Tuesday, August 25, 2009

டுவிதை=ட்விட்டர்+கவிதை: சில வரிகள்!

*****தனிமை*****


சாயங்காலம் - என்ற வார்த்தையை வைத்து
கவிதை வரையச் சொன்னாய்.
எந்த காலத்தில் பயன்படுத்துவது என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நீயோ இறந்தகாலத்தில்!

------

தனித்திருப்பதின் தத்துவம் பிரிந்திருப்பதில் உணரப்படுவதில்லை!
பிரிவு ஒரு துயரமே. தனிமை எப்போதும் தத்துவமே!
தத்துவங்கள் எப்போதும் புரிவதில்லை.

-----

மஞ்சள், வெள்ளை, நீல போர்டு பேருந்துகளில் புரிகின்றது
50 பைசா, 1 மற்றும் 2 ரூபாயின் மதிப்பு
உன் மதிப்போ
நீயில்லாத என்னுடைய கொடிய தனிமைகளில்.

-----


மேல இருக்கிற ஒவ்வொன்றையும் (கவிதைன்னு சொல்ல மனசு வரலீங்க) நகலெடுத்து 'ட்விட்டரில்' (Twitter) ஒட்டினீர்கள் என்றால் கச்சிதமாக பொருந்திக்கொள்ளும் (அதுக்காக தேவையில்லாம ஸ்பேஸ் தட்டக்கூடாது!). வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி, அடுத்த வரி என்று மட்டும் வைத்து சரியாக ட்விட்டரின் பெட்டிக்குள் பொருந்தும்படி கவிதை (!) எழுதுவதை வருங்கால சந்ததியினர் டுவிதை என அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதனால் இப்போதே இந்த வார்த்தையை காப்பிரைட் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என இருக்கிறேன். :)

என்னை ட்விட்டரில் தொடர http://www.twitter.com/oorsutri

*****
செய்தி: ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் 'ட்வீட்' (Tweet) என்ற வார்த்தைக்கான ட்ரேட்மார்க் உரிமையை ட்விட்டருக்கு வழங்க அமெரிக்க 'பேடண்ன்ட் அண்டு ட்ரேட்மார்க் ஆபிஸ்' (US Patent and Trademark Office) மறுப்பு.

இந்த வார்த்தைக்கு நெருக்கமாக, மூன்று வார்த்தைகள் ஏற்கெனவே ட்ரேட்மார்க் தகுதி வாங்குவதற்காக காத்திருப்பு பட்டியலில் இருப்பதால், வார்த்தைக் குழப்பம் நேரலாம் என்பதுதான் காரணமாம்.

புகைப்படம்: நண்பன் 'பாலா' விடமிருந்து balasailendran@gmail.com.

Friday, August 21, 2009

உண்மையும் வேகமும் - சில வரிகள்!

உண்மைகள் சிதறிக்கிடக்கின்றன:

நகரங்களின் முட்டிமோதும் மூளையுள்ள மனிதர் நடமாடும்
தெருக்களில் அல்ல,
ஏதோ ஒருசில மூலைகளில்
ஒளிபார்த்தறியாத பள்ளங்களில்
தினமும் நீரூற்றும் தொட்டிச்செடியில்
மின்னஞ்சலின் கடவுச்சொற்களில்
பார்க்கத் தவறிய புன்னகைகளில்
நண்பனின் தாமதங்களில்
பரிமாறிக்கொள்ளாத வாழ்த்துக்களில்
கைபேசியின் தவறிய அழைப்புகளில்...

உண்மைகள் சிதறிக்கிடக்கின்றன.

---

சாலையின் விளிம்புகளில் 'டேக் ஆஃப்' ஆகி,
நான் நிஜமாகவே பறக்கிறேன்
தூரத்தில் ஒருவன் எலும்பு நொறுங்க
அடிவயிற்றிலிருந்து தொண்டைவரை 'த்ரில்'
நான் இன்னும் வேகமாய்
கூட்டம் அவனை வேடிக்கை பார்க்க
நான் (அதோ) சாலையின் மறுமுனையில்
இன்னும் வேண்டும் 'த்ரில்'
வேகம், வேகம்...
என் 'பைக்' நூறுக்கு மேல் போகாதே!
இல்லையே, நான் பறக்கிறேனே 110, 120, 125....
கூட்டத்தின் நடுவில் எனது கவசத்துடன் அவன்
அது நானும்தான்!

----

Sunday, August 16, 2009

வேளச்சேரி கூழ்வார்த்தல் திருவிழாவும் விஜயும் நாடோடிகளும்!

வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நகர், 10-ம் ஆண்டு ஆடி கூழ்வார்த்தல் திருவிழா கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. இதில் நேற்று 15-8-2009 (சனிக்கிழமை) இரவு 'லஷ்மண் ஸ்ருதி' யின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுமார் 3000 பேர் இந்த நிகழ்ச்சியை ரசித்தனர். பெரும்பாலும் இசைக்கச்சேரி என்றால், எல்லா நடிகர்களின் படங்களிலிருந்தும் அவர்களின் மிகப் பிரபலமான பாடல்களைப் பாடுவார்கள். ஆனால் இந்த கச்சேரியில் நடிகர் 'விஜய்' அவர்களின் படத்திலிருந்து அதிகமான பாடல்கள் பாடப்பட்டன. அதற்குக் காரணம், ஒவ்வொரு விஜய் பட பாட்டிற்கும் கிடைத்த கைதட்டல்கள்.

'வாடா மாப்பிள்ள...' என்றவுடன் அதுவரை அமைதியாக இருந்த கூட்டம் கைதட்ட ஆரம்பிக்கிறது, விசில் பறக்கிறது! பாடல்களை ரசிப்பது என்பதையும் தாண்டி அங்கே ஒரு நடிகரை முன்னிலைப் படுத்தியது மக்கள் கூட்டம்.

மேடையில் 'லஷ்மண் ஷ்ருதி'யின் தொடர்புக்கு என்று ஒரு தொலைபேசி எண் இருந்தது. அந்த எண்ணுக்கு சிலபேர் போன் செய்து ஒரு பாட்டை பாடச்சொல்லி ஒருமணி நேரமாக தொந்தரவு செய்தார்களாம். அந்த பாடல் 'டாடி மம்மி வீட்டில் இல்ல...' (அடப்பாவிகளா!). பக்கத்தில் நின்றவர் ''அஜித் ரசிகர்கள் யாருட்டயும் போன் இல்லயாடா?'' என்று கேட்டது காதில் விழுந்தது.

இது எல்லாவற்றையும் விட முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு நிகழ்வு - 'நாடோடிகள் படத்திலிருந்து ஒரு பாடல்' என்று சொன்னதும் இளைஞர்கள் பக்கமிருந்து கைதட்டல்களும் - சீட்டியடிப்புகளும் பட்டையைக் கிளப்பின. சசிகுமாருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இப்போதே உருவாகிவிட்டது உறுதி.

கோவில் மற்றும் நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு.
Friday, August 14, 2009

மீண்டும் ஃபெவிகான் - இம்முறை கூகிள் க்ரோம் மற்றும் சஃபாரி உலவிகளில்!

சிலகாலத்திற்கு (!) முன்பு வலைப்பூ/இணைய தளத்திற்கு ஃபெவிகானை இணைப்பதைக் குறித்து ஒரு இடுகையிட்டிருந்தேன். அதில், கூகிளின் உலவி 'க்ரோம்'(Chrome) மற்றும் ஆப்பிளின் உலவி 'சஃபாரி'(Safari) யில் பெவிகானைத் தெரியவைப்பதில் பிரச்சினை உள்ளதைத் தெரிவித்திருந்தேன்.

ஆனால் இதைச் சரிசெய்ய பின்வரும் வரியை, உங்கள் டெம்ளேட்டில் இடைச்சொருகினால் போதும். link href='Image URL' rel='icon' type='image/x-icon'/ தோழி ஒருத்திமூலமாக இதைத் தெரிந்துகொண்டேன்.

பழைய இடுகையில் கீழ்க்கண்ட வரிகளை இணைக்குமாறு கூறியிருந்தேன். link href='Image URL' rel='shortcut icon'/. இது எக்ஸ்ப்ளோரர் மற்றும் ஃபயர்பாக்ஸிற்கு வேலை செய்கிறது. ஆனால் குரோமும் சபாரியும் இதைக் கண்டுகொள்வதில்லை.
இதோ என்னுடைய வலைப்பூவிற்கு எனது புரொஃபைல் படத்தையே பெவிகானாக வைத்துள்ளேன்,

குரோமில்

சபாரியில்

எளிய வழிமுறை:

1) உங்களுக்குப் பிடிச்ச படத்தை(அ) நீங்களே உருவாக்கிய (jpeg, jpg, gif, bmp, png, tiff, tif, ico) படத்தை இங்கே சென்று அப்லோட் செய்யுங்கள். http://www.iconj.com/

2) இது .ico ஃபைலை உருவாக்கி இணையத்தில் தரவேற்றமும் செய்துவிடும். அப்லோட் செய்யப்பட்ட பின் திறக்கும் பக்கத்தின் அடிப்பாகத்தில்அதன் முகவரி இருக்கும். அதை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.

3) உங்கள் வலைப்பூவில் 'Customize/Layout' கிளிக் செய்து பின் 'Edit HTML' கிளிக் செய்யுங்கள். data:blog.pageTitle என்று வரும் வரிக்குக் கீழே பின்வரும் இரண்டு வரிகளையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
Uploaded Image URL என்பது 2-வது படியில் நீங்கள் நகலெடுத்த தரவேற்றம் செய்யப்பட்ட படத்தின் முகவரியாக இருக்க வேண்டும்.

4) இப்போது Save Template - ஐ கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்.

சுதந்திர தினங்களும் தொலைந்துபோன தேசிய உணர்வும்!

'சுதந்திர தினம்'
ஒரு மயக்கும் வார்த்தை.

பள்ளிப் பருவத்தில் - 8ம் வகுப்பு வரை:
ஒருவித மிடுக்குடன் 'சீருடையை' அணிந்துகொண்டு என்றுமில்லாத 'ஒற்றுமையுணர்ச்சி' மேலோங்க, பள்ளி விழாவில் கலந்துகொண்டது இன்னும் நினைவிருக்கிறது. சுந்திர தினம் - குடியரசு தினமென்றால் பள்ளியில் கொடியேற்றுதல் ஒரு விழாவாகவே நடக்கும். யாராவது உள்ளூர் அல்லது பக்கத்து ஊர் பிரபலம்(!) விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார். கொடியேற்றிய பிறகு 'கொடிப்பாட்டு' என்று ஒன்று பாடுவோம். "தாயின் மணிக்கொடி பாரீர்....." என்று துவங்கி 'வந்தே மாதரம்' என்ற வார்த்தைகளை உச்சஸ்தாயில் பாடும் போது முதுகெலும்பு சிடுசிடுக்க, மயிர்கள் புல்லரிக்க, பலமுறை உணர்ச்சிப் பெருக்கோடு நின்றிருக்கிறேன்.

பள்ளிப் பருவத்தில் - 8ம் வகுப்பிற்குப் பிறகு:
9-ம் வகுப்பிலிருந்து பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டதால், பள்ளி விழாக்களில் நேரடிப் பங்கேற்பு இல்லை. ஆனால், அப்போதிருந்துதான் தலைநகரில் நடக்கும் அணிவகுப்பினையும் அங்கு விதவிதமாய் இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும் ஊர்வலங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். அணிவகுப்பில், 'இந்தியாவே தயாரித்த ஏவுகணை' என்றெல்லாம் சொல்லும்போது - அதன் அருகில் நடந்துசெல்லும் வீரனாக என்னையே கற்பனைசெய்துகொண்டு நெஞ்சை நிமிர்த்தியதுமுண்டு.

கல்லூரிக் காலத்தில்:
கல்லூரியிலும் இதே நிலை. எத்தனை தடவை பார்த்தாலும் திகட்டாத ஒரு இன்ப அனுபவம் இந்த 'அணிவகுப்பு'. 'நான் ஒரு இந்தியன்' என்று சொல்லி பலமுறை கர்வப்பட்டிருக்கிறேன். இந்தியா சொந்தமாக ஒரு ராக்கெட்டோட போல்ட் செய்தாக் கூட 'லேய் படிச்சியாடா, இந்தியா சொந்தமா இதச் செஞ்சிருக்கு. நாமதான்டா உலகத்திலயே மூணாவது/நாலாவது' இப்படியெல்லாம் சொல்லித்திரிந்திருக்கிறேன். சொந்தமாக இந்தியா செயற்கைக் கோள்களை ஏவியதையெல்லாம் ஒரு அபூர்வ நிகழ்வாக நண்பர்களிடத்திலே பரப்பியிருக்கிறேன். எங்கள் ஊரின் அருகாமையில் இந்தியாவின் சொந்த முயற்சியில்(ரஷ்யாவின் உதவியோடு) நடைபெற்றுவரும் ராக்கெட் இஞ்சின் 'சோதனை' ஒன்று அவ்வப்போது நடக்கும். அந்த சத்தமெல்லாம் நாடி நரம்பெங்கும் பாய்ந்து 'இந்திய' முறுக்கேற்றியதும் இந்தக் காலத்தில்தான்.
எப்போதும் 'அமெரிக்கா, அமெரிக்காதான் சூப்பர் நாடு' என்று சொல்லித்திரிந்த சக மாணவனை ஒரு அறைக்குள் அடைத்து, நாங்கள் ஒரு சில 'தேசபக்தர்கள்(!)' ஒன்று சேர்ந்து 'இந்தியா இஸ் கிரேட்' என்று சொல்ல வைத்திருக்கிறோம்.

சென்னைக்கு வந்த பிறகு:
சென்னைக்கு வேலைக்கு வந்த பிறகு, கடற்கரை, கோட்டைக்கு அதிகாலையிலே சென்று அணிவகுப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளைத் தவறாமல் பார்வையிட்டிருக்கிறேன். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது மட்டுமே 'தேசபக்தி' பெருக்கெடுத்து ஒடும் நண்பர்களின் 'தற்காலிக தேசபக்தியை' சகட்டுமேனிக்கு விமர்சித்திருக்கிறேன். நண்பன் ஒருவன் டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பை நேரடியாகப் பார்த்ததை விவரித்த போது, - 'ம்ம்.., நாமளும் ஒருநாள் கட்டாயம் பார்த்தாகணும்' என்று தீர்மானம் எடுத்து சில மாதங்கள்தான் ஆகின்றன.

ஆனால் இப்போதோ நிலைமை 'தலைகீழ்'. என்னடா வெங்காயம் 'தேசிய உணர்வு' என்று எண்ணுகிறேன் - சில உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தபின்.

தேச பக்தியை விட மனித உயிர்கள் எவ்வளவோ மேலானவை.

Thursday, August 13, 2009

தினத்தந்திக்கு ஒரு வேண்டுகோள்!

உங்கள் எல்லோருக்கும் 'தினத்தந்தி' என்கிற செய்தித்தாளைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். நான் ஒன்றும் வாசிக்கத் தெரிந்ததிலிருந்தே 'தினத்தந்தி'யைப் படித்து வருபவன் கிடையாது. இருந்தாலும் சமீபத்தில் கண்ணில் பட்ட சில 'செய்திகளை(!)ப்' பற்றி பகிர்ந்துகொள்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு 'சூரியகிரகணம்' நிகழ்ந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு 'நம்புங்கள் நாராயணன்' சொன்னார் என்று சொல்லி சில பயமுறுத்தும் விசயங்களை வெளியிட்டது இந்த தினத்தந்தி (அது எதுவும் நடக்கவில்லை என்பது வேறுவிசயம்).

அதே போல சமீபத்தில் நடந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 12-8-2009 தேதியிட்ட சென்னைப் பதிப்பில் இரண்டாம் பக்கத்தில் அதே 'நம்புங்கள் நாராயணன்' சொன்னார் என்று சில வரிகள் வெளியிட்டுள்ளார்கள். அந்த ராசி, இந்த நட்சத்திரம் அது அங்க இருந்தது இது இங்கே இருக்குது... என்று நீளுகிறது அந்த பத்தி.

இது போதாதென்று இப்போது நம்மை 'முகமூடி' வீரர்களாக மாற்றி வரும் 'பன்றிக் காய்ச்சல்' வேறு வந்துள்ளது அல்லவா, இதைப்பற்றியும் சில தகவல்களுடன் இதே 12-8-2009 நாளிதழில் ஒரு அடி முட்டாள்தனமான விசயமும் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் 'பலன் வெண்பா' என்று ஒன்று உள்ளதாம். தற்போதைய 'விரோதி' ஆண்டிற்கான பலன் வெண்பாவில் இந்தப் பன்றிக்காய்ச்சல் பற்றி சொல்லப்பட்டுள்ளதாம். ஏதோ ஒரு ஜோதிடர் சொன்னாராம்.

''அடேய்! அப்படின்னா முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போரெல்லாம் நடந்து முடிஞ்சு 60 வருடம் கழிச்சி திரும்பவும் உலகப் போர் வந்ததா?'' என்றுதான் எனக்கு கேட்கத் தோன்றுகிறது.

இதுபோல, குழப்பத்தை உண்டு பண்ணும் விதத்தில் சில விசயங்கள் அடிக்கடி தினத்தந்தியில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

'தினத்தந்தி' சாதாரண வாசகர்களையும் சென்றடையும் செய்தி ஏடு. இதில் இந்த மாதிரி அறிவியலுக்கு சிறிதும் ஒத்துவராத விசயங்களை வெளியிடுவதைத் தவிர்க்கலாமே. அப்படி வெளியிட்டுத்தான் ஆவது என்றால் உங்களின் 'ஜோதிடம்' போன்ற இலவச இணைப்புக்களில் வெளியிடுங்களேன். ஒரு செய்தித் தாளை, செய்திகளை வழங்க மட்டுமே பயன்படுத்துங்களேன். இந்த மாதிரி அடிப்படையில்லாத - செய்தியே இல்லாத 'ஊகங்களை' தயவு செய்து நிறுத்துங்களேன்.

Tuesday, August 11, 2009

சூரியகிரகண மேதாவிகளே!

சூரியகிரகணம் வரும்போது, சூரியன், பூமி, நிலா இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். நிலா மற்றும் சூரியன் ஒரே திசையில் இருப்பதால் ஈர்ப்பு விசை அதிகமாகும். இந்த அதிகப்படியான விசை புவியின் 'டெக்கான் ப்ளேட்டுகளை' நகர்த்தப் போதுமானதாக இருக்கும். எனவே 'சூரியகிரகணம்' அன்றோ அல்லது அதற்குப் பின்பு சிலநாட்களுக்குள்ளாகவோ நிலநடுக்கம் வரலாம். இந்த நிலநடுக்கம் காரணமாக 'சுனாமி' வரலாம். இன்னும் என்னென்னவெல்லாமோ வரலாம் என்று 'லாம்' கொட்டியவர்களே... உங்களுக்குத்தான் இந்த இடுகை.

நிலவும் - சூரியனும் ஒரே பக்கமா இருந்தா ஈர்ப்புவிசை அதிகப்படியா இருக்கும் - சரி. ஆனா நேத்து ராத்திரி நிலவும் சூரியனும் எதிரெதிராக (கொஞ்சமா விலகி) இருந்தது. அப்படின்னா ஈர்ப்புவிசையை கழிக்கத்தானே செய்ய வேண்டும். இப்போ இந்த நிலநடுக்கம் வந்ததுக்கு 'சூரியகிரகணம்' காரணமா இல்லையான்னு வந்து சொல்லுங்க மக்களே!

இல்லவே இல்லை. நாங்க, 'லாம்' னுதான் சொன்னோம் 'கும்' னு (நடக்க'லாம்'-நடக்'கும்') சொல்லவே இல்லைன்னு சொல்றவங்க, ஏதாவது ஆளெடுக்கிற அரசியல் கட்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதேமாதிரி கிரகணத்தையும் - ஆன்மீகத்தையும் சேர்த்து குழப்பி ஒரு சூப்பர் குருமாவாக பக்தகோடிகளுக்கும் வாசகர்களுக்கும் தந்துகொண்டிருக்கிறார்கள் சிலர். அவர்களுக்கும் சில கேள்விகள் தயாராக வைத்துள்ளேன். நீங்களும் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் அடுத்த இடுகையில் இணைக்கிறேன்.