Wednesday, December 15, 2010

மிஷ்கினின் உதவி இயக்குனர்களுக்கு ஒரு கடிதம்!

மிஷ்கின் தமிழ் வலைப்பூக்களைப் படிப்பதில்லை என்று தோணுவதால், உதவியாளர்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கண்ணில் பட்டால் அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடவும்....!

''மிஷ்கின்,
நீங்கள் உலகப்படங்களைப் பார்ப்பதிலும், அயல்மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதிலும் நேரம் செலவிடுவதால், தமிழில் படிக்க உங்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம்! சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் உங்களுடைய பேச்சில் இது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது! விழாவில், நந்தலாலா படத்தைப் பற்றிப் பேசும்போது, சில காட்சிகளைக் கூறி, அவற்றை யாரும் சிலாகித்துப் பேசவோ எழுதவோ இல்லையே என்று ஆதங்கப்பட்டீர்கள். (உ.ம். முதல்காட்சியில் சிறுவன் முகத்துக்கு நேரே கேமரா விரிவது, தூங்குகிறவர்களின் பின்னணியில் பாம்பு நெளியும் காட்சி, இன்னும் சில.) நீங்கள் தமிழ் வலைப்பூக்களை வாசித்திருந்தீர்களேயானால், பாராட்டி எழுதப்பட்ட விமர்சனங்களில் எத்தனையோபேர் இந்தக் காட்சிகளை மிகவும் சிலாகித்து, கொண்டாடி எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள்! ஆனால் உங்களுக்குத்தான், ஆங்கில எழுத்துக்களைப் படிப்பதற்கே நேரம் போதவில்லையே! பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?! 'காப்பி என்று சொல்லிவிட்டார்கள்', என்று காதில் விழுந்த தகவல்களை வைத்துக்கொண்டு பொங்கி எழுகிறீர்கள்! ஆனால் வலையுலகில் உங்கள் படத்தைக் கொண்டாடியவர்களே அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும், 'தமிழின் முதல் படம்' என்கிற அளவிற்குப் பாராட்டிப் பேசியவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது தெரியுமா?

'காப்பி' அடிக்கவில்லை, இது என் உணர்வில் வளர்ந்த கதை என்கிறீர்கள், ஆனால் 'கிகுஜிரோ'வின் (கிட்டத்தட்ட) அத்தனை கதாப்பாத்திரங்களும் 'நந்தலாலாவி'ல் வலம் வருகிறார்களே, அதை என்னவென்று கூறுவது? கதையில் வரும் சில காட்சிகள் ஒரு 'இன்ஸ்பிரேசனாக' (குருநாதருக்கு மரியாதை செலுத்தும் விதமாக) வைத்தேன் என்கிறீர்கள்! கதாப்பாத்திரங்களும் அப்படியேவா?

இதுமாதிரி இன்னும் எத்தனையோ கேள்விகள் பதிலளிக்கப்படாமலே இருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் உங்களை 'தமிழின் மிகத் திறமையான இயக்குனர்களுள் ஒருவர்' என்று ஒத்துக்கொள்கிறோம்! ஆனால் உங்களை ஒரு மிகச் சிறந்த 'படைப்பாளி' என்று கூற முடியாது! இன்னும் நான்கைந்து படங்கள் 'நந்தலாலா' போல, இல்லை அதைவிட அதிகமாகச் செய்யுங்கள்! நீங்கள் ஒரு 'அறிவுஜீவி' என்ற பட்டத்தை நாங்களே கொடுக்கிறோம்! அதை நீங்களே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்!''

உண்மையான உலகப்படங்களைப் படைத்திட வாழ்த்துக்களுடன்,
ஊர்சுற்றி ஜோன்சன்.

Monday, December 6, 2010

அம்பேத்கர் - காலத்தின் மாபெரும் பரிசு!

உங்களில் தீண்டாமை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? பாடப்புத்தகங்களிலும், பதிவுகளிலும், கவிதைகளிலும், பேச்சாளர்களின் உரைகளிலும் மட்டுமே 'தீண்டாமை' பற்றி அறிந்துகொண்டவர்கள் எத்தனைபேர்? கிராமங்களில் அது பரப்பியிருந்த வேரின் வீரியம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? இன்றைய சூழ்நிலையில், 'எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க, இங்கே எங்கே சாதிக்கொடுமை இருக்கிறது?' என்று கேள்விகேட்பவர்களுக்கு, 'தொலைந்துபோன உங்கள் பொதுஅறிவைத் தேடுங்கள் - கண்டடைவீர்கள்!' என்பதே எனது பதில்.

எனக்கு நினைவு தெரிந்து (15 வருடங்களுக்கு முன்பு), எங்கள் ஊர் தோட்டக்காரர்களிடம் அருகில் இருந்த மற்றொரு ஊரிலுள்ளவர்கள் கூலிக்காரர்களாக இருந்து வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது! எனது ஊரில், எனது தலைமுறையும் எனக்கு முந்தைய தலைமுறையும் படிப்பிலும் வியாபாரங்களிலும் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் ஊரில் பெரும்பாலானோர் எங்கள் வயல்களில் வேலைசெய்ததை என் கண்களால் பார்த்திருக்கிறேன். அவர்கள், எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் காட்டும் மரியாதையும் பக்தியும், 'சாமி' என்று கும்பிடு போடுவதையும், இன்னும் என்னென்னவோ!

     பதினைந்து வருடங்களுக்கு முன்பே இந்த நிலை என்றால் நூறு வருடங்களுக்கும் முன்பு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை! 'ஆயிரம் SMS-ல சொல்றத ஒரு MMS-ல சொல்லிடலாம்' என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை! அதை உண்மை என்று நிரூபிக்கிறது 'டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படம். அம்பேத்கரின் அமெரிக்க கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கும் படம், வரிசையாக இந்தியாவின், இந்து மதத்தின் - அப்போதைய(ஏன் இப்போதையதும் கூட) வறட்டுக் கொள்கைகளையும் முட்டாள்தனமான விசயங்களையும் சுட்டுப் பொசுக்கிக்கொண்டே பயணிக்கிறது.


அம்பேத்கரின் குரல், எந்தச் சூழ்நிலையில் 'காந்தி' என்கிற மகாசக்திக்கு எதிராக முழங்கியது என்பதன் பின்புலத்தை உங்கள் மனதில் ஆழப் பதியவைக்கிறது இந்தப் படைப்பு. இந்தியப் பிரிவினைக்கு 'காந்தி'யின் மீது பழிசுமத்தும் கும்பல் எழுதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் 'தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக காந்தி எழுப்பிய மந்தமான குரலை'க் கண்டிப்பதைப் பார்க்க முடியாது.

ஏனென்றால்,
'இந்து மதத்தில் எல்லோரும் ஒன்றுதான்' என்று முழங்கி, அதன் பல நூற்றாண்டுகால சமூகக்கழிவான 'சாதி', அதன் நாற்றமான 'தீண்டாமை' என்பதை மறைமுகமாக ஆதரித்தவர், காந்தி(அல்லது, உயர்சாதியினரின் பிடிவாதத்தால் கண்டுகொள்ளாமல் இருந்தவர்).   இதை உலகுக்கு உரத்துச் சொன்னவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் அம்பேத்கர் மற்றொருவர் நம் கிழட்டுச் சிங்கம் - பெரியார்!

சாதிகள் பற்றிய அம்பேத்கரின் ஆய்வுகள் பற்றியும், காந்திக்கு எதிரான நிலைப்பாட்டினால் அவரது அரசியல் வீழ்ச்சிகள் பற்றியும், நாட்டு விடுதலை எப்படி சமூக விடுதலையை ஆக்கிரமித்துக்கொள்கிறது என்பதையும் தெளிவாக குழப்பமில்லாமல் சொல்லிச் செல்கிறது 'டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர்' என்ற இந்தக் காவியம். காந்தியையும் காங்கிரஸையும் எதிர்த்த அம்பேத்கரே, பின்னாளில் சட்டத்திற்காகவும், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் அதே காங்கிரஸ் அமைச்சரவையில் இணைந்ததும், இந்திய அரசியலமைப்புச் சட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கியதும் வரலாறு.

இந்தியாவின் வரலாறு பற்றியும், சாதிகள் பற்றியும், இந்திய விடுதலை வரலாற்றின் மற்றொரு பக்கத்தையும் தெரிந்துகொள்ள நினைக்கும் எல்லோரும் பார்க்கவேண்டிய படம், இந்த 'டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்'.

ஒரு கவனிப்பு:
சென்னையில்,
ஐந்தாறு திரையரங்குகள்
அதிகபட்சமாக 40 காட்சிகள்
ஒரு காட்சிக்கு சராசரியாக 300 நபர்கள் (என்று வைத்துக்கொண்டாலும்)
மொத்தம் 12000 பேர்.

இந்தச் சீட்டுகளே முழுமையாக விற்கப்படவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது. அதுவும் மேல்தட்டு மக்கள் அதிகம் செல்லும் சத்யம், ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் பாதி மட்டுமே நிரம்பியது. இந்த எண்ணிக்கையில் கூட அம்பேத்கர் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் நபர்கள் இல்லையா!

பின்வருவனவற்றில் எது சரியாக இருக்கும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

*அம்பேத்கர் யாருக்காகப் போராடினாரோ அவர்களுக்கு அம்பேத்கர் மீது எந்த ஈடுபாடும் இல்லை.
*தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடமிருந்து, இந்த அளவு எண்ணிக்கையில் கூட, பொருளாதார ரீதியாக மேல்தட்டு மக்கள் உருவாகவில்லை.
*படிப்பறிவின்மையும், அடிமைத்தன உணர்வும் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து முழுமையாக இன்னும் அகலவில்லை, அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக இன்னும் மேன்மையடையவில்லை.
*அம்பேத்கர் பற்றி தேவையான அளவிற்கு எல்லாமும் தெரிந்துவைத்திருக்கிறார்கள் நம் மக்கள்!
*இந்த மாதிரி மேல்தட்டு மக்களுக்கான திரையரங்குகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையவிரும்பவில்லை.

********
'பால அபிராமி' தியேட்டரில் வரவிருக்கின்ற மூன்று வார இறுதி நாட்களில் (டிசம்பர் 11,12,18,19,25,26 ஆகிய விடுமுறை தினங்களில் காலை 91.5 மணிக்கு) இந்தத் திரைப்படம் திரையிடப்படுகிறது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Monday, November 29, 2010

நந்தலாலாவும் அதன் மூலமும்!

நந்தலாலாவை, கிட்டத்தட்ட எல்லா வலைப்பதிவர்களும் 'உலகப்படம்' என்கிற அளவில் புகழ்ந்து தள்ளியாகிவிட்டது.

பாராட்டுபவர்கள் கூறும் விசயங்கள்
* இசை, காட்சியமைக்கப்பட்ட விதம், கேமரா கோணங்கள், பாசத்தை நோக்கிய கதாப்பாத்திரங்களின் பயணம், மிஷ்கினின் நடிப்பு, வசனங்களே இல்லாமல் காட்சிகளில் விளக்கிய விதம், இத்யாதிகள்.

இந்த விமர்சனங்களும் உணர்வுப்பூர்வமான பாராட்டுக்களும், இசை, கேமரா, இயக்கம் என்பவற்றையும் தாண்டி, பாசம் என்கிற ஒரு உந்துதலில் இருந்து வருவதாக எனக்குப் படுகிறது. இந்த வட்டத்திற்குள் இருந்தே பெரும்பாலும் நந்தலாலா படத்தின் விமர்சனங்களும் பார்வைகளும் குவிந்து கிடக்கின்றன(இது, படத்தில் இல்லாத ஒரு உயிரோட்டத்தை நிரப்பிவிடுகிறது என நான் நினைக்கிறேன்!). இதன் பின்னணியில் இருக்கும் உளவியலை ஆராய்ந்து யாராவது ஒரு இடுகை எழுதினால் தேவலை!

சரி, அதையெல்லாம் விடுவோம். நந்தலாலாவின் மூலமான 'கிகுஜிரோ(Kikujiro)' பார்த்தேன். நந்தலாலா அளவிற்கு, இதன் பாதிப்பு இல்லை என்றாலும், அதிலிருந்து சில விசயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

*முக்கிய கதாப்பாத்திரங்களான சிறுவன், அவனுடன் படம் நெடுக வருபவர், வழியில் வரும் கதாப்பாத்திரங்களான லாரி ஓட்டுனர், பைக்கில் வரும் இருவர், ஒரு புதமணத் தம்பதி, சந்தில் வைத்து சிறுவனிடமிருந்து காசு திருடமுனைபவன், சிறுவனது அம்மாவின் புதுக் குடும்பம், சிறுவனுடன் வருபவரின் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா மற்றும் சிறுவனின் பாட்டி, என பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் மூலக்கதையில் சித்தரிக்கப்பட்டிருந்தபடியே (70%) இருந்தன.

*காட்சிகளில் இருக்கும் மௌனம், சொல்லப்போனால் சில காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. உ.ம்.  மூலக்கதையின் ஒரு காட்சியில், சிறுவனும் உடன் வருபவரும் ஏதோ ஒரு மர இலையை முதுகில் சொறுகி தலைக்கு மேலே வரும்படி வைத்து நடப்பார்கள். இதை அப்படியே, நம்ம ஊர் பனை ஓலையை வைத்து மிஷ்கின் எடுத்திருக்கிறார்.  இது ஏதேனும் பின்நவீனத்துவ குறியீடோ?! (அப்படி ஏதும் இருந்தால்தான் உலகப்படமா என்று தெரியவில்லை!).

*அப்புறம் இந்த பைக்கில் வரும் இருவர். அவர்களின் உடையலங்காரம் கூட, கிட்டத்தட்ட அதே முறையில் நந்தலாலாவில் ஜோடிக்கப்பட்டிருந்தது! அப்புறம் வழியில் அவர்கள் உறங்குவது (மூலக்கதையில் பெண் மற்றும் அந்தப் பாம்பு இல்லாமல் இருக்கும் - இதே காட்சி).

இதேபோல் இன்னும் சில...

ம். நல்லாத்தான் இயக்கியிருக்காரு. நல்லாத்தான் நடிச்சிருக்காரு. படம் பாராட்டப்படவேண்டியதுதான். வித்தியாசமாக இருக்கிறது. கிகுஜிரோ-வை விட நன்றாக இருக்கிறது, அவருக்கே உரிய ஸ்டைல் - இடுப்பு அளவிற்கு கோணத்தில் இருந்து காட்சிகளைப் படமாக்குவது, காட்சி எடுக்கப்பட்ட விதத்திலேயே பல விசயங்களை விளக்குவது, இப்படி அடுக்கிக் கொண்டு போனாலும்,  ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்க். 'நந்தலாலா' அப்படி சிலாகிக்கக் கூடிய அளவிற்கு எனக்கு ஏன் தென்படவில்லை என்று புரியவில்லை. அதில் வரக்கூடிய காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை போல தோன்றுவதா(உ.ம். கலவரக் காட்சி - சம்பந்தமே இல்லை), இல்லை, தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் படங்கள் பார்த்ததால் ஏதும் குழப்பமா என்று தெரியவில்லை!!

Thursday, November 11, 2010

இவனையெல்லாம் நடு ரோட்ல நிக்க வச்சு சுடணும்!

செய்தி காதில் விழுந்ததும் மனதில் ஒருவிதமான ‘குறுநகை’ ஒருவினாடியில் தோன்றி மறைந்தது. ஆம்! நான் அந்த என்கவுன்டரை வரவேற்றேன்.

கோயம்புத்தூரில் சிறுவர்களைக் கடத்திக் கொலை செய்த கொலையாளி ‘என்கவுன்டரில்’ கொலை. மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
*****
தினசரிகளில் வாசிக்கும் மோசமான குற்றச் செயல்களைக் கேள்விப்படும்போது பொதுவாகவே நம் மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது என்ன?

”இவனையெல்லாம் போட்டுத் தள்ள ஆள் இல்லையே?!”

”இவனுகளையெல்லாம் நடு ரோட்டுல நிக்க வைச்சு சுடணும்யா! அப்போதான் இவனைப் பார்த்து மத்தவனுங்க திருந்துவானுங்க!”

இதுபோலத்தானே பேசுவதை நாம் கேட்கிறோம். இங்கு யாரும் ”அவனைப் பிடிச்சி, போலீஸ்ல குடுத்து, கோர்ட்ல நிறுத்தி, நீதி விசாரணை பண்ணி, சரியான(!) தண்டனை கொடுக்கணும்யா. அப்போதான் நாடு அமைதியா இருக்கும்”, என்று பேசுவதில்லை.
ஆனால் சிலர், பழுத்த காந்தியவாதிகள் போல அல்லது ‘விருமாண்டி’ கிளைமாக்ஸில் பேசும் கமல் போல,

”இப்படி, சட்டத்தை இவங்களே கையில எடுத்துகிட்டா அப்புறம் எதுக்கு இ.பி.கோ., கோர்ட் இதெல்லாம்”

”என்னதான் இருந்தாலும், கொலைக்குக் கொலைன்னா அப்புறம் நாடு எங்க போகுறது”

”மரண தண்டனையையே ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம்! அப்படி இருக்கும்போது, இதுமாதிரி என்கவுன்டர் கலாச்சாரம் மிகவும் கொடியது”

என்றெல்லாம் பேசியதையும் எழுதியதையும், கேட்கவும் படிக்கவும் நேர்ந்தபோது, எனக்கு ஏதேனும் புத்தி பேதலித்து, வெறியனாகிவிட்டேனோ என்ற அச்சம் தோன்றியது. ஆனால், இதே சம்பவத்திற்காக இனிப்பு வழங்கியும், கூட்டங்கள் கூட்டியும், வெடிவெடித்தும், மகிழ்ச்சியாக ஒரு ஊரே (கிட்டத்தட்ட தமிழ்நாடே) கொண்டாடும்போது….

”மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் இல்லை”.

Wednesday, October 27, 2010

எந்திரன் 2.0 - the ROBOT is back!

கி.பி.2030:
‘ஏன்னா நான் சிந்திக்க ஆரம்பிச்சுட்டேன்’ எனச் சொல்லும் அந்த ரோபோவின் தலையைப் பார்த்தபடியே செல்லும் சிறுமி, மெதுவாக அந்த காட்சிக் கூடத்தைக் கடந்து செல்கிறாள். தூரம் அதிகரிக்க அதிகரிக்க, ரோபோ பார்வையாளர் கண்களில் இருந்து மறைகிறது(சிறுமியின் கண்களிலிருந்து கேமரா கோணம்!).

கி.பி.2011:
*தேவதர்ஷினி கையில் இருந்த பையன், ரோபோ பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்(உபயம் - எந்திரன் முதல் பாகத்தில் எந்திரன்1.0 கொடுத்த அட்வைஸ்).
*எந்திரன் 1.0 வைத் தயாரித்த வசீகரனுக்கும் சனாவிற்கும் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது 
(ஐஸ்வர்யா ராய் 2.0?!).

கி.பி.2035:
*எந்திரனில் சாட்சியாக இருந்த ‘ரெட் சிப்’ ஆவணக் காப்பகத்தில் இருந்து காணாமல் போகிறது.
*சிறுவன் சிட்டி வளர்ந்து பெரியவனாகிவிட்டான். ரோபோக்களைப் பற்றி நிறையப் படித்துக்கொண்டிருக்கிறான். (இவன்தான் செகன்ட் ஹீரோ என்பதால், உங்களுக்குப் பிடித்த ஹீரோவை வைத்து இந்த கதாப்பாத்திரத்தைக் கற்பனை செய்துகொள்ளலாம்).
*இறந்துபோன ப்ரொஃபசர் Bhora-வின் பாழடைந்த ஆராய்ச்சிக் கூடத்தில் சில மர்ம உருவங்கள் எதையோ தேடி அலைகின்றன. (எந்திரன்1.0 அதே கூடத்தில் எந்திரன்2.0 என்ற தற்காலிக வில்லனாக மாறிய காட்சிகள், கஜினி ஸ்டைலில் ஃபிளாஷ்பேக்கில் காட்டப்படுகின்றன). அந்த மர்ம கும்பல் அங்கிருந்த கைவிடப்பட்ட கணிணிகளிலிருந்து எந்திரன் 1.0 வின் ‘நியூரல் ஸ்கிமா’வை லவட்டிக்கொண்டு எஸ்ஸாகிறது.
*ஐஸ்வர்யா 2.0 ஒரு கல்லூரியில் எதையோ படித்துக்கொண்டிருக்கிறார்(?!). சிட்டிக்கும் இவருக்கும் இடையே காதல் வருகிறது (எப்படி வருகிறது? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது! அது அப்படித்தான்).

இதேநேரம்,
எந்திரனில் கடைசிக் காட்சியில் காட்டப்பட்ட கண்காட்சிக் கூடத்தில் இருக்கும் சிட்டியின் பாகங்கள், Oceans 10,11 & 12 மற்றும் The Heist படங்களில் வருவது போன்று ஒரு ஹைடெக் திட்டத்தின் மூலம் திருடப்படுகின்றன.

விசயம் தெரிந்ததும் பரபரப்பாகிறது பத்திரிகை உலகம். வசீகரனின் (வயதான ரஜினி) வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமுகின்றனர். கேள்விகள் கேட்டுத் துளைக்கின்றனர். ரோபோ தீவிரவாதிகள் கையில் சிக்கினால் உலகமே ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த நேரத்தில், செகன்ட் ஹீரோ சிட்டி, வசீகரனைச் சந்தித்து ரோபோக்கள் மீது தனக்குள்ள ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஆய்வகத்தை மீண்டும் திறக்கிறார் வசீகரன்(ரஜினி). எந்திரன்2.0-வை உருவாக்குகிறார். அவருக்கு உதவுகிறார் நம்ம செகன்ட் ஹீரோ. இந்த நிலையில் எந்திரன்1.0 சீன உளவுத்துறையின் கைகளில் சென்று சேர்கிறது(எவ்வளவு நாளைக்குத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருப்பது?! ஒரு மாறுதல் வேண்டாமா?).. ‘ரெட் சிப்’ உதவியால் எந்திரன்2.0 வில்லனை மீண்டும் உருவாக்குகிறார்கள், சீன உளவுத்துறையினர். மேலும், அவர்கள் வில்லன் ரோபோக்களின் கட்டுப்பாடுகளைத் தங்கள்வசமே வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதற்கான அட்வான்ஸ்ட் மென்பொருளைச் சீனாவிற்குத் தயாரித்து வழங்குகிறது ஓர் இந்தியன் எம்.என்.சி. கம்பெனி(!) . அதற்கான நிரல் கட்டமைப்பு, டெஸ்டிங், டெலிவரி எல்லாமே அதன் பின்னணி புரியாமல் செய்து கொடுக்கிறது இந்த நிறுவனம். வில்லன் ரோபோ தன்னைத்தானே தயாரித்துக்கொண்டு பல்கிப் பெருகுகிறது. சீனா, இந்தியாவின் மீது படையெடுக்கத் தயாராகிறது!

எந்திரன்2.0 வில்லன் தலைமையில் சீனப் படைகளுக்கும் ரஜினி உருவாக்கும் எந்திரன்2.0 விற்கும் இடையே நடக்கும் பயங்கர யுத்தங்கள் இரண்டாம் பாதியை ஆக்கிரமிக்க டெர்மினேட்டர் ஸ்டைலில் கிளைமாக்ஸ்.
இறுதியில் ரஜினி தயாரித்த எந்திரன்2.0 (நல்ல ரோபோ) சீனப் படைகளை வென்றுவிட, செகன்ட் ஹீரோ ஐஸ்வர்யா2.0 வை மணமுடிக்க - சுபம்!

*************
ஐஸ்வர்யா2.0 விற்குப் பதில் வேறு யாரையேனும் வைத்து கற்பனை செய்துகொள்ளலாம். 
*ரஜினி, எந்திரன்2.0 வை ஆய்வகத்தில் உருவாக்கும்போது, அவர் மகள் காஃபி கொடுக்கிற சாக்கில் செகன்ட் ஹீரோவை சைட் அடித்துவிட்டு ஒன்று இரண்டு டூயட் பாடல்ளுக்கு ஆடிவிட்டுச் செல்வது,
*வில்லன் ரோபோ நல்ல ரோபோவுக்கு விர்ச்சுவல் கான்ஃபரன்ஸில் தோன்றி பஞ்ச் டயலாக் பேசிவிட்டுச் செல்வது, 
*இமயமலையிலிருந்து படைகள் வந்து இறங்குவதால் ‘பரமசிவன் கோபாக்னியைக் கக்குகிறார், அவரைச் சாந்திப்படுத்த யாகம் நடத்துவோம்’ என்று ஒரு கும்பல் கிளம்புவது, 
*வில்ல எந்திரன்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட மென்பொருளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை ரஜினி வரவழைப்பது, 
*அந்த ஸ்மார்ட்டான பையன், சாஃப்ட்வேரில் கண்டுபிடிக்கப்படாத ஒரு ‘பிழை’(Defect) இருப்பதை உன்னைப்போல் ஒருவன் ஸ்டைலில் கண்டுபிடித்து வசீகரனிடம் சொல்வது, 
*அந்த வீக்னஸை வைத்தே எந்திர வில்லன்களைச் சமாளிப்பது, 

என்று மசாலா ஐட்டங்களை இட்டு நிரப்பி ஒரு சூப்பர் ‘அறிபுனை’[Sci Fi] கதையை உருவாக்கலாம். 
***********
இந்தக் கதை பற்றி, இயக்குனர் சங்கரிடமோ, பீட்டர் ஜாக்ஸனிடமோ, ஜேம்ஸ் கேமரூனிடமோ இல்லை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-கிடமோ சொல்லி அவர்களை இதை இயக்குவதற்குச் சம்மதிக்க வைப்பவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறி முடிக்கிறேன்! 

படத்தில் வரும் மென்பொருள் சோதனையாளனாக (?!) (சாஃப்ட்வேர் டெஸ்டர்) நானேதான் நடிப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். :)

Wednesday, August 4, 2010

மேக் புக்கும் தமிழும் - MacBook Pro and Tamil

கடந்த மூன்று வாரங்களாக 'மேக்புக் ப்ரோ' எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கணிணியை (MacBook Pro), பணிநிமித்தம் பயன்படுத்தி வருகிறேன்.  இது என் கையில் கிடைத்ததும் முதல் நாள் பணிமுடிந்ததும் நான் செய்தது தமிழ் இணையதளங்களை வாசிக்க முயற்சி செய்தது. ஆனால், எல்லாமே கட்டம் கட்டமாகத் தெரிந்தன. இதோ பாருங்கள்...


நானும் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். கூகிளாண்டவரிடம் கெஞ்சி கூத்தாடி கேட்டேன். ஆனால், என்னால் முடிந்தது எல்லாம் ஆங்கிலத்திலேதான் செய்ய முடிஞ்சது. அப்போதுதான் 'மேக்' குழுமத்தில ஒருவர் 'தமிழ் யுனிகோட் எழுத்துரு' ஏதாவது ஒன்றை நிறுவினால் போதும் என்றார். நானும் கையில் கிடைத்த தமிழ் எழுத்துருக்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவிப் பார்த்தேன். இப்போது, கட்டம் கட்டமாக இல்லாமல் ஒரு புதிய வரிவடிவத்தில் எழுத்துக்கள் தோன்றின. ஒருவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களைக் கருத்தில் வைத்து, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆப்பிள் மேக் நிறுவனத்தார் இப்போதே நடைமுறையில் கொண்டுவந்துவிட்டார்களோ! என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது.  இதோ பாருங்கள் இந்தப் படத்தை!


'இப்படியே படித்துக்கொண்டிருந்தால், தமிழ் வரிவடிவ மாற்றம் வந்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாசிக்க முடியும்' என என்னக்கு நானே நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் மூன்று வாரம் ஆகிவிட்டபடியாலும், அதற்கு மேல் கூகிளுவதற்குப் பொறுமையில்லாமலும் பதிவர்கள் சிலரிடம் உதவி கோரினேன். அப்போதான் செந்தழல் ரவி அண்ணா இந்த சுட்டியை அனுப்பினாங்க.

http://tamilcpu.blogspot.com/2010/04/106.html

இதப் படிச்சதுக்கு அப்புறம்தான் புரிஞ்சது. மேக் இயங்குதளத்தை நிறுவும்போது,  விருப்பத் தேர்வுகள் பிரிவில் இருக்கும் ஒரு எழுத்துருதான் 'Inaimathi.tff'. இதுதான் யுனிகோட் தமிழ் எழுத்துருக்களை மேக்புக் ப்ரோவில் காண்பிக்கும் வேலையைப் பார்க்கிறது. அது என்னுடைய கணிணியில் இல்லை - அதனுடனே சேர்ந்து இன்னும் சில தமிழ் எழுத்துருக்களும். பின்னர் அதற்கான குறுவட்டை எடுத்து இவற்றையெல்லாம் சேர்த்து நிறுவியதும் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் எந்த வரிவடிவ குளறுபாடும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்தன. இப்போது இந்த இடுகையை(ஒரு வாரத்திற்குப் பிறகு) எழுதி முடித்துவிட்டேன்.

மேற்கண்ட சுட்டியில் மேக்புக்் 10.6 ல் இருக்கும் மிக எளிமையான தமிழ் உள்ளீடு முறை பற்றி அழகாக விளக்கியிருக்கிறார் ந.ர.செ. ராஜ்குமார்.

''அப்போ நீ என்னடா சொல்ல வர்றே؟'' என்கிறீர்களா....

இங்கு நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மேற்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி உள்ளீடு முறையைத் தேர்ந்தெடுத்த பின்பு ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாறுவதற்கு சில 'சுருக்கு விசை' களை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எப்படியெனில்,

System Preferences -> Keyboard -> Keyboard Shortcuts -> Keyboard & Text Input -> Select the Previous Input Source

இங்கு உங்களுக்குப் பிடித்தமான 'சுருக்கு விசை(களை)' தேர்வு செய்து கொள்ளலாம். நினைத்த நேரத்தில் தமிழ் - ஆங்கிலத்தில் மாறி மாறி தட்டச்சலாம்.

"அது சரி 'ஆப்பிள் மேக்' னா என்ன؟" என்பவர்களுக்கு..... இதோ
நானும் இதப்பார்த்து கொஞ்சநாள்தாங்க ஆச்சு....

Friday, July 2, 2010

30 ரூபாய் பயணச்சீட்டும் மாநகர காவல்துறையும்

கடந்த வாரத்தில் ஒருநாள்:

அண்ணா சாலையில் டி.எம்.எஸ். நிறுத்தத்தில், நான் வந்துகொண்டிருந்த பேருந்து நீண்ட வரிசையில் நின்றது. முன்னால் ஏற்கெனவே சில பேருந்துகள். திடீரென்று சில காவலர்கள் பேருந்தினுள் நுழைந்து ஒவ்வொருவரது பை, மற்ற பொருட்களைச் சோதித்தார்கள். அதற்குப் பிறகுதான் அது நடந்தது. ஒவ்வொருவரது டிக்கெட்டையும் பரிசோதித்தார்கள். எனக்கு திக் திக்கென்றது.

பார்ப்பதற்கு 'காவல்துறையின் உயர் அதிகாரிகள் போல...!' என யோசிக்கும்போதே... அங்கு என்ன?..  அது கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவின் ஒரு அணி. இந்த திடீர் பரிசோதனையை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக.

*****
காவலர்: டிக்கெட்ட காமி.
நான்: இந்தாங்க சார்

காவலர்: தம்பி 30 ரூபாய் பாஸ்ல எங்க போறீங்க?!
நான்: இல்ல வீட்டு ஓனர் இங்கேதான் இருக்காங்க, வாடகைய குடுத்துட்டு போக வந்தேன்.

காவலர்: அதுக்கு எதுக்கு 30 ரூபா பாஸு? தம்பி கீழ இறங்குங்க. ஐயாவ வந்து பாருங்க... சார் இங்க ஒருத்தன் இருக்கான் சார் (கீழே இருந்தவரைப் பார்த்து).

காவலர்: தம்பி பர்ஸ எடுங்க, பாக்கெட்ட செக் பண்ணுங்கய்யா... தம்பி எங்கயிருந்து வர்றீங்க?
நான்:வேளச்சேரியிலயிருந்து.


காவலர்: சரி என்னது இது? 30 ரூபா பாஸ்ல வர்றீங்க? மார்கெட்டிங்ல இருக்கீங்களோ?
நான்: இல்ல சார். சும்மாதான்.

காவலர்: எங்க போறீங்க?... பர்ஸ்ல ஒண்ணும் இல்லியா? (பர்ஸ் செக் பண்ணினவரைப் பார்த்து). எங்க காமிங்க. என்னய்யா போட்டா, யாரு இது?
நான்: "வேகா" சார்! இந்த 'பசங்க' படத்துல வருமே, அந்த பொண்ணு!

காவலர்: அதெல்லாஞ் சரி, 30 ரூபா பாஸுக்கு இன்னும் பதில் வரலியே! தம்பி எங்க வேல செய்றீங்க. ஐடி கார்ட காமிங்க!
நான்: (எ.கொ.இ.!!! இன்னிக்கு பார்த்து ஐடி கார்ட எடுத்துட்டு வரலியே! - மனதிற்குள் நினைத்துக்கொண்டே). சார் ஐடி கார்ட எடுத்துட்டு வரல சார். இன்னிக்கு நான் ஆஃபிஸ்க்கு போகல. வீட்டு ஓனரைப் பார்க்கத்தான் வந்தேன்.

காவலர்: அதான...., ஐடி கார்ட் இருக்காதே!
*****

இந்த மாதிரி நிச்சயம் நடந்திருக்கும் - அன்றைக்கு 30 ரூபாய் பயணச்சீட்டில் பயணித்திருந்தால்! வழக்கமாக, நேரம் கிடைக்கும் சனிக்கிழமைகளில் 30 ரூபாய் (ஒருநாள் விருப்பம்போல் பயணம் செய்யும் சீட்டு) பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு சென்னையை வலம்வருவது எனது பழக்கம். பொழுதுபோகாமல் அண்ணா நகர் மேற்கு, மணலி, காலேஜ் ரோடு என்று சம்பந்தமே இல்லாத இடங்களில் சுற்றிய அனுபவங்கள் உண்டு. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் பயணச்சீட்டுகள் வாங்கியிருப்பேன்.

***** (விட்ட இடத்திற்கு வருவோம்) - டி.எம்.எஸ். நிறுத்தம்:

உயர் அதிகாரி ஒருவர் கலைஞர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு குழுவினருக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

"பஸ்ல திருட்டு போகுதுன்னு நிறைய கம்ப்ளெயின்ட் வருது. இப்ப ரீஸன்டா பார்த்தீங்கன்னா, இது கொஞ்சம் அதிகமாயிருக்குது. ஏதாவது பொருளை உங்ககிட்ட வச்சிகிடுங்கன்னு கொடுக்கிறது. அத கொடுக்கும்போது வாங்கும்போது உங்க பொருள் எதையாவது திருடுறது, இப்படி. இதுல பார்த்தீங்கன்னா, திருடிகிட்டு மாட்டிக்கிறவங்க பெரும்பாலும் ஒன்டே பாஸ்ல வர்ற ஆட்கள். இந்த ஒரு நாள் பாஸ் வைச்சிருக்கிறவங்க நினைக்கிற இடத்துல இறங்கி வேற பஸ்ல ஏறிக்கலாம். இது திருடறவங்களுக்கு வசதியாப் போகுது. அதனால இந்த மாதிரி திடீர் சோதனைகள் நடத்துறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற விதமா இது சம்பந்தமா அறிவுரையும் கொடுக்கிறோம்..... " 

இன்னும் பேசிக்கொண்டே இருந்தார். பயணிகளிடமும் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது!

*****

நல்ல வேளையாக அன்று நான் 30 ரூபாய் (ஒருநாள் பயணச்சீட்டு) வாங்கவில்லை. வாங்கியிருந்தால்....வாங்கி கட்டியிருப்பேன்!

படம்:http://velang.blogspot.com/2009/01/30.html 
(இப்போது பழக்கத்தில் இருக்கும் ஒருநாள் பயணச்சீட்டு வண்ணமயமாக இருக்கிறது!)

Sunday, June 13, 2010

செம்மொழி மாநாடும் - சில உறுதிமொழிகளும்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தமிழ் மொழிக்கான ஒரு உலக மாநாடு - 'செம்மொழி' என்ற கூடுதல் தகுதியோடு! அது தொடர்பான விவாதங்களெல்லாம் இருக்கட்டும், நான் பேசவருவது வேறுவிசயம்!  இப்போதெல்லாம் நான் கூகிளில் தமிழில் கூட நிறைய விசயங்களைத் தேட ஆரம்பித்துவிட்டேன். "கோழி சமைப்பது எப்படி?", "கேரட் பொறியல் செய்வது எப்படி?", ''வத்தக்குழம்பு செய்யும் முறை'' என்று ஆரம்பித்து "அண்டம் தோன்றியது எப்படி?" வரைக்கும்!

தேடல் முடிவுகளில் பெரும்பாலும் தனிநபர் வலைப்பக்கங்களும் சில செய்தித் தளங்களின் தொடுப்புகளும் வருகின்றன. அதாவது, பதிவர்களாகிய நாம் எழுதுவது ஏதோ விளையாட்டுக் காரியமல்ல - அது மொக்கையாகவே இருந்தாலும்! நாம் எழுதிய வரிகளை நமக்குப் பின்னாஆஆஆஆல் வரும் சந்ததிகள் 10 பேரோ, 100 பேரோ ஏன் 10 இலட்சம் பேரோ கூட படிக்கலாம். அப்படி அவர்கள் படிக்கும்போது ஏகப்பட்ட பிழைகள் இருந்தால்(?!), அதே பிழைகள் அவர்களுடைய எழுத்துக்களிலும் பிரதிபலிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கூகிள் ப்ளாக்கர் சேவையை இலவசமாகத் தரும் வரையிலும் உங்கள் வலைப்புக்கள் தனித்தனி 'கல்வெட்டுகள்' என்பதை மறந்துவிடாதீர்கள்! - வரலாறு மிக முக்கியம்!

எனவே,

'செம்மொழி மாநாட்டை' முன்னிட்டு நான் எடுக்கும் உறுதிமொழிகள்:

*****
*முடிந்தவரை, பிழைகள் இல்லாமல் எழுதுவது. எங்காவது சந்தேகம் வந்தால் எஸ்.ரா, ஜெயமோகன், சாரு என எழுத்தாளர்களின் தளங்களில் படித்து, எனது எழுத்துக்களைத் திருத்திக் கொள்வது.

*மாதத்தில் ஒருவருக்காவது 'தமிழ் மென் எழுதிகள்' பற்றியும் 'இணையத்தில் தமிழ்' குறித்தும் அறிமுகப்படுத்துவது, அவர்களை இணையத்தில் தமிழில் எழுத வைப்பது.

*தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது.

*பிழைகளோடு எழுதும் சக பதிவர்களைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்கள் எழுதிச்சென்றுவிட்ட எழுத்து/இலக்கணப் பிழைகளை உணர்த்துவது. [நான் எங்காவது தப்புபோட்டா கூட மின்னஞ்சல் அனுப்புங்க மக்களே!]
*****

இந்த உறுதிமொழிகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம்!
தமிழ்மொழி தப்பும் தவறுமாக இணையத்தில் பதியப்படுவதில் ஒரு 5(%)சதவீதத்தையாவது கட்டுப்படுத்த உதவலாம்!

-வலைப்பக்கம் வந்து 6 மாதங்கள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்மண விருது வாங்கியதற்காக வாழ்த்திய, மின்னஞ்சலிலும் அரட்டையிலும் விசாரித்த, ஒன்றுமே எழுதாவிட்டாலும் 'என்னத்தையாவது எழுதுவான்யா' என்று பின்தொடர்ந்த அன்பு உள்ளங்களுக்கும்,  குறுஞ்செய்தி மூலம் பதிவர் சந்திப்பு குறித்து தகவல் சொல்லிய டாக்டர் புரூனோ அவர்களுக்கும் (நான் கலந்துகொள்ளவில்லை என்பது வேறு விசயம்!) என் மனமார்ந்த நன்றிகளைப் பதிந்து கொள்கிறேன்.

Tuesday, January 5, 2010

ஐ மிஸ்ட் யூ டா - உண்மையில் கதை

வளுடன் ஒருநாள் முழுவதும் செலவிடப் போகிறேன் என்ற உணர்வே என் மயிர்க்கால்களை புல்லரிக்க வைத்தது. அதுவும் இரயில் நிலையத்தில் அவளைப் பார்த்த பின்பு -  மாலை, இரவு என தொடர்ந்து அவள் ஞாபகம்தான். எப்படியெல்லாம் மாறிவிட்டாள், எவ்வளவு சகஜமாக இனிமையாகப் பேசினாள்! கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் கொண்டு(என் மனதையும்) விட்டுவிட்டு வீடு வந்தேன்.

க்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படிப்பு, அவளது அப்பாவின் வேலை நிமித்தம் அவர்கள் குடும்பம் மும்பை பயணம், ஊடகத்துறையில் பட்டப்படிப்பு, விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் இளைஞர்களுக்கான நான்கு பக்க வாரவெளியீட்டில் பங்களிப்பு, உலக அளவில் பிரபலமான ஒரு எழுத்தாளரின் இந்தியப் பயணத்தின்போது அவரைப்பேட்டி எடுக்கத் திட்டம், பேட்டிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது அவர் சென்னையில் இருக்கும் தினங்கள் - இதுதான் புவனா சென்னை வந்ததற்கான காரணம். சென்னையில் தெரிந்தவர்கள் பற்றி உறவுக்காரர்களிடம் விசாரித்ததில் என்னைப் பற்றியும், அவள் ஊரிலிருந்து சென்னையில் உள்ள இன்னும் சிலரைப் பற்றியும் தெரியவர, என்னைத் தொடர்புகொண்டிருந்தாள் புவனா. பேட்டிக்கான நாளுக்கு ஒருநாள் முன்னதாகவே பயணச்சீட்டு கிடைக்க, ஒருநாள் சென்னையைச் சுற்றிக்காட்ட என்னைக் கேட்டிருந்தாள்.

றுநாள் முழுவதும் என்னுடனேயே இருக்கப்போகிறாள்! பயணத்திட்டங்கள் வகுத்தாயிற்று. நண்பனது 'பைக்'கையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. எனது அலுவலகத்தில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் பெண்களுடன் பழகுவது பற்றிய எனது கூச்சம் என்றோ போயிருந்தது. இதை நினைத்து எனக்குள்ளேயே ஒரு கர்வம் இருந்தது. 'பள்ளிப்பருவத்தில் பார்த்த அந்த கூச்சம் நிறைந்த 'ஜோன்ஸ்' இவன் இல்லை' என்று அதிசயிக்கப் போகிறாள் என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டேன்.

காலையில் சொன்ன நேரத்திற்கு அவள் தங்கியிருந்த இடத்தின் முன் நின்றேன் - நல்ல பையனாக. அவளும் தயாராகியிருந்தாள்; சில நிமிடங்களிலேயே வெளியே வந்தாள். பலருக்கும் வரமளித்த கிழக்குக் கடற்கரைச் சாலையில் நுழைந்தபோது, 'சுள்'ளென்றிருந்த வெயில் மேகங்களின் வருகையால் மிதமானது. அவளுக்காகவே வெயில் தடை செய்யப்பட்டது போல உணர்ந்தேன். பைக்கின் பின்னிருந்து பல விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள். மிதமான வேகத்தில் சென்றதால் நானும் 'ம்' கொட்டிக்கொண்டே சென்றேன்.

ங்கிருந்து வந்து தொற்றிக்கொண்டது என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் அவளுடன்(இல்லை இல்லை, எல்லா பெண்களுடனும்) பேசுவதற்கு எப்படிக் கூச்சப்பட்டேனோ அதே கூச்சம்! என் உடலும் முகமும் வழக்கமான நிலையில் இல்லை. விஜிபிக்கு அருகே காபி சாப்பிட ஐந்து நிமிடம் நின்றபோது தெளிவாக அடையாளம் கண்டுகொண்டாள், நான் கூச்சத்தில் நெளிவதை. அதன்பின் 'தெற்குப்பட்டு' வரை பேசவே இல்லை. பைக்கில் அவள் உட்கார்ந்த விதத்திலும் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.

'தெற்குப்பட்டில்' சவுக்கு மரத் தோப்புகள் அங்கங்கே தென்பட்டன. ''ஏய் நிறுத்துப்பா, இங்க கொஞ்சநேரம் இருந்துட்டு போகலாம்'' என்றாள். 'மாமல்லபுரம் வரை என்னால் பைக் ஓட்டமுடியுமா?' என்கிற தொனியில் இருந்தது, அவள் கேட்டது. என் வண்டி ஓட்டும் திறமை மீதான சந்தேகமாக இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். புகைப்படங்கள் எடுத்த பிறகு, எதிரெதிரே இரு மரங்களில் சாய்ந்து நின்றுகொண்டோம் - அவள் பேச ஆரம்பித்தாள். 'நீ இன்னுமும் இப்படி கூச்சப்படுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல! சென்னை வந்து இத்தன வருசமாச்சு. இன்னும் அப்படியே இருக்கியே எப்படி?!' என்றாள். நேற்று எட்டிப்பார்த்த என் கர்வம் என்னைப்பார்த்து பல்லிளித்தது, கூடவே கொஞ்சம் கோபமும் வந்தது. 'யாருக்கு? எனக்கா கூச்சம்? இப்போ யாருக்குக் கூச்சம்னு பார்க்கலாம்!' என்று அவள் இடை நோக்கி என் கையை நீட்டினேன்; விலகி ஓடினாள். இரு நிமிடம் தொடர்ந்த விளையாட்டில் 'தோல்வி'(!)யை ஒத்துக்கொண்டாள். இயல்பு நிலைக்குத் திரும்பியதும் இயல்பாகப் பேசினாள் பேசினோம் - வீடு திரும்பும் வரையிலும்.

றுநாள், அந்த பிரபல எழுத்தாளருடனான பேட்டி நிறைவுற்றதும், கடற்கரையில் சிறிது நேரம் - அதில் மௌனமாய் அதிக நேரம். முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே பாதிநேரம்.  ரயில் நிலையம் நோக்கித் திரும்பவும் பயணம். தொடர் வண்டிக்காகக் காத்திருந்தபோது அம்மாவிற்குத் தொலைபேசினாள். சிலநிமிடம் கழித்து கைபேசியை என்னிடம் கொடுத்தாள்.

''சென்னையில அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்கு நீ இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தாம்பா அவளைத் தனியா அனுப்புறதுக்கு ஓ.கே. சொன்னேன். இல்லேன்னா நானும் கூட வரலாம்னுதான் யோசிச்சேன். சொந்தக் காரங்கள்லாம் ஆயிரம் வேலையோட இருப்பாங்க. அவங்க வீட்டுக்குப் போனமா வந்தமான்னு இருக்கணும். அதுவுமில்லாம பல வருஷமா யாருகூடவும் பழகுனதும் கிடையாது....'' என்று பேசிக்கொண்டே போனார் புவனாவின் அம்மா.

ழியனுப்பி வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.நடைபாதையில், ரயிலுக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தேன். 'ஐயகோ' என்று சத்தமிட்டு(SMS Tone) வந்தது ஒரு குறுஞ்செய்தி. 'ஐ மிஸ் மிஸ்ட் யூ சோ மச். ஐ ரியலி மிஸ்ட் யூ தீஸ் மெனி யியர்ஸ் பா' [I missed you so much. I really missed you these many years pa :(  ].

Monday, January 4, 2010

புளகாங்கிதம் அடைய வைத்த புத்தகக் காட்சி உரை - கவிக்கோவிடமிருந்து

புளகாங்கிதம்:
     இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முழுதாகப் புரிந்து உணர முடிந்தது. 33-வது சென்னை புத்தகக் காட்சியில் 'கவிக்கோ' அப்துல் ரகுமான் அவர்கள் 01-01-2010(வெள்ளிக்கிழமை) அன்று ஆற்றிய உரையில் நிகழ்ந்தது இது. 'செம்மொழிச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை என்னை நெகிழ வைத்துவிட்டது.

     செக்குமாடுபோல் சுற்றிவரும் நம் அன்றாட வாழ்க்கையில் (பெரும்பாலோர்க்கு) மனதை 'நெகிழ' வைக்கும் நிகழ்வுகள் அரிதாகவே நடக்கின்றன. அந்த வகையில் அனுபவித்த ஒன்று கவிக்கோவின் உரை. 'செம்மொழிக்கான தகுதிகள் என்ன?' - 'தமிழ் ஏன் செம்மொழி?' என்ற கேள்விகளுக்கு மிக அழகாக விளக்கமளித்தார்.

செம்மொழியின் கூறுகள்:
     தொன்மை, தாய்மை, தனித்தியங்கும் தன்மை, அழகியல், பொதுமைப் பண்பு, அதில் தோன்றியுள்ள இலக்கிய வளம், இன்னும் பல. இவற்றில் சிலவற்றை மட்டுமே (நேரம் கருதி) விளக்கினார். அவரது பேச்சு முழுவதும் புல்லரிக்க வைத்தது உண்மையிலும் உண்மை.

நான் கவனித்த ஒருசில உங்களுக்காக:
     தலைவனும் தலைவியும் (காதலனும் காதலியும்) தங்களுக்குள் இட்டுக்கொள்ளும் சிறு சண்டைகள், வெளிப்படுத்திக்கொள்ளும் சிறு கோபங்கள் - இந்த நிலையை விளக்க தமிழ் தரும் வார்த்தை 'ஊடல்'. உலகின் எம்மொழியும் வரையறுக்காத ஒருநிலை. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' (இதச் சொன்னது நம்ம நர்சிம் இல்லப்பா!) என்ற பரந்த சிந்தனை.

சங்ககால உதாரணங்கள்
     தன் தாய் வளர்த்த புன்னை மரத்தைத் தன் மூத்த சகோதரியாகப் பாவிக்கும் தலைவி, தலைவன் தன்னை அந்த மரத்திற்கு அருகிலே கொஞ்ச முனையும்போது 'புன்னையாகிய தன் சகோதரி தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதால் இங்கு கொஞ்ச வேண்டாம்' என்கிறாள். அந்த அளவிற்குச் செடிகொடிகளின் மீதுகூட பற்றுகொண்டிருந்தாள்.

     நீண்டநாட்களுக்குப் பின் காதலோடும் காமத்தோடும் தலைவியைச் சந்திக்க தேரில் வருகிறான் தலைவன். தேரில் தொங்கவிடப்பட்டுள்ள மணிகள் அசைந்து ஓசை எழுப்புகின்றன. இந்த ஓசை, வழியோரம் உள்ள பூக்களில் தேனைச் சுவைத்துக் கூடிக் கிடக்கும் வண்டுகளுக்கு இடைஞ்சலாகிறது எனக் கண்டு தலைவன் அஞ்சுகிறான். எனவே அந்த மணிகளின் நாவினை, நார்கொண்டு கட்டுகிறான்.

மேற்கூறிய இரண்டு உதாரணங்களும் 'அகநானூற்றில்' வருகின்றன என நினைக்கிறேன்(கவிக்கோ சொன்னதை மறந்துவிட்டேன்).

'இந்த அளவிற்குப் பண்பாட்டில் உயர்ந்து நின்ற இனம் தமிழினம்' என்றெல்லாம் பேசியபோது நம் தமிழ்மொழியின் பெருமைகளை எண்ணி புளகாங்கிதமடைந்தேன். இத்தகைய பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய நம் இலக்கியங்களை நாம் கற்று, பரந்த நோக்குடைய மனிதர்களாக வேண்டும் என்று வேண்டி உரையை முடித்தார் 'கவிக்கோ'.

 தமிழ் இலக்கியங்களைப் பயில்வதில், எனக்கு ஏனோ ஆர்வம் இருந்ததே இல்லை. ஆனால் கவிக்கோவின் கருத்தினால் ஈர்க்கப்பட்டுள்ளேன்.  'குறைந்தபட்சம் அகநானூறு, குறுந்தொகை இவற்றையாவது படிக்கவேண்டும்' என்ற ஆர்வம் என் அடிமனதில் ஊறுகிறது.