Wednesday, December 15, 2010

மிஷ்கினின் உதவி இயக்குனர்களுக்கு ஒரு கடிதம்!

மிஷ்கின் தமிழ் வலைப்பூக்களைப் படிப்பதில்லை என்று தோணுவதால், உதவியாளர்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கண்ணில் பட்டால் அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடவும்....!

''மிஷ்கின்,
நீங்கள் உலகப்படங்களைப் பார்ப்பதிலும், அயல்மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதிலும் நேரம் செலவிடுவதால், தமிழில் படிக்க உங்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம்! சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் உங்களுடைய பேச்சில் இது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது! விழாவில், நந்தலாலா படத்தைப் பற்றிப் பேசும்போது, சில காட்சிகளைக் கூறி, அவற்றை யாரும் சிலாகித்துப் பேசவோ எழுதவோ இல்லையே என்று ஆதங்கப்பட்டீர்கள். (உ.ம். முதல்காட்சியில் சிறுவன் முகத்துக்கு நேரே கேமரா விரிவது, தூங்குகிறவர்களின் பின்னணியில் பாம்பு நெளியும் காட்சி, இன்னும் சில.) நீங்கள் தமிழ் வலைப்பூக்களை வாசித்திருந்தீர்களேயானால், பாராட்டி எழுதப்பட்ட விமர்சனங்களில் எத்தனையோபேர் இந்தக் காட்சிகளை மிகவும் சிலாகித்து, கொண்டாடி எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள்! ஆனால் உங்களுக்குத்தான், ஆங்கில எழுத்துக்களைப் படிப்பதற்கே நேரம் போதவில்லையே! பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?! 'காப்பி என்று சொல்லிவிட்டார்கள்', என்று காதில் விழுந்த தகவல்களை வைத்துக்கொண்டு பொங்கி எழுகிறீர்கள்! ஆனால் வலையுலகில் உங்கள் படத்தைக் கொண்டாடியவர்களே அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும், 'தமிழின் முதல் படம்' என்கிற அளவிற்குப் பாராட்டிப் பேசியவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது தெரியுமா?

'காப்பி' அடிக்கவில்லை, இது என் உணர்வில் வளர்ந்த கதை என்கிறீர்கள், ஆனால் 'கிகுஜிரோ'வின் (கிட்டத்தட்ட) அத்தனை கதாப்பாத்திரங்களும் 'நந்தலாலாவி'ல் வலம் வருகிறார்களே, அதை என்னவென்று கூறுவது? கதையில் வரும் சில காட்சிகள் ஒரு 'இன்ஸ்பிரேசனாக' (குருநாதருக்கு மரியாதை செலுத்தும் விதமாக) வைத்தேன் என்கிறீர்கள்! கதாப்பாத்திரங்களும் அப்படியேவா?

இதுமாதிரி இன்னும் எத்தனையோ கேள்விகள் பதிலளிக்கப்படாமலே இருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் உங்களை 'தமிழின் மிகத் திறமையான இயக்குனர்களுள் ஒருவர்' என்று ஒத்துக்கொள்கிறோம்! ஆனால் உங்களை ஒரு மிகச் சிறந்த 'படைப்பாளி' என்று கூற முடியாது! இன்னும் நான்கைந்து படங்கள் 'நந்தலாலா' போல, இல்லை அதைவிட அதிகமாகச் செய்யுங்கள்! நீங்கள் ஒரு 'அறிவுஜீவி' என்ற பட்டத்தை நாங்களே கொடுக்கிறோம்! அதை நீங்களே சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்!''

உண்மையான உலகப்படங்களைப் படைத்திட வாழ்த்துக்களுடன்,
ஊர்சுற்றி ஜோன்சன்.

2 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரொம்ப ரொம்ப சரி.

இக்பால் செல்வன் said...

// மிஷ்கின் நான் சுட்ட ( நல்லா கவனியிங்க ) வடைத் தான் பெஸ்ட் என்கிறார், வாங்கி சாப்பிட்ட கஸ்டம்(அர்) தூ.. என்றார்கள் //

// இன்னும் நல்லா சுட்டுட்டு வாங்க சார் ! மிஷ்கின் சொன்னாரு பக்கத்து கடையில் இருக்க சிகரெட் நல்லாயில்லை என்று //

எதாவது புரியுதா ? நல்லா இன்னும் ஒரு தடவைப் படிச்சு பாருங்க புரியும்