Thursday, September 17, 2009

இன்று ஒரு தகவல் - நான் எடுத்த அவரது புகைப்படம்!

கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷ்ண மடத்தில்' பேசும்போது பார்த்தது.

 • உங்கள் பால்ய காலத்து நினைவுகளை அசைபோடும்போது என்னவெல்லாம் மனதில் வருகிறது?
 • எத்தனை மனிதர்கள் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள்?
 • நீங்கள் மிகவும் இரசித்த விசயம் எது?
 • சிறுவனாக/சிறுமியாக இருந்தபோது நீங்கள் நண்பர்களுடன் விவாதித்த சம்பவங்கள், செய்திகள் என்னென்ன?
**************

எனது சிறுவயதை நினைவு கூறும்போது முக்கியமாக நினைவுக்கு வருவது ரேடியோவும் தென்கச்சியும். நான் முதன் முதலாக ரேடியோவைக் கவனிக்க ஆரம்பித்தது, 1994-95 ஆம் வருடங்களில் - பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது.

தூத்துக்குடி வானொலி:
 • காலை 7 மணியில் இருந்து 7:15 வரை பக்திப் பாடல்கள் (இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமய பக்திப் பாடல்கள் ஒவ்வொன்று, நேரம் மீதமிருந்தால் ஏதேனும் ஒரு மதத்திலிருந்து இன்னும் ஒரு பாடல்).
 • 7:15 - 7:25 செய்திகள் (டெல்லி அஞ்சல்).
 • 7:25 - 7:30 'இன்று ஒரு தகவல்'.
சில நாட்களில், 7:28க்கே, இன்று ஒரு தகவல் முடிந்துவிடும். அத்தனை குறுகியதாக இருந்தாலும், மிகப்பெரும் அறிவியல், சமூக, பண்பாட்டு தகவல்களை வாரி வழங்கிய அற்புத நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் அறிவியல் தகவல்கள்தான் தொடர்ந்து கேட்கும்படி செய்தன. காலையில் காஃபியுடன் 'இன்று ஒரு தகவலை'க் கேட்பதற்காகவே 'ஆகாசவாணி'யின் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்த காலம் அது. இன்று அறிவியல் செய்திகளில் நான் அதிக ஆர்வம் காட்டுவதற்கு அடிப்படையான காரணம் இதுதான்.


'அதிஷா'விற்கு வெகு காலத்திற்கு முன்பே ஜென் கதைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தென்கச்சி. அவரை முதல் முதலாய் நேரில் பார்த்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் (2007 /2008 எது என்று நினைவில் இல்லை). அதன் பிறகு கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷண மடத்தில்'. 4-13-2008 அன்று 'இராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தின்' நூறாவது ஆண்டுவிழா' விற்குப் பேச வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், படிக்கட்டில் அவர் (இன்னொருவர் கைத்தாங்கலாக) நடந்து செல்ல, அருகிலேயே நடந்து சென்றேன் . அவரோடு ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும் என்று தோணினாலும் ஏதையோ யோசிக்க (இங்கே சென்னையில்தானே இருக்கப்போகிறார், பின்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் - என்ற உணர்வு) பிரமித்தபடியே நின்றிருந்தேன்.

பல வருடங்கள் வானொலியில் ஒலித்த குரல், எனக்கு மிக அருகே நடந்து சென்றது - எனக்குள் இருந்த, அவரை ரசித்த அந்த சிறுவனுக்கு எப்படி ஆச்சரியமும் பரவசமும் தராமல் இருக்க முடியும்?
சென்னைக்கு வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்த ஒருசில தருணங்களில் அதுவும் ஒன்று.

அவர் அந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்தது முன்பே தெரிந்திருக்கவில்லை. மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச பேட்டரியை வைத்து, எனது கேமிராவைப் பயன்படுத்தி அன்றைக்கு எடுத்த கடைசி புகைப்படம். (அவரை கிளிக்க மட்டுமே எஞ்சியிருந்ததோ என்னவோ?)அழியாப் புகழ் தென்கச்சியின் குரலுக்கு!

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி!

தென்கச்சி கோ.சுவாமிநாதன்


என் மனம் கொள்ளை கொண்ட, நான் சிறுவயதில் மிகவும் நேசித்த, மதித்த ஒரு மனிதனின் இறுதிநாள் இன்று. அவருக்கு எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

Tuesday, September 15, 2009

ஸ்ரேயா கோஷலும் சக்கை போடு போடும் ஹிந்தி பாடல்களும்!

கடந்த ஆண்டில்தான் ஹிந்திப் படங்களும் பாடல்களும் பார்க்க, கேட்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் பாடல்கள் பலதடவைகள் கேட்கும்படியாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கீழே கொடுத்துள்ள இரண்டு பாடல்களும். இவற்றின் வீடியோ காட்சி பார்த்ததில்லை. ஆனால் பலதடவை பாடல்களைக் கேட்டுள்ளேன்.

1) சிங் இஸ் கிங் படத்தில் 'தேரி ஒரீ' என்ற பாடல்

பாடியவர்கள்: Shreya Ghoshal, Rahat Fateh Ali
இசை: Pritam


2) ராஸ் - த மிஸ்ட்ரி கன்டின்யூஸ் படத்தில் 'சோனியோ' என்ற பாடல்

பாடியவர்கள்: Shreya Ghoshal, Sonu Nigam.
இசை: Raju Singh


ராஸ் - த மிஸ்ட்ரி கன்டின்யூஸ் படத்துக்கு நான்கு இல்ல ஐந்து பேர் இசையமைத்திருக்கிறார்கள். வேறு வேறு பாட்டுக்கு வேறு வேறு நபர்கள்.

அப்புறம், இந்த 'ஸ்ரேயா கோஷல்' பொண்ணு இருக்கே, எப்படி பாட்டு படிக்குது பாருங்க! அழகா வேற இருக்கு :). தெரிஞ்சவங்க யாராவது இருந்தா ஊர்சுற்றியைப் பற்றி நல்லவிதமாக எடுத்துச் சொல்லி பரிந்துரைக்கலாம். :)

போனஸ் பாட்டு:
ஸ்ரேயா கோஷலுக்கு 2007 ம் ஆண்டுக்கான இந்திய அரசின் 'சிறந்த பாடகிக்கான' விருதைப் பெற்றுத் தந்த 'ஜப் வி மெட்' படத்தின் பாடல்.2008-ம் ஆண்டுக்கான விருது இவ்விடுகையின் முதல் பாடலுக்காகவும் 2009-ம் ஆண்டுக்கான விருது இரண்டாம் பாடலுக்காகவும் ஸ்ரேயா கோஷலுக்குக் கொடுக்கப்பட்டால் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை!

பொறுப்பி(டிஸ்கி):
கபில் சிபில் தபில் எனது தூரத்து சொந்தமும் அல்ல!
இது மறைமுக ஹிந்தி திணிப்பு அல்ல!

குறிப்பு:
எம்பெட் ப்ளேயரில் உள்ள பாட்டு படிப்பதற்கு '>' (Play Next Song) என்ற பட்டனை அழுத்தவும் (Play பட்டனை ஒட்டினாற்போல வலதுபக்கம்).

Monday, September 14, 2009

சிருகதை பட்டரையிள் பிள்ளைகள் - என்ன கொடுமை இது!

8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கண மின் புத்தங்களின் தொடுப்புகள் கீழே!

8-ம் வகுப்பு - தமிழ் இலக்கணம் என்ற பிரிவில்.
9-ம் வகுப்பு - தமிழ் இலக்கணம் என்ற பிரிவில்.
10-ம் வகுப்பு - தமிழ்த் துணைப்பாடம் என்ற பிரிவில்.
11-ம் வகுப்பு - சிறப்புத் தமிழ் என்ற பிரிவில்.
12-ம் வகுப்பு - சிறப்புத் தமிழ் என்ற பிரிவில்.

என்ன கொடுமை இது! சிறுகதைப் பட்டறை என்று வைத்துவிட்டு 'உங்களில் பிழையில்லாமல் தமிழில் எழுத எத்தனை பேரால் முடியும்' என்ற கேள்விக்கு பளிச்சென்று பதில் சொல்ல ஏன் யாராலும் முடியவில்லை?

யுவன் சந்திர சேகரும், பா.ராவும் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்கள் - பட்டறையில்.

பா.ரா. பேசும்போது, வலைப்பூக்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், 200 வலைப்பதிவர்களில் ஒருவர், தமிழில் பிழையின்றி எழுதுவதைக் கண்டுபிடிப்பதே(தேறுவது) மிகவும் கடினமாக இருக்கிறதென்றும் கூறினார்.

நானும் இந்தக் குட்டையில் ஊறிய மட்டைதான் என்று கூறிக்கொண்டு, எற்கெனவே இதுசம்பந்தமாக எனது பழைய இடுகை...

Saturday, September 12, 2009

2012 ல் உலகம் அழியும் - பைபிள் சொல்கிறதாம்!

2000ல் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்கள், இப்போது 2012 என்கிறார்கள். பெரிய வித்தியாசம் என்னவென்றால், இப்போது விதவிதமாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பைபிளி'லும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறது என்ற 'ஜெய்ஹிந்த்புரத்'தின் பின்வரும் ஒரு 'ட்வீட்' டைப் பார்த்தபின்தான் இந்த ''7 காரணம் மேட்டரைப்'' பற்றி தெரியவந்தது.

'ஜெய்ஹிந்த்புரத்'தின் ட்வீட்டு.
//7s to end world 2012-Mayan Calendar, Sun Storms, The Atom Smasher, The Bible says..(?), Super Volcano,The Physicists,Slip-Slop-Slap-BANG//

இணையத்தில் இதுபோல நிறைய உலாவுகிறது. கூகிளில் தேடினால் ஆயிரக்கணக்கில் பக்கங்கள் வந்து குவிகின்றன.

2012ல் பூமி அழிந்துவிடுமாம். அதற்கு ஏழு காரணங்கள்:
1) மாயன் காலண்டர்.
2)சூரியப் புயல்.
3)CERN ல் உள்ள லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (இயக்கத்தில் இருந்தால்).
4)பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.
5)சக்திவாய்ந்த எரிமலை.
6)இயற்பியலாளர்களின் கணிதம்.
7)புவிகாந்த துருவ மாற்றம்.

பைபிள்னு ஏதோ சொல்லியிருக்கிறார்களே, என்று மீண்டும் கூகிளினால் மேலதிகத் தகவல்கள் கிடைத்தன.

பைபிளில் என்னதான் உள்ளது?
''பூமியில் மிகப்பெரும் போர் நடக்கும். அந்தப் போரின் முடிவில், கடவுள் பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டு பூமியை ஆள்வார், அதற்குப் பிறகு இறந்த அனைவரும் மறு உயிர் பெற்று நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் கெட்டவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள்''. இதுதாங்க!


ஆனால் 2012ல்தான் இந்தப் போர் நடக்கவிருப்பதாக பலபேர் சொல்கிறார்கள். இது நடக்குமா, நடக்காதா? என்று தெரிந்துகொள்ளும் முன்பு பைபிளில் இது தொடர்பாக உள்ள விசயங்களைச் சிறிது 'விம்' பார் போட்டு அலசினால் நல்லது.

யார், எப்போது சொன்னது?
பைபிள் புத்தகங்களில் கடைசியாக உள்ளது 'திருவெளிப்பாடு (அ) வெளிப்படுத்தல்' (Revelation). இதை எழுதியவராகச் சொல்லப்படுபவர் 'ஜான்'. காலம், கி.பி.1 அல்லது 2 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி 'நாஸ்ட்ராடமஸ்' என்பவர் பல முன்னறிவுப்புகளை சொல்லிவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்களோ, அதேபோல் உலகத்தின் இறுதிநாட்களைப் பற்றி 'கடவுள் தனக்கு சொன்னதாக' இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூறிக்கொள்கிறார். இதில் 17 - ம் அதிகாரத்தில் மேற்கண்ட இறுதிப் போர் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு முந்தைய அதிகாரங்களில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும் முன்னறிவித்திருக்கிறார் ஜான்.


முந்தைய 16 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விசயங்கள் நடந்தால் மட்டுமே 17-ம் அதிகாரத்தில் வரும் விசயத்தையும் நாம் நடக்கும் என்று நம்ப முடியும். முதல் பதினாறு அதிகாரத்தில், ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு, புதிய இஸ்ரேல், ஏழு எக்காளம், அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும், நாடுகள் ஒன்றுதிரட்டப்படுதல்.... இப்படி பல விசயங்கள் நடக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நடந்துவிட்டனவா? அல்லது நடந்துகொண்டிருக்கின்றனவா? என்று கேட்டால், அதற்குச் சரியான பதில் இல்லை. அதேநேரம், இவை நேரடியாகச் சொல்லப்பட்டவை அல்ல, சில உருவகங்ள் குறிப்புகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

முந்தைய 16 அதிகாரங்களில் உள்ள விசயங்களை நிரூபிக்காமல் சும்மா மொட்டையாக "உலகம் அழிந்துவிடும்'' என்று சொல்லிக்கொள்வது அறியாமை. மேலும், மிகப்பெரும் 'போதகர்கள்' கூட நிச்சயம் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் - கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் ஒரு தொழிலை 2012 வரைக்குமா அவர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள்?


 • இந்த இடுகையைப் படித்து நீங்கள் மரணபயம் கொண்டால்(!) அதற்கு இந்த ஊர்சுற்றி பொறுப்பல்ல.
 • இந்த மாதிரி விசயங்களையெல்லாம் நம்பி 2011 வரை, எல்லா கேடித்தனமும் செய்துவிட்டு 2012 முதல் நாள் பாவமன்னிப்பு வாங்கிக்கொள்ளலாம் என யாரேனும் முடிவெடுத்தால் அதற்கும் இந்த ஊர்சுற்றி பொறுப்பல்ல!
 • ஜெய்கிந்த்புரத்தின் 'ட்வீட்'டில் இருந்து ஆரம்பித்திருப்பதால் இது அவருக்கு எதிரான இடுகை அல்ல.

தகவல்:
வரும் காலங்களில் மேலே கூறப்பட்டுள்ள 7 காரணங்களையும் தனித்தனியாக இடுகையிடலாம் என்று இருக்கிறேன். ஜெய்கிந்த்புரத்தின் 'ட்வீட்'டுக்கு நன்றி. :)

Thursday, September 10, 2009

ராகுல் பூந்தி - தண்ணியக் குடிங்க, தண்ணியக் குடிங்க!

'பிரதேச'ங்களிலும் 'தான'ங்களிலும் வேண்டுமானால் உங்களின் வசீகரத் தன்மை மக்களை உங்கள் பக்கம் இழுத்துக் கொண்டுவரலாம். ஆனால் உங்களின் இந்த தமிழக வரவு எனக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை!

தேசிய அளவில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் இத்தனை இடங்கள் பெற்றதற்கு நீங்கள் முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம், தமிழகத்தில் காங்கிரஸ் தயவிலேயே ஆட்சி நடக்கலாம், நீங்கள் செல்லும் இடமெல்லாம் பத்திரிகை நிருபர்களிலிருந்து சாதாரண மக்கள் வரை கவர்ந்திருக்கலாம். ஆனால்... அதற்காக தமிழகத்தில் இது போன்று பேசுவது... உங்களுக்கே கொஞ்சம் அதிகமாகத் தோன்றவில்லையா!

செய்தி:
''தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தினால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியும்'' - ராகுல் காந்தி பேச்சு.

ஒருவன் குடும்பத்தைப் பற்றி தப்பாகப் பேசினால் அவனுக்கு எவ்வளவு கோபம் வரும், அதுபோல ஒரு இனத்திற்கு கோபம் வருமல்லவா?! ஆனால் அந்த கோபத்தையும் இல்லாது செய்கின்ற திறமை படைத்தவர்கள் எங்கள் தலைவர்களாக இருக்கும்போது, அதிகாரமும் பணமும் இங்கே பல உணர்ச்சிகளை அழித்திருக்கும் போது, அவர்கள் முன்னிலையிலேயே நீங்கள் இது போன்று பேசுவது 'உங்களுக்கு ஒரே நகைச்சுவைதான் போங்கள்!' என்று சொல்ல வைக்கிறது.போங்க, போங்க சார். போயி 'பிரதேசங்களை'க் கவனியுங்கள்! கழகங்கள் இருக்கும்வரை, இங்கே உங்கள் (வட இந்திய)பருப்பு வேகாது!


டிஸ்கி:
தலைப்பில் உள்ள பெயர் லூஸுப் பையனிடமிருந்து சுட்டது!

Wednesday, September 9, 2009

08/08/08/ - 09/09/09 - 10/10/10 - அடப்போங்கப்பா!

குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் வந்து குவிகின்றன 'குவியலாய்' - இதுபோன்று தேதிகள் ஏதேனும் வந்துவிட்டால்!

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 1999 செப்டம்பர் மாதம் 9-ம் நாள் (கொசுவத்தி சுருள்லாம் நீங்களே கற்பனை பண்ணிக்குங்க!) - பள்ளியில் வழக்கம்போல முதல் வகுப்பு தொடங்கியது. ஒலிபெருக்கியில் தலைமையாசிரியரின் குரல் ''மாணவர்களே, இன்றைய நாளுக்கு ஒரு சிறப்பு உண்டு - கவனித்தீர்களா! இன்று தேதி ஒன்பது, மாதம் ஒன்பது, வருடமும் ஒன்பது. இதுபோன்ற ஒரு தருணம் வருவது எவ்வளவு அரிது - எனவே ஒருநிமிடம் அமைதியாய் இருந்து, வருகின்ற பொதுத் தேர்வில்..."

அதற்குப் பிறகு என்ன சொன்னார் என்று ஞாபகம் இல்லை. அந்த நாளில் ஏதேனும் சிறப்பு இருந்தது என்றால், அந்த நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதற்குப் பிறகு நானும் ஒவ்வொரு வருடமும் கவனிக்கிறேன், இதே உருவத்தில் பலவிதமான போர்வையைப் போர்த்திக்கொண்டு பல தகவல்கள்.

 • இன்று 09/09/09. நூறு வருடத்தில் ஒருமுறைதான் இதுபோல் வரும்.
 • இன்று 12 மணி 34 நிமிடம் 56 நொடி 7-ம் தேதி 8-ம் மாதம் 9-ம் வருடம்.... இது நூறு வருடத்தில் ஒருமுறைதான் வரும்.
 • இன்று 08/08/08 8 மணி க்கு 8 நிமிடம் உங்கள் வீட்டு மின்விளக்குகளை அணைத்து 'பூமி வெப்பமடைதல் விழிப்புணர்வு பிரச்சார'த்தில் பங்குபெறுங்கள். இதை அப்படியே 09/09/09 என்று மாற்றிப்போட்டு இந்த வருடம் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்(இதுபோன்ற விசயங்களையாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம்).

அது என்ன, நொடிக் கணக்கு வரைக்கும் போட்டு 'இது ஒருமுறைதான் வரும்' என்று சொல்வதற்கு உங்களுக்கு யாராவது சிறப்பு வகுப்புகள் எடுத்தார்களா? மற்ற நொடிகளையும் நாட்களையும் நீங்கள் நான்கைந்து முறை அனுபவிக்கிறீர்களா என்ன?

''ஒடும் ஆற்றில், ஒருமுறை தொட்டுவிட்ட தண்ணீர்த் துளியை மறுமுறை தொடமுடியாது'' என்று சொல்லுவார்கள். அதேபோல வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் எல்லா வினாடிகளுமே ஒருமுறை சென்றுவிட்டால் மறுமுறை கிடைப்பதில்லை.

உண்மை:
அடுத்த வருடமும் 10/10/10 என்று மின்னஞ்சலும் குறுஞ்செய்திகளும் வந்து தொலைக்கத்தான் போகின்றன!

டிஸ்கி:
1999-ல் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தகவலை வைத்து எனது வயதைக் கணித்தவர்களுக்கு - சரியாகக் கணித்திருந்தால், 'வலையுலக ராமானுஜம்' என்று பட்டம்(!) இல்லீங்க 'விருது' கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.
ஒரே ஒரு நிபந்தனை! அதை ஒரு தொடர் விருதாக மாற்றாமல் இருக்க வேண்டும். :)

Monday, September 7, 2009

திருமாவளவன் - பெயருக்குப் பின் ஒளிந்திருக்கும் எண்கள்!

மேற்கு வேளச்சேரியில் கண்ணில் பட்ட படங்கள் கீழே.ஒருவேளை, ஏதாவது கைபேசி எண்ணாக இருக்குமோ? இல்லை ஏதேனும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியாக... அல்லது அவரது பிறந்தநாள்... சட்டென்று பார்த்தவுடன் இப்படித்தான் எண்ணத்தோன்றியது.

'சுழி'யில் (பூஜ்ஜியம்) இருந்து ஒன்பது வரையுள்ள எண்களை வைத்து எழுத்துக்களை எழுதி இந்த சுவரோவியத்தை வரைந்துள்ளார்கள். பார்க்க புதுமையாக இருந்ததால் 'க்ளிக்'கிவிட்டேன்.

இடம்: மேற்கு வேளச்சேரி

'க்ரியேட்டிவிட்டி'க்கு தமிழ்ப்பதம் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Saturday, September 5, 2009

நினைத்தாலே கசக்கும் (Classmates) - ஒரு கோபம்!

நினைத்தாலே இனிக்கும்

*2008 ல் தமிழில் மறுபதிப்பு செய்யப்பட்டு 10ஒட 11ண்ணா போகப் போற திரைப்படம்.
*நான் படம் நெடுக கடுப்புடன் பார்த்த மற்றுமொரு திரைப்படம்.
*கல்லூரியைக் கருவாக்க கொண்டு வெளிவந்திருக்கிற மற்றுமொரு திரைப்படம்
*த்ரில்லர்-னெல்லாம் சொல்ல முடியாதுங்க!
*குடும்பத்தோடு பார்க்கலாம், ஆனால் தரமான படமெல்லாம் கிடையாது.
*நண்பர்களோடு சேர்ந்து கடுப்பாகலாம்.
*காதலை திரைக்கதையில் திணித்திருக்கிறார் இயக்குனர்.
*நகைச்சுவை ஏதோ பெயருக்கு இருக்கிற திரைப்படம்.
*ரசிக்கக் கூடிய பாடல்கள் என்று எதுவும் இல்லைங்க.

இப்படி பல கொடுமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

எனது பார்வை:
இந்த கதையின் மலையாளப் படத்தைப் பார்த்திருந்தாலும், அதனை முடிந்தவரை தவிர்த்துவிட்டே இந்தப் படத்தை பார்க்கத்தொடங்கினேன்.
அருமையான கதையை மோசமான திரைக்கதையால் சொதப்பியிருக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேல். படத்தின் முதல் பாதியில் பார்வையாளனை படத்தோடு ஒன்ற விடவே இல்லை. அந்த முதல் பாடல் - மனதில் ஒட்டவே இல்லை. நண்பர்ளின் கல்லூரி வாழ்க்கையை சித்தரிக்க வேண்டிய பாடலில், சும்மா கடலில் நான்கு பேரை விட்டு பாடவும் ஒடவும் வைத்துவிட்டது, அவர்களின் நட்பைப் பற்றி எந்த தடயத்தையும் படத்தில் விடாமல் செய்துவிட்டது. 'செக்ஸி லேடி' பாடல் வந்தபோதே கடுப்பும் சேர்ந்து வந்து ஒட்டிக்கொண்டது (அந்தப் பொண்ணு அழகாக ஆடியதைக் கூட ரசிக்க முடியாமல் போய்விட்டது!). வெறும் சண்டை போட மட்டுமே கல்லூரியைக் காட்டியிருக்கிறார்கள். இப்படி எந்த தமிழகக் கல்லூரி இருக்கிறது என்று தெரியவில்லை. முதல்பாதியில் படத்தின் முக்கிய முகங்களை நம் மனதில் பதியவைக்க இயக்குனர் தவறுவதால், இரண்டாம் பாதியில் என்னதான் கதை வேகமாகச் சென்றாலும், பார்வையாளனாக கதாப்பாத்திரங்களின் உணர்வுகளோடு ஒன்றமுடியவில்லை.

எனது கோபங்கள்:
இயக்குனர்களே, அரவாணிகளை வைத்து கிண்டல் செய்துதான் படமெடுப்பேன் என்று சொன்னால் - தயவுசெய்து நீங்கள் படமெடுக்க வராதீர்கள்.
இந்தமாதிரி கழுத்தறுக்கும் இயல்புக்கு மீறிய வகுப்பறை காட்சிகளை, இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் எங்களுக்கு காட்டப் போகிறீர்கள்?
ஒரு அழகான கதைக்கு சற்றும் பொருந்தாத இசையைக் கொடுத்து, கெடுத்து விட்டார் 'விஜய் ஆன்டனி'.


எனது கேள்விகள்:
+மலையாள வாசனை நிறைந்த (மேலதிக விமர்சனம் - என்வழி) ஒரு திரைப்படத்தை தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ப மாற்றும்போது அதற்கான கல்லூரி சம்பவங்களை வைக்க வேண்டாமா?
+500 பேர் தங்கியிருக்கிற விடுதியில், ஒரே ஒரு சமையல் மாஸ்டர்தான் இருப்பாரா? அவரேதான் ஜெனரேட்டரையும் ஸ்விட்ச் ஆன் பண்ணுவாரா?
+முதல் பாடலில் கடற்கரையில் 'ப்ரியாமணி' வரவேண்டிய அவசியம் என்ன?
+கல்லூரியில் நடந்த விபத்து பற்றி, கல்லூரி முதல்வர் அந்த மாணவனின் வீட்டுக்கு வந்தபின்தான் விசாரிப்பாரா?
+இசை என்கிற பெயரில் இந்த அமைதியான படத்தில், விஜய் ஆன்டனியை 'வன்முறை' நிகழ்த்த அனுமதித்தது ஏன்?
+பாடலில் அங்கங்கு 'Information Technology Block' , 'Machines Shop', 'Auditorium' இப்படியெல்லாம் காட்டினால், கல்லூரியில்தான் படம் நடக்கிறது என்ற உணர்வை பார்வையாளனுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று எண்ணமோ?


மேலேயிருக்கிற படத்தைப் பாருங்கள். எனது முந்தைய இடுகையில் இருக்கிற படத்தையும் பாருங்கள். உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வுகள் தோன்றுகின்றன. அதைத்தான் இந்த தமிழ் பதிப்பில் இயக்குனர் செய்திருக்கிறார்.

Thursday, September 3, 2009

Classmates (நினைத்தாலே இனிக்கும்-2009) - ஒரு பார்வை!

CLASSMATES:


*2006ல் மலையாளத்தில் வெளியாகி 'ஹிட்' டான ஒரு திரைப்படம்.
*நான் முழுமையாகப் பார்த்த முதல் மற்றும் கடைசி மலையாளத் திரைப்பட்ம்.
*கல்லூரியை கருவாகக் கொண்டு வெளிவந்த இன்னும் ஒரு படம்.
*ஒரு த்ரில்லர் என்றுகூட சொல்லலாம்.
*குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு தரமான திரைப்படம்.
*நண்பர்களோடு சேர்ந்து ரசித்துப் பார்க்கலாம்.
*காதலையும் கதையோடு சேர்த்தே சொல்கிற ஒரு படம்.
*நகைச்சுவையும் இயல்பாக இணைந்து செல்கிற படம்.
*அருமையான ரசிக்கக் கூடிய பாடல்களைக் கொண்ட திரைப்படம்.

இப்படி பல விசயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கதை:
கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரே வகுப்பு மாணவர்கள்
பல வருடங்களுக்குப் பிறகு திட்டமிட்டு ஒன்றாக
சந்திக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து
சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கச் செல்லுகிறார்கள். அந்த
இரவு நடக்கும் ஒரு கொலை முயற்சியில் இருந்து
தப்பிக்கிறார் கதையின் நாயகன். "நாயகனைக் கொல்ல
முயற்சி செய்தது யார்?" என்ற கேள்வியோடு கதை
ஆரம்பித்து, அவ்வப்போது பின்னோக்கிச் செல்கிறது.
கதையில் காட்டப்படும் முக்கியமான பாத்திரங்களுக்கும்
நாயகனுக்குமான தொடர்பு, கோபம், மற்ற காரணங்களை
கொசுவர்த்தி சுருள் இல்லாமல் பின்னோக்கிச் சென்று
காட்டுகிறது திரைக்கதை. கதையில் கல்லூரியில்
காட்டப்படும் சம்பவங்களை எனக்குத் தெரிந்து எந்தக்
கல்லூரியிலும் பொருத்திப் பார்க்க இயலாததால், ஒருசில
காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. ஆனால், கேரளத்து
கல்லூரி பின்னணிகளையும் அந்த கால வரலாறுகளையும்
கேட்டபின்பு அவை இயல்பானவையாக மனதில்
பதிந்துவிட்டன.


நட்பு, காதல், கல்லூரி சம்பவங்கள் அத்தனையும் மிக
சுவாரசியமாகக் காட்டியதில், திரைக்கதை கச்சிதம்.
விகடன் மாதிரி மார்க் போட்டா 46 போடலாமுங்கோ!

இயக்கம்: லால் ஜோஸ்
இசை: அலெக்ஸ் பால்

உங்களுக்காக படத்திலிருந்து ஒரு மிகச்சிறந்த பாடல்.


டிஸ்கி:
*'கிளாஸ்'மேட்ஸ் என்று தமிங்கிலிஸில் எழுதினால் - டாஸ்மாக் ஞாபகம் வர வாய்ப்பு இருப்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க வேண்டியதாகிவிட்டது!
*வரும் வெள்ளிக்கிழமை வெளிவர இருக்கும் 'நினைத்தாலே இனிக்கும்' படத்துக்கான திரைவிமர்சனம் இதுவல்ல.
*நினைத்தாலே இனிக்கும்-2009 படம் மேலே கூறிய "Classmates" படத்தின் மறுபதிப்பு என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியுதில்லை.