசினாள்! கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் கொண்டு(என் மனதையும்) விட்டுவிட்டு வீடு வந்தேன்.
பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படிப்பு, அவளது அப்பாவின் வேலை நிமித்தம் அவர்கள் குடும்பம் மும்பை பயணம், ஊடகத்துறையில் பட்டப்படிப்பு, விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் இளைஞர்களுக்கான நான்கு பக்க வாரவெளியீட்டில் பங்களிப்பு, உலக அளவில் பிரபலமான ஒரு எழுத்தாளரின் இந்தியப் பயணத்தின்போது அவரைப்பேட்டி எடுக்கத் திட்டம், பேட்டிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது அவர் சென்னையில் இருக்கும் தினங்கள் - இதுதான் புவனா சென்னை வந்ததற்கான காரணம். சென்னையில் தெரிந்தவர்கள் பற்றி உறவுக்காரர்களிடம் விசாரித்ததில் என்னைப் பற்றியும், அவள் ஊரிலிருந்து சென்னையில் உள்ள இன்னும் சிலரைப் பற்றியும் தெரியவர, என்னைத் தொடர்புகொண்டிருந்தாள் புவனா. பேட்டிக்கான நாளுக்கு ஒருநாள் முன்னதாகவே பயணச்சீட்டு கிடைக்க, ஒருநாள் சென்னையைச் சுற்றிக்காட்ட என்னைக் கேட்டிருந்தாள்.
மறுநாள் முழுவதும் என்னுடனேயே இருக்கப்போகிறாள்! பயணத்திட்டங்கள் வகுத்தாயிற்று. நண்பனது 'பைக்'கையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. எனது அலுவலகத்தில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் பெண்களுடன் பழகுவது பற்றிய எனது கூச்சம் என்றோ போயிருந்தது. இதை நினைத்து எனக்குள்ளேயே ஒரு கர்வம் இருந்தது. 'பள்ளிப்பருவத்தில் பார்த்த அந்த கூச்சம் நிறைந்த 'ஜோன்ஸ்' இவன் இல்லை' என்று அதிசயிக்கப் போகிறாள் என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டேன்.
காலையில் சொன்ன நேரத்திற்கு அவள் தங்கியிருந்த இடத்தின் முன் நின்றேன் - நல்ல பையனாக. அவளும் தயாராகியிருந்தாள்; சில நிமிடங்களிலேயே வெளியே வந்தாள். பலருக்கும் வரமளித்த கிழக்குக் கடற்கரைச் சாலையில் நுழைந்தபோது, 'சுள்'ளென்றிருந்த வெயில் மேகங்களின் வருகையால் மிதமானது. அவளுக்காகவே வெயில் தடை செய்யப்பட்டது போல உணர்ந்தேன். பைக்கின் பின்னிருந்து பல விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள். மிதமான வேகத்தில் சென்றதால் நானும் 'ம்' கொட்டிக்கொண்டே சென்றேன்.
எங்கிருந்து வந்து தொற்றிக்கொண்டது என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் அவளுடன்(இல்லை இல்லை, எல்லா பெண்களுடனும்) பேசுவதற்கு எப்படிக் கூச்சப்பட்டேனோ அதே கூச்சம்! என் உடலும் முகமும் வழக்கமான நிலையில் இல்லை. விஜிபிக்கு அருகே காபி சாப்பிட ஐந்து நிமிடம் நின்றபோது தெளிவாக அடையாளம் கண்டுகொண்டாள், நான் கூச்சத்தில் நெளிவதை. அதன்பின் 'தெற்குப்பட்டு' வரை பேசவே இல்லை. பைக்கில் அவள் உட்கார்ந்த விதத்திலும் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.
'தெற்குப்பட்டில்' சவுக்கு மரத் தோப்புகள் அங்கங்கே தென்பட்டன. ''ஏய் நிறுத்துப்பா, இங்க கொஞ்சநேரம் இருந்துட்டு போகலாம்'' என்றாள். 'மாமல்லபுரம் வரை என்னால் பைக் ஓட்டமுடியுமா?' என்கிற தொனியில் இருந்தது, அவள் கேட்டது. என் வண்டி ஓட்டும் திறமை மீதான சந்தேகமாக இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். புகைப்படங்கள் எடுத்த பிறகு, எதிரெதிரே இரு மரங்களில் சாய்ந்து நின்றுகொண்டோம் - அவள் பேச ஆரம்பித்தாள். 'நீ இன்னுமும் இப்படி கூச்சப்படுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல! சென்னை வந்து இத்தன வருசமாச்சு. இன்னும் அப்படியே இருக்கியே எப்படி?!' என்றாள். நேற்று எட்டிப்பார்த்த என் கர்வம் என்னைப்பார்த்து பல்லிளித்தது, கூடவே கொஞ்சம் கோபமும் வந்தது. 'யாருக்கு? எனக்கா கூச்சம்? இப்போ யாருக்குக் கூச்சம்னு பார்க்கலாம்!' என்று அவள் இடை நோக்கி என் கையை நீட்டினேன்; விலகி ஓடினாள். இரு நிமிடம் தொடர்ந்த விளையாட்டில் 'தோல்வி'(!)யை ஒத்துக்கொண்டாள். இயல்பு நிலைக்குத் திரும்பியதும் இயல்பாகப் பேசினாள் பேசினோம் - வீடு திரும்பும் வரையிலும்.
மறுநாள், அந்த பிரபல எழுத்தாளருடனான பேட்டி நிறைவுற்றதும், கடற்கரையில் சிறிது நேரம் - அதில் மௌனமாய் அதிக நேரம். முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே பாதிநேரம். ரயில் நிலையம் நோக்கித் திரும்பவும் பயணம். தொடர் வண்டிக்காகக் காத்திருந்தபோது அம்மாவிற்குத் தொலைபேசினாள். சிலநிமிடம் கழித்து கைபேசியை என்னிடம் கொடுத்தாள்.
''சென்னையில அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்கு நீ இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தாம்பா அவளைத் தனியா அனுப்புறதுக்கு ஓ.கே. சொன்னேன். இல்லேன்னா நானும் கூட வரலாம்னுதான் யோசிச்சேன். சொந்தக் காரங்கள்லாம் ஆயிரம் வேலையோட இருப்பாங்க. அவங்க வீட்டுக்குப் போனமா வந்தமான்னு இருக்கணும். அதுவுமில்லாம பல வருஷமா யாருகூடவும் பழகுனதும் கிடையாது....'' என்று பேசிக்கொண்டே போனார் புவனாவின் அம்மா.
வழியனுப்பி வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.நடைபாதையில், ரயிலுக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தேன். 'ஐயகோ' என்று சத்தமிட்டு(SMS Tone) வந்தது ஒரு குறுஞ்செய்தி. 'ஐ மிஸ் மிஸ்ட் யூ சோ மச். ஐ ரியலி மிஸ்ட் யூ தீஸ் மெனி யியர்ஸ் பா' [I missed you so much. I really missed you these many years pa :( ].
12 comments:
அடுத்த நிமிடமே, நான் திரும்பிப் பார்த்ததும், ரயிலிலிருந்து அவள் எட்டிப்பார்த்ததும், கைபேசியில் SMS சத்தத்தை மாற்றி வைத்த்தும் வேறு கதை! :)
நல்லா கதை விட்டுருக்கீங்க....ஊ.சு
என்னப்பா முடிவு, ஹீரோ ஹீரோயின் சேந்துட்டாங்களா?
கதைன்னு நம்பிட்டோம்ல :)
:roll: enna nadakuthu inge?!
நன்றி அண்ணாமலையான்.
ஸ்ரீ ஒண்ணு சேர்ந்துடுவாங்கன்னு நினைக்
கிறேன்! :)
SUFFIX, பாதி கதை - பாதி நிஜம்! :)
Suba, என்னென்னமோ நடக்குது!
சூப்பர்
தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்.:)
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்! :)
கதையில பைற்றை (fight) காணம், சாங்கை(song) காணம், இது செல்லாது செல்லாது :-)
உண்மையில் அருமை.
தமிழ்மண விருது வாங்கியதற்காக வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
எப்பூடி, நன்றி. :)
Post a Comment