Monday, May 18, 2009

நான் வளர்கிறேனே மம்மி - கேப்டன்!

''கேப்டன்''.

இந்த வார்த்தைதான் தமிழகத்தின் இருபெரும் கழகங்களுக்கு திடீரென்று இல்லை, கடந்த சில ஆண்டுகளாக வேண்டாத வார்த்தையாக மாறியிருக்கிறது.  சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து இன்று நன்றாகவே வேர்பரப்பி, கிளைகளும் பரப்பி வளர்ந்திருக்கும் (வளர்ந்துகொண்டிருக்கும்) ஒரு அரசியல் ஆலமரம்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.).  

கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே இது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் வாய்ச்சவடால் விட்டு, வித்தைகள் செய்த கட்சிகளே இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட இந்த தேர்தலில், தன்னுடைய வாக்கு சதவீதத்தை இரண்டு இலக்கங்களில்(10%) கொண்டுபோய் நிறுத்தியது தே.மு.தி.க. விற்கு மைல்கல், மற்ற பெரிய கட்சிகளுக்கு பெரிய 'சறுக்கல்'. அதிலும் 'பணம் விளையாடிவிட்டது' என்று பெரிய கட்சிகளும் அதன் தலைவர்களும் 'ஜகா' வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்த இரட்டை இலக்கம் கவனிக்கப்படவேண்டியது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இப்போதும் தே.மு.தி.க.வின் ஒட்டுக்கள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன.  சுமார் 20க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகள் தே.மு.தி.க. வசம் சென்று சேர்ந்திருக்கின்றன(மதுரையெல்லாம் விதிவிலக்கு!). இதில் நாம் கவனிக்க வேண்டியது தே.மு.தி.க.- வின் மொத்த பலத்தைத்தானே தவிர 'யாருடைய வெற்றி வாய்ப்பை எப்படி மாற்றியது?' என்பதைப் பற்றியல்ல. 

தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,09,70,352. 
தே.மு.தி.க. மட்டும் பெற்ற வாக்குகள் 31,25,801. 
சதவீதத்தில் 10.09%. 


Thursday, May 14, 2009

நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன!

*உங்கள் வீட்டு முற்றம், கூடம் - இரவு நேரத்தில் இங்கு அமர்ந்து வானத்தை ரசித்திருக்கிறீர்களா?
*உங்கள் சகோதரர்கள், பக்கத்து வீட்டு அக்கா, அண்ணா, சின்னக்குழந்தைகள் இவர்களோடு ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தியிருக்கிறீர்களா?
*கட்டிலில் படுத்துக்கொண்டே அரட்டையடித்துக்கொண்டு இரவு நேர வானத்தின் எழிலை உற்று நோக்கியிருக்கிறீர்களா?

கொஞ்சம் மேகமும் அதிகமாய் நட்சத்திரங்களும் நிறைந்த, அந்த முன்னிரவு நேர வானம் - பல கதைகளையும் சுகமான அனுபவங்களையும் தரவல்லது. 


பள்ளிப் பருவத்திலே, இப்படியாகக் கழிந்த இரவுகளை அதிகம் அனுபவித்தவன் நான். வானம்தான் எத்தனை அழகு அதன் நட்சத்திரப் பூக்களின் அலங்கரிப்பில்! 
அந்த 'L' வடிவத்தில் அமைந்த நான்கு நட்சத்திரங்கள், வில் வடிவத்தில் அமைந்தவை, கொத்தாக ஒரு நட்சத்திரக் கூட்டம், பிரகாசமாய் ஒன்று தினமும் வெவ்வேறு இடத்தில்(அது நட்சத்திரமல்ல 'வெள்ளி' - சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள் என்று வெகு காலத்திற்குப் பின்தான் எனக்குத் தெரிந்தது!) - இவைகளின் இடங்களை மனதில் குறித்து வைத்துக் கொள்வதில் எனக்கு அலாதி இன்பம். சரியாக இரவு 8 மணிக்கு நட்சத்திரங்கள் அமைந்திருக்கும் இடத்தை வைத்து அது எந்த மாதம் என்று கண்டுபிடிக்கலாம். தெரியுமா உங்களுக்கு?

இந்த எல்லாச் சிதறல்களிலும் தனித்துவமாக எனக்குப் பிடித்தது 'செவ்வாய்'. செவ்வாய் கிரகத்தை நான் கிரங்கிப்போய் உற்று நோக்குவதை வைத்து 'உனக்கு செவ்வாய் கிரகத்தில்பெண் பார்த்துவிடுவோமா?' என்று கேட்ட பக்கத்து வீட்டு அக்கா, வானத்தின் விளக்கங்களைக் கதைகளில் வடித்த அடுத்த தெரு அண்ணா என்று விரிகிறது வானத்துடனான என் நட்பு. 

கல்லூரி வரும்வரை 'நிலா'வுடனான எனது தொடர்பு ஆரம்பித்துவிடவில்லை(பொண்ணு இல்லீங்க!). நிலாவைத் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் கல்லூரி நாட்களில்தான் ஏற்பட்டது. அப்போதுதான் கோள்களையும் நட்சத்திரங்களையும் 'தொலைநோக்கியில்' பார்க்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது. 



என் கனவுலகில், வானத்தில் மிதப்பதற்காகவே நள்ளிரவில் மிதிவண்டியில் பயணித்த நாட்கள் எனக்கு உற்சாகம் அளிப்பவை. எங்கள் கிராமத்திலும், ஏன் கல்லூரிக்காலத்திலும் கூட வானம் நட்சத்திரங்கள் நிறைந்து மகிழ்ச்சியாகவே காணப்பட்டது. 

இப்போது - இங்கே சென்னையில், முற்றமும் இல்லை கூடமும் இல்லை. நண்பன் சொன்னான் 'நகரத்தில் நட்சத்திரங்களைக் குறைவாகவே காண முடியும்' என்று- புகை, காற்று மாசுபாடு நட்சத்திரங்களை மறைத்து விடும் என்றான். நான் நம்பவில்லை. தொடர்ந்த முன்னிரவு அலுவல்களும், இல்லாத மொட்டைமாடி இரவுணவுகளும் வானத்துடனான எனது தொடர்பைக் குறைந்துதான் விட்டன. இங்கே நகரத்திலோ சினிமா, அரசியல் நட்சத்திரங்களே நம் கண்களில் அதிகம் மின்னுகின்றனர், அவ்வப்போது சின்னத்திரை நட்சத்திரங்கள். ஆனால் புகையால் மூடப்பட்டோ, மேகத்தால் சூழப்பட்டோ வானம் இல்லாவிட்டாலும் 'நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன' அல்லது 'நமக்கு எப்போதாவதுதான் நேரம் கிடைக்கிறது!'


கூடம் - வீட்டிற்கு உள்ளே நடுவில் அமைந்த திறந்தவெளி(படம் கீழே).


Tuesday, May 12, 2009

இளம் பதிவர்களே, இந்த வாரம் போணியாகுமா?! - வாரப் பலன்!

புதிய பதிவர்களின் பிறந்த தேதி மற்ற விவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில் இந்த வாரப் பலனை பலவித நுண்ணிய ஜோதிட முறைகளின் துணைகொண்டு(!) கணித்துள்ளேன். தொடர்ந்து படியுங்கள்....(காலையில் தொலைக்காட்சியில் வந்து ராசி பலன் சொல்பவர் போல் படித்தால், ஏதோ கொஞ்சம் நன்றாக இருக்கும்)

வலையுலக இளம் எழுத்தாளர்களே!
எழுத்துலகில் புகழ்பெற 2, 5 மற்றும் 7.5 வீ டுகளின் தொடர்பு தேவை. இந்த வாரம் இந்த வீடுகள் காலியாக உள்ளதாலும் 13-ம் தேதியில் தேர்தல் வருவதாலும் உங்களில் பெரும்பாலானோருக்கு சாதகமான பலன் இல்லை. நடப்பு 'தேர்தல் திசை', வரும் சனிக்கிழமை உச்சத்தை அடைவதால் நீங்கள் உங்கள் எழுத்துலக புது முயற்சிகளை சற்று ஒத்திவைப்பது நல்லது. முக்கியமாக, சுக்கிரதிசை உச்சத்தில் உள்ள யாரேனும் 'உண்ணாவிரதம்' இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பதிவிடுவது நல்லது.

'தேர்தல் திசை' காலத்திற்கு பின்பு வரும் காலம் எப்போதும் போல் இல்லாது இம்முறை கொஞ்சம் சிக்கலாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் சூப்பரான பதிவுகள் இட்டாலும் பதிவுக்கு பின்னூட்டம் தேடி வீண் அலைச்சல், டென்ஷன், கொஞ்சம் பொருட்செலவுகளும் இருக்கும்.

இந்த நிலை அடுத்த வெள்ளிவரை(மே, 22) தொடரும் என்பதால், அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது. கும்மி பதிவர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

தேர்தல் அதிபதி 'சூரியன்' மதுரையில் உச்சத்தில் இருப்பதால் தேர்தல் பற்றிய செய்திகளும், தேர்தல் முடிவுகள் பற்றிய விவாதங்களும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் பற்றிய குழப்பங்களும் வலையுலக வியாபாரத்தில் மறைமுகப் போட்டியை உண்டுபண்ணும். லக்கிலுக், உண்மைத்தமிழன், தமிழ் சசி, இன்னும் சிலரது பதிவுகள் வழக்கத்தைவிட அதிகம் கவனிக்கப்படும். உண்மைத்தமிழன் அவர்களின், முழுதாகப் படிக்காமல் விட்ட பழைய இடுகைகளைக்கூட தேடிப்பிடித்து தூசுதட்டி படிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: கருப்பு, சிவப்பு, மஞ்சள். ('எம்பா பச்சையை விட்டுட்டியே?!' என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு விழுகிறது!).
அதிர்ஷ்ட திசை: தமிழ்நாட்டுக்கு நடுவில் (மதுரை).
திசைக்கு துரதிர்ஷ்டம்: கிழக்கு மற்றும் தென்கிழக்கு.

தேர்தல் நாள் - குளக்கரை - ஒரு கொலை! - உண்மையில் கதை!

அவருக்கு 55 வயது இருக்கும். எங்க ஊர் சின்னப்பிள்ளைகள் எல்லாம் அவரை 'சைக்கிள் மாமா' என்றுதான் கூப்பிடுவார்கள். அவர் குளித்து சுத்தமாக இருப்பாரோ இல்லையோ, அவரது சைக்கிள் அவ்வளவு பளபளப்பாக இருக்கும். ரிடையர்ட் ஆகிவிட்ட அவருக்கு 'போஸ்ட் ஆபிஸ் திண்ணை'யில உட்கார்ந்து அரட்டை அடிப்பதும், சின்ன சின்ன சாமான் வாங்குவதற்குக் கூட பக்கத்து ஊருக்கு சைக்கிள் மிதிப்பதுமே முக்கியமான வேலை. 'ரிடையர்ட் ஆன பிறகு வேற வேலையில்லாம சைக்கிளைத் துடைச்சி சுத்தம் செய்றாரு' இப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்பு கூட அவர் இப்படித்தானாம் - அம்மா சொன்னது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

சைக்கிள் சம்பந்தமாக அத்தனை தகவல்களும் அவருக்கு அத்துப்படி. புது வண்டி வாங்குவது, எப்படி பாகங்களை இணைப்பது, ஹாண்டில் பாரில் இருந்து, பால்ஸ் மாற்றுவது வரை எல்லாமே அவராகவே செய்து கொள்வார், கோட்டம் எடுப்பது கூட(சக்கரத்தில் (RIM)ஏற்படும் வளைவுகளை நிமிர்த்தி சரி செய்வது). டயர் தேய்ந்தால் கூட உடனே மாற்றிவிடுவார், அதுவும் அவர் வழியே தனிவழிதான். எல்லாரும் ஹெர்குலிஸ் என்றால் அவர் மட்டும் ஹீரோ சைக்கிள் வைத்திருப்பார்.

எங்கள் வீட்டு 'டீவி' பெட்டியை சரிசெய்ய 'வில்சனின்' அண்ணன் 'பெஞ்சமின்'னிடம் அம்மா கொடுத்திருந்தாள். வில்சன் என்னைவிட ஒருவருடம் முன்னால் பிறந்ததால் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். இந்த வில்சனுக்கு, தான்தான் அறிவாளி என்று நினைப்பு. எங்கே போனாலும் இவன்தான் எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசுவான். பக்கத்து ஊருக்குப் படிக்க போன பையன்களிலேயே அவன் ஒருத்தன்தான் வாட்ச் கட்டியிருந்தான். வெளிநாட்டிலிருந்து அவன் மூத்த அண்ணன் அனுப்பிவிட்டதாம். எல்லாப் பையன்களும் அவனிடம் மணிகேட்டுக் கொண்டுதான் வேகமாக சைக்கிள் மிதிப்பார்கள். அவனைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலாய் வரும்.

அன்று தேர்தல் நாள். எல்லாருக்கும் விடுமுறை. 'பெஞ்சமின்' அண்ணன், டீவி சரிசெய்ய அம்மாவிடம் பணம் வாங்க வீட்டுக்கு வந்திருந்தார். என் பிறந்த நாளுக்கு வைத்திருந்த பாயாசத்தில் ஒரு டம்ளர் குடித்துவிட்டு தனது தேய்ந்துபோன பழைய சைக்கிளில் பக்கத்தூருக்கு கிளம்பினார், டீவியில் எரிந்துபோன சில பாகங்கள் வாங்குவதற்காக. இங்கிருந்து பக்கத்து ஊருக்கு, குளக்கரை வழியில் சென்றால் 15 நிமிடம் ஆகும். அப்பொழுது மணி பன்னிரெண்டரை இருக்கும், அவர் 1 1/2 மணிக்கெல்லாம் திரும்பி வந்து டீவியை சரிசெய்தால், 3 மணிக்கெல்லாம் டீவி பார்க்கலாம். இந்த கணக்கு என் மனதில் ஒட, நான் விளையாடுவதற்காக வெளியே வந்தேன். போஸ்ட் ஆபிஸுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு 'வில்சன்' தனது எலக்ட்ரானிக் வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருசில பெருய தலைகளும், அவர்களோடு சைக்கிள் மாமாவும் உட்கார்ந்து எலெக்சன் முடிவுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வில்சன், தன் அண்ணனுக்கு கையசைத்து 'அண்ணே, இந்த வாட்ச்சுக்கு ஒரு செல் வாங்கிட்டு வாண்ணே - அலாரம் அடிக்கமாட்டேங்குது' என்று குரல் கொடுத்தான். பதில் அளிக்க பக்கத்தில் சென்ற பெஞ்சமின் அண்ணன், சைக்கிள் மாமாவைக் கண்டதும், 'ம்ம்' என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அது என்னமோ தெரியவில்லை, 'சைக்கிள் மாமாவுக்கு பெஞ்சமின் அண்ணனைக் கண்டாலே பிடிக்காது. பெஞ்சமின் அண்ணன் பக்கத்து ஊருல சைக்கிள் மாமாவுக்கு சொந்தக்காரப் பொண்ண சைட் அடிச்சாராம். டீவி சரிபண்ண போன இடத்துல இரண்டுபேருக்கும் லவ்வாகி, அது அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சு போச்சாம். அந்த அக்கா வீட்ல உள்ளவங்க சைக்கிள் மாமாட்ட சொல்லி பெஞ்சமின் அண்ணனை கண்டிக்க சொன்னாங்களாம். அப்போ சைக்கிள் மாமா பேசத் தெரியாம பேசி பெஞ்சமின் அண்ணன்கிட்ட நல்லா ஏச்சு வாங்கிட்டாங்களாம். அண்ணிக்கி இருந்து ரெண்டு பேரும் முறைச்சி பார்த்துட்டேதான் இருக்காங்க' என்று இந்த 8-ம் வகுப்பு படிக்கும் 'சுந்தர்' பெரிய ஆள் மாதிரி பேசினது என் மனதிற்குள் விரிந்து மறைந்தது.

மற்ற எதையும் கவனிக்காமல் கோவில் கிரவுண்டுக்கு நடையைக் கட்டினேன். அங்கே ஒருத்தனையும் காணோம். தேர்தல் என்பதால் அங்கே விளையாடக்கூடாதாம். ஊருக்கு வடக்குத் தெருவில் விளையாட்டுச் சத்தம் கேட்க அங்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். லேசாகத் தூறல் விழ ஆரம்பித்தது, பின் ஓய்ந்துபோனது - வெயிலுக்கு இதமாக. தோராயமாக அரைமணிநேரம் போயிருக்கும், சுந்தர்தான் வந்து சொன்னான். 'நம்ம வில்சனோட அண்ணேன் பெஞ்சமின் இருக்காவலா, அவியள குளத்தாங்கரையில யாரோ வெட்டிபோட்டுனானுவளாம்'

நாங்கள் கிடைத்த அரைவண்டி, முக்கால்வண்டி(சைக்கிள்தான்) எல்லாம் எடுத்துக்கொண்டு ஒட்டமும் நடையுமாக குளக்கரைக்குச் சென்றோம். எல்லாம் முடிந்துபோயிருந்தது. குளக்கரையை ஒட்டியுள்ள கிணற்றைச் சுற்றி மண்டியிருந்த புதரில் பெஞ்சமின் அண்ணாவைக் குதறிப் போட்டிருந்தார்கள்.

அதேநேரம் 'சைக்கிள் மாமா' எதிர்த்திசையில் இருந்து வந்தார். வந்தவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரியவர்களிடம் பேச ஆரம்பித்தார், 'நம்ம வட்டவயிறன் இருக்காம்லா, அவன்தான் சொன்னான். நான் இப்போதான மேக்க போனேன். என் கையில சிக்காம போயிட்டானுவளே! வட்டவயிறன் போலீஸ்ட்ட சொல்லியிருக்கானாம்டே, இப்போ வந்துருவாங்க'. இதை பெரியவர்கோடு நின்று கேட்டுக்கொண்டிருந்த வில்சன் தன் கடிகாரத்தை இரண்டு மூன்றுமுறை பார்த்துக்கொண்டு சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டான்.

போலீஸ் வந்தார்கள். 'யாருடே முதல்ல பாத்தது? எத்தனை பேரு செஞ்சான்டாவது தெரியுமாடே?' என்ற பத்துநிமிட கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. வில்சன் மெதுவாகச் சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசினான். இன்ஸ்பெக்டர் 'சைக்கிள் மாமாவையும்' மற்ற சிலரையும் விசாரணைக்காக கூட்டிச் சென்றார். அன்று சாயங்காலமே சைக்கிள் மாமா, 'கொலையாளிகளை தான் பார்த்ததாகவும், சம்பவ இடத்தைக் கடக்கும்போது அந்த நான்குபேரும் பெஞ்சமின் அண்ணனை கிணற்றுக்கு அருகே இழுத்துக்கொண்டு சென்றதாகவும், இதற்கெல்லாம் மேலே அவர்களைத் தனக்குத் தெரியு்மென்றும், அவர்கள் பெஞ்சமின் அண்ணனைக் காதலித்த அந்த பெண்ணுக்கு சொந்தகாரப் பையன்கள் என்றும்' ஒப்புக்கொண்டார்.


இந்த வில்சன் போலீஸிடம் அப்படி என்ன பேசினான்? தெரிஞ்சிருந்தா பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுப் போங்கள். பிடிக்கவில்லை என்றாலும் பின்னூட்டத்தில் திட்டுங்கள்.

Monday, May 11, 2009

பெண்களே உஷார் - இது ஒட்டுக் கேட்டதல்ல!

நம் பத்திரிக்கைகளில் இந்த 'உஷார்' என்கிற வார்த்தைக்கு பெரும்பாலும் ஒரே அர்த்தம்தான் இருக்கும் என நினைக்கிறேன். அதுவும் 'பெண்கள்' என்கிற வார்த்தை இதனுடன் முன்பாகவோ பின்பாகவோ வந்துவிட்டால் 100% இது எதைப்பற்றி என்று நீங்கள் கணித்துவிடுவீர்கள். 

அதேதாங்க... 

கடந்த வாரத்தில் ஒரு 'உணவு விடுதியில்' சாப்பிட்டுக்கொண்டிருந்த போது பக்கத்து இருக்கையில் ஒருவன் வந்து அமர்ந்தான். வயது 25 இருக்கும். தென்சென்னை ஆட்டோக்காரர்களுக்கு வருமானத்தை அள்ளித்தரும் ஏதோ ஒரு 'மல்டி நேஷனல்' கம்பெனியில் பணிபுரிபவனைப் போல உடையணிந்திருந்தான். அப்போது அவனுக்கு ஒரு 'தொலை அழைப்பு' வந்தது. தன்னுடைய 'கைபேசி'யை எடுத்து பேச ஆரம்பித்தான். இனி அவன் நடத்திய உரையாடலின் ஒரு பக்கம் இங்கே. 

***டேய் ஆமா என்ன ப்ளான் வச்சிருக்க?

***சனிக்கிழமை வர்றியா? ம்ம்... 

***சரி லாட்ஜ் எந்த மாதிரி பார்க்கணும்?

***ஊட்டிக்கெல்லாம் போகவேண்டாண்டா. இந்த சீசன் டைம்ல அங்க போனா நீ வேகவச்சிடுவ. சரி அவ என்ன சொன்னா?

***மகாபலிபுரம் வர்றியா? அங்க ___லாட்ஜ்ல ரூம் போட்றலாம். 800 ரூபாயில இருந்து 1200 ரூபாய் வரும். 

***அதெல்லாம் ரூம் குடுப்பாங்கடா. நம்மள மாதிரி ஆட்கள வச்சிதான பிஸினஸே நடக்குது. அங்க போயி எம்பேர சொல்லு, கொஞ்சம் அமௌன்ட்ட குறைப்பானுங்க. நான் போன வாரம்கூட போயிட்டுவந்தேன். 

***ஆமா, எப்படிடா அவ தனியா வர்றதுக்கு சம்மதிச்சா? 

***டேய், உனக்கு காதல் தோல்வியா - நீயாடா சோகத்தில இருக்க?

***பழைய ஆளு எப்படி இருக்கா, அதான் உங்களுக்கு எல்லாம் முடிஞ்சு போச்சே! ஆமா மூணுமாசம் கூட ஆகல. அதுக்குள்ள இவ எப்படி மாட்னா? 

***சோகத்துக்கு ஆறுதல் சொல்லுறாங்களாக்கும். அது எப்படி? நீ தாடியோட தெருவுல சுத்திகிட்டு இருந்தியா, காதல் தோல்விங்கற பேர்ல. நான் சொல்றேன்டா அது காதல் தோல்வியே இல்ல. வசதியாப்போச்சுன்னு, மேட்டர முடிச்சுட்டு எஸ்ஸாயிட்ட. அத காதல் தோல்வின்னு நினைச்சுட்டு இவ மடங்கிட்டாளா?

***சரி சரி, வந்துட்டு போ. 

மக்களே, இவன் எப்படிடா பொது இடத்துல இப்படி பேசிகிட்டு இருக்கான்னு நான் முழிச்சிட்டு இருந்தேன். அவன் TASMAC பார்ல இருந்து வெளிநடப்பு செய்த வாடை வந்தது.  அதனால எட்டுப்பட்டிக்கும் சொல்றது என்னான்னா....
'காதல்ங்ற பேர்ல சிலதுகள் பண்ற கண்றாவியை கண்டுபிடிச்சு அதுல இருந்து தப்பிச்சிகிடுங்கோ'ன்னு இளசுகளுக்கு சொல்லிப்புட்டேன் ஆமா. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு. என்ன நாஞ்சொல்றது?

Wednesday, May 6, 2009

அயன் கே.வி.ஆனந்து சாரே மற்றும் பலரே - இயல்பான காதல் தெரியாதா உங்களுக்கு?!

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலர்மீது எனக்கு, பேசித் தீராத கோபம் இருந்து கொண்டிருக்கின்றது. அது, காதல் காட்சிகளை இவர்கள் படமாக்கும் விதம். காதல் காட்சிகள் என்று சொல்வதைவிட 'காதல் அரும்பும்' காட்சிகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

மிகச் சமீபத்திய உதாரணம் 'அயன்'. ஒரு பையனைப் பார்த்த இரண்டாவது சந்திப்பிலேயே 'எதையோ வச்சிட்டு வந்திட்டேன், தொலைச்சிட்டு வந்திட்டேன்' என்று சொல்வதா காதல். சிறிது நாட்களுக்கு முன் 'படிக்காதவன்' என்றொரு படம். அதில் கதாநாயகனுக்கு காதல் வருவதாகக் காட்டப்பட்ட காட்சிகள் கொடுமையிலும் கொடுமை. காதல் செய்து கொண்டிருக்கும் அல்லது காதல் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் அன்பர்கள் யோசிக்க வேண்டிய விசயம். (அயன் - விமர்சனங்களில் இந்தக் கொடுமையெல்லாம் கவனித்து எழுதிய அன்பர்களுக்கு பாராட்டுக்கள்).



தமிழ்ப்பட இயக்குனர்களே, தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த மாதிரி காட்சிகளை எடுக்கும் நீங்கள் 'காதலே செய்யாதவர்களா?' அல்லது 'காதல்னா என்னான்னு தெரியாதவர்களா?'

காதலுக்குச் சரியான காரணமில்லாமல், நாயகன் - நாயகி என்கிற ஒரே அடையாளத்துக்காக மட்டுமே காதல் வரும் இந்த மாதிரி படங்களின் லிஸ்ட் போட்டால், திண்டிவனம் வரை வரும்... முக்கியமா 'பொல்லாதவன்', 'போக்கிரி', 'சிவாஜி'....ன்னு இந்த வரிசை மிக நீளமானது (விழுப்புரம் தாண்டி போகும்னு நினைக்கிறேன்). சொல்லப்போனால் இந்த மாதிரி இயக்குனர்களால் காதலே இல்லாத காதல்கள், இளம் பருவத்தினரிடையே நஞ்சுபோல் தூவப்படுகின்றன. இந்த மாதிரி கொஞ்சமும் இயல்பே இல்லாமல் முற்றிலும் செயற்கைத்தனமாக துளிர்விடும் காதல் காட்சிகளை வைத்துப் பார்க்கும் போது, 'கேடி' போன்ற படங்கள் எவ்வளவோ மேல் (தமிழில் 'இலியானா' நடித்த ஒரே படம் :) ).

'கண்ட நாள் முதல்' படத்தில் வருவது போன்ற இயல்பான காதல்களை ஏன் பெரும்பாலான இயக்குனர்களால் தர முடியவில்லை?





காதல் துளிர்க்கும் காட்சிகள்தான் உங்களுக்கு சொதப்புகின்றன என்றால் கதாநாயகனையும், நாயகியையும் நேரடியாகக் காதலிக்க விட்டு விடலாமே!(அயன் போன்ற படங்களில் இது ஒத்துவரும்!)


***'அடப்போடா, நாங்க என்ன நாட்டுல நடக்காததையா காட்டுறோம்? பொத்திட்டு போடா'
***'காதல் -னா இதுதான் என்று வரையறை செய்ய நீ யாரடா?'

என்றெல்லாம் நீங்கள் கேட்பது என்காதில் விழுகிறது.

ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், 'இதெல்லாம் காதல் இல்லை' என்று நான் சொல்லிவிட முடியும்தானே?!

உங்களுக்கும் இதேபோல் ஏதேனும் 'பேசித்தீராத'(!) கோபங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள் .