கடந்த வாரத்தில் ஒருநாள்:
அண்ணா சாலையில் டி.எம்.எஸ். நிறுத்தத்தில், நான் வந்துகொண்டிருந்த பேருந்து நீண்ட வரிசையில் நின்றது. முன்னால் ஏற்கெனவே சில பேருந்துகள். திடீரென்று சில காவலர்கள் பேருந்தினுள் நுழைந்து ஒவ்வொருவரது பை, மற்ற பொருட்களைச் சோதித்தார்கள். அதற்குப் பிறகுதான் அது நடந்தது. ஒவ்வொருவரது டிக்கெட்டையும் பரிசோதித்தார்கள். எனக்கு திக் திக்கென்றது.
பார்ப்பதற்கு 'காவல்துறையின் உயர் அதிகாரிகள் போல...!' என யோசிக்கும்போதே... அங்கு என்ன?.. அது கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவின் ஒரு அணி. இந்த திடீர் பரிசோதனையை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக.
*****
காவலர்: டிக்கெட்ட காமி.
நான்: இந்தாங்க சார்
காவலர்: தம்பி 30 ரூபாய் பாஸ்ல எங்க போறீங்க?!
நான்: இல்ல வீட்டு ஓனர் இங்கேதான் இருக்காங்க, வாடகைய குடுத்துட்டு போக வந்தேன்.
காவலர்: அதுக்கு எதுக்கு 30 ரூபா பாஸு? தம்பி கீழ இறங்குங்க. ஐயாவ வந்து பாருங்க... சார் இங்க ஒருத்தன் இருக்கான் சார் (கீழே இருந்தவரைப் பார்த்து).
காவலர்: தம்பி பர்ஸ எடுங்க, பாக்கெட்ட செக் பண்ணுங்கய்யா... தம்பி எங்கயிருந்து வர்றீங்க?
நான்:வேளச்சேரியிலயிருந்து.
காவலர்: சரி என்னது இது? 30 ரூபா பாஸ்ல வர்றீங்க? மார்கெட்டிங்ல இருக்கீங்களோ?
நான்: இல்ல சார். சும்மாதான்.
காவலர்: எங்க போறீங்க?... பர்ஸ்ல ஒண்ணும் இல்லியா? (பர்ஸ் செக் பண்ணினவரைப் பார்த்து). எங்க காமிங்க. என்னய்யா போட்டா, யாரு இது?
நான்: "வேகா" சார்! இந்த 'பசங்க' படத்துல வருமே, அந்த பொண்ணு!
காவலர்: அதெல்லாஞ் சரி, 30 ரூபா பாஸுக்கு இன்னும் பதில் வரலியே! தம்பி எங்க வேல செய்றீங்க. ஐடி கார்ட காமிங்க!
நான்: (எ.கொ.இ.!!! இன்னிக்கு பார்த்து ஐடி கார்ட எடுத்துட்டு வரலியே! - மனதிற்குள் நினைத்துக்கொண்டே). சார் ஐடி கார்ட எடுத்துட்டு வரல சார். இன்னிக்கு நான் ஆஃபிஸ்க்கு போகல. வீட்டு ஓனரைப் பார்க்கத்தான் வந்தேன்.
காவலர்: அதான...., ஐடி கார்ட் இருக்காதே!
*****
இந்த மாதிரி நிச்சயம் நடந்திருக்கும் - அன்றைக்கு 30 ரூபாய் பயணச்சீட்டில் பயணித்திருந்தால்! வழக்கமாக, நேரம் கிடைக்கும் சனிக்கிழமைகளில் 30 ரூபாய் (ஒருநாள் விருப்பம்போல் பயணம் செய்யும் சீட்டு) பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு சென்னையை வலம்வருவது எனது பழக்கம். பொழுதுபோகாமல் அண்ணா நகர் மேற்கு, மணலி, காலேஜ் ரோடு என்று சம்பந்தமே இல்லாத இடங்களில் சுற்றிய அனுபவங்கள் உண்டு. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் பயணச்சீட்டுகள் வாங்கியிருப்பேன்.
***** (விட்ட இடத்திற்கு வருவோம்) - டி.எம்.எஸ். நிறுத்தம்:
உயர் அதிகாரி ஒருவர் கலைஞர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு குழுவினருக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.
"பஸ்ல திருட்டு போகுதுன்னு நிறைய கம்ப்ளெயின்ட் வருது. இப்ப ரீஸன்டா பார்த்தீங்கன்னா, இது கொஞ்சம் அதிகமாயிருக்குது. ஏதாவது பொருளை உங்ககிட்ட வச்சிகிடுங்கன்னு கொடுக்கிறது. அத கொடுக்கும்போது வாங்கும்போது உங்க பொருள் எதையாவது திருடுறது, இப்படி. இதுல பார்த்தீங்கன்னா, திருடிகிட்டு மாட்டிக்கிறவங்க பெரும்பாலும் ஒன்டே பாஸ்ல வர்ற ஆட்கள். இந்த ஒரு நாள் பாஸ் வைச்சிருக்கிறவங்க நினைக்கிற இடத்துல இறங்கி வேற பஸ்ல ஏறிக்கலாம். இது திருடறவங்களுக்கு வசதியாப் போகுது. அதனால இந்த மாதிரி திடீர் சோதனைகள் நடத்துறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற விதமா இது சம்பந்தமா அறிவுரையும் கொடுக்கிறோம்..... "
இன்னும் பேசிக்கொண்டே இருந்தார். பயணிகளிடமும் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது!
*****
நல்ல வேளையாக அன்று நான் 30 ரூபாய் (ஒருநாள் பயணச்சீட்டு) வாங்கவில்லை. வாங்கியிருந்தால்....வாங்கி கட்டியிருப்பேன்!
படம்:http://velang.blogspot.com/2009/01/30.html
(இப்போது பழக்கத்தில் இருக்கும் ஒருநாள் பயணச்சீட்டு வண்ணமயமாக இருக்கிறது!)