Friday, July 24, 2009

வலையுலகும் விலங்குணர்ச்சியும் - சிக்மண்ட் ஃபிராய்ட்

சிக்மண்ட் ஃபிராய்ட்(Sigmund Freud)


சிக்மண்ட் பிராய்ட்(1856-1939) - உளவியலின் மேதையான (உளவியலின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர்) இவரின் கருத்துகள் மனித இனத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தையே உருவாக்கின. தொடக்கத்தில் நரம்பியல் தொடர்பான விசயங்களில் ஆர்வம் காட்டிய இந்த மருத்துவர், உடல் பாதிப்பு எதுவும் இல்லாத நேரத்திலும் மனத்தால் மட்டுமே பாதிக்கப்படும் நோயாளிகளைப் பற்றி தனது கவனத்தைத் திருப்பினார்.

மனநோய், மனித உளவியல், கனவுகளின் உட்பொருள், மனச்சிக்கல், மனச்சிதைவு, மனித மனத்தின் பரிணாம், அன்றாட வாழ்க்கையில் உளவியல் தாக்கம், மனித இனத்தின் பரிணாமம், சமூகம், மதம், மதத்தின் தோற்றம் இவற்றைப் பற்றி உளவியல் ரீதியான இவரது ஆராய்ச்சிகளும் கட்டுரைகளும் பலமடங்கு ஆர்வத்தைத் தூண்டுபவை.

பரிணாமம் பற்றி விளக்கும்போது அவர் சொல்கிறார் ''மனித மனமானது இரண்டு பிரிவுகளைக் கொண்டது, 'விலங்குணர்ச்சி' - 'பண்பாட்டு உணர்ச்சி'. மனிதன் ஒரு சமூகமாக வாழப் பழகிக் கொண்டிருந்த அந்த ஆரம்ப காலங்களில் 'விலங்குணர்ச்சி'யே மனித மனத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மனிதன் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்து சமூக அமைப்பு உருவான பின்பு, சில வரைமுறைகளுக்கு உட்பட்டு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களால் மிருகமாக இருந்த மனிதன் மனம் பண்படத் துவங்கியது''.

இந்த பண்பாட்டு உணர்ச்சி, மனதின் மற்ற பகுதியை ஆக்கிரமித்து 'மிருக உணர்ச்சியை' கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது. ஆனால் 'மிருக உணர்ச்சி' அடிக்கடி வெளிப்படுவதில்லையே தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அது வீரியத்தோடு எழுந்து தன் வேலையைக் காட்டிவிடுகிறது. அந்த வகையில்தான் உலகில் நடக்கும் யுத்தங்கள் - தேவையில்லாத வன்முறைகள் வருகின்றன. இவையெல்லாம் மனித மனத்தின் 'மிருகத் தன்மையை' அவ்வப்போது காட்டிக்கொண்டிருக்கின்றன.

அதேபோல, வலையுலகில் நடக்கும் 'தேவையில்லாத மோதல்களுக்கு' இந்த கொஞ்சூண்டு இருக்கும் 'மிருகத்தனம்' கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆதி மனிதன் வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதத்தோடு கிளம்பினான். இன்று நாம் நம்முடைய பலவித திறமைகளை வைத்து வாழ்க்கையில் வேட்டையாடிக்கொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும்போது அந்த திறமைகளை வைத்து மோதிக் கொள்கிறோம். இது கருத்துமோதலாக இருக்கம் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையேல் சிக்மண்ட் பிராய்ட் சொன்ன, இன்னும் அழியாமல் இருக்கும் 'விலங்குணர்ச்சியே' இதற்குக் காரணம் என்றும் கூறலாம்.

ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நடக்கும் சில காமெடிகளைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

சிக்மண்ட் ஃபிராய்ட் பற்றி படிக்க:
கூகிள் புக்ஸ்ஸில் 'inauthor:"Sigmund Freud' என்று தேடுங்கள், பின்பு இந்த புத்தகங்களைப் படிக்கலாம்.
The Interpretation of Dreams
The psychopathology of everyday life

Tuesday, July 21, 2009

ஒரு வெட்கம் வருதே வருதே - கிறங்கடிக்கும் பாடல்!

பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே!
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்

சமீபத்தில் ரசித்த பாடல்களுள் மிக அருமையான பாடல் - மனதோடு ஒட்டிக்கொண்டுவிட்டதும் கூட. திரையில் படத்தோடு பார்த்தபோது காட்சியமைப்பின் உன்னதத்தால் பாடலை இசையோடு ரசிக்க மறந்துவிட்டேன். ஆனால், அது முதல்முறை மட்டும்தான். அதன்பின்பு இந்த பாடல் செவிகளில் எ(இ)ப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


என்னன்னே தெரியலீங்க. இந்த பாட்டுக்கு உள்ளேயே நான் போய்விட்டேன். பாடலூடே சேர்ந்து வரும் நகைச்சுவைகள். கதாநாயகி புருவங்களை அசைப்பது, காதலர்கள் இருவரும் வேறு வேறு இடங்களில் அமர்ந்திருப்பது. இன்னும் எத்தனையோ...

ஒரு வெட்கம வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே.
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே.
போகச் சொல்லி கால்கள் தள்ள
நிற்கச் சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்ற சுகம்


மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே.
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே.
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறு போட்டுக் கொல்லும் இன்பம்
பற பற பற வெனவே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே


பாடலை கவனித்துப் பார்த்தால் புரியும்.
கதையின் போக்கிலேயே இந்தப் பாடல் நகர்வது,
இடையிடையே பல ரசிக்கச் செய்யும் நகைச்சுவைகள்,
சிறு சிறு குறும்புகள்,
சின்னப்பிள்ளைங்களோட நோட்டை காதலிக்குப் பரிசளிப்பது,
வைரமுத்துவின் கவிதையை தான் எழுதியதாக புருடா விடுவது,

இப்படி எத்தனையோ! இந்தப் பாடலை ரசிக்கும்படி செய்கின்றன. பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அருமை.

யு டியூப்பில் பார்க்க-கேட்க:

எனக்கு விருதெல்லாம் வேண்டாமுங்கோ!

முதலில் பட்டாம்பூச்சி பறந்தது. அப்பறம் என்னவெல்லாமோ வந்தது. முக்கியமா 'கரப்பான் பூச்சி விருது'. அத நானே எடுத்து மாட்டிகிட்டேன் (அதான அதோட சிறப்பம்சமே). இப்போ லேட்டஸ்ட்டா 'சுவாரசிய பதிவர் விருது' நம்ம இம்சை அரசர் ஆரம்பிச்சி வைச்சிருக்கார்(நட்பு விருது கூட ஒண்ணு உலாவிகிட்டு இருக்குதுங்கோ). நானும் ஆரம்பத்துல ரொம்ப சீரியஸா எடுத்துக்கல, அது ஒரு 'காமெடி பீஸு'ன்னு நினைச்சி விட்டுட்டேன். ஆனா மக்களே, பதிவுலகமே பத்தி எரிஞ்சி, ரணகளமா ஆகிக் கிடக்கிற(!) இந்த நேரத்தில இந்த மாதிரி ஒரு விருது எதுக்காக? யாராவது யோசிச்சீங்களா?


இப்படி வாங்க, உட்கார்ந்து சாவகாசமா பேசுவோம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'பிரபலம்'ங்கற வார்த்தை பிரபலமானது உங்க எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி முன்னை விட கொஞ்சம் சுவாரசியமா இப்போ இந்த வார்த்தை பதிவுலகத்தில புழங்கிகிட்டு இருக்கு (அட இதுவும் உங்களுக்குத் தெரியும்). இந்த மாதிரி நேரத்தில ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கிற பிரபலங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் - எந்த பிரபலத்தைத் தாக்குவது என்கிற குழப்பம் ஏற்படும்தானே?

இந்த மகா உன்னதமான நோக்கத்தோடுதான் எங்க அண்ணன் இந்த விருதை வாரி வாரி வழங்கி எல்லாரையும் பிரபலப் படுத்தணும்னு ஆசைப்படுகிறார். ஆனா நான் இதிலெல்லாம் சிக்கிடுவேனா என்ன? அதனாலதான் இம்புட்டு நாளா வலதுபக்கமா கீழ இருந்த இந்த 'கரப்பான் பூச்சி வருத' மேல தூக்கிட்டு வந்திருக்கேன். அதனால மக்களே, உங்க எல்லாருக்கும் சொல்லிக்க விரும்புறது என்னான்னா, இந்த விருது கிருதெல்லாம் கொடுத்து என்னை பிரபல பதிவராக மாற்றி வம்புல இழுத்து விட்டுடாதீங்க-ங்கறதுதான்.

மக்களே, பிரபலப் பதிவர்களின் மேல் யாராவது 'காண்டா' க இருப்பது தெரிந்தால் முதலில் இந்த மாதிரி விருது சமாச்சாரங்களை டக்குன்னு அவர்களுக்குத் தந்து நாலைஞ்சு குத்து குத்தி (தமிலிஷ் - தமிழ்மணத்துல ங்க) சீக்கிரத்திலயே 'பிரபல' பதிவரா மாத்திவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். :) ஹிஹிஹி...

இந்த இடுகைக்குக் குத்தாதீங்க...ப்ளீஸ். முடிஞ்சா தமிழ்மணத்தில "-" ல வரவைங்க! :)

Wednesday, July 15, 2009

பெவிகானை உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பது எப்படி?

பெவிகான்/ஃபெவிகான் (பெவிகால் இல்ல) - அப்படின்னா FavIcon = Favorite + Icon இப்படின்னு அர்த்தம். அதாவது உங்களோட வலைப்பூவிற்கு அல்லது இணையத்திற்குன்னு தனியாக பளிச்சுன்னு தெரியற மாதிரி ஒரு படத்தை வடிவமைச்சு அதை ஒரு சின்ன அளவில, ப்ரௌவ்சரோட தலைப்பக்கமா தெரியவைக்கிறது. ஃபேவரிட் ஐகான் - விருப்பப் படம் (அ) அடையாளப் படம் -னு வைச்சிக்கலாம் (யாராவது நல்ல தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்).

மனுசனோட மூளை எப்பவுமே படங்களை எளிதா ஞாபகத்தில வச்சுக்குது. இப்போ நாலைஞ்சு URL இருக்குன்னு வச்சுப்போம், அத ஒண்ணு ஒண்ணா வாசிச்சி, பிரிச்சி பார்க்கிறதுக்கு பதிலா ஒவ்வொண்ணுக்கும் ஒரு படம் இருந்தா, பார்த்த உடனே வால்பையனோடது இது, ஊர்சுற்றியோடது இதுன்னு சட்டுன்னு கண்டுபிடிச்சிடலாம் இல்லையா - அதான், அங்கேதான் பெவிகான் உதவுது.

உதாரணத்துக்கு கீழே இருக்கிற படத்தைப் பாருங்க.

எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரியுது, ஆனா பெவிகான் இருக்கிற கீழே உள்ள முகவரிகளைப் பாருங்க - ஒரு அழகு தெரியுது.

இப்போ என்னோட வலைப்பூ - பெவிகான் இல்லாமல்:

பெவிகான் இல்லாமல் எக்ஸ்ப்ளோரரில்

பெவிகான் இல்லாமல் ஃபயர்ஃபாக்ஸில்

பெவிகான் இல்லாமல் சஃபாரியில்
பெவிகான் இல்லாமல் க்ரோமில்

என்னோட வலைப்பு பெவிகானுடன்:

ஊர்சுற்றி - பெவிகானுடன் எக்ஸ்ப்ளோரரில்
ஊர்சுற்றி - பெவிகானுடன் ஃபயர்ஃபாக்ஸில்

ஊர்சுற்றிக்கு பெவிகான் சேர்த்த பின்பு

ஒவ்வொரு இணையத்துக்கும் அதுக்குன்னு இருக்குற படத்தை வச்சி ரொம்ப சுலபமா கண்டுபிடிக்கலாம் - அதோட ஒரு அடையாளமாவும் இருக்கும். நமக்குன்னு ஒரு தனி அடையாளம் இருக்கறது எப்பவுமே ஒரு மகிழ்ச்சிதானே?!
அதனால வாங்க நாமளும் நம்மோட வலைப்பூவுக்கு இதை உருவாக்கலாம்.

மொத்தம் மூன்றே மூன்று படிதான்:
1. உங்களுக்குன்னு ஒரு ஃபெவிகான் வடிவமைக்க வேண்டும்.
2. இதை இணையத்தில் ஒரு இடத்தில் சேமிக்க வேண்டும் (அப்லோட்).
3. அந்த URL ஐ - ஃபெவிகானுக்கான HTML குறியீட்டுடன் சேர்த்து, உங்கள் வலைப்பூவிற்கான(அ) இணையத்திற்கான நிரலில் தலைப்பகுதியில் (Header) சேர்த்துவிடவேண்டும்.

1. நீங்களே பெவிகானை உருவாக்க/வடிவமைக்க:

இந்த இணையப் பக்கத்துக்கு போங்க.

2. உங்களிடம் உள்ள படத்திலிருந்து பெவிகானை உருவாக்க:

இங்கே வாங்க

3-A. வலைப்பூவில் இணைப்பது:

படத்தை ".ico" என மாற்றியபின்பு, அதை இணையப் பக்கத்தில் எங்கேனும் இணையேற்றி விட்டு (google sites போன்றவை) - பின்வரும் HTML குறியீட்டில் அந்த அப்லோட் செய்யப்பட்ட URL முகவரியைத் தரவேண்டும்.

<link href='Your Icon URL' rel='shortcut icon'>

அதன்பின் இந்த HTML குறியீட்டை உங்கள் வலைப்பூவின் ''layout" -> "Edit HTML" சென்று தலைப்பகுதிக்குள் ( க்குள் ) ஒட்டிவிடுங்கள்(படம் கீழே).


3-B. ரொம்ப சுலபமா பெவிகானை இணையத்தில் தரவேற்றி - அதன் HTML கோடையும் பெற:


பெவிகானை இணையத்தில் எற்றிய பின் HTML குறியீடும் சேர்ந்து கிடைக்கும் தளம்


கவனிக்க வேண்டியவை:
1. இணையப் பக்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் ரூட் டைரக்டரியில் விருப்பப் படம் தரவேற்றப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ளவும். டைரக்டரி மாறியிருந்தால் கூட சிலசமயம் பெவிகான் தெரியாமல் போகலாம்.
2. குரோம் மற்றும் சஃபாரியில் 'விருப்ப ஐகான் (பெவிகான்)' தெரியவில்லை. யாருக்காவது இதனை சரிசெய்ய வழிமுறைகள் தெரிந்திருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்.

பிடிச்சிருந்தா தமிழ்மணத்திலயும் தமிலிஷ்லயும் குத்திட்டுப் போங்க! :)

Tuesday, July 14, 2009

22-ம் தேதி சூரியகிரகணம் - உங்க வீட்டு நாய் ஒண்ணுக்கு போகாது!

வரும் 22ம்-தேதி முழு சூரியகிரகணம் நிகழவிருப்பதால் பூமியில் பல அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் வீட்டு பைப்பில் தண்ணீர் வராது, பக்கத்து வீட்டுப் பெண் மொட்டை மாடியில் வந்து செல்போன் பேசமாட்டாள், நீங்கள் திருட்டுத் தனமாய் சைட் அடிப்பதை உங்கள் மனைவி பார்த்துவிட வாய்ப்பு இப்படி எல்லாமே கெட்டதாய் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

முக்கியமாக 'பூச' நட்சத்திரத்தில் பிறந்த நாய்கள் எல்லாம் 7.5 (7 1/2) சனி ஆட்சியில் உள்ளன. இவைகளுக்கு முக்கியமான பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக இவை ஒண்ணுக்குப் போவதில் நிறைய சிக்கல்கள் வரும். எனவே பக்கத்தில் உள்ள கம்பமோ, கல்லோ - நீங்களே சென்று ஒரு அர்ச்சனை செய்துவிடுவது நல்லது (பூசாரி 7 1/2 ல இருக்காரோ 8 1/2 ல இருக்காரோ - அவர் எந்த நட்சத்திரத்தில பிறந்தாரோ யாருக்குத் தெரியும்! அவரும் பரிகாரம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் அர்ச்சனை பலிக்காமல் போகலாம்).

இந்த ரேஞ்சில் 'தினத்தந்தி' சென்னை பதிப்பில்5-ம் பக்கத்தில் இன்று 'ஜோதிடர் கணிப்பு' ஒன்று வெளியாகியுள்ளது. மைக்கிள் ஜாக்ஸன் இறப்பு உள்பட உலகத்துக்கே பல முன்னறிவிப்புகளை அறிவித்து அகில உலக புகழ்பெற்ற(!!!) ஜோதிடமணி 'நம்புங்கள் நாராயணன்' சொன்னதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

2000 வது ஆண்டில் 4 சூரியகிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழ்ந்ததாம், அதனால் நிறைய விபத்துகள் பேரிடர்கள் ஏற்பட்டனவாம்.

1980-ல் சூரியகிரகணம் ஏற்பட்டதாம், அடுத்தநாளே எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சி கலைக்கப்பட்டதாம்(அடங்கொய்யால, இது அவருக்குத் தெரியுமா!). 1898-ல் ஏற்பட்ட கிரகணத்தால் இந்தியாவில் 'பிளேக்' பரவியதாம்.

பல லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சந்திரனால் நிகழும் நிகழ்விற்கு, பக்கத்து தெருவில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 'சிவன்-பார்வதிக்கும்' சனீஸ்வர பகவானுக்கும் அர்ச்சனை செய்வது பரிகாரம் என்கிறார் இந்த 'பிரபல' ஜோதிடர்.

பரிகாரம் செய்து உங்கள் வீட்டு நாயையும் உங்களையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

''சூரிய தேவனே போற்றி போற்றி - உன் வீரியத்தைக் குறைப்பாய் போற்றி!'' - ''பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, சூரிய கிரகணத்தின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பீராக!''.

Monday, July 13, 2009

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வும் 14 ரூபாய் சாப்பாடும்

ஒருவழியாக, இந்த வருட பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் (கவுன்சலிங்) தொடங்கிவிட்டன. தற்செயலாக, கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தின் அத்தனை மொழிகளையும்(வட்டார மொழிகள்) ஒரே இடத்தில் கேட்கும் அரிதான வாய்ப்பு அது. நாஞ்சில் வாசத்து 'மக்களே' - கோவை 'ண்ணா' - நெல்லை 'லேய்' - என்று எல்லாம் ஒரே நேரத்தில் காதில் தேனாய்ப் பாய்ந்தது.

முன்பெல்லாம் தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோயம்புத்தூரிலும் கலந்தாய்வு நடைபெற்றது - அந்தந்த பகுதி மாணவர்கள் அருகிலேயே கலந்தாய்வில் கலந்துகொண்டு சீக்கிரம் வீடு சென்றுவிடுவார்கள். இப்போது சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் வந்து செல்வதற்கான இருவழி பயணப்படி இரண்டு நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் கவுன்சலிங் நடைபெறும் இடத்தில் அத்தனை ஆயிரம் பேரை கையாள்வதற்கு சிறப்பான நடவடிக்கைகள் என்று எதுவும் எடுத்திருப்பதுபோல் தெரியவில்லை.


வழிகாட்டும் தட்டிகள் எங்கெங்கும் நிறுவப்பட்டுள்ளன - நன்று. தற்போதைய இடநிலவரம் குறித்து பெரிய திரைகளில் ஒரு தற்காலிக அரங்கத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். உட்கார வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
அதைத் தவிர வெளி இடங்களில் உட்காருவதற்கென்று எந்த வசதியும் இல்லை.
குறிப்பாக அவசர, ஆபத்து நிகழ்வுகளைக் கையாள்வதற்கு முன்னெச்சரிக்கை ஏதும் இருப்பதுபோல் தெரியவில்லை.

குடி தண்ணீர் என்று ஆங்காங்கே சில தொட்டிகள் வைத்திருக்கிறார்கள் - சென்னை தண்ணீர் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். கோயம்புத்தூர் பாசையில் ஒருவர் 'என்ன தண்ணியிது' என்று கூறிச்சென்றது காதில் விழுந்தது.

சாப்பிடுவதற்கு அண்ணா பல்கலைக்கழக உணவு விடுதிக்குச் சென்றோம். 14 ரூபாய்க்கு அளவுச் சாப்பாடு - அசந்துபோய்விட்டேன். சென்னையில் இத்தனை ரூபாய்க்கு சாப்பாடா! கண்ட கண்ட சாப்பாட்டுக்கு 25 முதல் 35 ரூபாய் வரை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பேச்சுலருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். ஒரு பிடி பிடித்துவிட்டேன். சாப்பாடும் குறைசொல்லும் அளவில் இல்லை.

2009 பொறியியல் கலந்தாய்வு இட நிலவரம் தெரிந்துகொள்ள இங்கே செல்லலாம்.

Thursday, July 9, 2009

எரிச்சலைத் தரும் சன் விளம்பரங்கள்!

அளவுக்கு மிஞ்சினா ஐஸ்கிரீமும் திகட்டிடும்....
அளவுக்கு மிஞ்சினா இருட்டுக்கடை அல்வா கூட....

அந்தமாதிரிதான். முதல்ல பார்க்கும்போது நல்லாத்தான் இருந்தது. ஆனா, ஒருமணிநேரத்தில நாலைஞ்சு தடவை - அதே விளம்பரத்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பினா எரிச்சல் வரும்னு 'சன் தொலைக்காட்சிக்கு' அதன் விளம்பரப் பிரிவு சொல்லித்தொலைக்கவில்லையா?


மாசிலாமணிக்கு இவ்வளவு செலவு பண்ணி படம் எடுத்தீங்களே, கூட நாலைஞ்சு டிரெய்லர் எடுத்து வச்சிருக்க கூடாது?!


இப்போ அதிகமா காட்டுறது அந்த 'சலூன்' விளம்பரம்தான். பார்த்து பார்த்து போரடிச்சு புளிச்சுப் போச்சு.

இதுல கொடுமை என்னான்னா, சன் குழுமத்தோட எல்லா சேனல்லயும் இந்த விளம்பரங்களைத் திரும்ப திரும்ப ஒளிபரப்புறதுதான்.

'புதுசு கண்ணா புதுசா' எதாவது செய்யுங்க பாஸூ....

Sunday, July 5, 2009

நாடோடிகள் - விமர்சனத்திற்கு என்ன தலைப்புகள் வைக்கலாம்?

நாடோடிகள் - 'அரிப்பெடுக்கும்' (போலி) காதலர்களுக்கு சவுக்கடி.
நாடோடிகள் - மொக்கை காதல் இயக்குனர்களுக்கு 'பொளே'ரென செருப்படி.
நாடோடிகள் - நட்பின் நீளம்.
நாடோடிகள் - நட்பும் காதலும் கலந்த கலவை.
நாடோடிகள் - நட்பின் வெற்றியும் 'புனிதக்(!) காதல்களின்' வீழ்ச்சியும்.

காதல் செய்கிறோம் என்று ஊரை எமாற்றும் அரிப்பெடுத்த அல்லது அரைகுறை காதலர்களுக்கு செருப்பால் அடித்து பாடம் புகட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. ''இதற்கு முன்னால் இதைப் போல ஒரு திரைப்படம் தமிழில் வந்திருக்கிறதா என்ன?'' எனக்குத் தெரிந்து இல்லை.

நம்ம தமிழ் சினிமா இயக்குனர்களும் சரி - பதிவர்களும் சரி, காதலை ரொம்ப ஒவராக தலையில் வைத்துக் கொண்டாடி 'புனிதமானது', 'யோக்கியமானது', 'அழியாதது', 'மனிதனாக்குவது'.... இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது எதுவுமே - சரியாகப் புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக, அரிப்பெடுத்து வரும் காதல்களுக்குச் செல்லாது என்பதை உணர்ந்துள்ளார்களா என்று தெரியவில்லை!

பார்த்தவுடன் காதல், பேசியவுடன் காதல், உனக்காக என்ன வேணுண்ணா செய்வேன் என்று கூறி அவுத்துப் போட்டால் காதல், பழகுவோமா என்றவுடன் காதல், என்று அரைகுறைகளின் காதல்களுக்கு வக்காலத்து வாங்கும் இயக்குனர்கள் அதிகம்பேர் இங்கு இருப்பதால்தான் காதலர்கள் மீதான விவாதம் சற்று தேக்கமடைந்திருக்கிறது. 'நாடோடிகள்' பட விமர்சனங்களில் கூட பதிவர்கள் - இந்த அரைகுறை (அ) அரிப்பெடுத்த காதல்கள் பற்றி விமர்சிக்காதது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

அதனால்தான் என் பங்குக்கு இந்த விமர்சனம்.

நாடோடிகள்:

மூன்று நண்பர்கள்(சசிகுமார், பரணி, விஜய்) - இவர்களில் சசிகுமாருக்கு மட்டுமே தெரிந்த நண்பனான இன்னொருவனின் காதலுக்கு(!) மற்றவர்கள் இருவரும் உதவி செய்து திருமணம் செய்து வைத்து, தப்பிக்க வைத்து, தனியாக வசிக்க அனுப்புகிறார்கள். தப்பிக்க வைக்கும்போது இன்னொரு நண்பரும் சசிகுமார் - மற்ற இருவருடனும் சேர்ந்துகொள்கிறார்.

இந்தப் போராட்டத்தில், சசி தனது உண்மையான காதலையும், விஜய் தனது ஒரு காலையும், பரணி தனது காது கேட்கும் திறனையும் இழக்கிறார்கள்.

இதுபற்றித் தெரியாமல் - தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லாமல் சேர்த்து வைக்கப்பட்ட காதல்(!) ஜோடிகள் (மிகவும் வசதியாக வாழ்ந்தவர்கள்) தங்கள் இயல்பான வாழ்க்கை தொலைந்து போனதை நினைத்து ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி பழிசுமத்தி ஒருசில நாட்களிலேயே பிரிந்துபோகிறார்கள். இவள், இந்த காதல் மற்றும் கல்யாண அனுபவத்தை 'கனவு' என்கிறாள், அவனோ 'அவளைப் பத்தி நினைச்சாலே எரிச்சலா வருது' என்கிறான் (நல்ல காதலர்கள்!).

இந்த நாதாரிகளை சேர்த்து வைக்க போராடிய மற்ற மூவரும் கோர்ட், கேஸ் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள். இந்த மூவருக்கும் எவ்வளவு கோபம் வரவேண்டும்?.

'அட நாயிங்களா, எதையெல்லாமோ இழந்து உங்களை சேர்த்து வைச்சா, நீங்க என்னடான்னா 'கனவு' - 'எரிச்சல்' னாடா பினாத்துறீங்க?' என்று - சாட்டையை எடுத்து விளாசு விளாசு என்று விளாசுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.

தமிழ்சினிமா:

மேற்கூறப்பட்ட அறைகுறை காதல் எப்படிப் பூத்தது(!) என்று படத்தில் காட்டப்பட்ட சம்பவங்கள், கீழே.

காதலன் பல்லைக் காட்டிக்கொண்டு அந்த சூப்பர் ஃபிகர் முன் போய் நின்று 'ஐ லவ் யூ' என்கிறான் - 'போடா காதல் எல்லாம் வராது' என்கிறாள் அவள் - 'காதல் வர்ற வரைக்கும் உம்பின்னால வருவேன்' என்கிறான் இவன். விதவிதமாய் வருகிறான், என்ன செய்தால் காதல் வரும் எனக் கேட்கிறான். - 'உயிரை விடு, அப்ப வரும்' என்கிறாள். - கடலில் குதிக்கிறான் (நீச்சல் தெரியாது) - காப்பாற்றுகிறார்கள் - அவளுக்குக் காதல் வருகிறது.

இப்படித்தானே இன்று பெரும்பாலான தமிழ்சினிமாக்கள் காதல் என்ற பெயரில் கண்ட கருமாந்திரங்களையும் சுமந்துவருகின்றன. கடற்கரையில், பூங்காக்களில் மறைவிடங்களில், கண்ட கண்ட கழுதைகளெல்லாம் காதல் செய்துகளாம்(!).

எனது பார்வை:

இப்படி ஒரு அரைகுறையை சேர்த்து வைத்துவிட்டோமே என்று, எவ்வளவு கோபம் அந்த நண்பர்களுக்கு இருக்கும். படம் பார்க்கிற ஒவ்வொருவரும் 'அட நாயிங்களா, உங்களுக்காக என்னவெல்லாம் இழந்து நிக்கிறாங்க. நீங்க என்னடான்னா 'கனவு' 'அரிப்பு' ன்னாடா பேசுறீங்க' என்று கடைசிவரையிலும் படம்பார்த்த பிறகும் கோபம் கொதிக்க நினைக்க வைக்கிறார் இயக்குனர். அபாரம்! படத்திலும் இதைச் சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டியும், காதலுக்காக என்றுமே நண்பர்கள் துணைநிற்பார்கள் என்ற நம்பிக்கையை மேலும் நான்கைந்து ஆணிகளைக் கொண்டு அறைந்து பலப்படுத்துகிறார் சமுத்திரக்கனி.

வாழ்க 'நாடோடிகள்' வளர்க தமிழ்சினிமா!