Wednesday, November 18, 2009

ஈரம் இல்லாமல் ஆவியுடன் பேசிய சம்பவம் - திரைப்பட விமர்சனம் அல்ல

இந்த சம்பவத்தில் வரும் சம்பவங்கள்(!) அத்தனையும் உண்மையே(பெயர்களைத் தவிர).


அப்போதுதான் 'செல்போன்' எனப்படும் ஒரு வஸ்து அறிமுகமாகி இருந்தது. இப்போது 'மொக்கை' செர்வீஸ் என்று சொல்லப்படும் ஒரு நிறுவனம்தான் அன்றைக்கு இருந்த ஒரே செர்வீஸ் புரொவைடர். கல்லூரியில் செல்ஃபோன் வைத்திருந்த ஒத்தை கை எண்ணிக்கையில் 'சங்கரும்' ஒருவன் என்பதால் அவனுக்குத் தனி 'மாஸ்'. அரைகிலோவுக்கு அதிகமாக இருக்கும் அந்த போன் தொலைந்தது அவனுக்கு 'ஆடையில்லாமல் தெருவில் நடப்பது' போல இருந்தது. நேற்று மாலையிலிருந்து அவனுக்கு எதுவுமே புரிபடவில்லை.

ஏற்கெனவே ஒருசில திருட்டுக்களில் அடிபட்ட 'தங்கராஜ்'தான் இதெல்லாம் செய்திருக்கக் கூடும் என சிலர் தூபம் போட இவனும் அதை நம்ப ஆரம்பித்தான். இந்த நேரம்தான் அவன் ரூம்மேட் 'மாப்ள, இங்க பாரு. நீ தேடி அலையிறதுனால எந்த பிரயோஜனமும் கிடையாது. நம்ம முத்து இருக்காம்ல - ரூம் 162 - அவன் ஒரு புக் வச்சிருக்கான். ஆவி பத்தின புக். நாம ஆவிக கூட பேசி, களவாண்டது யாருண்ணு கண்டுபிடிச்சிடலாம்' என்றான். இந்த பேய் பூதத்தில் ஏற்கெனவே நம்பிக்கை வைத்திருந்த சங்கர் உடனே சரியென்றான்.



எல்லாம் தயார், ஆரம்பிக்க வேண்டியதுதான். ஹாஸ்டலில் ஒரு அறை. கதவு, ஜன்னல்கள் அவற்றில் இருந்த சின்ன ஓட்டைகள் முதற்கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டு அந்த பிற்பகல் நேரத்தில், அறைக்குள் இருள்கவ்வ அதிக சிரத்தை எடுக்கப்பட்டிருந்தது. ஒரு 'ஒய்ஜா போர்ட்'டைச் சுற்றி மூன்று பேர் - சங்கர், சங்கரின் ரூம்மேட், முத்து. அந்த போர்டில் ஆங்கில எழுத்துக்கள் இரண்டு வரிகளில் நல்ல இடைவெளி விட்டு எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழாக மூன்றாவது வரியில் எண்கள் மேலும் Yes & No. இன்னும் சில குறியீடுகள் இந்த எழுத்துக்களைச் சுற்றிலும் இருந்தன.

ஏதாவது நல்லது நடந்தால் சரி என்று 'தேமே' வென்று போர்டின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் சங்கர். அவனுக்கு எதிரில் அவனது ரூம்மேட். அவன்தான் சும்மாயிருந்த 'சங்கரை' உசுப்பிவிட்டு இங்கு அழைத்துவந்தவன். ஆவிகளின் எக்ஸ்பெர்ட் 'முத்து', சங்கரின் ரூம்மேட் கையில் ஒத்தை ரூபாயைக் கொடுத்து ஒய்ஜா போர்டில் வைத்து அழுத்திப் பிடிக்கச் சொன்னான். பின்பு கையில் இருந்த புத்தகத்திலிருந்து சில வரிகளை வாசிக்க ஆரம்பித்தான்.

''புண்ணியலோக ஆவிகளே....! நீங்கள் எங்கள் குரலுக்கு வாருங்கள்'' என்று புத்தகத்திலிருந்து சில வரிகளை உளறியவன், சில நிமிடங்களில் 'சர்ச்சுகளில்' ஆவிவந்ததாக நம்பப்படுபவர்கள் உளறுவது போல ''வாருங்கள், வந்து பதில் சொல்லுங்கள்'' என்று தனக்குப் பிடித்தபடி கூப்பிட ஆரம்பித்தான். பின்பு ஓய்ந்து நிறுத்தினான். இப்போது எல்லாருடைய கண்களும் ஒய்ஜா போர்டில் ஒத்தை ரூபாய் காயினை ஆட்காட்டி விரலால் அழுத்தியிருந்த சங்கர் ரூம்மேட்டின் விரல்களின் மேல் குவிந்தன.

'சங்கருக்கு' எதோ நல்லது நடப்பது போல ஒரு உணர்ச்சி. எப்படியும் தனது தொலைந்துபோன மொபைல் போனைக் கண்டுபிடித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை மெதுவாக கண்களில் உதித்துக் கொண்டிருந்தது.

அப்போது,
''டேய், வார்டன்கிட்ட எவனோ போட்டுக் குடுத்துட்டாண்டா, இங்கதான் வந்துகிட்டு இருக்காரு'' - எவனோ ரூம் கதவுப்பக்கம் வந்து சிக்னல் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அடுத்த நிமிடம் பேயையும் காணோம், பேயைக் கான்டாக்ட் பண்ண வந்தவங்களையும் காணோம்! சங்கரோட அந்த பழைய மொக்கை மொபைல் இன்னமும் கிடைக்கவில்லை. யாராவது மீடியம் இருந்தா ஆவிகள்கிட்ட கேட்டு சொல்லுங்களேன்!

[மேல இருக்கிற படங்கள் நிறைய இடத்தில கிடைக்குது! சோர்ஸ் எதுன்னே தெரியல! :( ]

3 comments:

வால்பையன் said...

எதுக்கும் பரிசுத்த ஆவியிடம் ஒருக்கா கேட்டுப்பாருங்க தல!

Anonymous said...

ithey maathiri Naanum college padikkumpoethu roommates udan sernhthu coinukku pathilaa oru chinna candle patta vaitthu athan meethu oru tampLarRa kavuththu vaiththu try paNNiyirukkem.

ஊர்சுற்றி said...

வால்பையன் அண்ணே,
பரிசுத்த ஆவியையெல்லாம் நான் நம்புறதே இல்லையே!!! அவர்கிட்ட எங்கன்னு கேட்க!

இங்கிட்டு, சின்னமலையில பாஸ்டர்கள் கலக்குறாங்களாம். அவங்ககிட்ட வேணுண்ணா கேட்கலாம்!

Thirumathi Jayaseelan,
அது நிச்சயமா மறக்கமுடியாத அனுபவமா இருக்கணுமே!