Monday, April 1, 2019

Super Deluxe (சூப்பர் டீலக்ஸ்) - The Movie

சில படத்துல ஒரு சில காட்சிகளப் பாக்கும்போது நெஞ்சுல ‘பக் பக்’குன்னு, மூளைல ‘கிர்ர்ர்ர்’ன்னு, ஒரு திகிலோட, பதட்டத்தோட இருக்குமே, இதையே படம் முழுக்கத் அள்ளித் தெளிச்ச மாதிரி ஒரு படம் பார்க்கணும்னு ரொம்பநாளா காத்திட்டு இருந்தது, Super Deluxe மூலமா நிறைவேறியிருக்கு.


படத்தோட ஒவ்வொரு நிமிசமும், திகிலும், பரபரப்பும், எதிர்பார்ப்பும், சுவாரசியமும் மாறி மாறி வந்து பரவசமூட்டுகிற ஒரு அனுபவம்! கடைசி நிமிசம் வரைக்கும் நெஞ்சுக்குள்ள ஒரு வெயிட்ட வைச்சி விட்ட மாதிரியான சம்பவங்கள்! சீட்டு நுனிக்கு வர்றதுன்னு சொல்வாங்கல்ல, சீட்டு இருக்குறதையே மறக்க வைக்கிறமாதிரியான அனுபவம்னா அது இதுதான்.



நான் அதிகமா இரசிச்சது கடவுள் நம்பிக்கையைக் கேள்வியெழுப்புகிற, சபை-சிலை இதை வச்சி எடுக்கப்பட்ட காட்சிகள்தான். அதற்காக கிறிஸ்தவ மதத்தைத் தேர்ந்தெடுத்தது மிகப் பொருத்தம். இதற்கான சூழ்நிலைகளும் சம்பவங்களும் சுனாமியும் அழகாகப் பொருந்திப் போகின்றன. நல்லவேளையா படத்துல இதை இந்து மத அடையாளமா காட்டல! படத்துக்கு மிகப்பெரும் பலம் அதுதான்.

ஆரண்ய காண்டத்துக்கும் இந்தப்படத்துக்கும் திரைக்கதையில பல பொருத்தங்கள் இருக்கு. கதாப்பாத்திரங்கள் கூட ரொம்பப் புதுசா இல்ல! நாம பெரும்பாலும் பாத்துகிட்டிருக்கிற மக்கள்தான். ஆனால், இந்தப் படத்தோட காட்சிகள், சூழ்நிலைகள் ரொம்ப ரொம்பப் புதுசு! இரண்டாம் பாதியில இருக்குற சில காட்சிகளோட நீளம்தான் அதையொட்டிய நமது சிந்தனைகளை பலவிதங்கள்ல திருப்பி, பதட்டத்தையும் பரபரப்பையும் அதிகரிக்குது - அந்தச் சூழ்நிலைகளோட ஆழம் புரியவைக்குது! அதுதான் படத்தோட சுவாரசியமே! அதனாலதான் மூணு மணி நேரம் போனாக்கூட பரவாயில்லைன்னு (தியாகராஜன் குமாரராஜா) எடுத்திருக்கார்னு நினைக்கிறேன்.

லாஜிக்கா கேக்குறதுக்கு நிறைய கேள்விகள் இருந்தாலும், அதெல்லாம் தனியா இன்னொரு இடத்துல கேட்கலாம்னு நினைக்கிறேன். ஏன்னா, இது தொட்டுப் பேசுற செய்திகளைச் சொல்றதுக்கான சூழ்நிலைகளை அமைப்பது கொஞ்சம் சிரமம்தான், அதனால அந்த லாஜிக் மீறல்களை ஏத்துக்கிடலாம்!

கணவன்-மனைவி
அப்பா-அம்மா-மகன்

நண்பர்கள்

இப்படி தனித்தனி கதைகளோட குவியல்தான். போய்ப்பாருங்க. அனுபவிங்க!

ஒரு விசயம்: கொஞ்சம் பழமைவாதமா இருக்குற பெரியவங்க, அப்புறம் சிறியவங்கள கூட கூட்டிட்டுப் போகாதீங்க!

No comments: