Sunday, June 13, 2010

செம்மொழி மாநாடும் - சில உறுதிமொழிகளும்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தமிழ் மொழிக்கான ஒரு உலக மாநாடு - 'செம்மொழி' என்ற கூடுதல் தகுதியோடு! அது தொடர்பான விவாதங்களெல்லாம் இருக்கட்டும், நான் பேசவருவது வேறுவிசயம்!  இப்போதெல்லாம் நான் கூகிளில் தமிழில் கூட நிறைய விசயங்களைத் தேட ஆரம்பித்துவிட்டேன். "கோழி சமைப்பது எப்படி?", "கேரட் பொறியல் செய்வது எப்படி?", ''வத்தக்குழம்பு செய்யும் முறை'' என்று ஆரம்பித்து "அண்டம் தோன்றியது எப்படி?" வரைக்கும்!

தேடல் முடிவுகளில் பெரும்பாலும் தனிநபர் வலைப்பக்கங்களும் சில செய்தித் தளங்களின் தொடுப்புகளும் வருகின்றன. அதாவது, பதிவர்களாகிய நாம் எழுதுவது ஏதோ விளையாட்டுக் காரியமல்ல - அது மொக்கையாகவே இருந்தாலும்! நாம் எழுதிய வரிகளை நமக்குப் பின்னாஆஆஆஆல் வரும் சந்ததிகள் 10 பேரோ, 100 பேரோ ஏன் 10 இலட்சம் பேரோ கூட படிக்கலாம். அப்படி அவர்கள் படிக்கும்போது ஏகப்பட்ட பிழைகள் இருந்தால்(?!), அதே பிழைகள் அவர்களுடைய எழுத்துக்களிலும் பிரதிபலிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கூகிள் ப்ளாக்கர் சேவையை இலவசமாகத் தரும் வரையிலும் உங்கள் வலைப்புக்கள் தனித்தனி 'கல்வெட்டுகள்' என்பதை மறந்துவிடாதீர்கள்! - வரலாறு மிக முக்கியம்!

எனவே,

'செம்மொழி மாநாட்டை' முன்னிட்டு நான் எடுக்கும் உறுதிமொழிகள்:

*****
*முடிந்தவரை, பிழைகள் இல்லாமல் எழுதுவது. எங்காவது சந்தேகம் வந்தால் எஸ்.ரா, ஜெயமோகன், சாரு என எழுத்தாளர்களின் தளங்களில் படித்து, எனது எழுத்துக்களைத் திருத்திக் கொள்வது.

*மாதத்தில் ஒருவருக்காவது 'தமிழ் மென் எழுதிகள்' பற்றியும் 'இணையத்தில் தமிழ்' குறித்தும் அறிமுகப்படுத்துவது, அவர்களை இணையத்தில் தமிழில் எழுத வைப்பது.

*தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது.

*பிழைகளோடு எழுதும் சக பதிவர்களைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்கள் எழுதிச்சென்றுவிட்ட எழுத்து/இலக்கணப் பிழைகளை உணர்த்துவது. [நான் எங்காவது தப்புபோட்டா கூட மின்னஞ்சல் அனுப்புங்க மக்களே!]
*****

இந்த உறுதிமொழிகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம்!
தமிழ்மொழி தப்பும் தவறுமாக இணையத்தில் பதியப்படுவதில் ஒரு 5(%)சதவீதத்தையாவது கட்டுப்படுத்த உதவலாம்!

-வலைப்பக்கம் வந்து 6 மாதங்கள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்மண விருது வாங்கியதற்காக வாழ்த்திய, மின்னஞ்சலிலும் அரட்டையிலும் விசாரித்த, ஒன்றுமே எழுதாவிட்டாலும் 'என்னத்தையாவது எழுதுவான்யா' என்று பின்தொடர்ந்த அன்பு உள்ளங்களுக்கும்,  குறுஞ்செய்தி மூலம் பதிவர் சந்திப்பு குறித்து தகவல் சொல்லிய டாக்டர் புரூனோ அவர்களுக்கும் (நான் கலந்துகொள்ளவில்லை என்பது வேறு விசயம்!) என் மனமார்ந்த நன்றிகளைப் பதிந்து கொள்கிறேன்.

Tuesday, January 5, 2010

ஐ மிஸ்ட் யூ டா - உண்மையில் கதை

அவளுடன் ஒருநாள் முழுவதும் செலவிடப் போகிறேன் என்ற உணர்வே என் மயிர்க்கால்களை புல்லரிக்க வைத்தது. அதுவும் இரயில் நிலையத்தில் அவளைப் பார்த்த பின்பு -  மாலை, இரவு என தொடர்ந்து அவள் ஞாபகம்தான். எப்படியெல்லாம் மாறிவிட்டாள், எவ்வளவு சகஜமாக இனிமையாகப் பேசினாள்! கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் கொண்டு(என் மனதையும்) விட்டுவிட்டு வீடு வந்தேன்.

பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படிப்பு, அவளது அப்பாவின் வேலை நிமித்தம் அவர்கள் குடும்பம் மும்பை பயணம், ஊடகத்துறையில் பட்டப்படிப்பு, விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் இளைஞர்களுக்கான நான்கு பக்க வாரவெளியீட்டில் பங்களிப்பு, உலக அளவில் பிரபலமான ஒரு எழுத்தாளரின் இந்தியப் பயணத்தின்போது அவரைப்பேட்டி எடுக்கத் திட்டம், பேட்டிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது அவர் சென்னையில் இருக்கும் தினங்கள் - இதுதான் புவனா சென்னை வந்ததற்கான காரணம். சென்னையில் தெரிந்தவர்கள் பற்றி உறவுக்காரர்களிடம் விசாரித்ததில் என்னைப் பற்றியும், அவள் ஊரிலிருந்து சென்னையில் உள்ள இன்னும் சிலரைப் பற்றியும் தெரியவர, என்னைத் தொடர்புகொண்டிருந்தாள் புவனா. பேட்டிக்கான நாளுக்கு ஒருநாள் முன்னதாகவே பயணச்சீட்டு கிடைக்க, ஒருநாள் சென்னையைச் சுற்றிக்காட்ட என்னைக் கேட்டிருந்தாள்.

மறுநாள் முழுவதும் என்னுடனேயே இருக்கப்போகிறாள்! பயணத்திட்டங்கள் வகுத்தாயிற்று. நண்பனது 'பைக்'கையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. எனது அலுவலகத்தில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் பெண்களுடன் பழகுவது பற்றிய எனது கூச்சம் என்றோ போயிருந்தது. இதை நினைத்து எனக்குள்ளேயே ஒரு கர்வம் இருந்தது. 'பள்ளிப்பருவத்தில் பார்த்த அந்த கூச்சம் நிறைந்த 'ஜோன்ஸ்' இவன் இல்லை' என்று அதிசயிக்கப் போகிறாள் என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டேன்.

காலையில் சொன்ன நேரத்திற்கு அவள் தங்கியிருந்த இடத்தின் முன் நின்றேன் - நல்ல பையனாக. அவளும் தயாராகியிருந்தாள்; சில நிமிடங்களிலேயே வெளியே வந்தாள். பலருக்கும் வரமளித்த கிழக்குக் கடற்கரைச் சாலையில் நுழைந்தபோது, 'சுள்'ளென்றிருந்த வெயில் மேகங்களின் வருகையால் மிதமானது. அவளுக்காகவே வெயில் தடை செய்யப்பட்டது போல உணர்ந்தேன். பைக்கின் பின்னிருந்து பல விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள். மிதமான வேகத்தில் சென்றதால் நானும் 'ம்' கொட்டிக்கொண்டே சென்றேன்.

எங்கிருந்து வந்து தொற்றிக்கொண்டது என்று தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் அவளுடன்(இல்லை இல்லை, எல்லா பெண்களுடனும்) பேசுவதற்கு எப்படிக் கூச்சப்பட்டேனோ அதே கூச்சம்! என் உடலும் முகமும் வழக்கமான நிலையில் இல்லை. விஜிபிக்கு அருகே காபி சாப்பிட ஐந்து நிமிடம் நின்றபோது தெளிவாக அடையாளம் கண்டுகொண்டாள், நான் கூச்சத்தில் நெளிவதை. அதன்பின் 'தெற்குப்பட்டு' வரை பேசவே இல்லை. பைக்கில் அவள் உட்கார்ந்த விதத்திலும் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.

'தெற்குப்பட்டில்' சவுக்கு மரத் தோப்புகள் அங்கங்கே தென்பட்டன. ''ஏய் நிறுத்துப்பா, இங்க கொஞ்சநேரம் இருந்துட்டு போகலாம்'' என்றாள். 'மாமல்லபுரம் வரை என்னால் பைக் ஓட்டமுடியுமா?' என்கிற தொனியில் இருந்தது, அவள் கேட்டது. என் வண்டி ஓட்டும் திறமை மீதான சந்தேகமாக இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். புகைப்படங்கள் எடுத்த பிறகு, எதிரெதிரே இரு மரங்களில் சாய்ந்து நின்றுகொண்டோம் - அவள் பேச ஆரம்பித்தாள். 'நீ இன்னுமும் இப்படி கூச்சப்படுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல! சென்னை வந்து இத்தன வருசமாச்சு. இன்னும் அப்படியே இருக்கியே எப்படி?!' என்றாள். நேற்று எட்டிப்பார்த்த என் கர்வம் என்னைப்பார்த்து பல்லிளித்தது, கூடவே கொஞ்சம் கோபமும் வந்தது. 'யாருக்கு? எனக்கா கூச்சம்? இப்போ யாருக்குக் கூச்சம்னு பார்க்கலாம்!' என்று அவள் இடை நோக்கி என் கையை நீட்டினேன்; விலகி ஓடினாள். இரு நிமிடம் தொடர்ந்த விளையாட்டில் 'தோல்வி'(!)யை ஒத்துக்கொண்டாள். இயல்பு நிலைக்குத் திரும்பியதும் இயல்பாகப் பேசினாள் பேசினோம் - வீடு திரும்பும் வரையிலும்.

மறுநாள், அந்த பிரபல எழுத்தாளருடனான பேட்டி நிறைவுற்றதும், கடற்கரையில் சிறிது நேரம் - அதில் மௌனமாய் அதிக நேரம். முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே பாதிநேரம்.  ரயில் நிலையம் நோக்கித் திரும்பவும் பயணம். தொடர் வண்டிக்காகக் காத்திருந்தபோது அம்மாவிற்குத் தொலைபேசினாள். சிலநிமிடம் கழித்து கைபேசியை என்னிடம் கொடுத்தாள்.

''சென்னையில அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்கு நீ இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தாம்பா அவளைத் தனியா அனுப்புறதுக்கு ஓ.கே. சொன்னேன். இல்லேன்னா நானும் கூட வரலாம்னுதான் யோசிச்சேன். சொந்தக் காரங்கள்லாம் ஆயிரம் வேலையோட இருப்பாங்க. அவங்க வீட்டுக்குப் போனமா வந்தமான்னு இருக்கணும். அதுவுமில்லாம பல வருஷமா யாருகூடவும் பழகுனதும் கிடையாது....'' என்று பேசிக்கொண்டே போனார் புவனாவின் அம்மா.

வழியனுப்பி வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.நடைபாதையில், ரயிலுக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தேன். 'ஐயகோ' என்று சத்தமிட்டு(SMS Tone) வந்தது ஒரு குறுஞ்செய்தி. 'ஐ மிஸ் மிஸ்ட் யூ சோ மச். ஐ ரியலி மிஸ்ட் யூ தீஸ் மெனி யியர்ஸ் பா' [I missed you so much. I really missed you these many years pa :(  ].

Monday, January 4, 2010

புளகாங்கிதம் அடைய வைத்த புத்தகக் காட்சி உரை - கவிக்கோவிடமிருந்து

புளகாங்கிதம்:
     இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முழுதாகப் புரிந்து உணர முடிந்தது. 33-வது சென்னை புத்தகக் காட்சியில் 'கவிக்கோ' அப்துல் ரகுமான் அவர்கள் 01-01-2010(வெள்ளிக்கிழமை) அன்று ஆற்றிய உரையில் நிகழ்ந்தது இது. 'செம்மொழிச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை என்னை நெகிழ வைத்துவிட்டது.

     செக்குமாடுபோல் சுற்றிவரும் நம் அன்றாட வாழ்க்கையில் (பெரும்பாலோர்க்கு) மனதை 'நெகிழ' வைக்கும் நிகழ்வுகள் அரிதாகவே நடக்கின்றன. அந்த வகையில் அனுபவித்த ஒன்று கவிக்கோவின் உரை. 'செம்மொழிக்கான தகுதிகள் என்ன?' - 'தமிழ் ஏன் செம்மொழி?' என்ற கேள்விகளுக்கு மிக அழகாக விளக்கமளித்தார்.

செம்மொழியின் கூறுகள்:
     தொன்மை, தாய்மை, தனித்தியங்கும் தன்மை, அழகியல், பொதுமைப் பண்பு, அதில் தோன்றியுள்ள இலக்கிய வளம், இன்னும் பல. இவற்றில் சிலவற்றை மட்டுமே (நேரம் கருதி) விளக்கினார். அவரது பேச்சு முழுவதும் புல்லரிக்க வைத்தது உண்மையிலும் உண்மை.

நான் கவனித்த ஒருசில உங்களுக்காக:
     தலைவனும் தலைவியும் (காதலனும் காதலியும்) தங்களுக்குள் இட்டுக்கொள்ளும் சிறு சண்டைகள், வெளிப்படுத்திக்கொள்ளும் சிறு கோபங்கள் - இந்த நிலையை விளக்க தமிழ் தரும் வார்த்தை 'ஊடல்'. உலகின் எம்மொழியும் வரையறுக்காத ஒருநிலை. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' (இதச் சொன்னது நம்ம நர்சிம் இல்லப்பா!) என்ற பரந்த சிந்தனை.

சங்ககால உதாரணங்கள்
     தன் தாய் வளர்த்த புன்னை மரத்தைத் தன் மூத்த சகோதரியாகப் பாவிக்கும் தலைவி, தலைவன் தன்னை அந்த மரத்திற்கு அருகிலே கொஞ்ச முனையும்போது 'புன்னையாகிய தன் சகோதரி தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதால் இங்கு கொஞ்ச வேண்டாம்' என்கிறாள். அந்த அளவிற்குச் செடிகொடிகளின் மீதுகூட பற்றுகொண்டிருந்தாள்.

     நீண்டநாட்களுக்குப் பின் காதலோடும் காமத்தோடும் தலைவியைச் சந்திக்க தேரில் வருகிறான் தலைவன். தேரில் தொங்கவிடப்பட்டுள்ள மணிகள் அசைந்து ஓசை எழுப்புகின்றன. இந்த ஓசை, வழியோரம் உள்ள பூக்களில் தேனைச் சுவைத்துக் கூடிக் கிடக்கும் வண்டுகளுக்கு இடைஞ்சலாகிறது எனக் கண்டு தலைவன் அஞ்சுகிறான். எனவே அந்த மணிகளின் நாவினை, நார்கொண்டு கட்டுகிறான்.

மேற்கூறிய இரண்டு உதாரணங்களும் 'அகநானூற்றில்' வருகின்றன என நினைக்கிறேன்(கவிக்கோ சொன்னதை மறந்துவிட்டேன்).

'இந்த அளவிற்குப் பண்பாட்டில் உயர்ந்து நின்ற இனம் தமிழினம்' என்றெல்லாம் பேசியபோது நம் தமிழ்மொழியின் பெருமைகளை எண்ணி புளகாங்கிதமடைந்தேன். இத்தகைய பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய நம் இலக்கியங்களை நாம் கற்று, பரந்த நோக்குடைய மனிதர்களாக வேண்டும் என்று வேண்டி உரையை முடித்தார் 'கவிக்கோ'.

 தமிழ் இலக்கியங்களைப் பயில்வதில், எனக்கு ஏனோ ஆர்வம் இருந்ததே இல்லை. ஆனால் கவிக்கோவின் கருத்தினால் ஈர்க்கப்பட்டுள்ளேன்.  'குறைந்தபட்சம் அகநானூறு, குறுந்தொகை இவற்றையாவது படிக்கவேண்டும்' என்ற ஆர்வம் என் அடிமனதில் ஊறுகிறது.

Wednesday, December 9, 2009

திருமண வாழ்த்து - நிறைய புத்தகங்கள் படிக்கும் அக்னி பார்வைக்கு

சக பதிவர் 'அக்னி பார்வை' வினோத்திற்குக் கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்று ஈரோட்டுப் பதிவர்களோடு (முந்தைய இடுகையில் குறிப்பிட்டபடி) பின்மண்டைத்துவ நண்பரின் திருமணத்தில் பங்குபெற்றதால் அக்னி பார்வையின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

வரவேற்பு நிகழ்ச்சி 29-ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்றது. கோயம்பேட்டில் இருந்து 'பயணிகளின் நண்பனில்' திருவள்ளூர் சென்று சேர்ந்தபோது மணி மாலை 5:20. சரி நேரத்தைப் போக்கலாம் என்று பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த ஒரு குறுவட்டு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்தேன். பாடல்கள் படங்கள் என்று வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். திருட்டு (!) (திருட்டு என்பது சரியாகப் படவில்லை. வேறு எங்கிருந்தோ திருடிய குறுந்தகடுகள் என்ற பொருள் தருகிறதல்லவா?!) போலிக்குறுந்தகடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. முந்தாநாள் வெளியான படம்கூட அங்கு கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

சரி, தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ஒரு முடிவெடுத்திருக்கிறார்களாமே, ''சுமாரான படத்தின் குறுந்தகடு 50 நாட்களிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிற படத்தின் குறுந்தகடு 100 நாட்களிலும் வெளியிடலாம்'' என்று! இப்படி எண்ணிக்கொண்டே "திருதிரு துறு துறு ஒரிஜினல் இருக்கா?" என்றேன். தெரியாத ஏதோ ஒரு சந்திற்குள் நுழையும்போது அங்கிருப்பவர்கள் பார்க்கும் ஒரு வினோதமான பார்வைபோல என்னைப் பார்த்துவிட்டு "அங்க அடுக்கி வைச்சிருக்கிறதுதான் சார் ஒரிஜினல், பார்த்து எடுத்துக்குங்க" என்றார் கடைக்காரர். 80-களில் வெளிவந்தவையும் ஒருசில 90களும் இருந்தன.

சர்தான், நடையைக் கட்டி மண்டபத்திற்கு வந்தேன். நல்ல பெரிய மண்டபம். முன்னால்(ள்) பழைய அம்பாசிடரில் இருந்து ஹுண்டாய் i20 வரை பலவகை வாகனங்கள் மண்டப முகப்பில் அணிவகுத்து நின்றன. அத்தனை பேரும் தம்பதியரை வாழ்த்த வந்திருந்தார்கள். இரண்டு 'கேமரா'க்கள் மூலம் வரவேற்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, கூச்சத்தில் கொஞ்சநேரம் வெளியிலேயே நின்றுகொண்டேன் (அங்குதான் நிறைய வாலிப நண்பிகள் அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள், மணமகனுக்கோ மணமகளுக்கோ நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு!).

அப்புறம் ஒரு வழியா உள்ளே போகலாம் என்று முடிவெடுத்து(கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு!) நேராக மேடைக்குச் சென்று இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்து வினோத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். என்னைப் பார்த்ததும் மிகுந்த சந்தோசம் வினோத்திற்கு. பின்பு ஒரு இருக்கையில் வந்து அமர்ந்தகொண்டேன். கடைசி நபராகச் சென்று கையில் வைத்திருந்த இரண்டு புத்தகங்களைப் பரிசளித்தபோது, மணமகள் என்னைப் பார்த்து ''இங்கேயும் புத்தகமா?!'' என்று ஆச்சரியத்தில் (சற்று சந்தோசமான சலிப்புடனும்) புருவம் உயர்த்தி இயல்பாகப் பேசினார்.

''நாங்கல்லாம் ஒரு புத்தகப் பெருசாளி(புழு என்ன பாவம் பண்ணிச்சி!), புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது - கழிவறையில் கூட புத்தம் படித்துக்கொண்டிருப்போம்'' என்கிற மாதிரி சும்மா அடித்துவிட்டு விட்டு விடைபெற்றேன் தம்பதியரிடமிருந்து. :)

உங்கள் வாழ்த்துக்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் agnipaarvai@gmail.com. ஆர்வமுடன் என்னைத் தொடர்புகொள்ளும் தெரிந்த நண்பர்களுக்கு புகைப்படத் தொகுப்பு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

Monday, November 30, 2009

லவ்டேல் மேடி திருமணமும் மெக்கா விஜயமும்

பின் நவீனத்துவத்துவமோ (வால்பையன் சொல்வதுபோல்) பின்மண்டைத்துவமோ(!) அதன் ஒரு சிங்கம் திருமணக் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட வரலாறு...

காலை 6:00 மணி 01 வினாடி:
மண்டப வாசலில் நின்றுகொண்டு வால்பையனுக்கு ஃபோன்.
'நீங்க எப்போ வர்றீங்க?'.
'நீங்க எங்க இருக்கீங்க?' அவர்.
'நான் மண்டபத்திலதான் இருக்கேன்'.
'அப்படியா! நாங்க அங்க வர்றதுக்கு இன்னும் ஒருமணி நேரம் ஆகிடுமே!'.

என்ன பண்றது. கையில் கேமரா - பொழுது போகணுமே. புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன். சில பெரியவர்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதமாக அங்கங்க உலவ ஆரம்பிச்சாங்க. பழம், தேங்காய், அரிசி, அச்சுவெல்லம் இப்படி என்னெல்லாமோ திருமண மேடைக்கு வர ஆரம்பிச்சுது.

காலை 6:20 மணி:
பெரியவர் ஒருவர்(தலைப்பாகையுடன்) வந்து மணமேடையில இருந்த பொருட்களை வைச்சி என்னமோ பண்ணினாரு (குடும்பத்தில மூத்தவர்னு நினைச்சேன்). சர்தான், இனி ஐயர் வந்து மந்திரமெல்லாம் சொல்லி... மணி 8க்குத்தான் தாலிய கட்டுவாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். திடீர்னு பார்த்தா ஒரு தட்டுல அரிசிய எடுத்துட்டுப் போயி எல்லார்கிட்டேயும் ஒரு சின்னப்பொண்ணு குடுக்க ஆரம்பிச்சிது. 3 நிமிஷம்தான் இருக்கும். சட்டுன்னு தாலிய எடுத்து நம்ம 'மாதேஷ' (லவ்டேல் மேடி) கிட்ட அந்த பெரியவரு குடுத்தாரு. அவரும் உடனே கட்ட ஆரம்பிச்சிட்டாரு. நான் ஒடிப்போயி போட்டோ பிடிச்சிகிட்டேன்.

அடுத்து இன்னொரு பெரியவர் வெற்றிலைல கொஞ்சம் மஞ்சள்ல தோய்த்த அரிசியை எடுத்துக்கிட்டாரு. மாப்பிள்ளையையும் பொண்ணோட சகோதரனையும் அரிசி இருந்த ஒரு தட்டில கையை ஒண்ணா சேர்த்து வைக்கச் சொன்னாரு. நிறைய வாழ்த்தோ, வேண்டுதலோ தொடர்ந்து சொல்லிகிட்டே கொஞ்சம் கொஞ்சமா அரிசியை அவங்க கைகளில் தூவினாரு.

அப்புறம் முதல்ல வந்த அந்த பெரியவர் வந்து, பொண்ணு மாப்பிள்ளை கையில வெற்றிலையைக் கொடுத்து அவரும் வெற்றிலை, அரிசி, வெல்லம் இதெல்லாம் ஒண்ணு ஒண்ணா எடுத்து அப்படியே 'தீபாராதனை' மாதிரி சுத்தினாரு.

காலை 6:45 மணி:
இந்த சடங்கெல்லாம் வெறும் 25 நிமிஷங்கள்தான். அப்புறம் பொண்ணு மாப்பிள்ளை மேடையில நிற்க, வாழ்த்த வந்தவங்க வரிசையில நின்னு வாழ்த்தும் பரிசும் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதேநேரம், முதல்ல சொன்ன அந்த தலைப்பாகை அணிந்த பெரியவர், மேடைக்குப் பக்கத்தில சேர் போட்டு உட்கார்ந்தார். அவர சுத்தி வீட்டுப் பெரியவங்க உட்கார்ந்தாங்க. அங்கேயிருந்து இங்கேயிருந்துண்ணு பணம் பெரியவர் கையில வந்தது. அவர் கல்யாண வேலை பார்த்துட்டு இருந்த எல்லோரையும் கூப்பிட்டு அவங்க கையில கொஞ்சம் பணத்தை பிரிச்சிக் கொடுத்தாரு (இந்த பணத்துக்கு எதோ பேரு சொன்னாங்க மறந்துட்டேன் - அது கூலி இல்லையாம்).

இத எல்லாத்தையும் முன்ன நின்னு நடத்தின பெரியவரை 'அருமைக்காரர்'னு சொல்லுவாங்களாம் இல்ல அரும்புக்காரர் னு சொல்லுவாங்களாம் (திருத்திய வால்பையன் அண்ணனுக்கு நன்றி). அந்த சாதி சனத்தில நடக்கிற எல்லா திருமணத்தையும் இவர்தான் நடத்தி வைப்பாராம்.

காலை 7:05 மணி:
திரும்பவும் வால் அலைபேசிக்கு அழைப்பு
'நீங்க எப்போ வர்றீங்க?'.
'இதோ வந்துட்டே இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவோம்'.

காலை 8:35 மணி:
கிட்டத்தட்ட எல்லாரும் வாழ்த்திட்டுப் போனபோதுதான். வால் வந்து சேர்ந்தாரு. 'நம்ம மக்கள் இங்க இருக்காங்களே!' ன்னாரு. அடடா! தெரியாமப் போச்சே. தனியால்ல உட்கார்ந்திருந்தேன். அங்க போயி பார்த்தா.....
இத்தன பேரு வந்திருக்காங்க.

இவங்களைத் தவிர எழுத்தாளர் வா.மு.கோ.மு. வந்திருந்தாங்க, அப்புறம்....
முழு லிஸ்ட்டுக்கு வால்பையனின் இந்த இடுகைக்கு வாங்க.

எனக்கு வாலைத் தவிர வேற யாரையுமே தெரியாதா - அதுதான் பிரச்சினை. இவங்கள்ல ஒருசிலர் அங்க இருந்தது தெரியாம தனியா, கையில கேமராவோட... ஆனா இதுல ஒரு நல்ல விசயம் என்னான்னா, அங்க இருந்த நம்ம பதிவர்கள் அப்போதைக்கு எனக்குத் தெரியாததனால ரொம்ப ஃபரீயா சைட் அடிக்க முடிஞ்சுது :).

திருமணம் நடந்தது ஈரோட்டில்.

திருமணம் பற்றியும் பதிவர்கள் சந்திப்புப் பற்றியும் இன்னொரு இடுகை இடலாம் என இருக்கிறேன். இந்த இடுகை பிடித்திருந்தால் உங்க ஒட்டுகளைக் குத்திட்டுப் போங்க. மேடிக்கு உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிட்டுப் போங்க.