Sunday, November 16, 2008

பேச்சலர் ஞாயிறு

எங்க வீட்டு சொந்தக்காரர், “என்னப்பா இது, வீடு மாதிரியா வச்சிருக்கீங்க? தரையோட நிறமே மாறிடுச்சி. அப்பப்போ கழுவி விடுங்கப்பா. ஒரு பாட்டில் ஆசிட் வாங்கி, ஆசிட்ட அப்டியே ஊத்திராதீங்கப்பா! தரை கலரே மாறிடும். ரெண்டு வாளி (பக்கெட்) தண்ணிய கலந்து...” –னெல்லாம் டிப்ஸ் சொல்லிட்டு இன்னொண்ணும் சொன்னாரு.

“அடுத்த வாரம் வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆள் அனுப்பலாம்னு இருக்கேன். பொருட்களையெல்லாம் அப்புறப்படுத்தி வைங்க”.

என்னடா இது, போன வாரமும் இதையேதான சொன்னாரு…? இப்பவும் இதையே சொல்றாரே...



இது கனவா… அப்ப அது இன்னிக்குதானா….

காலையிலேயே (8 மணிக்கு) எழுந்திருச்சி, காலைக்கடன்கள் எல்லாம் முடிச்சிட்டு, குறிஞ்சிப்பூ மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டோம் (பேச்சலர்களுக்கு ஞாயிறு காலை சாப்பாடு எல்லாம் அபூர்வமா பூக்கிற குறிஞ்சி மாதிரிதான். அதுவும் வெளியூரில் தங்கி வேலை செய்றவங்களுக்கு, கேக்கவே வேண்டாம்.)

ஈழத்தமிழர்கள் மீது தமிழ்நாட்டில் அக்டோபர் கடைசி வாரத்தில் இருந்த பாசமிகுந்த உணர்ச்சி வேகம் போல, வேலைய ஆரம்பிச்சபோது கடகடன்னு சுத்தம் செய்ய ஆரம்பிச்சோம்.
ஒரு மணி நேரத்திற்கு அப்புறம், வீட்டு சொந்தக்காரர் – டேர்ந்து ஒரு அழைப்பு. வெள்ளையடிக்க வரவேண்டியவருக்கு உடம்பு சரியில்லையாம்.

இப்போ எங்க வேலையோட வேகம், ஈழப்பிரச்சினை மீதான தமிழகத்தின் நவம்பர் இரண்டாம் வார நிலைப்பாடு போல புஸ்ஸுன்னு போயிடுச்சி.

ஆனாலும் நண்பன் ஒருத்தனோட ஈடுபாட்டினால வீட்ட ஒரு வழியா சுத்தம் செய்தோம். நம்ம வலையுலக நடையில சொல்லணும்னா “வீட்ட சுத்தம் பண்ணி முடிக்கிறதுக்குள்ளே தாவு தீந்து போச்சு”.

இனிமேதான் நேற்றைய பதிவர் சந்திப்பு பற்றிய பக்கங்களையெல்லாம் தேடிப்பிடிச்சி படிக்கணும்.

மொக்கை பதிவுன்னாலும் ஒரு மெஸேஜ்:
“சமைக்கத் தெரியாத, வீட்டை சுத்தம் பண்ணத் தெரியாத அல்லது இவற்றை செய்யாத ஆண்கள் ‘பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம்’ பற்றி பேசுவதற்கான பெரும்பாலான தகுதிகளை இழந்துவிடுகிறார்கள்”.

(பேச்சலர் - சரியான தமிழ் பதம் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்).

No comments: