Monday, November 28, 2011

கலாம் வர்றார் - ''சொம்ப எடுத்து உள்ள வை''!

மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அரசாங்க விஞ்ஞானி அப்துல் கலாம், கூடங்குளம் போராட்டத்தில் தன்னால் ஆற்ற முடிந்த பங்கை ஆற்றிவிட்டுச் சென்றுவிட்டார்; இன்னும் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறார்.

அணுஉலையை எதிர்த்தவர்களில் கூட சிலபேர், இப்போது மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள். இருக்கட்டும்! 600 கி.மீ. தொலைவில் இருக்கும் இவர்களில் பெரும்பாலானோருக்கு கூடங்குளம் மக்களின் பீதியும், போராட்டத்தின் நியாயமும் புரிவது சிரமம்தான்.

(இணையத்தில் கிடைத்த்து, யார் வரைந்தது என்று தெரியவில்லை. ஊர் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது)

என்னதான் இருந்தாலும், ''எவன் எப்படி போனா எனக்கென்ன, எனக்கு கரண்ட் வரணும், அவ்ளோதான்'' என்ற மனநிலையில் இருக்கும் மக்களை ஒன்றும் செய்ய முடியாது! சரி, இப்போது நம்ம ஹீரோ திரு. அப்துல் கலாம் அவர்களின் அறிக்கைக்கு வருவோம். பாதுகாப்பானது என்று விஞ்ஞான ரீதியாக விளக்கம் மட்டும் கொடுக்கும் அறிக்கையாக அது இருந்திருந்தால், நாம் இவ்வளவு தூரம் திருவாளர் அப்துல் கலாம் மீது கோபம் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கூடங்குளம் அணுஉலையைச் செயல்பட வைக்க, மக்களுக்குப் பணம் கொடுத்து காரியத்தைச் சாதித்துவிடலாம், மக்கள் மனதை மாற்றிவிடலாம் என்று இலவசம் கொடுக்கும் அரசியல்வாதிகளைப் போல், ஒரு சூப்பர் 10 அம்ச திட்டத்தை அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்கள் இதுவெல்லாம் கேட்காதபோது, அணுஉ(கொ)லைத் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதுபோன்று அறிவிப்பதெல்லாம் லஞ்சம் கொடுக்கும் முயற்சியில் வராதா? என்று நவயுக இந்தியன் தாத்தா 'அன்னா ஹசாரே' ஆராய்ந்து சொன்னால் நன்றாயிருக்கும்.

இது ஒருபுறம் இருக்கட்டும். இந்த 10-அம்ச திட்டங்களையும் தாண்டி, அப்துல் கலாமின் அறிக்கையில் இருக்கும் மற்ற சில விசயங்கள் மற்றும் விட்டுப்போன விசயங்கள் பற்றி காண்போம். முழு அறிக்கையும் இங்கே படிக்கக் கிடைக்கிறது. ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள்.

''ஏற்கனவே ஜெர்மனி ஒரு வளர்ந்த நாடு,  இதில் 2022 க்குள் ஜெர்மனி அதனுடைய அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் இருந்து வெளியில் வரும் முடிவு என்பது, அந்த நாட்டில் இருக்கும் யுரேனியத்தின் அளவு 2022க்குள் முடிந்துவிடும் என்ற இயற்கையான காரணத்தினாலே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதாவது, 2006 முதல் 2008 வரை மொத்த தேவையான 3332 டன் யுரேனியத்திற்கு பதிலாக, மொத்தமே 68 டன் யுரேனியம் தான் ஜெர்மனியில் இருந்து எடுக்க முடிந்தது, மீதி பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருந்தது. எனவே இனிமேல் இறக்குமதி செய்தால் அது விலை அதிகமாகும் எனவே மரபு சார எரிசக்தி முறையில் அதிகம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அதற்கு அந்த நாட்டிலேயே அதன் தொழில் நுட்பம் கிடைப்பதாலும், உற்பத்தி செலவு குறைவு என்பதாலும், அதன் தேவைக்கு அதிகமாக மின்சார உற்பத்தி நடக்கும் என்ற தொலைநோக்கின் காரணத்தினாலும் மற்ற வகையில் மின் உற்பத்தி செய்யவோம் என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது. ''


இப்படி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜெர்மனியிலிருந்து வரும் செய்திகள் அப்துல் கலாமின் இந்த கருத்துக்களோடு உடன்படவில்லை. அணுஉலைகளை மூடுவதான ஜெர்மனியின் முடிவு குறித்து, அந்நாட்டின் சான்சலர் 'ஆஞ்சலோ மெர்கெல்(Angelo Merkel)' தெரிவித்த வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

''Step by step, we will abandon the nuclear energy by the end of 2022, is path of a big challenge for Germany. We believe that our country can become a front runner for the creation of renewable energy and as a first large industrial nation we can create such a change towards highly efficient and renewable energies with all  opportunities for export, development and technology which creates jobs. We believe that with these decisions, we have the opportunity to create the turn around toward the electricity of future. The German government and the coalition is ready to go down this path together".
மேற்கொண்டு விவரங்கள் வேண்டுவோர் சான்சலர் ஆஞ்சலோ மெர்கெல்-லின் அறிக்கையை இந்த விடீயோவில் http://www.youtube.com/watch?v=v2kchdJ_Z68 பார்க்கலாம். மரபுசாரா சக்தி உருவாக்கத்தில் முன்னோடியாக ஜெர்மனி இருக்க விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது. அணுஉலைகளை மூடுவது என்ற முடிவானது, எதிர்கால மின்சாரத்திற்கான மாற்றுகளை உருவாக்க ஒரு வாய்ப்பாக அமையும் எனிகிறார் ஆஞ்சலோ மெர்கெல்

ஆனால், நம் எல்லோருக்கும் பிடித்தமான 'அப்துல் கலாம்' ஏன் வேறுமாதிரி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்? இப்படியான தவறான கருத்துகளை அறிக்கையாக அவிழ்த்துவிடுவது ஒரு மகா மேதையான விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவருக்கு அழகா?  சரி, ஒரு வாதத்துக்கு அவரது கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும். யுரேனியம் இறக்குமதி செய்வது ஜெர்மனிக்கு மிகுந்த செலவு கொடுக்குமாம்!  அப்படியானால், இந்தியாவில் மட்டும் யுரேனியம் கொட்டிக்கிடக்கிறதா? நாமும் இறக்குமதிதானே செய்யவேண்டியுள்ளது? இவர் பேசுவதைப் பார்த்தால் யுரேனியத்திற்கே அதிக செலவு வைக்கவேண்டியிருக்கும் போலிருக்கிறதே! இந்தியாவிற்கு ஏற்கெனவே இருக்கும் கடன் சுமை போதாதா?  ஆனால், யுரேனியம்தான்  மலிவான எரிபொருள் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்களே நம்மூர் விஞ்ஞானிகள்!

'ஜெர்மனி யுரேனியம் பற்றாக்குறையினால்தான் அணுஉலைகளை இழுத்து மூடப்போகிறது' என்பது முழுப்பொய் என்பதை உணர்ந்துகொள்ள சமீபகால செய்திகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

http://www.bbc.co.uk/news/science-environment-15864806
//GlobeScan had previously polled eight countries with nuclear programmes, in 2005. In most of them, opposition to building new reactors has risen markedly since.In Germany it is up from 73% in 2005 to 90% now - which is reflected in the government's recent decision to close its nuclear programme//.


க்ளோப்ஸ்கேன் 2005-ம் ஆண்டு அணுசக்தி திட்டங்களை வைத்திருக்கிற எட்டு நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தது. 2011-ம் ஆண்டிற்கான தற்போதைய கணிப்பில், இந்நாடுகளில் பெரும்பாலானவற்றில், புதிய அணுஉலைகளைக் கட்டுவதற்கான எதிர்ப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் அணுஉலைகளுக்கான எதிர்ப்பு 2005-ம் ஆண்டில் 73%-ல் இருந்து இப்போது 90% ஆக அதிகரித்துள்ளது. இது, '2022 இறுதிக்குள் நாட்டின் அனைத்து அணுஉலைகளையும் மூடுவது' என்ற அந்நாட்டு அரசின் சமீபத்திய முடிவில் பிரதிபலித்துள்ளது.
ஆனால் 'அப்துல் கலாம்' ஜெர்மனிக்கு யுரேனியம் கிடைக்கவில்லை, அதனால் அணுஉலைகளை மூடுகிறது என்கிறார். மேலும் அவர் சொல்கிறார்,
மரபு சார் எரிசக்தி முறை ஜெர்மனியில் குறைவான செலவு பிடிக்கிறதாம்! அப்படியெனில் ஏன் இந்தியாவில் அந்த முறையைப் பயன்படுத்தக் கூடாது?  ஜெர்மனி தேர்ந்தெடுக்கிற மரபுசார் எரிசக்தி முறையை நாமும் கடைபிடித்தால் இன்னும் அதிகமான பணத்தை மிச்சப்படுத்தலாமே? கூடவே இன்னொரு நாட்டை நம்பி இருக்கவேண்டிய தயவும் இருக்காது. புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த மாதிரியும் ஆயிற்று. இளைஞர்களிடம் ''புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்'' என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் கலாம் அவர்கள், அணுஉலை தொழில்நுட்பத்தை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஊக்குவிப்பது ஏன்?

இன்னும் ஒரு செய்தி: 24 நவ-2011.
http://www.bbc.co.uk/news/world-europe-15883782
அணுக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு ரயிலை மறித்து நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதல். எதற்காக போராட்டம்? அணுக்கழிவுகளைச் சேமித்துவைக்கும் கிடங்கு பாதுகாப்பானது இல்லை என்கிறார்கள் ஜெர்மன் நாட்டு மக்கள். போலீசாருடன் மோதும் அளவிற்கு அணுஉலை மற்றும் அணுக்கழிவுகளுக்கு எதிரான வலுவான போராட்டம் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 

'ஜெர்மனியின் அணுஉலைகளை மூடுவது என்ற அந்நாட்டு அரசின் முடிவின்'  பின்னணியில் 'அந்நாட்டில் யுரேனியம் தீர்ந்துவிட்டது' மட்டும்தான் காரணம் என்பது போன்ற தவறான வாதத்தை, தனது அறிக்கையில் தெரிவித்துள்ள திரு. அப்துல் கலாம் அவர்களின் ஒட்டுமொத்த அறிக்கையையும் எந்த அடிப்படையில் நம்புவது?!

பேசப்படாமல் விடப்பட்டது:
மின்கடத்தல் மற்றும் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பு. மத்திய அமைச்சரே கூறுகிறபடி இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 34 சதவீதத்துக்கும் அதிகமாக வீண்டிக்கப்படுகிறது http://www.livemint.com/2010/08/23214133/Losses-in-transmission-distri.html.  அதாவது போகிறவழியில் கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதுவே அமெரிக்காவில் 7 சதவீதமும், தென் கொரியாவில் 4%  ஆகவும் இருக்கிறது. இதைக் குறைத்தாலே, மின்சாரத்தில், குறைந்தபட்சம் இன்னும் 5 ஆண்டுகளுக்காவது நாம் தன்னிறைவோடு இருப்போம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே கூடங்குளத்தில் அப்துல் கலாம் பேசியபோது (http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=20878) இந்த மின் இழப்பு பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இப்போது வெளியிட்டிருக்கிற அறிக்கையில் இதைப் பற்றி எதையுமே குறிப்பிடவில்லை. "மத்திய அரசின் நிர்பந்தந்தத்தின் பேரில் தான் இந்த அறிக்கையை வெளியிடவில்லை" என்று கூறும் அப்துல் கலாம், ஒரு விஞ்ஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் அரசுத் தரப்பில் நடைபெறும் இதுபோன்ற பொறுப்பில்லாத தனத்தைச் சுட்டிக்காட்ட வேண்டுமா கூடாதா? இதுவெல்லாம் இந்தியா வளர்ச்சியடைவதைப் பாதிக்காதா என்ன? வளர்ச்சி பற்றி கவலைப்படும் இந்த விஞ்ஞானி, ஆண்டுக்கு 35,000 கோடி இழப்பு ஏற்படும் இந்த விசயத்தில் கவலைப்படாதது ஏன்?

அப்படியானால் அப்துல் கலாம் போன்றவர்கள் கவலைப்படும் வளர்ச்சி என்பது வெறும் GDP எண்களோடு நின்றுவிடுகிறதா?

ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின்(http://news.sky.com/home/world-news/article/16112805) நிலை என்ன? இந்தியாவின் வளர்ச்சியில் இல்லை, குறைந்தபட்சம் உயிர் வாழும் அடிப்படை உரிமையிலாவது அவர்களுக்கு பங்கு இருக்கிறதா? வளர்ச்சி வளர்ச்சி என்று திரும்பத் திரும்ப உபதேசித்து வரும் அப்துல் கலாம் அவர்கள் இவர்களுக்கு என்ன சொல்கிறார்? ஒருவேளை இவர்களெல்லாம் இந்தியர்கள் இல்லையோ?!

Tuesday, November 8, 2011

லஞ்சத்தை ஊக்குவிக்கும் அப்துல் கலாம்!

எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடக்கிறது!

A.B.J. அப்துல் கலாமுக்கு மக்களிடன் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கூடங்குளம் பிரச்சினையின் தீவிரத்தைக் குலைக்க அரசு செய்யும் முயற்சி பெருவெற்றி பெற்றுள்ளதுபோல் தோன்றுகிறது. அரசு சொல்லி தான் வரவில்லை என்று கலாம் மறுப்பு தெரிவித்துள்ளபோதும், இந்த பிரச்சினையில் தானாகவே தலையிட்டு, கருத்து சொன்னது மட்டுமில்லாமல் 36 பக்க அறிக்கையையும் கொடுத்திருக்கும் திரு. கலாம் அவர்கள், தமிழக மீனவர் பிரச்சினைக்காக இப்படி ஒரு அறிக்கை எங்காவது கொடுத்திருக்கிறாரா? என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.

தன் வாழ்நாள் முழுவதும் அரசு விஞ்ஞானியாக இருந்தவரும், 1998-ம் ஆண்டு அணுகுண்டு சோதனைக்கு முக்கியக் காரணியாகவும், அக்னி போன்ற ஏவுகணைகளுக்கான சோதனையில் பெரும்பகுதியையும் செலவிட்ட, இந்தியக் குழந்தைகளின் ஏகபோக ஆதரவு பெற்ற திரு அப்துல் கலாம் அவர்கள், 'தான் ஆடாவிட்டாலும், தன் சதையாடும்' என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

அணுஉலை ஆதரவாளர்களுக்கு இது நல்ல தருணம். அப்துல் கலாமின் அறிக்கையை அவுலாகப் போட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு ஊடகங்கள் மென்று கொண்டிருக்கும்.

'கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் வராது' என்று அவர் கூறியதில் நமக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஆனால், கூடவே அறிக்கை என்ற பெயரில் 10 (11?)அம்சத் திட்டம் ஒன்றை அவர் முன்வைத்திருக்கிறார். அந்த திட்டங்களின் மதிப்பு 200 கோடி(?!)

இந்த அறிக்கை சார்ந்துதான் நமது கேள்விகள் எல்லாம். 

அப்துல் கலாம் அவர்களே,

*அணுஉலை பாதுகாப்பானதா இல்லையா என்பது பற்றிதானே கருத்துகூற வந்தீர்கள்? ஒரு விஞ்ஞானியாக, பாதுகாப்பு குறித்தான கருத்து மட்டும் சொல்லிவிட்டுப்போகாமல், 10-அம்சத் திட்டம் என்பதை எதற்காகத் தயாரித்து வழங்கினீர்கள்?

*நீங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில்,  அரசாங்கம் மக்களுக்குச் செய்து தந்திருக்க வேண்டிய அடிப்படை விசயங்களும் அடங்கியுள்ளன. இத்தனை நாட்கள் அதைச் செய்துதராதது எதனால்?


*அப்படியானால் அடிப்படை உரிமைகளே, அணுஉலை போன்ற பேரழிவு திட்டங்களை எதிர்த்தால்தான் கிடைக்குமா இந்நாட்டில்?


*14,000 கோடி மதிப்பிடப்பட்டுள்ள அணுஉலை திட்டத்திற்கு,  மக்களுக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணமாக நீங்கள் கருதுவதுதான் ரூ.200கோடி மதிப்புள்ள உங்களது 10 அம்சத் திட்டங்களா?

*குழந்தைகளிடம் 'லஞ்சம் வாங்கும் உங்கள் பெற்றோர்களைக் கண்டியுங்கள்' என்று கூறும் நீங்கள், அணுஉலை எதிர்ப்பு இன்றி இயங்குவதற்கு, அரசாங்கத்தையே லஞ்சம் கொடுக்கத் தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்?

*'என்ன செய்தாவது ஒரு விசயத்தை நிறைவேற்று' என்பதுதானே லஞ்சத்திற்கு மூலம். உங்களுடைய 10 அம்சத் திட்டமும் இதே விதத்தில்தானே இருக்கிறது?

*********

ஜெர்மனி, மின்உற்பத்தியில் அணுஉலையின் தேவையின்றியே தன்னிறைவு பெற்றுவிட்டதாகச் சொல்லும் நீங்கள், அங்கு நடைமுறையில் உள்ள முறைகளை ஏன் இந்தியாவும் பரிசீலிக்குமாறு பரிந்துரைக்கக்கூடாது? 


ஜெர்மனிக்கு வேண்டாம், இந்தியாவுக்கு மட்டும் அணுஉலை வேண்டுமா?!

அழிவு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகிச்சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
*********

எங்களுக்குத் தேவை, மக்கள் பயந்துவாழும் ஒரு வல்லரசு நாடு அல்ல! அமைதியாக வாழும் நல்லரசே!

Wednesday, November 2, 2011

ராவா ஒரு Ra-One விமர்சனம்!

ஏதோ ரோபோ படமாம்…. ஆர்ட்டிஃபிஸியல் இன்டெலிஜன்ட்ஸாம்…. விர்ச்சுவல் வேர்ல்டாம்…. இன்விசிபிள் ரேய்சாம்…. ஈவிலாம்… குட்டாம்…. பைட்டாம்…. பாட்டாம்…. ரொமான்ஸாம்…. சென்டிமென்டாம்….

**********************************************************************************

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கம்ப்யூட்டர் கேம்ஸ் வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார் மக்கு ஜீனியஸான(!) ‘அப்பா’ என்று அழைக்கப்படும் சேகர். இந்த ம(க்)கா ஜீனியஸ், வடிவமைக்கும் ஒரு ரியல்+விர்ச்சுவல் கேம் வேர்ல்டில் இருந்து வெற்றிகாணவே முடியாத, யாராலும் அழிக்கவே முடியாத ஒரு வில்லன் மற்றும் அவனை எதிர்க்கும் ஹீரோ இருவரும் நம்முடைய ரியல் வேர்ல்டுக்குள் நுழைவதுதான் கதை.

****

>>>முதல்பாதியில் வில்லன் நம்முடைய ரியல் வேர்ல்டுக்குள் நுழைவதுவரை கொடுத்த பில்டப்புக்கு, இரண்டாம் பாதியில் ஓண்ணும் வொர்த் இல்லீங்கோ!!!

மை கொஸ்டின்ஸ்:
????ஏனுங்க, ஏதோ சயின்ஸ் ஃபிக்சன்னு சொன்னீங்கோ, ஆனா சயின்ஸ் எங்கேங்க இருக்கு? பேருமட்டும் டெக்னிக்கலா கொடுத்தா போதுமா?

????கம்ப்யூட்டர் கேம முழுசாவே டெஸ்ட் பண்ணல, அதுக்குள்ள மார்க்கெட்டுக்கு போகுதே அது எப்புடி?

????விர்ச்சுவல் கம்ப்யூட்டர் கேம்தானே பண்ணுனீங்க? அதுக்கு ஒருசில சென்சார்ஸ் அண்டு கன்ட்ரோலர்ஸ்தான் தேவை! ஆனா எங்கேயிருந்து ஒரு முழு ரோபோவுக்கான பார்ட்ஸ் செஞ்சீங்க? அந்த கார்ட்(HART) கார்ட்-டுன்னு சொல்றீங்களே, அதுக்கும் கேம் விளையாடுறவங்களுக்கும் என்ன சம்பந்தம்?

????டெவலப்மென்ட் இடத்தையே துவம்சம் பண்ணிட்டு போயிட்டடாரு வில்லன், ஆனா ஒரு ஃபயர் அலார்மோ வேற ஏதுமோ இல்லை. அட அத விடுங்க, பலநாளா அந்த இடத்தையே ஆரும் எட்டிக்கூடப்பார்க்கலை! போலீஸே வரலீங்கோ. அது எப்படிங்கோ?!

????”பைத்தியக்காரன்… பைத்தியக்காரன்” என்று பின்னணியில்(ஷாரூக் இன்ட்ரோ!) பாடுவதாகட்டும் ”ஐயோ” என்று பின்னணி வருவதாகட்டும், சில தமிழ் வார்த்தைகளை வைத்து இரட்டை அர்த்த காமெடிகளைத் தூவுவதாகட்டும், இந்த படத்துல இதுக்கு என்னாங்க அவசியம்??!!

கவனித்தவை:
ஒரு காட்சியில் தமிழக முதல்வர், இதயதெய்வம், கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, டாக்டர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவை - சும்மா ஜுஜூபியாக கிண்டல் செய்துவிட்டுப் போகிறார்கள்! கூடியவிரைவில் ஹிந்தி படம் பார்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கி எழுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ரா-ஒன். திரும்ப திரும்ப சொல்லுங்க…ராஒன்-ராஒன்-ராவண், நம்ம ராவணனுங்க(நான் சொல்லலீங்க! படத்துலயே சொல்றாங்க). இந்த விர்ச்சுவல் வேர்ல்ட் இராவணன்(Ra-One), தசரா அன்று எரிக்கப்படும் ரியல் வேர்ல்ட் ராவணணுடைய தலைக்குப் பொருந்தி நடந்துவரும் காட்சி! சூப்பர்!

வரலட்சுமி நோன்பு வர்ற நாளுக்கும் தசரா வர்ற நாளுக்கும் எவ்ளோஓஓஓ இடைவெளி இருக்கு! ஆனா படத்துல அடுத்தடுத்து ஒண்ணோ ரெண்டோ நாளுக்குள்ள வர்ற மாதிரி இருக்கு! யாராவது கவனிச்சீங்களா?

ரஜினி ஏதோ சீன்ல வர்றாராமே:
பாவம். மேக்கப் கோளாறு, மொக்கை டயலாக்(வேற ஏதாவது உருப்படியா பேசக் குடுத்துருக்கலாம்) என்று ரஜினியை கிரியேட்டிவாக பயன்படுத்தாவிட்டாலும், அந்தக் காட்சிக்குக் கொடுத்திருக்கும் பில்ட்-அப், பரவாயில்லை!

சயின்ஸா சாமியா?
இந்த விசயத்தில் நம்மில் நிறைய பேருக்கு எப்போதுமே ஒரு குழப்பம் இருக்கும்! ஒண்ணு சயின்சுன்னு சொல்லணும், இல்லேன்னா சாமின்னு சொல்லணும். ஹீரோ தன் பலம் முழுவதையும் காட்டி ரயிலை நிறுத்திவிடும் காட்சியின் கடைசி வினாடியில், பின்புறம் சாமி சிலையைக் காட்டிவிடுவது! (அப்போ என்னாத்துக்கு ஹீரோவுக்கு பவர், கிவர், கார்ட், அது இதுன்னு அவ்ளோ பில்டப் கொடுக்கணும்?!) சயின்சுக்கும் சாமிக்கும் முடிச்சுப்போடும் வேலையை இந்தப் படத்திலும் பண்ணியிருக்கிறார்கள்.

சூப்பர்:
கிராஃபிக்ஸ்! ஒளிப்பதிவு!

மொன்னை:
இதை சயின்ஸ் பிக்சன்னு சொல்றது! இரண்டாம் பாதி திரைக்கதை!

பரிதாபம்:
இங்கேயும் மின்சார ரயிலில் நாயகியைக் காப்பாற்றுகிறார் ஹீரோ ரோபோ(இல்ல, கேம்லேருந்து வந்த ப்ரோக்ராம்?!). அந்த காட்சியில், ரயிலில் தொங்கி தொங்கி முன்னேறுவது…! ‘‘ஏம்பா, நம்ம ரஜினி எந்திரன்ல எம்புட்டு அழகா ரயில்மேல ஓடி வந்தாரு” என்று சொல்ல வைத்துவிடுகிறது!
*********************************************************************************

என்னமோ போங்க, இதுக்கு எந்திரனே பரவாயில்லை! ”அப்டிக்கா பண்றோம், இப்டிக்கா பண்றோம்னு, உருண்டு புரண்டு பண்றோம், ராவா பண்றோம்”னு சொல்லி நம்ம காச ஆட்டைய போடுறதே இந்த சூப்பர் ஸ்டாருங்களுக்கு வேலையாப் போச்சு!!!!

இது குழந்தைகளுக்கான படம் இல்லீங்கோ!

Saturday, October 15, 2011

"புதிய தலைமுறை"யின் அபத்தம்!

'அணுவின்றி' என்று தலைப்பிட்டு இந்தவார 'புதிய தலைமுறை(!)' (20 Oct 2011) தலையங்கம் எழுதியுள்ளது.

அதிலிருந்து சில வரிகள்...

//தமிழகம் மின்பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுதான். அதுவும் கணிசமான அளவு பெருக்குவதுதான். தமிழகத்தில் பாயும் நதிகளின் நீர்வரத்து, அண்டை மாநிலங்கள் அனுமதிப்பதைப் பொருத்து இருக்கிறது. காற்று ஆண்டு முழுவதும் கிடைக்காது. சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்வது அதிகச் செலவும் இடமும் பிடிக்கும். இவை எதைக் கொண்டும் கணிசமான அளவு மின்னுற்பத்தி செய்ய இயலாது. நிலக்கரி, பெட்ரோல் விளி மண்டலத்தில் கரிப்படலங்களை ஏற்படுத்தி பருவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் அணு மின்சாரம்தான் கணிசமான உற்பத்திக்கான வழி...//

//ஓடுகிற ஆறு, ஓசையிடும் கடல், அடுப்பில் எரியும் நெருப்பு, மின்சாரம், போக்குவரத்து, இயந்திரங்கள், ஏன் உண்ணும் உணவில் கூட விபத்துக்கான சாத்தியங்கள், பக்க விளைவுகள் உண்டு. அதற்காக அவையே வேண்டாம் எனச் சொல்லி விடுவோமா? தினம் சாலை விபத்துகளைப் படிக்கிறோம். பயணங்களை நிறுத்தி விட்டோமா? ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன எனத் தெரிந்தும் ஏன் முன்பதிவில் இத்தனை முண்டியடித்தல்?

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது. கூடங்குளப் போராட்டக் குழுவினர் எந்த மாதிரியான பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுப் பெறட்டும். அதை விட்டு பேச்சுவார்த்தையே நடத்தமாட்டோம், வல்லுநர்கள் உட்பட யார் சொன்னாலும் அதற்கு செவி மடுக்கமாட்டோம், அணுமின் நிலையத்தை மூடியே ஆக வேண்டும் எனக் கோருவது நியாயமானதல்ல. //

*******

அணுஉலையின் ஆபத்துகளை அறிந்துகொண்டு விழிப்புணர்வு பெற்று, உலகமே அணுஉலை வேண்டாம் என்கிற நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது,'புதிய தலைமுறை' (இனியொரு விதி செய்வோம்!) என்று பெயரை வைத்துக்கொண்டு, வெற்றிலை மெல்லும் பழையகால பாட்டிபோல ஒரு பக்கத்திற்கு புலம்பி வைத்திருக்கிறது. 

உலகத்தில் பல இடங்களிலும் மாற்று எரிபொருள், இயற்கை எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துதல், உயிரியல் எரிபொருட்கள் என்று ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இக்காலத்தில், அதற்கான உந்துதலை இங்கிருக்கும் மிகப்பெரிய சக்தியான இளைய சமுதாயத்திடம் விதைக்காமல்,  இயற்கை/மாற்று ஆற்றல் ஆராய்ச்சிகளில் இந்திய இளைஞர்களின் பங்கு என்ன? என்று கேள்வி கேட்காமல், இளைஞர்களிடம் அபாயகரமான அணுவின் மீது மோகத்தை விதைக்கிறது 'புதிய தலைமுறை(!)'.

இனி வரும் காலத்தில் இந்திய மக்களுக்குத்தான் அதிய மின்னாற்றல் தேவைப்படும். அதற்காக இந்தியா முழுவதும் அணுஉலைகள் வைத்தாலும் 10% ஆற்றல்தான் அதிலிருந்து பெறமுடியும் என்பது இந்த அணுஉலை வல்லுநர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் தலைமுறைகளையும் பணயம் வைப்பது வெறும் 10% ஆற்றலுக்காகவா? என்று கேள்வி எழுப்பாமல் இப்படி எழுதியிருப்பது, 'புதிய தலைமுறையினரை', 'புழுத்த தலைமுறையினராக' மாற்றவா?

Tuesday, September 27, 2011

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக...


சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயிரம் குரல்களைத் தாங்கி வருகிறது இந்தப் பறையடி...
பரமக்குடி தலித் படுகொலைகள் - கருத்தரங்கு
தேவநேயப் பாவாணர் அரங்கம், அண்ணாசாலை, சென்னை.
24 செப்டம்பர் 2011.
புத்தர் கலைக்குழுவினர் நிகழ்த்திய பறையடியில் இருந்து ஒரு பகுதி.....


Thursday, September 1, 2011

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒருநாள்!

கடந்த செவ்வாயன்று மரண தண்டனை நாள் குறிக்கப்பட்ட 'பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன்' இவர்களது தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்கக் கூறி, இடைக்காலத் தடை பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு சில வினாடிகளுக்குப் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் மகிழ்ச்சிக்கொண்டாட்டங்கள் இதோ புகைப்படங்களாக.

மூன்று தமிழர்களையும் விடுவிப்பதில் கிடைத்திருக்கும் ஒரு முதல்கட்ட வெற்றியைக் கொண்டாடுகிறபோது உணர்ச்சிவெள்ளத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மிதந்ததை இந்தப் படங்களில் பார்க்கலாம்!


இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உண்ணாவிரதப் பந்தலின் முன்பு தமிழார்வலர்கள் இனிப்பு வழங்கியும் மேளதாளத்தோடு ஆடிப்பாடியும் கொண்டாடினார்கள்.ஐந்துநாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் வடிவு, கயல் மற்றும் சுஜாதா - 'மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை' தீர்ப்பு கேள்விப்பட்டதும், மகிழ்ச்சியில்! 

Sunday, August 28, 2011

போர்க் குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் - அறிமுகக் கூட்டம்


சேவ்-தமிழ்சு முயற்சியால், ஜூன்-2 ல் பெங்களூரூவில் தொடங்கப்பட்ட, 'போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்' மூலம் பல்வேறு மாநில(கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா) மனித உரிமை மற்றும் மக்கள் இயக்கங்களின் ஆதரவை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராகத் திரட்டி வருகிறது. அதன் மையமாக, நேற்று மன்றத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பாக 'பத்திரிகையாளர்கள் சந்திப்பு' மற்றும் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது. 

மாலை 3 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏராளமான ஊடகங்கள் கலந்துகொண்டு, மன்றத்தின் தமிழக வரவை நல்வரவாக்கிவிட்டன.  

மன்றத்தின் அரங்கக் கூட்டம் ''தெற்காசிய அரசுகளும் மானுட நீக்கமும்!'' என்ற தலைப்பில் மாலை 6:00 மணியளவில், தெய்வநாயகம் பள்ளி, தியாகராய நகரில் வைத்து நடைபெற்றது. தமிழினப் படுகொலை புரிந்துவரும் இலங்கை அரசு, நீதியற்ற முறையில் மரண தண்டனை விதிக்கும் இந்திய அரசு, இவற்றை முன்னிருத்தி கூட்டத்திற்கான தலைப்பு தெரிந்தெடுக்கப்பட்டிருந்தது. 

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தில் மற்ற மாநில பிரிவுகள் சார்பில் வெவ்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

1.திரு. ஆஸிஸ் - ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், டெல்லி
2. வழக்கறிஞர்.சந்திரசேகர் - ஆந்திரப்பிரதேச சிவில் லிபர்டி கமிட்டி(APCLC), ஆந்திரா
3. பேராசிரியர்.மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்)
4.திரு.கண.குறிஞ்சி -மக்கள் ஜனநாயக குடியியல் ஒன்றியம் (PUCL)
5. தோழர்.தியாகு - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

இவர்களோடு, 
மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.H.சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு மரண தண்டனைக்கு எதிராக தன்னுடைய வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

நிகழ்விலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு...


மரணதண்டனைக்காகச் சிறையில் காத்திருக்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளன் அவரின் தாய்.

மும்பை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி. H.சுரேஷ் அவர்கள் பேசியதை தோழர்.தியாகு மொழிபெயர்த்தார்.


மரண தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் - 2ம் நாள்

பேரறிவாழன், சாந்தன் மற்றும் முருகன் இம்மூன்று தமிழர்கள் சார்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செப்டெம்பர் 9, அதிகாலை - தண்டனை தேதியாகக் குறிக்கப்பட்டது.

இம்மூன்று தமிழர்களின் மரண தண்டனையை ரத்துசெய்யக்கோரி, மூன்று வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். நேற்று(சனிக்கிழமை) இந்த உண்ணாவிரதம் கோயம்பேடு, ஆக்ஸிஸ் வங்கி அருகே தொடர்ந்து நடைபெற்றது. ஆர்வலர்களும் ஊடகங்களும் நிறைந்திருந்த உண்ணாவிரதத் திடலில் இருந்து சில புகைப்படங்கள்.Wednesday, July 6, 2011

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிராக!

சேவ்-தமிழ்ஸ் (http://save-tamils.org) முயற்சியால், கடந்த ஜூன் 2 ஆம் தேதி பெங்களூரூவில், கேரள, ஆந்திர, கர்நாடக மற்றும் தமிழக மனித உரிமை அமைப்புகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ‘போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தைத்(“Forum against War Crimes and Genocide”) தொடங்கின. அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு(Forum Against War Crimes and Genocide - Karnataka State Committee), சார்பில் ஜூலை 2, பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவை வழங்கினர்.

மன்றத்தின் கர்நாடகக் குழுவில்: மக்கள் சனநாயக முன்னணி(PDF), தலித் சுயமரியாதை இயக்கம்(DSR), பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்(Pedestrian Pictures), கர்நாடக மாணவ அமைப்பு(KSO), கர்நாடக ஜன சக்தி & கர்நாடக வித்யார்தி வேதிகே, சமதா மகிள வேதிகே (All India Progressive Women’s Association), புதிய சோஷலிச மாற்று - Tamils solidarity, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு(NCHRO) மற்றும் அனைத்து கர்நாடக தமிழ் அமைப்புகள் உள்ளன.

மாலை 4:30 மணியிலிருந்து 8:30 வரை நடந்த நிகழ்வில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு முழுவதும் கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வெளிப்படும் புகைப்படங்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன.


நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்தவர்கள்:
*மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த திரு.நகரிகரே ரமேஷ்
*கர்நாடகாவில் முக்கிய எழுத்தாளரும், சுயநிர்ணய உரிமை போராட்டங்களுகு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவருபவருமான திரு.ஜி. இராமகிருஷணன்
*பெங்களூரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு. பால் நியூமன்
*பெங்களூரு சட்டப் பல்கலைக் கழகத்தில் கெளவரவப் பேராசிரியராக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலரான திரு.ஹரகோபால் (APCLC)
*புதிய சோஷலிச மாற்று இயக்கத்தைச் சேர்ந்த திரு.ஜெகதீஸ்
*காஷ்மீரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு.காலித் வாசிம்

********

Monday, June 27, 2011

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வு

இடம்: மெரினா கடற்கரை, சென்னை
நாள்: ஜூன் 26, 2011.சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் 
(International Day in Support of Victims of Tortured)

சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாளான ஜூன் 26-ல், இலங்கையில் போர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் அடக்குமுறைகள் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காகவும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டும் வதைக்கப்பட்டும் துன்பங்களை அனுபவித்துவரும் தமிழ் மீனவர்களுக்காகவும், மெழுகுதிரி(மெழுகுவர்த்தி) ஏந்தி ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிருந்து ஒருங்கிணைத்தது மே 17 இயக்கம்.

ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவு தெரிவித்தும், போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்சே மற்றும் கூட்டத்தாரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரியும், ஈழத்தில் மக்கள் அமைதியாக வாழ வழிகளை ஏற்படுத்தக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன!ஈழம் குறித்த எண்ணத்தோடு கூடியிருந்த அத்தனை ஆயிரம் மக்களுக்கு நடுவே அமர்ந்திருந்த அந்த உணர்வு, மிக உன்னதமாக இருந்தது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பொதுநிகழ்வுகளில் நான் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இது. பாதிக்கு மேற்பட்டோர் முதல்தடவை வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.வேதனைகளை அனுபவிக்கும் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ராஜபக்சே மற்றும் இலங்கை பேரினவாதக் கூட்டத்திற்கு தகுந்த தண்டனையும், அடைபட்டிருக்கும் மக்களுக்கு இயல்பு வாழ்வுமே தற்காலத் தேவை, என்பது யாரும் சொல்லாமலே விளங்கியது!

இலங்கை பேரினவாதத்தின் சித்ரவதைகளை அனுபவிக்கும் நம் மக்களுக்க்கு 
ஆதரவாக, எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இன்றி இத்தனை ஆயிரம் மக்கள் ஒன்றுதிரண்டது, இன்னும் கொஞ்சம் நம்பிக்கையையும், ஏராளமான நெகிழ்ச்சியையும் கொடுத்தது!  


நல்ல ஒருங்கிணைப்பு:
எல்லோரும் பாராட்டும் விதத்தில் நிகழ்வை ஒருங்கிணைத்த இந்தக் குழுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விசயங்கள் நிறைய இருக்கின்றன.

படங்கள்:
நண்பன் குமார். இன்னும் சில புகைப்படங்களுக்கான சுட்டி இங்கே!

Wednesday, June 22, 2011

மெல்லிதயம் படைத்தோரே மெழுகுதிரி(வர்த்தி) ஏந்திட மெரினா நோக்கி வாரீர்இலங்கையில் கடந்த 2009-ம் வருடம் சிங்கள பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட (1,46,000) ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் தமிழர்களுக்காகவும், 
இதில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 30000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காகவும், 
80000 க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக மாற்றப்பட்ட கொடுமைக்காகவும்,

இலங்கை கடற்படையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், 
காணம்ல்போன 700க்கும் மேற்பட்ட மீனவர்களுக்காவும், 
சிங்கள கடற்படையால் உடல் ஊனமுற்ற 2000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அவர் அவர் குடும்பத்துடன் ஒன்று கூடுவோம்..

மெல்லிதயம் படைத்தோரே
மெழுகுதிரி எந்தி அஞ்சலி செலுத்த
மெரினா நோக்கி வாரீர்..

தேதி : ஜூன் 26, மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை
ஒருங்கிணைப்பு: மே 17 இயக்கம்.

ஜூன் 26 - சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் (International Day in Support of Victims of Torture)

தொடர்பான தளங்கள்:

Wednesday, March 2, 2011

தமிழக மீனவர்களுக்காக உண்ணாநிலைப் போராட்டம்

மீனவர் தாக்குதல் தொடர்பாக ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் தட்டச்சிக்கொண்டிருந்த எனக்கு இதைக் கேட்டவுடனே, அதுவும் என்போன்றவர்கள் நடத்தும் ஒரு எதிர்ப்பு நிகழ்வு என்பதால், யார் நடத்துகிறார்கள்? அவர்கள் நோக்கம் என்ன? பரவலாகச் சென்று சேருகிறதா? மீடியா வருமா? என்ற எந்தக் கேள்விகளும் இல்லாமல் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில் கலந்துகொண்டது உண்மையில் மனநிறைவையும், மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து ஏகப்பட்ட புதிய விசயங்களும் புரிதல்களும் கிடைக்க உதவியது.

பிப்ரவரி 19-ல் இப்போராட்டம் ‘சேவ்-தமிழ்ஸ்’ (http://www.save-tamils.org/) என்ற குழும நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. (’வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ என்ற இவர்களது ஆவணப்படம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் - ஈழத்தின் வரலாறு பற்றிய அற்புதமான முயற்சி) இவர்களில் சிலர் ‘பெரியார் திராவிடக் கழக’த்தோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதால் சனிக்கிழமை காலையிலேயே வந்திருந்த கருஞ்சட்டைகளுடன் நானும் கலந்துகொண்டேன். 

உண்ணாநிலைப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

1. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியி்ல் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை மறுக்காதீர். பாக் நீரிணையை இரு நாட்டு மீனவர்களுக்கும் பொதுவான மீன் பிடி மண்டலமான அறிவித்திடுக.

2. சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டுக் காயமடைந்த தமிழின மீனவர்களுக்கு மருத்துவம், நிதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்குக.

3. சிங்களக் கடற்படையினர் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கடலில் குதித்துக் கரை திரும்பாத தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்குத் துயர்தணிப்பு உதவி வழங்குவதற்கென சட்டங்களை உரிய வகையில் திருத்துக.

4. 500க்கும் மேற்பட்ட தமிழக மீன்வர்களைக் கொன்றொழித்த சி்ங்கள இன வெறி அரசுடனான அரசியல், அரச தந்திர, பொருளாதார, பண்பாட்டு உறவுகளைத் துண்டித்திடுக.


கவிஞர் இன்குலாப் சில கருத்துக்கள் கூறி போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் நான் உள்வாங்கிக்கொண்ட சிலரது கருத்துக்களை முடிந்தவரை அதன் சாராம்சம் கெட்டுவிடாமல் தர முயற்சித்துள்ளேன்.
*******

இன்குலாப்:
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் மக்கள் பலியானபோது பதறி எழுந்த ஊடகங்கள் தமிழக மீனவர்கள் விசயத்தில் மௌனம் காப்பது ஏன்? காஷ்மீரில் பிரச்சினை என்றாலோ, ஆஸ்திரேலியாவில் ஒருவனுக்கு அடிவிழுந்தாலோ கூவிடும் இந்தி(ய) ஊடகங்கள் தமிழன் மீதான தாக்குதலை அதுவும் கொலைவெறித் தாக்குதலை (கொலைகளை) கண்டுகொள்ளாதது ஏன்?

அய்யநாதன் (தமிழ் வெப்துனியா ஆசிரியர்):
இந்திய மீனவர்கள் சுட்டுக்கொலை என்றுதான் நீங்கள் படிக்கிறீர்கள். ஆனால் சிங்கள மீனவர்கள் சுட்டுக்கொலை என்று எங்காவது செய்தி உண்டா? அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்ததேயில்லையா! மீனவர்களின் மீதான தாக்குதல் 1974-ல் இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குப் பரிசாக அளித்தபோதுகூட ஏற்படவில்லை. அதற்குப் பின்னரும் இருநாட்டு மீனவர்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மீன் பிடித்து வந்திருக்கிறார்கள். ஆனால், 1976-ல் இருநாட்டு அயலுறவுச் செயலாளர்களுக்கு இடையில் நடந்த கடிதப் பரிமாற்றத்திற்குப் பிறகு சிங்கள ராணுவம் தாக்குதல்களை ஆரம்பித்தது. புலிகள் அங்கே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது புலிகளைச் சுடுகிறோம் என்று மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது புலிகளும் இல்லை! பிறகு ஏன் சுடுகிறார்கள்?

ச.பாலமுருகன் (சோளகர் தொட்டி, நாவலை எழுதியவர்):
ஒரு குற்றம் நடைபெற்று அது காவல் துறையின் கவனத்திற்கு வரும்போது, முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்படவேண்டும்; அதில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவேண்டும். இதுவரை கொல்லப்பட்ட மீனவர்கள் 500க்கும் மேல். ஆனால், சுமார் 130 FIR களே பதியப்பெற்றுள்ளன. இவற்றிலும் பெரும்பாலான வழக்குகள், ‘குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று கூறி முடிக்கப்பட்டுள்ளன (சிங்கள ராணுவம் என்ன, யார் கண்ணிற்கும் புலப்படாமலா இயங்கிவருகிறது?).
ஒருநாட்டின் குடிமகன் அவமானப்படுத்தப்பட்டுக் கொல்லப்படுவது அந்த நாட்டை ஆளும் அரசுக்கே இழைக்கப்பட்ட அவமானமாக எண்ணி, ஆளுவோர் கொதித்து எழவேண்டாமா? தமிழக மீனவனும் இந்தியக் குடிமகன் இல்லையா? அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் சில மாணவர்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு, உயிர்கள் போய்க்கொண்டிருக்கும் தமிழக மீனவன் விசயத்தில் எந்தக் கோபமும் வராதது ஏன்?!

அருள் எழிலன்(ஊடகவியலாளர்):
மீனவர்கள் விசயத்தில் தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருபவர்கள் இங்கிருக்கும் பிரதான கட்சிகள். அதுபோக, தமிழ்த் தேசிய இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் தொடர்ந்து இவ்விசயத்தில் உறுதியில்லாத நிலையிலேயே இருக்கின்றன, தமிழக மீனவர்களை ஏமாற்றி வஞ்சித்து வருகின்றன. இதுவும்போக, பெரும்பாலான மீனவர்கள் சார்ந்திருக்கும் ‘கிறிஸ்தவ’ மதத் தலைவர்கள் அதிக அளவில் தமிழக மீனவர்களை வஞ்சித்து வருகிறார்கள். வெறுமனே திருச்சபை, போதனைகள், பிரசங்கங்கள், பங்கு, அன்பியம் என்று கூறி மக்களை போராட்ட குணத்திலிருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறது கிறிஸ்தவ மதம்! இவ்வெல்லாக் காரணங்களாலேயே மீனவர்களுக்கு ஆதரவாக வலுவான போராட்டம் இதுவரை வரவில்லை.

பேட்ரிக்(மீனவர்களின் பிரதிநிதி):
கொல்லப்பட்ட மீனவர்கள் 500க்கும் மேல். சிங்கள கொடுங்கோல் ராணுவத்தின் சித்ரவதையை அனுபவித்தும், ஆறாக் காயங்கள் பட்டும் முடங்கிப் போயிருக்கிறவர்கள் இன்னும் பலர். சிறுவயதில் தந்தையுடன் கடலுக்குப்போகும்போது, கச்சத்தீவில் கரையிறங்கி உண்டு, இளைப்பாறிய ஞாபகம் இன்னமும் எனக்கு இருக்கிறது! அப்போது, அங்கே எதிர்ப்படும் சிங்கள கடற்படையிடமும் சிங்கள மீனவர்களிடமும் சாப்பாட்டுப்பொருட்களை பங்கிட்டுக்கொள்ளும் அளவிற்கு நட்பு இருந்தது ஒருகாலத்தில்! மீனவர்கள் இப்போதெல்லாம் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை, அவர்களுக்கு வலிமை இல்லை என்றெல்லாம் நினைத்துக்கொள்ளாதீர்கள். எங்களைப்போல் வலிமையானவர்கள் கிடையாது. தண்டவாளங்களையும் தயக்கமில்லாமல் பெயர்த்தெடுப்போம். ஆனால், இப்போது இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகளால் கூர்தட்டிப்போய்க் கிடக்கிறோம்!

முருகானந்தம்(மீனவர்களின் பிரதிநிதி):
கச்சத்தீவு இலங்கைக்குப் பரிசளிக்கப்பட்டபோது இருந்த அதே மத்திய, மாநில அரசுகள்தான் இப்போதும் இருக்கின்றன. ஒரே வித்தியாசம், இப்போது ஒரே அணியில் இருக்கின்றன. ஆளுங்கட்சியினரே‘மீனவர்களைக் காப்பாற்றுங்கள்’ என்று குரலெழுப்பி, சாலைமறியலில் ஈடுபட்டுக் கைதாகிச் சிறைசென்று, சாயங்காலம் வீட்டுக்குச் செல்லும், ஒரு அவலநிலையில் நாம் இருக்கிறோம்.

மோட்சம்(மீனவப் பெண்மணி):
மற்ற எல்லா ஊர்களையும்போலவே மீனவர்களும் ஏகப்பட்ட நெருக்கடிகளையும், அதிகாரிகளின் அலட்சியப்போக்கையும் சந்தித்து வருகிறார்கள். எந்த அதிகாரியும் எங்களுக்கு உதவ முன்வருவதில்லை. எங்களுக்கு எதற்கு இலவச டீவியும் அடுப்பும்?
உயிரே போய்க்கொண்டிருக்கும்போது உலை வைப்பதா முக்கியம்?!

இருதய மேரி(மீனவப் பெண்மணி):
அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 6 மாதம்தான் ஆயிற்று. கடலுக்குப்போன அவள் கணவன் சுடப்பட்டு உயிரில்லாமல் கரைக்கு வந்தான். இவள், பித்துப்பிடித்தாற்போல் இருக்கிறாள். ஏற்கெனவே 5 பெண்களை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் வீட்டில் பைத்தியம்போல இருந்துகொண்டிருக்கிறாள். எதையும் பேசுவதும் கிடையாது. இந்தமாதிரி நிச்சயம் யாராவது ஒருவர், இலங்கையை ஒட்டியுள்ள எல்லாக் கடற்கரைக் கிராமங்களிலும் இருப்பார்.

அஞ்சப்பன்(பஞ்சாயத்துத் தலைவர், வெள்ளப்பள்ளம்):
500க்கும் மேற்பட்ட உயிரிழப்பு, சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி கடலில் குதித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை, 2000க்கும் மேற்பட்ட உடல் பாதிப்புகள், சுமார் 9000 துப்பாக்கிச் சூடுகள்! இதுவரை சிங்கள கடற்படையினால் தமிழக மீனவர்களுக்குக் கிடைத்துள்ளவை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காமல் நாம் கச்சத்தீவை மீட்க வேண்டும்.

ஜோ டி குரூஸ்(ஆழி சூழ் உலகு, கொற்கை நாவல்களை எழுதியவர்):
இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் ஐ.டி. துறையினருக்கு எனது பாராட்டுதல்கள். வெறும் கணிப்பொறியில் மட்டுமில்லாது வீதியிலும் இறங்கிப் போராடும் நிலைக்கு வந்ததற்காக வாழ்த்துக்கள். ‘அறம் செய்ய விரும்பு’ என்றாள் அவ்வை. ‘அறம் செய்’ என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது மனதின் உள்ளிருந்து வெளிப்படும் ஆசையாக இல்லாமல் பேருக்கு ‘நானும் செஞ்சேன்’ என்பதாகவே முடியும் என்பதால்தான் ‘விரும்பு’, அதை விரும்பிச் செய் என்றாள் அவ்வை. அதுபோல நல்லது செய்யவேண்டும் என்பது உள்ளிருந்து வர வேண்டும் - வெறும் பாராட்டுக்கு இல்லாமல்.

விடுதலை ராஜேந்திரன்(பெரியார் திராவிடர் கழகம்):
கச்சத்தீவு சேதுபதி மன்னருடையதாக இருந்தது. தமிழகத்தின் ஒருபகுதியே கச்சத்தீவு என்பதற்கு வரலாற்று ஆவணங்கள் நிறையவே இருக்கின்றன. 1956-ல் சிங்கள கடற்படை ‘கச்சத்தீவு’ பகுதியில் ஒரு பயிற்சி முகாம் நடத்தியது. அப்போது பிரதமரிடம் தெரிவித்தபோது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 70களில் பாகிஸ்தான் இலங்கையில் ஒரு விமான தளம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசுக்குத் தகவல் வந்தது. ஏற்கெனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா மீதிருந்த வெறுப்பை இதன்மூலம் தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் ஆவலாயிருந்தது. அதனால் இந்திராகாந்தி அம்மையார் தமிழகத்தில் யாரோடும் கலந்துரையாடாமல் ‘கச்சத்தீவை’ இலங்கை அரசுக்குப் பரிசாக வழங்கினார். ஆனால் அத்தீர்மானம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறவில்லை. இந்நிலையில் தமிழக அரசு இதழில், கச்சத்தீவுப்பகுதி நீக்கப்பட்டது. எப்படியிருந்தாலும் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது செல்லாது என்று சில வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். என்னதான் மீனவர்கள் எல்லைதாண்டிச் சென்றாலும் ‘ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின்’ சர்வதேச எல்லை விதிகள், யாரையும் ‘சுட்டுக்கொல்வதற்கு’ அதிகாரம் கொடுக்கவில்லை. மீனவர்கள் தாக்கப்படுவதும், இங்கிருந்து யாராவது இலங்கை செல்வதும், திரும்பி வந்து ‘இனி தாக்கமாட்டோம் என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள்’ என்று கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது. உண்மையில் இது எவ்வளவு அபத்தமானது என்று யோசித்துப்பார்த்தால் புரியும். இந்தியா போன்ற ஒரு வல்லரசாக முயற்சிக்கும் ஒரு நாடு, இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டின் அதிகாரி கூறும் ஒப்புதலையே தான் வெளியிடுவது கேவலமானது அல்லாமல் வேறு என்ன? இவர்கள் அல்லவா உறுதிமொழியை நமக்குத் தரவேண்டும்? அல்லது ‘இனி தாக்குதல் தொடுக்கக்கூடாது’ என்று இலங்கையை இவர்களல்லவா மிரட்டவேண்டும்?!

செந்தில் (www.save-tamils.org):
இந்தியா இலங்கைக்கு இடையே சரியாக நடுவில் இல்லை இந்தக் கச்சத்தீவு. இந்திய கடற்கரையிலிருந்து உள்ள தூரம் இலங்கையிலிருந்து உள்ள தூரத்தைக்காட்டிலும் குறைவு. எனவே சர்வதேச எல்லை எப்படி நமக்குக் குறைவாகவும் அவர்களுக்கு அதிகமாகவும் இருக்க முடியும்? (கச்சத்தீவு எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள இந்தச் சுட்டியைக் கிளிக்கவும் ‘கச்சத்தீவு வரைபடம்’)
கச்சத்தீவை மீட்பது நம் மீனவர்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல, என்றபோதிலும் இது இப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய நகர்வில் நம்மை ஒருங்கிணைக்கும்.

பாலபாரதி (ஊடகவியலாளர், மூத்த பதிவர்):
என் பால்யகால நண்பன் ஒருவன். 4 பேராக கடலுக்குப் போனவர்கள் 2 பேர் கொல்லப்பட்டு அவனது அப்பாவும் இவனும் மட்டும் உயிரோடு கரைக்குத் திரும்பினார்கள். கரைக்கு வந்ததில் இருந்து அவன் பேசவேயில்லை. எதையாவது வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான். யாராவது முதுகில் தட்டி என்ன என்றால் மட்டுமே திரும்பினான். கரைக்குத் திரும்பிய மூன்றாவது நாளில் அவனது அப்பா தற்கொலை செய்துகொண்டார்! எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இவனது நிலைமை மேலும் மோசமாகவே, மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். மூளை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சென்னைக்குக் கொண்டுசெல்லும்படியும் கூறினார்கள். கீழ்ப்பாக்கத்தில் சிலமாதங்கள் இருந்தபிறகு, சற்றே தெளிவானான். ஊருக்கு மீண்டும் சென்றபிறகு மெல்ல மெல்ல அவனிடம் பேச்சுக்கொடுத்ததில் தெரியவந்தன அந்த உண்மைகள். உறவினர்களாகச் சென்ற 4 பேரையும் ஓரினச்சேர்க்கைக்குக் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர் சிங்கள வீரர்கள்(வெறியர்கள்). உடன்பட மறுத்தவர்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். தகப்பனும் மகனும் மீண்டு வந்திருக்கின்றனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் அப்பா! இதுபோல் இன்னும் எகப்பட்ட அதிர்வுகள் கடற்கரையெங்கும் பரவிக்கிடக்கின்றன.

நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக நான் என்ன செய்துவிட முடியும்? என்று நினைத்து ஒன்றும் செய்யாமல் இருந்துவிடாதீர்கள். பேசுங்கள். தொடர்ந்து பேசுங்கள். உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம், பக்கத்து வீட்டுக்காரர்களிடம், தெரிந்தவர்களிடம், கடைக்காரர்களிடம், அலுவலக நண்பர்களிடம், பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களிடம், பஸ்ஸில் பழக்கமானவர்களிடம், என்று தொடர்ந்து பேசுங்கள். பிரச்சினை மீதான தெளிவுகளை எல்லோரிடமும் கொண்டுவாருங்கள். ஊடகங்கள் தானாக பேச ஆரம்பிக்கும்.

இவர்கள் தவிர மா.சிவகுமார் (மூத்த பதிவர்) மற்றும் சில பதிவர்களும், வழக்கறிஞர்களும், இளைஞர்களும் வந்திருந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.

(நிகழ்விலிருந்து எடுத்த குறிப்புகளிலிருந்தே தகவல்கள் தரப்பட்டுள்ளன, அவர்கள் பேசியவை அப்படியே பதியப்படவில்லை).