நந்தலாலாவை, கிட்டத்தட்ட எல்லா வலைப்பதிவர்களும் 'உலகப்படம்' என்கிற அளவில் புகழ்ந்து தள்ளியாகிவிட்டது.
பாராட்டுபவர்கள் கூறும் விசயங்கள்
* இசை, காட்சியமைக்கப்பட்ட விதம், கேமரா கோணங்கள், பாசத்தை நோக்கிய கதாப்பாத்திரங்களின் பயணம், மிஷ்கினின் நடிப்பு, வசனங்களே இல்லாமல் காட்சிகளில் விளக்கிய விதம், இத்யாதிகள்.
இந்த விமர்சனங்களும் உணர்வுப்பூர்வமான பாராட்டுக்களும், இசை, கேமரா, இயக்கம் என்பவற்றையும் தாண்டி, பாசம் என்கிற ஒரு உந்துதலில் இருந்து வருவதாக எனக்குப் படுகிறது. இந்த வட்டத்திற்குள் இருந்தே பெரும்பாலும் நந்தலாலா படத்தின் விமர்சனங்களும் பார்வைகளும் குவிந்து கிடக்கின்றன(இது, படத்தில் இல்லாத ஒரு உயிரோட்டத்தை நிரப்பிவிடுகிறது என நான் நினைக்கிறேன்!). இதன் பின்னணியில் இருக்கும் உளவியலை ஆராய்ந்து யாராவது ஒரு இடுகை எழுதினால் தேவலை!
சரி, அதையெல்லாம் விடுவோம். நந்தலாலாவின் மூலமான 'கிகுஜிரோ(Kikujiro)' பார்த்தேன். நந்தலாலா அளவிற்கு, இதன் பாதிப்பு இல்லை என்றாலும், அதிலிருந்து சில விசயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
*முக்கிய கதாப்பாத்திரங்களான சிறுவன், அவனுடன் படம் நெடுக வருபவர், வழியில் வரும் கதாப்பாத்திரங்களான லாரி ஓட்டுனர், பைக்கில் வரும் இருவர், ஒரு புதமணத் தம்பதி, சந்தில் வைத்து சிறுவனிடமிருந்து காசு திருடமுனைபவன், சிறுவனது அம்மாவின் புதுக் குடும்பம், சிறுவனுடன் வருபவரின் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா மற்றும் சிறுவனின் பாட்டி, என பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் மூலக்கதையில் சித்தரிக்கப்பட்டிருந்தபடியே (70%) இருந்தன.
*காட்சிகளில் இருக்கும் மௌனம், சொல்லப்போனால் சில காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. உ.ம். மூலக்கதையின் ஒரு காட்சியில், சிறுவனும் உடன் வருபவரும் ஏதோ ஒரு மர இலையை முதுகில் சொறுகி தலைக்கு மேலே வரும்படி வைத்து நடப்பார்கள். இதை அப்படியே, நம்ம ஊர் பனை ஓலையை வைத்து மிஷ்கின் எடுத்திருக்கிறார். இது ஏதேனும் பின்நவீனத்துவ குறியீடோ?! (அப்படி ஏதும் இருந்தால்தான் உலகப்படமா என்று தெரியவில்லை!).
*அப்புறம் இந்த பைக்கில் வரும் இருவர். அவர்களின் உடையலங்காரம் கூட, கிட்டத்தட்ட அதே முறையில் நந்தலாலாவில் ஜோடிக்கப்பட்டிருந்தது! அப்புறம் வழியில் அவர்கள் உறங்குவது (மூலக்கதையில் பெண் மற்றும் அந்தப் பாம்பு இல்லாமல் இருக்கும் - இதே காட்சி).
இதேபோல் இன்னும் சில...
ம். நல்லாத்தான் இயக்கியிருக்காரு. நல்லாத்தான் நடிச்சிருக்காரு. படம் பாராட்டப்படவேண்டியதுதான். வித்தியாசமாக இருக்கிறது. கிகுஜிரோ-வை விட நன்றாக இருக்கிறது, அவருக்கே உரிய ஸ்டைல் - இடுப்பு அளவிற்கு கோணத்தில் இருந்து காட்சிகளைப் படமாக்குவது, காட்சி எடுக்கப்பட்ட விதத்திலேயே பல விசயங்களை விளக்குவது, இப்படி அடுக்கிக் கொண்டு போனாலும், ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்க். 'நந்தலாலா' அப்படி சிலாகிக்கக் கூடிய அளவிற்கு எனக்கு ஏன் தென்படவில்லை என்று புரியவில்லை. அதில் வரக்கூடிய காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை போல தோன்றுவதா(உ.ம். கலவரக் காட்சி - சம்பந்தமே இல்லை), இல்லை, தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் படங்கள் பார்த்ததால் ஏதும் குழப்பமா என்று தெரியவில்லை!!
2 comments:
ஓ காப்பி தான் தப்பில்லை ஒரு கார்ட் போட்டிருந்தா படத்த கொண்டாடியிருக்கலாம்
படம் பாத்துட்டு வரேன்
Post a Comment