Monday, January 4, 2010

புளகாங்கிதம் அடைய வைத்த புத்தகக் காட்சி உரை - கவிக்கோவிடமிருந்து

புளகாங்கிதம்:
     இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முழுதாகப் புரிந்து உணர முடிந்தது. 33-வது சென்னை புத்தகக் காட்சியில் 'கவிக்கோ' அப்துல் ரகுமான் அவர்கள் 01-01-2010(வெள்ளிக்கிழமை) அன்று ஆற்றிய உரையில் நிகழ்ந்தது இது. 'செம்மொழிச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை என்னை நெகிழ வைத்துவிட்டது.

     செக்குமாடுபோல் சுற்றிவரும் நம் அன்றாட வாழ்க்கையில் (பெரும்பாலோர்க்கு) மனதை 'நெகிழ' வைக்கும் நிகழ்வுகள் அரிதாகவே நடக்கின்றன. அந்த வகையில் அனுபவித்த ஒன்று கவிக்கோவின் உரை. 'செம்மொழிக்கான தகுதிகள் என்ன?' - 'தமிழ் ஏன் செம்மொழி?' என்ற கேள்விகளுக்கு மிக அழகாக விளக்கமளித்தார்.

செம்மொழியின் கூறுகள்:
     தொன்மை, தாய்மை, தனித்தியங்கும் தன்மை, அழகியல், பொதுமைப் பண்பு, அதில் தோன்றியுள்ள இலக்கிய வளம், இன்னும் பல. இவற்றில் சிலவற்றை மட்டுமே (நேரம் கருதி) விளக்கினார். அவரது பேச்சு முழுவதும் புல்லரிக்க வைத்தது உண்மையிலும் உண்மை.

நான் கவனித்த ஒருசில உங்களுக்காக:
     தலைவனும் தலைவியும் (காதலனும் காதலியும்) தங்களுக்குள் இட்டுக்கொள்ளும் சிறு சண்டைகள், வெளிப்படுத்திக்கொள்ளும் சிறு கோபங்கள் - இந்த நிலையை விளக்க தமிழ் தரும் வார்த்தை 'ஊடல்'. உலகின் எம்மொழியும் வரையறுக்காத ஒருநிலை. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' (இதச் சொன்னது நம்ம நர்சிம் இல்லப்பா!) என்ற பரந்த சிந்தனை.

சங்ககால உதாரணங்கள்
     தன் தாய் வளர்த்த புன்னை மரத்தைத் தன் மூத்த சகோதரியாகப் பாவிக்கும் தலைவி, தலைவன் தன்னை அந்த மரத்திற்கு அருகிலே கொஞ்ச முனையும்போது 'புன்னையாகிய தன் சகோதரி தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதால் இங்கு கொஞ்ச வேண்டாம்' என்கிறாள். அந்த அளவிற்குச் செடிகொடிகளின் மீதுகூட பற்றுகொண்டிருந்தாள்.

     நீண்டநாட்களுக்குப் பின் காதலோடும் காமத்தோடும் தலைவியைச் சந்திக்க தேரில் வருகிறான் தலைவன். தேரில் தொங்கவிடப்பட்டுள்ள மணிகள் அசைந்து ஓசை எழுப்புகின்றன. இந்த ஓசை, வழியோரம் உள்ள பூக்களில் தேனைச் சுவைத்துக் கூடிக் கிடக்கும் வண்டுகளுக்கு இடைஞ்சலாகிறது எனக் கண்டு தலைவன் அஞ்சுகிறான். எனவே அந்த மணிகளின் நாவினை, நார்கொண்டு கட்டுகிறான்.

மேற்கூறிய இரண்டு உதாரணங்களும் 'அகநானூற்றில்' வருகின்றன என நினைக்கிறேன்(கவிக்கோ சொன்னதை மறந்துவிட்டேன்).

'இந்த அளவிற்குப் பண்பாட்டில் உயர்ந்து நின்ற இனம் தமிழினம்' என்றெல்லாம் பேசியபோது நம் தமிழ்மொழியின் பெருமைகளை எண்ணி புளகாங்கிதமடைந்தேன். இத்தகைய பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய நம் இலக்கியங்களை நாம் கற்று, பரந்த நோக்குடைய மனிதர்களாக வேண்டும் என்று வேண்டி உரையை முடித்தார் 'கவிக்கோ'.

 தமிழ் இலக்கியங்களைப் பயில்வதில், எனக்கு ஏனோ ஆர்வம் இருந்ததே இல்லை. ஆனால் கவிக்கோவின் கருத்தினால் ஈர்க்கப்பட்டுள்ளேன்.  'குறைந்தபட்சம் அகநானூறு, குறுந்தொகை இவற்றையாவது படிக்கவேண்டும்' என்ற ஆர்வம் என் அடிமனதில் ஊறுகிறது.

7 comments:

பின்னோக்கி said...

அழகான தகவல்.

தலைவன் தேர் பற்றி சிறிய வயதில் தமிழ் பாடபுத்தகத்தில் படித்த நியாபகம்.

நீங்கள் சொன்ன மாதிரி அக,புறநானூறு படிக்க வேண்டும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை. அது அகநாநூறுதான்.

கடைக்குட்டி said...

தகவலுக்கு நன்றி..

சங்கர் said...

நல்ல பகிர்வு

புறாநானூற்றில் கலைஞர் ஏதோ கண்டுபிடித்ததாக சொன்னாரே அதை விட்டுடீங்களே??

ஒரு போன் செய்தால் நாங்களும் சேர்ந்துக்குவோம்ல

SUFFIX said...

நல்லது நண்பரே :)

ஊர்சுற்றி said...

பின்னோக்கி, SUFFIX, ஸ்ரீ ,கடைக்குட்டி வாங்க நாமளும் இலக்கியம் படிக்கலாம். :)

சங்கர் - நம் சந்திப்பு நிகழ்ந்து புகைப்படம் போட்டீங்கன்னா, என்னிய இதே யூத்தாத்தான் போடணும் ஆமா! :)

Thamizhan said...

கவிக்கோ அப்துல் ரகுமான் அற்புதமான சிந்தனையாளர்.தமிழில் ஊறியவர்,அராபிக் மொழியை நன்கறிந்தவர்.அவரைப் போன்றோரை இளைய தலைமுறைப் பயன் படுத்தி யூ டுயீப் போன்றவற்றில் போட வேண்டும்.

நிலாவைப் பலர் பாடியுள்ளார்கள்.ஆனால்

"நீல வான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டி விட்டால்
காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?
வானச் சோலையிலேப் பூத்த தனிப்பூவோ நீ தான்
சொக்க வெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோக்
காலை வந்த செம்பரிதிக் (சூரியன் )
கடலில் மூழ்கிக் கணல் மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்ப்போ"

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கிணையாகப் படித்துள்ளீர்களா?