Thursday, April 30, 2009

வலைப்பதிவர்கள் பிழையின்றி எழுத! - சந்திப் பிழைகள் ஒரு அறிமுகம்

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாய்ங்க!!!
இல்ல இல்ல...
கிளம்பிட்டேன்யா கிளம்பிட்டேன்!!!
*************

கீழ் உள்ள தொடர்களை வாய்விட்டுப் படியுங்கள்.
பதிவர் கூட்டத்திற்குச் சென்றேன்.
தாமிராவைக் (ஆதிமூலகிருஷ்ணனைக்) கண்டேன்.
பேசிப் பார்த்தேன்.
கலைஞர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
கலைஞர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

இவற்றைப் படிக்கும்பொழுது தொடர்களின் இடையில் 'ச்', 'க்', 'ப்', 'த்' என்னும் எழுத்துகள் அமைந்து இயல்பாக ஒலிப்பதை அறிவீர்கள். இவ்வாறன்றி, 'கூட்டத்திற்கு சென்றேன்', 'தாமிராவை கண்டேன்'. 'பேசி பார்த்தேன்', 'உண்ணாவிரதத்தை தொடங்கினார்' எனப் படிக்கும்போது இயல்பான ஒலியமைப்பு இல்லை என்பதை அறியலாம்.

நிலைமொழிகளோடு 'க, ச, த, ப' வருக்கத்தில் தொடங்கும் வருமொழிகள் அமையும்பொழுது 'க், ச், த், ப்' மிகும் இடங்களை அறிந்து அவை என்னென்ன இடங்கள் எனக் கூறியுள்ளார்கள் நம் இலக்கணத்தில். அவ்வாறு அறியாது பயன்படுத்தினால் பொருள் வேறுபாடு ஏற்படும்.

எ-டு 1: 'நாடி துடிக்கிறது' என்னும்பொழுது 'ஒருவனது கை நாடி துடிக்கிறது' என்று பொருள்.
'நாடித் துடிக்கிறது' என்னும்பொழுது 'ஒருவரை நாடித்(விரும்பி) துடிக்கிறது' என்று பொருள்படும்.

எ-டு 2: 'இது ஒரு தந்தப்பெட்டி'
'நண்பர் எனக்குத் தந்த பெட்டி'
'தந்தப் பெட்டி' என்னும்பொழுது 'தந்தத்தால் ஆனப்பெட்டி' எனவும்,
'தந்த பெட்டி' என்னும்பொழுது 'கொடுத்த பெட்டி' எனவும் பொருள்படுகிறது.
எனவே வல்லினம் மிகும் இடம், மிகா இடம் அறிதல் வேண்டும்.

கீழே வல்லினம் மிகும் இடங்கள் சிலவும் வல்லினம் மிகா இடங்கள் சிலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் சந்திப் பிழைகளைத் தவிர்க்கலாம்.


வலிமிகும் இடஙகள்:
1. அப்படி, இப்படி என்னும் சொற்களின் பின் வலிமிகும்.
அப்படி + கூறினான் = அப்படிக் கூறினான்.
இப்படி + சொன்னார் = இப்படிச் சொன்னார்.

2. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்.
நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்.

3. அங்கு, இங்கு என்னும் சுட்டுத் திரிபுப் பெயர்களின் பின் வலிமிகும்.
அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன்.
இங்கு + பார்த்தேன் = இங்குப் பார்த்தேன்.

4. இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்வரும் வலி மிகும்.
பையை + கொடு = பையைக் கொடு.

5. நான்காம் வேற்றுமை உருபிற்கும் பின்வரும் வலிமிகும்.
சென்னைக்கு + சென்றான் = சென்னைக்குச் சென்றான்.

6. ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலிமிகும்.
தை + திங்கள் = தைத் திங்கள்
தீ + பற்றியது = தீப் பற்றியது

வலிமிகா இடங்கள்:

1. எழுவாய்த் தொடரில் வலிமிகாது.
குரங்கு + கடித்தது = குரங்கு கடித்தது.

2. வினைத் தொகையில் வலிமிகாது.
விளை + பயிர் = விளைபயிர்

3. உம்மைத் தொகையில் வலிமிகாது.
செடி + கொடி = செடிகொடி

4. அடுக்குத் தொடரில் வலிமிகாது.
தீ + தீ = தீ தீ

5. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது.
நீர் + குடித்தான் = நீர் குடித்தான்.


பயிற்சி:
'நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா'.

மேலுள்ள வாக்கியத்தை சந்திப் பிழையின்றி பின்னூட்டத்தில் எழுதுக. :)
************************
என்னமோ எல்லாரும் எழுதுறாங்க, நாமளும் ஒரு பெரிய சிந்தனையாளராகிட்டோம்ல(அடங்கொக்க மக்கா), அதனால எழுதுவோம் - என்று ஒரு எண்ணத்தில்தான் எழுத வந்தேன். எழுதுறது சரி, பிழையில்லாமல் எழுதுகிறாயா? என்று 'நானே கேள்வி' கேட்டபோது... 'நாம எல்லாம் யாரு? பச்சைத் தமிழன். நம்ம எழுத்துலயாவது, பிழையாவது' என்ற மமதையுடன் 'நானே பதில்' சொல்லிக்கொண்டேன்.

ஆனால் கடந்த முறை ஊருக்குச் சென்ற போது 8-வகுப்பு தேர்வுக்காக புத்தகத்துடன் முட்டி மோதிக் கொண்டிருந்த சிறுமியின் கையிலிருந்த மேற்கண்ட இலக்கணங்களை கண்டபோது....
'அடங்கொண்ணியா, ஒத்தை எழுத்துக்கே இத்தனை இலக்கணமா?!'
என்று கலக்கம் ஏற்பட்டுவிட்டது.

************************

பிடிச்சிருந்தா தமிழ்மணத்துல கையை உயர்த்திப் பிடியுங்கள் இங்கே!.

பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்து கொஞ்சமா மாத்திப் போட்டதுதாங்க இது.
நீங்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமா? வாருங்கள். ஆன்லைன் பாடப்புத்தகங்கள் இங்கே.

Wednesday, April 29, 2009

கற்றதனால் ஆன பயன் - பொட்டிதட்டுபவர்களின் பிதற்றல்கள்!

எத்தனை நாளுதான் எதிர் கவிதை / எதிரிக் கவிதையெல்லாம் எழுதறது?
எதிர் உரையாடல் எழுதினால் என்ன?
இந்த எண்ண ஓட்டத்தில் தோன்றியதுதான் இந்த இடுகை.
**********************

இன்றைக்கு எல்லோராலும் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயங்களாக எமது ஈழமக்களும் புலிகளும் மாறிப்போயுள்ளார்கள்.

இன்றுதான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது என்ற ரேஞ்சில், தமிழ்பட 'போலீசார்' பாணியில் ''CNN IBN", ''டைம்ஸ் நௌ'', போன்ற தொலைக்காட்சிகள் அலப்பறை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மௌண்ட் ரோடு மகா விஷ்ணுவும்(THE HINDU) வழக்கம் போல தீர்ப்பு சொல்ல எப்போதோ கிளம்பி விட்டார்.

இந்தச் சூழ்நிலையில் செல்வேந்திரன் கவிதை பாடிய, மேற்கூறிய இந்த ஊடகங்களையே 'கடவுளாக' நினைக்கும் ஒரு கும்பல் என்னென்னவெல்லாம் விவாதிக்கிறது என்று ஒரு இடுகையிட ஆசை. எனவே, சிலபல தருணங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களையெல்லாம் தொகுத்து ஒரு உரையாடல் வடிவத்தில் தருகிறேன். படித்துவிட்டு உங்களை கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

பொட்டிதட்டும் படித்த அறைகுறைகள்: பொ.த.ப.அ.கு. - சுருக்கமாக பொ.த.

பொ.த.-1: எதுக்காக இந்த பந்த் நடக்குது?

பொ.த.-2: பிரபாகரனுக்காக நடக்குது.

பொ.த.-1: ஒரு தீவிரவாதிக்காகவெல்லாமா பந்த்! இப்படியே போனா, ஒசாமா-வுக்கும் பந்த் நடத்த வந்திடுவாங்க. தமிழ்நாட்டுல மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும்.

நான்: தீவிரவாதின்னு எப்படி சொல்றீங்க, அவங்க சண்டை போடற காரணத்தை ஆராய்ஞ்சு பார்த்துதான் தீவிரவாதமா இல்லையான்னு சொல்ல முடியும்.

பொ.த.-2: பிரதமர் மன்மோகன் சிங்கே 'பிரபாகரன் ஒரு தீவிரவாதி'ன்னு சொல்லியிருக்காரு.

பொ.த.-1: இதோ பாரு, இந்த விக்கிபீடியா பேஜை. இதுல போட்டிருக்கே! இதுக்கு மேல இதைப்பத்தி பேசாத. இத்தோட விட்டுடு. வினை விதைச்சவன் வினை அறுக்கத்தான் செய்யணும்.

நான்: (அந்த விக்கி பக்கத்தை பார்த்தால், அது யார் வேணுண்ணா எடிட்ட கூடிய பக்கம் - இந்த கொடுமையை என்னான்னு சொல்ல!). ஏன் அவங்க சண்டை போடறாங்கன்னு, நான் ஒரு பக்கத்துல உங்களுக்கு எல்லாம் புரியுற மாதிரி English -ல எழுதியிருக்கேன் இதைப் படிச்சு பாருங்க (நான் ஆங்கிலத்தில் ஒருபக்க அளவில் எழுதினது).

பொ.த.-3: ஈராக்கோ, ஆப்கானிஸ்தானோ, இலங்கையோ - எங்கேனாலும் மனிதர்கள் கொல்லப்படக்கூடாது (ஏன் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க கொஞ்சமும் ஆர்வமில்லாமல்).

பொ.த.-2: தமிழ்ஸ் எதுக்கு அங்கே போயி சண்டை போடணும்?

நான்: நான் எழுதின அந்த பக்கத்தை படிச்சிட்டியா?

பொ.த.-2: படிச்சிட்டேன். ஆனா தமிழ்ஸ் எதுக்கு அங்கே போயி சண்டை போடணும்?

பொ.த.-4: இலங்கையில ஏதோ சண்டையாமே, டிவி-ல பார்த்தேன்!

நான்: தமிழர்களும் காலங்காலமா அங்க குடியிருக்கிற பூர்வீக குடிமக்கள்தான், படிக்கிறதுல, அரசியல்ல சிங்களவர்களுக்கு ஒரு நியாயம் தமிழனுக்கு ஒரு நியாயம்னு இருக்கிறது, என்னு கேட்டா கீழ்த்தரமா நடத்துறது, அடிக்கிறது.... இன்னும் என்னென்ன கொடுமையோ நடந்திருக்கு. அதையெல்லாம் எதிர்த்து தட்டிக்கேட்டுத்தான் இந்த போரே நடக்குது. உன் பக்கத்து வீட்டில, தெருவுல இருக்குற அண்ணனும் அக்காளும் கொல்லப்படுவதை பார்த்துகிட்டு எத்தனை நாளுக்கு அமைதியா இருக்கமுடியும். அதனாலதான் புலிகள் ஆயுதத்தை எடுத்துகிட்டு சண்டை போட வந்தாங்க.

பொ.த.-2: என்ன இருந்தாலும் அது வேற நாடு. நாம எப்படி அங்க தலையிட முடியும்?

நான்: அப்போ, நீயும் நானும் கொடுக்குற வரிப்பணத்துல தயாராகிற ஆயுதங்கள் மட்டும் அங்கே தலையிடலாமா?

பொ.த.-4: நான் கூட டி.வீ.யில பார்த்தேன். ஆனாலும் நம்ம நாட்டுலயே எத்தனையோ பிரச்சினை இருக்கு. ஊழல் - சுகாதாரம் - போக்குவரத்துன்னு.... அதெல்லாம் விட்டுட்டு இது எதுக்கு நமக்கு?

நான்: இங்க இருக்கிற இந்த சில இலட்ச, கோடி ஊழலை விட சில நூறு, ஆயிரம் உயிர்களின் மதிப்பு ரொம்ப அதிகம்.

**********************

நானும் ஒரு அரைகுறைதான். என்னையே நான் நொந்து கொள்கிறேன். ஆனாலும் எனக்கு இருக்கிற குறைந்தபட்ச புரிதலைக் கொண்டு இவர்களுக்கு ஈழப்பிரச்சினைக்கான மேலோட்டமான காரணத்தைக் கூட புரியவைக்க முடியவில்லை. இங்கே கொடுமை என்னவென்றால், தமிழ் பேசும் நல்லுலகத்தோரும் இதில் அடக்கம். ஆங்கில ஊடகங்கள், பிரச்சனையின் இப்போதைய நிலவரத்தை மட்டுமே ஏதோ 20-20 ஆட்ட நிலவரம் போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது ஏன் தொடங்கியது? என்று ஒரு வார்த்தை கேட்பதில்லை. ஏன் என்று கேள்வி வந்தால்தானே, அதை எப்படி தீர்த்துவைக்கலாம் என்ற அடுத்த முறையான கேள்வி வரும்.

*********************

சாதாரண மக்களுக்குக் கூட, அங்கே செத்து மடிந்துகொண்டிருக்கும் உயிர்களின் வலி எளிதாகப் புரிகின்றது. ஆனால் சற்றே படித்துவிட்டு, பொட்டி தட்டிக்கொண்டிருக்கும் என்போன்றோரில் பெரும்பாலானோருக்கு இதைக் கவனித்துப் பார்க்கக் கூட நேரமில்லை. சமூகத்தைப் பற்றிய - அட அக்கறை கூட வேண்டாங்க - ஒரு பார்வை கூட இல்லாமல்தான் இருக்கிறார்கள்.

Monday, April 27, 2009

பதிவர் பட்டறை - ஏதாவது செய்யணும் பாஸ்!

வெகு காலத்திற்கு முன்னால் 'தேன்கூடு தேன்கூடு' என்று ஒருதிரட்டி(இணையத்தின் வளர்ச்சியில் இந்த மாதக்கணக்கெல்லாம் வெகுகாலம்தான்) ஒன்று இருந்தது. அதன் சுவையிலேதான் இந்த பதிவுலகத்தின்கதவுகள் Chronicles of Narnia போல திறந்தது (இன்றும் அவ்வப்போது 'Bookmarking" ல் உள்ள அந்த லிங்கை கிளிக்குவது உண்டு, ஒருவேளை தேன்கூடு திரும்பவும்வந்திருக்குமா என்று).

தேன்கூடு கலைந்து விட்டாலும், அங்கு ரசித்த 'சுடர் ஒட்டம்' இன்னும் சுகமாகஇருக்கிறது. அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு 'பதிவர் பட்டறை' பற்றியும்தெரிந்துகொண்டேன். மிகவும் ஆசைப்பட்டும் அந்தப் பட்டறையில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

கடந்த 'பதிவர் சந்திப்பில்(05-04-2008, சென்னை)' 'ஏன் இன்னொரு பதிவர்பட்டறை' நடத்தக்கூடாது/நடத்த இயலவில்லை?' என்று கேள்வி எழுந்தது. " 2007 பட்டறையை நடத்திய "தன்னார்வத் தொண்டர்கள்" இப்போது ஒரே இடத்தில் இல்லை" என்பது அனுபவமிக்க பதிவர் 'பாலபாரதி' அவர்களின்கருத்தாக இருந்தது. புதிதாக தொண்டர்கள் வருவார்களா என்றுதெரிந்துகொள்வது அல்லது தன்னார்வம் மிக்கவர்களை ஒன்றுதிரட்டுவது, பின்அவர்களை ஒருங்கிணைத்து ஒரு பட்டறை நடத்துவது, இதில் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனை தீவிரமாக யோசித்து யோசித்து என் மீசையில் பாதி காணாமல் போய்விட்டது (ஆமாங்க மீசையை வருடிக்கொண்டே யோசித்தால் மூளை இன்னும் வேகமாக வேலை செய்யுமாம்!). அப்போதான் நம்ம வலையுலக ஹீரோ 'நர்சிம்' மின் மின்னல் தலைப்பு 'ஏதாவது செய்யணும் பாஸ்!' ஞாபகத்துக்கு வந்தது. நர்சிம் இறுதிவடிவம் கொடுத்துவிட்டாலும் 'ஏதாவது செய்யணுமே' என்கிற ஏக்கத்தில் தலைப்பை இட்டுவிட்டேன்.

இன்று பதிவர்களின் எண்ணிக்கையும் அதன் வீச்சும் 2007ல் இருந்ததைவிட பலவிதங்களில் அதிகரித்திருப்பது எல்லோரும் அறிந்ததே. வலையுலகின் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் ஏதேனும் ஒருவிதத்தில் சாதாரண பொதுமக்களைக் காட்டிலும் சற்றே அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்; பரந்த பார்வையுடன் உலகத்தை பார்க்கும் திறனையும் பெற்றுவிடுகிறார்கள் என்பது என் எண்ணம். எனவே, புதிய பதிவர்களின் வரவையொட்டியும் இந்த பதிவுலகத்தை மேலும் வளர வைக்கவும் முயற்சிகள் எடுக்கவேண்டியது, ஒவ்வொரு பதிவரின் கடமையாகிறது.

அதற்காக இந்த 'பதிவர் பட்டறை' யை நடத்த ஒரு 'தன்னார்வத் தொண்டனாக' என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். ஏற்கெனவே நண்பர் 'ஸ்ரீ' பதிவர்சந்திப்பு பற்றிய தன்னுடைய இடுகையில் தன்னை ஒரு தொண்டனாகஅறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதை நடத்துவதில் ஏதேனும் 'நுண்ணரசியல்' மேலும் மைக்ரோ, நேனோஅரசியல்கள் அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் அதை மூத்தபதிவர்கள் அலசி ஆராய வேண்டும். அவற்றை களைந்துவிட்டு வெகு விரைவில் 'பதிவர் பட்டறை' நடத்துவது குறித்து மூத்த பதிவர்கள் யாரேனும்முன்னெடுத்துச் வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னைப் போன்ற 'அஞ்சா நெஞ்சர்'கள்(!!!) களத்தில் இறங்கி பணிபுரிய காத்திருக்கிறோம்.

பதிவர் பட்டறைக்கு எனது பங்கு 1 கோடி - 2 கோடி என்று 'ஆத்துல
போடுற கதையா(!)'க ஏலம் விட்டுவிட்டு சும்மா
இருந்து விடாமல்,
ஏதாவது செய்யணும் பாஸ்.

ஒரு முக்கியமான செய்தி:
ஆசிப் அண்ணாச்சியோட அசத்தலான கரப்பான் பூச்சி விருதை இந்தஇடுகைக்காக நானே எடுத்து மாட்டிக் கொண்டேன். :)

***********************************

இந்த இடுகையை இரண்டு வாரமாக டிராஃப்டில் வைத்துக் கொண்டே இருந்தேன். கடந்த சனிக்கிழமை (25-04-2009) பதிவர் சந்திப்பில் 'பதிவர் பட்டறை' நடத்துவதுநன்மையே என்பதை உறுதி செய்து கொண்டு இந்த இடுகையை இடுகிறேன். தலபால பாரதி' அவர்கள் இந்த பட்டறைகள் மூலம் பொதுஜன ஊடகங்களின் பார்வை பதிவர்கள் மேல் படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும், 2007-ல் நடந்த பட்டறை இந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சொன்னார். '

'பதிவர் பட்டறை எங்கே?' எனும் மற்றொரு இடுகை இங்கே.


*************************

தமிழ்மணத்தில் கையை உயர்த்திப்பிடிக்க இங்கே கிளிக்குங்க.

Wednesday, April 15, 2009

குழந்தைகளுடன் சிறுத்தை! - மழலையர் பள்ளி ஆண்டுவிழாவில் திருமாவளவன்


வேளச்சேரி, நல்ல மேய்ப்பர் மழலையர் பள்ளி - 22 வது ஆண்டுவிழாவில் திருமாவளவன்

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் ௧௪, (ஏப்ரல்-14, 2009) அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மாலை 6:30 மணியளவில் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி சிறு உரையையும் நிகழ்த்தினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

மழலையர் பள்ளி என்பதால் முடிந்தவரை சீக்கிரமே செல்ல நினைத்து, வழக்கம்போல் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தேன். பக்கத்து தெருவில் நடந்த நிகழ்வு என்றாலும் பாரிமுனையிலிருந்து (இன்னொரு விடயமாகச் சென்றிருந்தேன்) வருவதற்கு தாமதமாகிவிட்டது.

வேளச்சேரி 'சோதனைச் சாவடி' (Check Post) பேருந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி, வண்டிக்காரன் தெருவில் நுழைந்து, முதலாவதாக வரும் இடது சந்தில் திரும்பினால் 'நேரு நகர்' வந்துவிடும். இந்த தெருவில் சற்று தொலைவில் இருக்கிறது 'நல்ல மேய்ப்பர் மழலையர் ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளி' (குட் ஷெப்பர்ட் நர்சரி & பிரைமரி ஸ்கூல் - Good Shepherd Nursery & Primary School).

நான் சென்றபோது, குழந்தைகள் தலையையும் கையையும் மட்டுமே ஆட்டி நடனமாடிக்கொண்டிருந்தார்கள் அல்லது பாடல் பாடிக்கொண்டிருந்தார்கள். இதோ புகைப்படங்கள்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு நடுவிலும், தொகுத்து வழங்கிய ஒரு ஆசிரியை மிகவும் வேண்டி வேண்டி கைதட்டும்படி சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்த வேண்டுகோள், கடுப்படித்தது.

ஒரு பாடலுக்கு ஆட வந்த குழந்தைகளில் நடுவில் நின்ற இருவர் கடைசிவரை அசராமல் ஆடாமல் நின்று அசத்திவிட்டனர்! இதோ பாருங்கள்...

அந்த பாட்டு முடிந்ததும் தொகுத்துவழங்கிய மற்றொருவர், 'அசராமல் ஆடாமல் நின்ற அந்த இரண்டு பேருக்கும் நல்லா கைதட்டுங்க' என்று சொல்லி ்கூட்டம் முழுவதையும் வெகுநேரம் கைதட்ட வைத்து அசத்திவிட்டார்.

திருமா வந்து, பேசிவிட்டுச் சென்றுவிட்டாரோ என்று நினைத்திருந்த நேரத்தில், வெடிகள் வெடித்தன, புகைப்படக் கருவிகள் மேடைக்கு எதிரே திரும்பின. நானும் திரும்பிப் பார்த்தேன். வண்டிக்காரன் தெருவில் இருந்து திருமாவளவன் நடந்து வந்துகொண்டிருந்தார்.


அவரது நடையில் அத்தனை இயல்பு. எந்த பந்தாவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக நடந்து சென்று மேடையேறினார். விரல்விட்டு எண்ணும் அளவுடைய தொண்டர்களே சில கட்சிகளில் உள்ளனர் என்றாலும், அதன் தலைவர்கள் காட்டும் அலப்பறைகளை நினைக்கும் போது, திருமா பலபடிகள் மேலே இருக்கிறார்.திருமாவளவன் அத்துணை மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். சில மாதங்களுக்கு முன் சென்னை, சானடோரியத்தில் 'தேசிய சித்த மருத்துவ நிறுவனம் - விடுதி திறப்பு விழா' - வில் வைத்து பார்த்தபோது இருந்த அந்த ஆவேசம் இல்லை. குத்துவிளக்கு ஏற்றிவிட்டு பேசினார். சற்றுமுன்னர்தான் முதல்வர் 'கருணாநிதி'யை சந்தித்துப் பேசிவிட்டு வருவதாகக் கூறினார்.
'விடுதலைச் சிறுத்தைகள்' கட்சி சார்பாக, வேளச்சேரி 'வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில்', கட்டடத்துடன் வாங்கப்பட்ட இடத்தில் 'மருதம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி' தொடங்கப்பட இருப்பதைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தான் ஒண்டிக்கட்டையாக இருப்பதால், சென்னைக்கு வந்தால் தங்குவது அந்தக் கட்டடத்தின் ஒரு அறையில்தான் எனவும் தூங்குவதற்கு ஒரு பாயை மட்டும் பயன்படுத்துவதாகவும் சொன்னார்.


மயிலை மாங்கொல்லையில் 'விருதுகள் வழங்கும் விழா' விற்கு செல்ல வேண்டும் என்று கூறி இருபது நிமிடங்களில் விடைபெற்றுச் சென்றார்.

நானோ, எனது புகைப்படக் கருவியின் 'மின்கலம்' தீரும்வரை குழந்தைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

Wednesday, April 8, 2009

நீங்கள் யாருக்காவது ஆறுதல் சொல்லியிருக்கிறீர்களா?

  • அப்பாவையோ அம்மாவையோ இழந்து தவித்த நண்பர்களுக்கு,
  • சொந்தங்கள் பிரிந்த அலுவலக சக பணியாளர்களுக்கு,
  • தன் காதலைப் புரிந்து கொள்ளாமல், தன்னை தட்டிக்கழிக்கும் காதலனை நொந்துகொள்ளும் உங்கள் தோழிக்கு,
  • நல்லவனாய் பழகி துரோகம் செய்து விட்டுச் செல்லும் நட்புகளைஅனுபவித்தவர்களுக்கு,
  • காதலில் மூழ்கித் திளைத்து, கரையேறும்போது தனியாளாய் வருபவர்களுக்கு,
நீங்கள் எப்போதாவது ஆறுதல் சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதா?

கல்லூரியில் படிக்கும் போது வாழ்க்கையே ஒரு விளையாட்டாய்ப் 
போய்க்கொண்டிருந்தது. படித்து முடித்து, வேலைக்கு வந்த பின்னும் அந்த மைதானத்தை விட்டு வெளிவரவில்லை மனது. அலுவலகத்திலும் அதே அரட்டை, அதே பொறுப்பில்லாத தன்மை. அந்த பெரிய மனுஷத் தோரணை ஏனோ வரவில்லை. பிரிவு, அதன் வலிகள், அதனிலிருந்து மீண்டு வருதல் - எதுவுமில்லாமல் சில ஆண்டுகள் ஓடிவிட்டன.

அம்மாவை இழந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தும், தவற விட்டேன். சொல்லத் தெரியவில்லை-நேரில் பார்த்து சொல்லிக் கொள்ளலாம் - இப்படி எல்லாமே. அல்லது 'முதிர்ச்சி வரவில்லையா' என்று தெரியவில்லை. அப்படி இப்படி என்று பலமாதங்கள் கடந்துவிட்டது. 'தொலைபேசியில் ஓரிரு வார்த்தை பேசியிருக்கலாமோ' என்ற குற்ற உணர்வு தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது.

'கல்யாணத்துக்கு கூட போகலைன்னா பரவாயில்ல, ஆனா சாவுக்கு கட்டாயம் போகணும்டா'-ன்னு ஊர்ப்பக்கம் சொல்வார்கள். அதைக்கூட செய்யாமல் இன்னும் சின்னப்பையனாகவே மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் என்னவென்பது?!


கடைசியாய் சமீபத்தில் மற்றொரு தருணத்தில், ஒருமுனையில் என்னால் வெறுமனே கேட்டுக்கொண்டுதான் இருக்க முடிந்தது. ஆனால் அதுவே ஒரு மன முதிர்ச்சி்யை அளித்தது. எனக்குத் தெரிந்துவிட்டது, இன்னும் எனக்கு 'ஆறுதல் சொல்லத் தெரியவில்லை'. ஆனால் காது கொடுத்துக் கேட்க அவ்விடத்தில் நான் இருந்தது, மறுமுனையில் சற்று ஆறுதலளித்திருக்கும்.

ஆறுதல் தேவைப்படும் உங்கள் உறவுகளுக்கு, உங்கள் செவிகள் 'செவிமடுக்கட்டும்', உங்கள் நாவுகள் 'ஆறுதலளிக்கட்டும்'. உங்கள் கரங்கள் அவர்களைத் 'தாங்கிப்பிடிக்கட்டும்'.

படம்: http://pro.corbis.com/

Sunday, April 5, 2009

மெரீனா பீச்சு காந்தி செலையாண்டை...அதிஷாவின் அதட்டல்

//மக்களே மறந்துடாதீங்கோ மறந்தும் வூட்ல தூங்கிடாதீங்கோ.. மருவாதியா வந்து சேருங்கோ அல்லாங்காட்டி பதிவு போட்டு உங்க நிஜார பேஜார் பண்ண வேண்டிருக்கும்..// 

அதிஷாவின் அதட்டலுக்கு இணங்கி இந்த ஊர் சுற்றியும், இன்று நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் ஒரு பதிவராக கலந்து கொள்கிறான். 

இடம் - கடலோரக் கவிதைகள்,  காந்தி சிலையருகில்.

காலம் -  அஞ்சு மணிக்கு சும்மா சும்மா,  5-ம் தேதி சும்மா சும்மா (இன்றுதான் 05-04-2009).

பொருள் - வானமே எல்லை.


நீங்களும் வந்துருங்க...

Friday, April 3, 2009

TN07 - AL 4621 விபத்தில் சிக்கியது!

TN07 - AL 4621
என்ற எண்ணுடைய இரு சக்கர வாகனம்
வேளச்சேரி, இரயில் நிலையத்திற்கு அருகே
விஜயநகர் செல்லும் வழியில்
சற்றுமுன் (40 நிமிடங்களுக்கு முன்) 
நிலைகுலைந்தது.

அடிபட்ட வாகன ஓட்டியை ''தமி்ழ்நாடு அரசு' 
அவசர ஊர்தி (108) அருகிலுள்ள 
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது.

இந்த வண்டி எண்ணுக்கு உரியவரைப் 
பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் 
அவருக்குத் தெரிந்தவர்களுக்கு 
தெரியப்படுத்துங்கள்.

இந்தியப் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதா? - புதுசு கண்ணா புதுசு

எங்கு நோக்கினும் 'இந்தியா அதை சாதித்துவிட்டது, இதை சாதித்துவிட்டது, இந்த துறையில் நாம்தான் முதலிடம், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டது, வல்லரசா எப்போ மாறும்?' என்பது போன்ற விடயங்கள் விரவிக்கிடக்கின்றன. (எங்க தமிழ்நாட்டுல அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யாரு? ங்கறது கூட இதுக்கு முன்னாடி சாதாரணம்). 

 இதைப்பற்றியெல்லாம் அதிகமாக சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. உண்மையிலேயே நம் நாடு மகத்தான சாதனைகளை செய்து வருகிறதா?, நம்முடைய பொருளாதார நிலை உயர்ந்துள்ளதா? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், கடந்த வாரத்தில் ஊருக்கு சென்றிருந்த போது இதற்கெல்லாம் விடை கிடைத்தது. 

திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பேரூராட்சி அது. கிட்டத்தட்ட, 6 வருடங்களுக்கு பிறகு அந்த பேருந்து நிலையத்தில் அதிக நேரம் செலவிட்டு அதன் அக்கம் பக்கத்தை கவனித்தேன். 

அன்று - இன்று.... 

அதே கடைகள் - டிஜிடல் பேனர்களுடன். 
நேரம் தவறிய அதிக சத்தமெழுப்பும் பேருந்துகள் - எண்ணிக்கை கொஞ்சம் அதிகம், சிற்றுந்து எக்ஸ்ட்ரா. 
அதே அழுக்கேறிய சீருடைகள், பட்டன் இல்லாமல் ஊக்குகள் அலங்கரிக்கும் அரசாங்க பள்ளி மாணவர்கள் - சீருடை நிறம் மட்டும் வேறு. 
பாஸ்டர்(போதகர்) மாருதி 800ல் சென்றவர் - 'ஒப்ட்ராவோ ஆப்ட்ராவோ', அந்த காரில் செல்கிறார். 
சிவன் கோவில் இடிந்து தகர்ந்த நிலையில் - புதுவித பூச்சுகளுடன் பல இலட்சம் விழுங்கிவிட்டு நிற்கிறது.
ஒத்தை காரில் பஞ்சாயத்து அலுவலகம் வந்த MLA - குறைந்தது 3 வாகனங்கள் புடைசூழ. 


என்னமோப்பா... ஏதோ 'இந்தியா ஒளிர்கிறது' ன்னீங்க. அப்புறம் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் சக்கை போடு போடுகிறதுங்கறீங்க. ஒண்ணுமே புரியலப்பா. உண்மையிலேயே இங்க என்னதான் மாற்றம் நடந்துகிட்டிருக்கு. 

எப்பவோ ஒருதடவை பேருந்து வருகிற ஊரில் கூட, முந்தாநாள் வந்த புது திரைப்படத்தோட திருட்டு குறுந்தகடு சர்வசாதாரணமாக உலாவிக்கொண்டு இருக்கிறது. ஒரு 'கடவுச்சீட்டு' (Passport) சம்பந்தமாக விசாரணைக்கு வந்த காவலர் அன்றைக்கு 100ரூ. கேட்டார்; இன்றைக்கு 300 ரூபாய் கேட்கிறார். சதவீதக் கணக்கில் பார்த்தால் 200 சதம் வளர்ச்சி.  இத்தனை நாள் இல்லாமல் 'புதுசு கண்ணா புதுசு' என்கிற ரீதியில் அரசுத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் - தேர்தல் நேரம்!. 

நல்லா இருக்குதுப்பா உங்க வளர்ச்சியும்.....!

Wednesday, April 1, 2009

காதலின் முதல் SMS (உண்மையில் கதை!)

உங்களில் காதலிக்காதவர் எவரேனும் இவன் மேல் கல் அடியுங்கள்!!! -காதல் க்ரைஸ்ட். 

நள்ளிரவு நேரம். சென்னையில் இருந்து சில நூறு கல் தொலைவில் தடதடத்துக் கொண்டிருந்தது அந்த இரயில். பாதித் தூக்கத்தில், S10 பெட்டியின் ஒரு பக்கவாட்டு மேல் படுக்கையில் நான். கடைசியாய் என் கைபேசியின் 'கேன்சல்' பொத்தானை அழுத்தியதாய் நினைவு. இரயில் ரிதத்திலிருந்து வித்தியாசப்பட்டு மிக அருகில் ஒலித்த 'டக் தடக் தடக்' என்ற சத்தம் தூக்கத்தை நிறுத்தியது. 'கைபேசி கைநழுவியிருந்தது!'. நண்பனின் கைபேசியில் இருந்து வந்த மங்கலான வெளிச்சத்தில் தேடிப் பார்த்தாகிவிட்டது. என் கைபேசி என்னிடமிருந்து விடுதலையாகி, ஜன்னல் கம்பிகளில் மோதி, இரயிலுக்கு வெளியே எங்கோ இருட்டில் தஞ்சமடைந்திருக்க வேண்டும்.

திண்டுக்கல் வரை விழித்திருந்து நண்பனை வழியனுப்பிவிட்டு, அதற்கு அப்பால் நான் இன்னொரு பெட்டியில் பயணிக்க வேண்டும்(திண்டுக்கல்லில் இருந்து இன்னொரு பயண்ச்சீட்டு) என்பதை மறந்து அயர்ந்து தூங்கிவிட்டேன். கண்ணில் தெரிந்தது மதுரை இரயில் நிலையம்.
S7 நோக்கி நடந்தேன்.இருக்கை எண் 40-ஐ அடைந்ததும் ஒருமுறை கண்ணை கசக்கிக் கொண்டேன். அங்கு அவள் உட்கார்ந்திருந்தாள். இல்லை, அழகாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். இல்லை, இல்லை அவள் மட்டுமே அந்த கம்பார்ட்மெண்டில் அமர்ந்து அழகாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒருமுறை இருக்கை எண்ணை உறுதி செய்துவிட்டு உட்கார்ந்துகொண்டேன்.

'மதமும் பகுத்தறிவும்' என்ற ஒரு கட்டுரைகளின் தொகுப்பை கொண்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். சற்றுநேரம் அதில் மூழ்கினேன். ஏற்கெனவே இரயில் தாமதமாய் சென்று கொண்டிருந்தது. வீட்டில் இந்நேரம் தேட ஆரம்பித்திருப்பார்கள்.  கைபேசி தொலைந்த தகவலை எப்படி வீட்டிற்கு தெரிவிப்பது என்ற யோசனையில் புத்தகத்தை மூடினேன். எதிரில் இருந்த அவளிடம் பேச்சு கொடுத்து அவளது கைபேசியை கேட்டேன். புதிராய்ப் பார்த்த அவளிடம், என் கைபேசியை தவறவிட்டதை கூறி என் நிலைமையை விளக்கினேன். தன்னுடைய 'NOKIA 6600'-ஐ என்னிடம் நீட்டினாள்.

வீட்டிற்கு தகவலை சொல்லிவிட்டு, "என் மொபைல் என்ன நிலைமையில இருக்குன்னு தெரியல, அதுக்கு ஒருதடவை டயல் பண்ணி பார்த்துடறேன்" என்றேன். "சரி" என்று தலையை மட்டுமே ஆட்டினாள். என்னுடைய எண் "தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக" பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒலித்தது. அவளிடம் கைபேசியை திரும்ப கொடுத்துவிட்டு, நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் கவனத்தை திருப்ப கழுத்தை திருப்பினேன்.


அப்போதுதான் கவனித்தேன் அவள் கைகளில் இருந்த புத்தகத்தை. 'இம்மானுவேல் கான்ட்'(Immanuel Kant)-டின் 'Critick of Pure Reason'. ஓரிரு வினாடி ஆச்சரியத்தில் உறைந்து போனேன். தத்துவம் என்றாலே பொதுவாக பெண்களுக்கு ஆகாது. அதுவும் எந்த சமரசத்திற்கும் ஒத்துவராத மிகவும் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து மடிந்த, ஆனால் தத்துவ உலகிற்கு அழியா செல்வங்களையும் கொடுத்த, மேதை 'கான்ட்' பற்றி படிப்பது என்றால்!!! எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி 'ரிக்டர்' அளவுகோலில் 9.4-ஐ தாண்டியிருக்கும்.

'நீங்க கான்ட் பத்தியா படிக்கிறீங்க?' என்றேன் அந்த ஆச்சரியத்துடனே.
'ம்ம்' என்று பதில்.


'ஃபிலாஸஃபி ல ரொம்ப ஈடுபாடு உண்டா உங்களுக்கு?'
என்றேன். 'ஆமா' என்று மறுபடியும் ஒற்றை வரியில் பதில். 20-30 நிமிடங்கள் ஆகியிருக்கும். வண்டி விருதுநகர் பக்கம் வந்துவிட்டது.

'கான்ட் எழுதின புத்தகம் நீங்க ஏதாவது படிச்சிருக்கீங்களா?'
என்று எங்களிடையே குடிகொண்டிருந்த அந்த மௌனத்தை கலைத்து அவள் கேட்ட கேள்விக்கு, 'கான்ட் பற்றி கேள்வி ஞானம் மட்டுமே உண்டு' என்று பதிலளித்தேன்.

எப்படி இந்த புத்தகமெல்லாம் உங்களுக்கு அறிமுகமானது, கான்ட் கூறும் பல விஷயங்கள் குழப்பும் விதமாகவும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்குமே? அதிலும் ஒரு பெண், நீங்கள் எப்படி இந்த புத்தகத்தை அணுகுகிறீங்கள்? என்பன போன்ற என் (கடலை) கேள்விகளுக்கு பதிலளித்தாள்.

தான் எம்.பி.ஏ. படித்திருப்பதாகவும், விளம்பரத் துறையின் ஆர்வம் மிகுதியால் அதில் நுழைந்து கிளையன்ட் சர்வீசிஙகில் இருப்பதாகவும் சொன்னாள். இந்தத் துறையில் நுழைந்த பின்னர் கிடைத்த அனுவங்களும் நண்பர்களும் தத்துவம் பற்றி படிக்க காரணம் என்றாள். அவள், பேசிக்கொண்டிருந்த போது என் கண்கள் அவள் கண்களிலும், சில வினாடிகள் அவள் தடதடக்கும் அவள் உதடுகளிலும் நிலை கொண்டன.

சுதாரித்துக் கொண்டு, எனது ஆர்வமும் இதைச் சார்ந்தே இருப்பதை பகிர்ந்து கொண்டேன். புத்தகங்கள் எங்கள் பைகளுக்கு சென்று விட்டன. கோவில்பட்டி எப்போதோ கடந்துவிட்டதை காணவில்லை நான். எங்களின் விவாதங்கள் எங்கெல்லாமோ சென்று திரும்புவதற்குள்.....திருநெல்வேலி வந்து, இரயில் நின்றும் விட்டது. இரயிலுக்கு வெளியே அவள் அப்பா. கணநேரத்தில் கையசைத்துவிட்டு கடந்துவிட்டாள்.

ஊரில் மூன்று நாட்கள். திரும்பவும் சென்னை. வந்ததும் புதிய சிம் கார்டு வாங்கினேன். ப்ளாக்(block) பண்ணியிருந்த அதே எண்ணை திரும்பவும் ஆக்டிவேட்(Activate) செய்தேன். நண்பனின் கைபேசியில் சிம்மை இட்டு இயக்கியதும் வந்த முதல் SMS.

'ஹாய், இது புவனா. ரயில்ல சந்திச்சோமே? நீ எப்படி இருக்க? ரொம்ப சாரி, அன்னிக்கு பேச்சு சுவாரசியத்துல உன் பேரையே கேக்க மறந்துட்டேன்'

நீ்ங்க 'நீ' யாக மாறியிருந்தது! (தொலைந்துபோன என் நம்பருக்கு நான் அவள் கைபேசியிலிருந்து முயற்சி செய்தேனல்லவா? அதிலிருந்து என் எண்ணை எடுத்திருந்திருக்கிறாள்!)

அதைப் படித்து பிரமித்திருந்த நேரத்தில் இன்னொரு SMS. 'ஹேய், புது சிம் வாங்கிட்டியா?' (உபயம்: முந்தைய SMS-ன் டெலிவரி ரிப்போர்ட்).இன்றோடு இரண்டு மாதங்களாகிவிட்டன, நான் அவளிடம் என் காதலை சொல்லி. 2 1/2 வருடங்களாகிவிட்டன அவளை இரயிலில் பார்த்து. உங்களுக்கு நினைவிருக்கிறதா, உங்கள் காதலின் முதல் SMS?